வானவல்லி முதல் பாகம் : 46 – புரவித்தேரில் யார்?

3

குமரி முதல் வடவேங்கடம் வரை பரந்துபட்ட தமிழகத்தை குடபுலம், குணபுலம் மற்றும் தென்புலம் எனப் பிரித்து குட புலத்தை சேரரும், குண புலத்தை சோழரும், தென் புலத்தை பாண்டியரும் ஆட்சி செலுத்தினர். குண புலத்தின் தலைநகராக உறைந்தையும், தென் புலத்தின் தலைநகராக கூடல் எனும் மதுரையும், குட புலத்தை ஆட்சி செலுத்திய  சேரர்களின் தலைநகரம் ஆன்பொருநை நதியின் கரையில் அமைந்திருந்த கருவூர் எனும் 1வஞ்சிமா நகரம். வலிமையான கோட்டைச் சுவரைக் கொண்ட அந்நகரத்தின் வெளிப்புறத்தில் காணப்பட்ட வஞ்சி மரத்தினால் கருவூர் நகரம் வஞ்சி மாநகர் எனப்பட்டது. ஈழவாவிரையர் கூறியதன் படி வஞ்சிமா நகரத்திற்கு வந்த வேளாதன் சமணத் திருப்பள்ளியின் தலைவரது முன்னிலையில் சமணத்தில் சேர்ந்து துறவியாக மாறினார். அவரது தலையில் இருந்த முடிகளை கைகளால் பிடுங்கி லோசம் செய்து கொண்டவர் பிறகு எழுவகை ஒழுக்கங்களையும் கடைபிடிப்பதாக உறுதி செய்து கொண்டு ஆருகதரைச் சரணடைந்தார்.

உடல் முழுக்க சந்தனம், பலவித நறுமணத் தைலங்கள் பூசி, அணிகலன்கள், விலை உயர்ந்த பட்டுகள் என ஆடம்பரத்தின் மொத்த உருவமாகக் காணப்பட்ட பெருவணிகன் வேளாதன் இப்போது அனைத்தையும் துறந்து இடையில் ஒரேயொரு காவித் துகிலை மட்டும் உடுத்திக்கொண்டு  எளிமையானவராகத் தனது யாத்திரையைத் தொடங்கினார்.

வஞ்சி மாநகரத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருந்த போது அவரது காலில் விழுந்து வணங்கினான் வீரன் ஒருவன். அதனை எதிர்பாராத திகம்பர அடிகளார் வேளாதன், “தம்பி! எல்லாம் வல்ல இறைவனான  ஆருகதர் பாதங்களைப் பணிந்தாலாவது உனக்கு ஆசி கிடைக்கும். எனது காலில் விழுகிறாயே? யாரப்பா நீ?” எனக் கூறியபடியே அவனைத் தூக்கினார். தோற்றத்தில் மட்டுமல்ல உடல் மொழி, பேச்சு, நடை என அனைத்திலும் முழு துறவியாக மாறியிருந்தார் வேளாதன்.

தனது கேள்விக்குப் பதிலளிக்காமல் தலையைக் குனிந்தபடியே வருத்தத்துடன் நின்ற வீரனின் தோற்றத்தைப் பார்த்த அடிகளார் வேளாதன் இவன் நிச்சயம் சோழப் படையின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவனாகத்தான் இருப்பான் என நினைத்துக் கொண்டவர் இதற்கு முன் இவனை எங்காவது பார்த்திருக்கிறோமா? எனவும் சிந்தித்துப் பார்த்தார். அவனது முகம் சிந்தனைக்கு வராததால் அவனையே குழப்பத்துடன் பார்த்தவர் மீண்டும், “தம்பி யாரப்பா நீ? உன்னை இதற்கு முன் சந்தித்ததாக எனக்கு நினைவில்லையே!” என வினவினார்.

அடிகளார் வேளாதன் மற்றத் துறவிகளுடன் கூட்டத்தோடு கூட்டமாக நிற்பதைக் கண்டு தயங்கிய வீரன் அவரை மட்டும் தனியாக அழைத்துச் சென்று, “அடிகளே! தங்களது இந்த நிலைக்குக் காரணமானவன் நான் தான்!” எனக் கூறி வருந்தினான்.

