வானவல்லி முதல் பாகம் : 45 – பிடிவாதம்

3

சித்திரைத் திங்களில் தொடங்கும் இந்திரத் திருவிழா அரச விழா என்பதால் சோழப் பேரரசின் வணிகத் தலைநகராகிய புகார் பொலிவுறக் காணப்பட்டது. இந்திரத் திருவிழா தொடங்க சில தினங்களே இருப்பதால் புகார் பட்டினமே விழாக்கோலம் பூண்டு ஈழம், யவனரகம், சாவகத் தீவு, பவளத்தீவு, கலிங்கம், பாண்டிய நாடு, சீனம், கடாரம், ஸ்ரீ விஜய தேசம், புட்பகம், மிசிரம், மோகினித் தீவு போன்ற தேசங்களிலிருந்தும் பல மக்கள் திருவிழாவைக் காண குவியத் தொடங்கினார்கள். புகாரில் இருந்த அனைத்து மாளிகைகளும் வண்ணம் பூசப்பட்டு மாவிலைத் தோரணம் கட்டி, பல வண்ண கொடிகளைப் பறக்கவிட்டுக் கொண்டு பட்டினமே விழாவில் அல்லோலகல்லோலப்படத் தொடங்கியது.

உறைந்தைக்கும், புகாருக்கும் இடையில் பெரும் பகை மூண்டுக் கொண்டிருந்ததால் பட்டினக் காவல் வீரர்கள் தங்களுக்குரிய உடையிலும் மாற்றுடையிலும் செங்குவீரனின் கட்டளைப்படி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து காவல் காத்துக்கொண்டிருந்தனர். பொது மக்களும் நிலைமையைப் புரிந்துகொண்டு வீரர்களுக்கு முழு ஒத்துழைப்பை நல்கினர்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

புகார் நகரத்தின் அரண்மனை, அலுவலர்கள், செல்வந்தர்கள் இவர்களின் பல அடுக்கு மாட மாளிகைகள் அடங்கிய பட்டினப் பாக்கமும் மறவர்கள், சிறு வணிகர்கள், யவனர்கள், கொல்லர்கள் வசிக்கும் மருவூர்ப் பாக்கமும் தோரணைகளால் அலங்கரிக்கப்பட்டுப் பேரழகோடு காணப்பட்டன. 1நான்கு காத தூரம் பறந்து விரிந்திருந்த இரண்டு பாக்கங்களும் சேர்ந்த புகார் நகரம்  திருவிழாவிற்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

இப்படிப் புகார்ப் பட்டின மக்கள் அல்லாது சைவம் (தமிழர் மதம்), ஆசீவகம், ஆருகதம் (சமணம்), பவுத்தம், வைதீகம் (ஆரியம் அல்லது பிராமணம்) முதலிய சமய மக்களும் இந்திர விழாவிற்காகத் தயாராகியிருந்தனர். இந்தப் பலதரப்பட்ட சமயங்களின் பெரியோர்கள் சமய வாதம் புரிந்து  மற்றவர்களைத் தோற்கடித்து அவர்களைத் தம் மதத்தில் சேர்க்கும் முனைப்பில் காணப்பட்டனர்.

இந்தச் சமய மக்களோடு சிவன், கொற்றவை, திருமால், இந்திரன் முதலான தமிழர்த் தெய்வங்களின் கோயில்களும்; ஆருகத மதத்தின் ஆருகதக் கடவுளின் மடங்களும்; பௌத்தத்தின் ஏழு விகாரங்களை உள்ளடக்கிய இந்திரவிகாரமும்; விஷ்ணு, உருத்திரன், கார்த்திகேயன் முதலிய வைதீக தெய்வங்களின் கோயில்கள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதப்பட்டுக்கொண்டிருந்தன. வைதீக தெய்வங்களுக்கு நடத்தும் பிரமாண்ட யாகங்களுக்குப் பலி கொடுக்க ஆயிரக்கணக்கான பசுக்களும், புரவிகளும் கொண்டுவரப்பட்டு மாலையிடப்பட்டுத் தயாராக நின்றன.

வெகு நாட்களுக்குப் பிறகு புகாரில் இணைந்துள்ள தோழிகளான வானவல்லியும், மரகதவல்லியும் மேற்கூறிய விழா ஏற்பாடுகளைக் கண்டும் அந்த மகிழ்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமல் கரிகாலனுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியாமல் பெரும் வருத்ததுடனே தங்களது தோழியான பத்திரையைக் காண புரவித் தேரில் விரைந்துகொண்டிருந்தார்கள். வைதீக யாகங்களுக்குப் பலி கொடுக்க நின்றுகொண்டிருந்த ஆடு, பசு மற்றும் புரவிகளைக் கண்ட போது இருவருமே அவைகளை எண்ணி பரிதாபப்பட்டார்கள். “கடவுளைத் திருப்திப்படுத்த இந்த உயிர்களைப் பலியிட்டுதான் ஆக வேண்டுமா?” என நினைத்தும் வருந்தினார்கள்.

