வானவல்லி முதல் பாகம் : 44 – மன்னரின் மகிழ்ச்சி

இருங்கோவேளின் முதன்மை அமைச்சர் அன்று காலையில் தான் அனைத்து வேளிர்களையும் சந்தித்துப் பேசிவிட்டு உறைந்தைக்கு வந்திருந்தார். ‘அவர் ஓய்வெடுத்துவிட்டுத் தன்னைச் சந்திக்க வருவதற்குள் நாமே அவரது மாளிகைக்குச் சென்று அடுத்துச் செய்ய வேண்டிய சில முக்கியக் காரியங்கள் பற்றி அவசரமாக விவாதித்துவிட வேண்டும்’ என எண்ணிய இருகோவேள் முதன்மை அமைச்சரின் மாளிகைக்குப் புறப்பட்டார்.

ஆனால், எதிர்பார்ப்பிற்கு மாறாக முதன்மை அமைச்சரே மன்னரை நோக்கி வந்துகொண்டிருக்க இருவரும் வழியிலேயே சந்தித்துக் கொண்டார்கள். ஒருவரை ஒருவர் பணிந்து வணங்கிக்கொண்ட பிறகு இருவரும் தங்களின் உரையாடலைத் தொடங்கினார்கள்.

அவசரப்பட்ட மன்னர், “அந்தணரே! சென்ற காரியம் முழு வெற்றி தானே!” என முதன்மை அமைச்சரிடம் வினவினார்.

“ஆமாம் இருங்கோ! சென்ற காரியம் முழு வெற்றி. ஏற்கெனவே இரு பெருநில மன்னர்களான சேரர் மற்றும் பாண்டியர்களின் ஆதரவு நமக்கிருக்க இப்போது வேளிர்களின் ஆதரவும் கிடைத்துவிட்டது. தென்னகத்தில் நம்மை எதிர்க்க இனி இரும்பிடர்த்தலையனைத் தவிர யாருமே கிடையாது” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் முதன்மை அமைச்சர்.

“இனி இரும்பிடர்த்தலையன் மற்றும் சென்னியின் மகனான வளவனைப் பற்றிய கவலையை விடுங்கள்!”

“இரும்பிடர்த்தலையனை எளிதாக நினைத்துவிடக் கூடாது இருங்கோ. அந்தப் புலவனால் என்ன செய்துவிட இயலும் என ஒருகாலத்திலும் எண்ணிவிடாதே! வாள் கொண்டு சாதிக்க இயலாததைக் கூடச் சிறு எழுத்தாணி முனையால் சாதித்துவிட இயலும்.”

“சென்னியின் மகனும் உயிரோடு இல்லை. அவனை ஆதரித்த பெரும் வீரனான புகாரின் உப தலைவன் செங்குவீரனும் உயிரோடு இல்லை. அப்படியிருக்க அந்தப் பிடர்த்தலையனால் இனி நம்மை என்ன செய்துவிட இயலும்!”

“இளவல் உயிரோடு இல்லையா?” எனப் பெரும் அதிர்ச்சியுடன் வினவினார் முதன்மை அமைச்சர்.

“ஆம் அந்தணரே!  சென்னி தன் மனைவியுடன் வசிக்க எழுப்பிய வசந்த மாளிகையிலேயே அவனை எரித்துச் சாம்பலாக்கி விட்டோம். அவனைக் காக்கச் சென்ற உப தலைவனும் திரும்பவில்லை” எனப் பெரும் உற்சாகத்துடன் கூறினார் மன்னர்.

ஆனால் அவர் கூறியதைக் கேட்டு எந்தவித மகிழ்ச்சியையும் வெளிக்காட்டாத முதன்மை அமைச்சர், “இருங்கோ! என்னால் இதனை எளிதில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மரக்கலத் தீயிலிருந்து தப்பிக் குணக் கடலை நீந்தி தப்பித்தவன் உப தலைவன். அவனும் மாளிகைத் தீயில் வெந்திருப்பான் எனக் கூறுவது அசட்டுத்தனமாக உள்ளது இருங்கோ! என்ன நடந்தது விவரமாகக் கூறு!” எனக் கட்டளையிட்டார் முதன்மை அமைச்சர்.

நடந்த அனைத்து விவரங்களையும் கேட்டு அறிந்த முதன்மை அமைச்சர், “நடந்த நிகழ்வுகளை எனது விசுவாசி ஒருவன் நேரில் பார்த்ததாகக் கூறுகிறீர்களே? அவன் யார்? அவனை என் முன்னே அழைத்து வாருங்கள்!” எனத் தெரிவித்தார்.

இருங்கோ வேளும், “விரைவில் அவனை உங்களைச் சந்திக்கச் சொல்கிறேன் அந்தணரே! குடந்தையில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி விவரமாகக் கூறுங்கள்! வேளிர்கள் அனைவரும் என்ன தெரிவித்தார்கள்? நமக்கு எப்படிப் பணிந்தார்கள்?” என பெரும் ஆர்வத்துடன் வினவினார்.