“நீ கூறுவது எனக்குப் புரியவில்லையே தம்பி! எனது நிலைக்கு நீ காரணமா?”

“ஆம்!” மீண்டும் அவரது கண்களைப் பார்த்துக் கூற இயலாமல் வருத்தத்துடனே தரையைப் பார்த்துக் கூறினான் அவ்வீரன்.

அடிகளார் வேளாதனும் அவன் கூறியதைக் கேட்டுத் திகைத்து நிற்க, “தங்கள் மகள் பத்திரை விரும்புவது என்னைத் தான்! நீங்கள் இல்லற வாழ்வை வெறுத்து துறவறத்தை மேற்கொள்ளக் காரணமான அந்தக் கள்வன் நானே தான்!” எனக் கலங்கிய கண்களுடன் கூறினான் காளன்.

காளன் கூறியதைக் கேட்டு சிறிதும் அதிர்ச்சியடையாத வேளாதன், “தம்பி, என் மகள் உன்னை விரும்பினாள் என்பதற்காக நான் துறவறத்தை மேற்கொள்ளவில்லை. எனக்கு அவள் மீது பெரும் நம்பிக்கை இருக்கிறது. அவள் எந்த முடிவெடுத்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் அவளைத் தனித்துவிட்டு நான் துறவறம் மேற்கொண்டேன். நான் பரம மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் தான் இருக்கிறேன். என் மகள் தான் பாவம்! என்னை எண்ணியே வருந்திக்கொண்டிருப்பாள். என் நினைப்பே வராத அளவிற்கு அவளை மகிழ்ச்சியாகப் பார்த்துக்கொள்!” என்றார்.

காளன் எதையும் கூற இயலாமல் சக்தியை இழந்து கலங்கிய கண்களுடனே அவரையே பார்த்துக்கொண்டு நின்றான். அப்போது வேளாதன், “தம்பி, நீ கள்வன் என்றும் மக்களைத் துன்புறுத்தும் காளன் எனவும் அல்லவா நான் கேள்வியுற்றேன். ஆனால் நீ சோழ தேசப் படையின் உப தலைவர்களின் உடையில் அல்லவா காணப்படுகிறாய்?” என வினவினார்.

“ஆம் அய்யா! நான் சோழர் படையின் உபதலைவன் தான். அரச காரியமாக கருவூர் வரை யுவராஜனுடன் வந்துள்ளேன்!” எனக் கூறிக்கொண்டிருந்த போதே இடைமறித்த வேளாதன் ஆர்வத்துடன், “தம்பி! யுவராஜர் வளவன் கருவூர் வருகைத் தந்துள்ளாரா? அவருக்கு எப்போது அரசப் பட்டம் சூட்டப்போகிறார்கள்? வளவனை சேரமான் பெருஞ்சேரலாதன் ஆதரித்துவிட்டாரா? வளவனுக்கு எதிராக இருங்கோவேளுடன் தானே அவர் நெருக்கம் கொண்டிருந்தார்? நான் துறவறம் மேற்கொண்ட சில தினங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டது!” என்றார் பெரும் மகிழ்ச்சியுடன்.

பதிலுக்கு காளன், “அடிகளே! நான் யுவராஜன் எனக் கூறியது இளவரசன் வளவனை அல்ல!”

“அப்புறம் யாரை?”

“இருங்கோவேள் மகனை! இருங்கோ வேளின் மகனுக்கு யுவராஜன் பட்டம் சூட்டிவிட்டார்கள். அவர் சேரமான் பெருஞ்சேரலாதனைச் சந்தித்து ஆசிபெற வந்துள்ளார். அவருக்குத் துணையாக நானும் வருகை தந்துள்ளேன்”

காளன் கூறியதைக் கேட்டவுடனே பெரும் சோகமடைந்த அடிகளார், “தம்பி நீ கூறுவது உண்மை தானா?” என வினவினார்.

“ஆம். உண்மைதான்!”

“இருங்கோவேளின் மகனுக்கு யுவராஜன் பட்டம் சூட்டிவிட்டால் இனி அடுத்த சோழ மன்னன் அவன் தானே! வளவனின் நிலைமை? சென்னியின் மகன் இனி ஒரு நாளும் அரியணையேற இயலாதா?” எனக் கேட்டு வருந்தினார்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here