வானவல்லி முதல் பாகம் : 44 – மன்னரின் மகிழ்ச்சி

“காலம் அறிந்து காரியம் செய்வதுதான் வெற்றி பெறுவதுதான் சிறந்த  வழி! நீங்களே என்ன செய்ய வேண்டும் என முடிவு செய்துகொள்ளுங்கள்!” எனக் கூறி அனைவரின் முகத்தையும் நோக்கினார் முதன்மை அமைச்சர்.

அனைவரும் ஒருவருக்கு ஒருவர் விவாதிக்க மீண்டும் அங்குச் சிறு சலசலப்பு தோன்றியது!

தொண்டையைக் கரகரத்த படியே தனது முரட்டுத் தாடியைத் தடவி கொண்டு எழுந்த குடந்தை வேளிர், “அந்தணரே! இங்கிருக்கும் அனைத்து வேளிர்களையும் விடப் பலம் வாய்ந்தவர் அழுந்தூர் வேள்! மௌரியப் படைகளையே இளஞ்சேட்சென்னியுடன் இணைந்து விரட்டியவர். அவர் இருங்கோவை ஆதரிக்கிறாரா? அவர் ஏன் இக்கூட்டத்திற்கு வருகை தரவில்லை. தாங்கள் அவரை அழைத்தீர்களா?”

“அக்கிழவன் ஒரு நாளும் இருங்கோவை சோழ மன்னனாக ஏற்றுக்கொள்ள மாட்டான். வீரனாக இல்லாவிட்டாலும் தனது மகள் வயிற்றுப் பேரனான வளவனை ஆசனத்தில் அமர்த்துவதிலே தான் அவனுக்கு விருப்பம்! அப்போது தானே அக்கிழவனும், புலவனாக வேடம் தரித்த பேராசைக்காரனான இரும்பிடர்த்தலையனும் இளஞ்சேட்சென்னியின் அவையைப் போன்று தங்களது விருப்படி சோழ தேசத்தை ஆளலாம். ஆனால் வளவனே அவர்களின் தொந்தரவு தாளாமல் ஓடிப் போய் விட்டான்! மலைநாட்டு இருங்கோவிற்கும் அழுந்தூர் வேள் திதியனுக்கும் தீராத பகை இருப்பது நம் அனைவருக்கும் தெரியும்! அக்கிழவனைப் பற்றிய கவலை இனி வேண்டாம்! நீங்கள் அனைவரும் இருங்கோவுடன் இணைந்தால் அவனால் என்ன செய்துவிட இயலும்?” எனப் பதிலுக்குக் கேட்டார்.

பெரும் ராஜ தந்திரியான முதன்மை அமைச்சர் கூறியதைக் கேட்டதும் அனைத்து வேளிர்களும் அமைதியாகி விவாதிக்கத் தொடங்கினார்கள்! பிறகு, அனைவரும் ஒருவாறு இருங்கோ வேளை சோழ மன்னனாக ஏற்று, உறைந்தைக்கு அடங்கிய குறுநில மன்னர்களாக ஆட்சி செலுத்த சம்மதித்தனர்.

ஆனால் அங்கிருந்த பல வேளிர்கள் கப்பம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முதன்மை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்க அதற்கவர், “உங்களது கோரிக்கையை மன்னரிடம் தெரிவிக்கிறேன். இதுபற்றி அவர் நிச்சயம் நல்ல முடிவெடுப்பார் என நம்புவோம்” எனத் தெரிவித்தார்.

இருங்கோவேளிற்கு எதிராக யார் போர் தொடுத்தாலும் அனைவரும் இணைந்து அவருக்கு ஆதரவாகப் போரிடுவது எனவும் சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட அனைத்து நிகழ்வுகளையும் முதன்மை அமைச்சர் மன்னர் இருங்கோ வேளிடம் தெரிவித்தார்.

“அந்தணரே! நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நமக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் எதிர்பார்த்ததைப் போலவே நடந்துகொண்டிருக்கிறது. இருந்தும் மனதின் ஓரம் ஒரு எச்சரிக்கை உணர்வு தோன்றிக்கொண்டே இருக்கிறது? காரணம் புரியவில்லை” என்றார் மன்னர்.

“அதைப்பற்றிய கவலையை விடு இருங்கோ! அடுத்து நடக்க வேண்டிய காரியங்களைக் கவனிப்போம். வைதீகர் பாகவதர் எங்கே? அவரைச் சந்தித்தீர்களா?” என வினவினார் முதன்மை அமைச்சர்.

புகாரைக் கைப்பற்ற வைதீகர் வகுத்திருக்கும் அனைத்து திட்டங்களையும் விரிவாக எடுத்துரைத்த மன்னர் அவர் புகார் சென்றுள்ளதாகப் பதிலளித்தார்.

அத்திட்டத்தைக் கேட்டவுடன் சிந்தித்த முதன்மை அமைச்சர், “இருங்கோ, எனக்கு இன்னொரு யோசனையும் தோன்றுகிறது! புகாரைக் கைப்பற்றிய பிறகு தங்களது புதல்வனைப் புகாரில் அமர்த்திவிட்டால் என்ன?” என வினவினார்.