இருங்கோவேள் உறைந்தையைக் கைப்பற்றிச் சோழ மன்னனாக முடிசூட்டிக் கொண்டமையால் நாங்கூர், வல்லம், குடந்தை, பழுவூர், பெருந்துறை, கழுமலம் முதலிய சோழ மண்டலங்களின் அனைத்து  மன்னர்களின் ஆதரவையும் பெற முதன்மை அமைச்சர் முயன்று ஓலை அனுப்பி அனைவரையும் குடந்தையில் கூடச் செய்திருந்தார்.

அனைத்து வேளிர்களும் ரகசியமாகக் குடந்தை சென்று கூடிய போது முதன்மை அமைச்சர், “இளஞ்சேட் சென்னியின் மைந்தன் வளவன் ஆட்சிப் பொறுப்பு வேண்டாம் எனக் கூறி எங்கோ ஒளிந்துகொண்டமையால் வேளிர் குளத்தில் தோன்றிய மலை நாட்டு மன்னர் இருங்கோ உறைந்தை அரியாசனத்தைக் கைப்பற்றிச் சோழ மன்னராக முடிசூட்டிக் கொண்டார். பாண்டியன் தென்னவனும், சேரன் பெருஞ்சேரலாதனும் இருங்கோவை அங்கீகரித்து விட்டார்கள். உங்களின் ஆதரவையும் இருங்கோ வேள் எதிர்பார்க்கிறார்” எனக் கூறி அமைதியானார்.

அவர் கூறியதைக் கேட்டவுடன் அங்கிருந்த அனைத்து குறுநில மன்னர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தார்கள். அங்குப் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. “சோழ இளவல் உயிரோடு இருக்க இருங்கோ ஆட்சியைக் கைப்பற்றியது தவறு” “காலம் காலமாக நாங்கள் சோழ மன்னருக்கு கட்டுப்பட்டு விசுவாசத்துடன் இருக்கிறோம். இருங்கோவை ஆதரித்து அவர்களுக்கு நாம் எப்படித் துரோகம் இழைப்பது” “சென்னி இறந்த போது நம்மில் சிலரும் அங்குத் தானே இருந்தோம்? இது அவருக்கு நாம் செய்யும் பெரும் துரோகம் அல்லவா?” “இருங்கோவேள் செய்தது சரி! சென்னியின் மகன் வீரனாக இருந்திருந்தால் அவன் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? நம்மால் செய்ய இயலாததை இருங்கோ வேள் செய்துள்ளார். நாம் அவருக்குப் பக்கபலமாகத் தானே இருக்க வேண்டும்?” “இருங்கோ வேள் நம் குலத்தவன். அவனை நாம் எக்காலத்திலும் கைவிடக்கூடாது!” “சென்னிக்குத் துரோகம் இழைத்துவிட்டு இப்போது ஆட்சியை இருங்கோவேளிடம் தாரை வார்த்துவிட்ட இந்தத் துரோகியை அடித்து விரட்டுங்கள்!” “அந்தணரே, நீங்கள் செய்தது பெரும் பிழை! துரோகம்! அந்தணர் என்ற போர்வையில் இருக்கும் பேராசைக்காரன்” “உடனே இவனது தலையைக் கொய்துவிடுங்கள்!” என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசினார்கள்.

கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பைக் கண்ட அந்தணர், “வேளிர்களே! நீங்கள் கோபப்படுவதில் எந்த நியாயமும் இல்லை. யார் வலிமையுடையவனாக இருக்கிறார்களோ அவர்களிடம் தான் தலைமைப் பொறுப்பு சேரும்! சோழ வம்சம் தனது வல்லமையை இழந்துவிட்டது. காலம் காலமாக வேளிர்களை அடக்கி ஆளும் சோழர்களை வீழ்த்த இதுதான் சரியான தருணம்.  இந்த வாய்ப்பைக் கைவிட்டால் இனியொரு வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கப் பெறாது. அதிலும் சென்னியின் மகன் எனக்கு அரச பாரமே வேண்டாம் என அஞ்சி ஓடி ஒளிந்துகொண்டான். அவனைத் தேடிக் கண்டறிந்தா சிம்மாசனத்தில் அமர்த்தச் சொல்கிறீர்கள்? சென்னிக்குப் பிறந்திருப்பது வீரப் புலி எனத்தான் நானும் நினைத்தேன்! ஆனால் அப்புலி கோழையானது! பல் இல்லாதது! அதன் பிறகுதான் அரசன் இல்லாத சோழ நாட்டிற்குக் காவலனாக உயர்ந்த இருங்கோ வேளிற்கு உதவத் துணிந்தேன். ஆசனத்தில் அமர்ந்து யார் செங்கோலைப் பிடித்துக் கட்டளையிடுகிறார்களோ அவர்களுக்குப் பணிந்து கடமை செய்ய வேண்டியது முதன்மை அமைச்சரான எனது கடமை! அதைத்தான் நான் செய்கிறேன்! நான் செய்தது பிழை என்றால் இங்கேயே எனது தலையைத் துண்டாகக் கொய்துவிடுங்கள்!” எனப் பெரும் ஆவேசத்துடன் கூற அங்கிருந்த மற்ற வேளிர்கள், குறுநில மன்னர்கள் அனைவரும், “இல்லை! இல்லை! நீங்கள் செய்தது பிழை இல்லை!” எனக் கூறி அமைதியானார்கள்.

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here