பெரு வணிகன் வேளாதனின் பல அடுக்கு மாளிகையின் வாசல் வண்ணப் பொடிகளால் கோலமிடப்பட்டு, வாழை, மாவிலைத் தோரணம் மற்றும் பல வண்ணக் கொடிகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாளிகையின் நுழைவாயிலில் வானவல்லியும், மரகதவல்லியும் நுழையும் போதே பார்த்துவிட்ட பத்திரைத் தேவி மகிழ்ச்சியில் ஓடி வந்து தனது இரு தோழிகளையும் அணைத்துக்கொண்டாள். நெடு நாள் கழித்து மூன்று தோழிகளும் இணைந்துள்ளதால் அவரவர் மனதில் இருந்த கவலைகளை மறந்து மகிழ்ச்சியடைந்தனர்.

பத்திரையின் முகமானது காளனைக் கண்ட பிறகு மகிழ்ச்சியும், பொலிவும், அழகும் பெற்றுக் காணப்பட்டது. அவளது முகத்தில் எப்போதுமிருக்காத மகிழ்ச்சியையும், புன்னகையையும் கவனித்துவிட்ட மரகதவல்லி, “அக்கா! எப்போதுமில்லாத மகிழ்ச்சியில் உங்கள் முகம் காணப்படுகிறதே! காரணம் என்ன அக்கா? கூறினால் நாங்களும் மகிழ்வோமே!” என அவளது கண்களில் தனது பார்வையை நிலைக்கவிட்ட படியே கேட்கலானாள். வெட்கத்தில் கன்னம் சிவந்து கீழே குனிந்தவளைப் பார்த்த வானவல்லி பத்திரையின் எண்ணத்தைப் புரிந்துகொண்டவளாய், “யாரடி உன் மனதைக் கொள்ளை கொண்ட கள்வன்?” என அவளது தாழ்வாயை உயர்த்தியபடியே கேட்கலானாள்.

வானவல்லி பொதுவாகக் கள்வன் எனக் கூறியதைக் கேட்டு  அதிர்ச்சியடைந்த பத்திரை அன்றே அவரது ஓவியத்தை வரைந்து பார்த்துக்கொண்டிருந்த போதே தன்னைக் கடுமையாக எச்சரித்த வானவல்லி இப்போது அவரைச் சந்தித்ததைப் பற்றித் தெரிவித்தால் நிச்சயம் கோபம் கொள்வாள் என நினைத்தவள், “நீங்கள் நினைப்பதைப் போல ஏதுமில்லை. நீண்ட நாள்களுக்குப் பிறகு நாம் மூவரும் சந்திக்கிறோம். ஆதலால் தான் எனது மகிழ்ச்சி பெருகியுள்ளது” எனத் தெரிவித்தாள். அதை ஏற்க மறுத்த இருவரும் அடுத்தடுத்து பரிகாசச் சொற்களைக் கூறி ஒருவரை ஒருவர் பரிகாசம் செய்துகொண்டு நெடுநேரம் மகிழ்ச்சியில் திளைத்தனர். பிறகு கடைசியாக மூவரும் மலர் பறித்துக்கொண்டு கோயிலுக்குச் சென்று மலர்களைத் தூவி விளக்கேற்றி வழிபட்டுவிட்டுத் திரும்பும் போது அங்கிருந்த சூரிய குண்டலம், சந்திர குண்டலம் என்ற 2இரு காமத்து இணை ஏரிகளைக் கண்ட பத்திரை, “இந்த இரு ஏரிகளில் மூழ்கி வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்பார்களே! வா நாமும் மூழ்கி வேண்டிக்கொள்வோம்!” என அழைத்தாள்.

அதைக்கேட்ட மரகதவல்லி, “அக்கா! இதில் மூழ்கி வேண்டிக்கொண்டால் மனதில் நினைத்தது நடக்குமா எனத் தெரியாது. ஆனால் மனதில் நினைத்திருப்பவனை நாம் நிச்சயம் கணவனாக அடைந்துவிடலாம்!” என மீண்டும் பத்திரையைப் பரிகசிக்க அவள் நாணம் கொண்டு தரையை நோக்க அங்கு மீண்டும் ஒரு பெரும் சிரிப்பலை எழுந்தது.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here