அதைக்கேட்டு ஆர்வமடைந்தவர், “இதுவும் நல்ல யோசனைதான் அந்தணரே! புகாரைக் கைப்பற்றியபிறகு பெரும் விழா நடத்தி என் மகனுக்கு யுவராஜன் பட்டம் கட்டி அவன் தான் எனக்குப் பிறகு சோழ தேசத்தை அரசாளப் போகிறவன் என உலகிற்கும் அறிவித்துவிடுவோம்!” என்றார்.

“வேண்டாம் இருங்கோ! அது சரியான முடிவாக இருக்காது என எண்ணுகிறேன்”

“எதைக் குறிப்பிடுகிறீர்கள் அந்தணரே!”

“தங்கள் மகனுக்குப் புகாரில் வைத்து யுவராஜன் பட்டம் சூட்டலாம் எனக் குறிப்பிடுவதைத் தான்!”

“என் மகனுக்கு யுவராஜன் பட்டம் சூட்டுவதனால் என்ன பிரச்சனை ஏற்படும் எனக் கருதுகிறீர்கள்?”

“தங்கள் மகனுக்கு யுவராஜன் பட்டம் சூட்டுவதைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை இருங்கோ?”

“பிறகு எதைப்பற்றித் தாங்கள் குறிப்பிடுகிறீர்கள்?”

“புகாரில் வைத்து யுவராஜன் பட்டம் சூடலாம் என்றீர்களே, அங்குதான் பிசகு ஏற்படும் எனக் கருதுகிறேன்!”

“வேறு என்ன செய்யலாம்! வழக்கம் போலத் தாங்களே நல்ல முடிவினைக் கூறிவிடுங்கள்?”

யோசித்த முதன்மை அமைச்சர், “உறைந்தையிலே நாம் தங்கள் மகனுக்கு யுவராஜன் பட்டம் கட்டி விடுவோம்! புகாரைக் கைப்பற்றிய பிறகு அங்கு அவனை அமர்த்தி ஆட்சி செலுத்த பணித்து விடுவோம்!”

“இதுவும் நல்ல யோசனைதான்! விரைவில் நாம் அதற்கான பணியைத் தொடங்குவோம்!”

“விரைவிலா?”

“ஆம் அந்தணரே!”

“இன்றே இந்த அரண்மனையிலே அனைவரின் முன்பும் பட்டம் கட்டிவிடுவோம்!”

“அய்யா, இன்றே என் மகனுக்குப் பட்டம் சூட்டினால் மக்கள் என்ன நினைப்பார்கள்? சென்னியின் மகனை எண்ணி கலகம் செய்ய மாட்டார்களா?”

“இருங்கோ! மக்களைப் பற்றிய கவலையை விடு! அவர்கள் கலகம் செய்ய எண்ணுபவர்களாக இருந்திருந்தால் வளவனை விடுத்து நீ சோழ சிம்மாசனத்தில் அமர்ந்த போதே தங்களது எதிர்ப்பைக் காட்டியிருப்பார்கள்! யுவராஜன் பட்டம் சூட்டிய பிறகு அவனது வாயாலேயே மக்களுக்குப் பல வரிச் சலுகைகளை அறிவித்து விடுவோம்! அந்தப் பேச்சில் அவர்கள் யாரும் நம் அரசியலைப் பற்றி எண்ணக்கூட மாட்டார்கள்!”

“நல்ல யோசனை, இப்போதே நான் அதற்குரிய காரியத்தைத் தொடங்குகிறேன்”

“நல்லது! யுவராஜன் பட்டம் சூட்டிய பிறகு சோழ நாடு முழுமைக்கும் தண்டோரா அடித்துச் செய்தியை பரப்பச் சொல்லிவிடு, நாம் வழக்கம் போலப் பயன்படுத்தும் ‘சென்னியின் மகன் வளவன் ஓடிப்போய் விட்டதனால்’ என்ற வார்த்தையையும் பயன்படுத்த மறக்க வேண்டாம். பின் முதல் வேலையாகச் சோழ யுவராஜனை சேர மாமன்னன் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மாமன்னன் தென்னவனையும் சந்தித்து ஆசி பெற்று வந்துவிடச் சொல்! அவர்களின் உதவி நமக்கு எப்போதும் தேவை! இயன்ற வரை நமது படைபலத்தைப் பெருக்க வேண்டும். இரும்பிடர்த்தலையனை நாம் எந்தக் காலத்திலும் குறைவாக மதிப்பிட்டுவிடக் கூடாது! யார் எதிர்த்தாலும் நாம் தக்க பதிலடி கொடுக்கத் தயாராகவே இருக்க வேண்டும்!” எனக் கூறிவிட்டு அந்தணரான முதன்மை அமைச்சர் ஓய்வெடுக்க மீண்டும் தனது மாளிகையை நோக்கிப் புறப்பட்டார்.

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here