வானவல்லி முதல் பாகம் : 47 – வேளக்காரப் படைத்தலைவன்

3

பொழுது மெல்ல புலர ஆரம்பித்தது! திருமாலின் சுதர்சன சக்கரம் சுழல்வதைப் போன்று உக்கிரமாகக் காணப்பட்ட பரிதி கீழ் வானத்தில் உதிக்க, திட்டு திட்டாய் திரண்டிருந்த மேகக்கூட்டங்கள் அனைத்தும் செக்கச் செவேரென சிவந்து போர்க்களத்தில் படிந்திருக்கும் குருதிக் கரைகளைப் போன்று காணப்பட்டது. வேனிற்கால  மாதமானதால் கிழக்கு வானில் உதித்த பரிதி சிறிது நேரத்திற்கெல்லாம் வஞ்சி மாநகரம் மீது அனலைக் கக்க ஆரம்பித்தது. தடாகத்தில் சோகத்துடன் அமர்ந்த படியே இதனைக் கண்ட வானவல்லியின் கண்களும் பரிதியைப் போன்றே சிவந்து கோபக்கனல் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

விறல்வேல்
வானவல்லி

தடாகத்தில் காணப்பட்ட தாழம்புதர்கள் சில தினங்களுக்கு முன்பு வானில் கருத்த கார்மேகங்களில் தோன்றிய மின்னல் கீற்றினால் பூத்திருந்தது. தடாகக் கரை முழுக்க பூத்திருந்த தாழை மலர்கள் மற்றும் முல்லைப் பூக்களிலிருந்து நறுமணம் ‘கம்’மென்று வெளிப்பட்டாலும் அதில் தனது கவனத்தைச் செலுத்தாத வானவல்லி மீள வழி தெரியாத சிறையில் அகப்பட்டுக் கொண்டோமே என எண்ணி வருந்தி தப்பிக்கும் மார்க்கம் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

காலைப் பொழுதில் வீசிய குளிர்ந்த தென்றலினால் உருவான தடாகத்தின் நீர் அலைகளில் பரிதியின் செங்கதிர்கள் விழுந்து எதிரொலித்துக் கொண்டிருந்ததைக் கண்ட வானவல்லிக்குத் திடீரென வானில் தோன்றும் வானவில்லைப் போன்று காரணமில்லாமல் தோன்றும் ஆசிவகக் கடவுளான மற்கலித் தெய்வத்தின் நினைவு வர சில தினங்களுக்கு முன்பு ஆசிவகப் பெரியவர், “தாயே! இனிவரும் காலம் உனக்கு பெரும் கடின காலம். எச்சரிக்கையா இரு!” என எச்சரித்தாரே, அவர் கூறிய கடின காலம் இதுதானா? இந்தச் சிறையிலிருந்து நான் எப்படித் தப்பிக்கப் போகிறேன்! நான் வஞ்சியில் சிறைப்பட்டுக் கிடக்கும் செய்தி புகாரில் இருப்பவர்கள் எப்படித் தெரிந்துகொள்வார்கள்? அவர்கள் எப்படி எங்களைச் சிறை மீட்பார்கள் எனச் சிந்தித்தபடியே மாளிகைக்குள் வந்து பத்திரைத் தேவியுடன் அமர்ந்துகொண்டாள். பத்திரைத் தேவிக்கு உள்ளுக்குள் சோகமும், அச்சமும் காணப்பட்டாலும் வானவல்லி தன்னுடன் இருக்கும் வரை தனக்கு எந்த துன்பமும் நேர்ந்துவிடாது எனப் பெரும் தைரியத்தில் சோகமின்றி காணப்பட்டாள். என்ன செய்து இங்கிருந்து தப்பிப்பது என அறையில் சிந்தித்துக்கொண்டிருந்த நேரத்தில் மாளிகைக்குள் யாரோ சிலர் நுழையும் சத்தம் கேட்க பத்திரையை அறையிலேயே விட்டுவிட்டு படிக்கட்டு வழியே கீழே விரைந்தாள் வானவல்லி.

மரப் படிக்கட்டில் இறங்கி வந்தபோதே மாளிகை முகப்பு அறையில் நின்றுகொண்டிருந்த காளன் மற்றும் வில்லவனைக் கண்டுவிட்ட வானவல்லிக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதிலும் காளன் உப தலைவனுக்குரிய சீருடையில் நின்றது அவளது மனதில் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கிவிட்டுச் சென்றது! படிக்கட்டில் யாரோ பெண் இறங்கி வரும்  சிலம்புச் சத்தத்தைக் கேட்டுத் திரும்பிய இருவரும் வானவல்லியைக் கண்ட நேரத்தில் திகைத்து நின்றனர். இரு தரப்பினருமே ஒருவரை ஒருவர் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றுகொண்டிருந்தனர்.

காளன் மற்றும் வில்லவனைக் கண்ட மறுகணமே வானவல்லிக்கு சம்பாபதி வனத்தில் தன்னைச் சிறை செய்ய முயன்ற கள்வர்கள் இவர்கள் தானே? என்ற சிந்தனை தோன்ற அவளது மனம் சொல்லொனாத் துயரமும், அதிர்ச்சியையும் அடைந்தது! அதிலும் காளன் உப தளபதியாக அங்கு நின்றதைக் கண்ட வானவல்லி, இவர்கள் இருவரும் நிச்சயம் இருங்கோவேளின் கைப்பாவையாகத் தான் இருக்க வேண்டும். சம்பாபதி வனத்தில் திட்டம் போட்டுத் தான் தன்னைக் கவர முயற்சித்திருக்கிறார்கள் என்ற நினைப்பு தோன்ற தான் எப்பேற்பட்ட ஆபத்தில் சிக்கிக் கொண்டோம் என எண்ணியவளுக்கு மூர்ச்சையே வந்துவிடும் போலிருந்தது! பத்திரைத் தேவி பெரும் நம்பிக்கையுடன் விரும்புவது இருங்கோவேளிடம் தஞ்சம் கொண்ட இந்தத் துரோகியையா என நினைத்தவளுக்கு தனது தோழி மீது கடும் கோபம் வந்துகொண்டிருந்தது! கடும் சிரமப்பட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட வானவல்லி நிதானத்துடனே நடந்து சென்று இருவரின் முன் நின்றாள்.

யாரோ இரு சோழ நாட்டுப் பெண்களை யுவராஜன் சிறைப்படுத்தியுள்ளான். அதனால் யுவராஜனுக்கும் வேந்தனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட வேந்தன் ஆத்திரத்தோடு உறைந்தைக் கிளம்பி சென்றுவிட்டான் எனக் கேள்விப்பட்ட காளனும், வில்லவனும் சிறை வைக்கப்பட்டுள்ளவர்கள் யார் என அறிந்துகொள்ள மாளிகைக்கு வந்திருந்தனர். இருவருமே வானவல்லியை அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை! அவளைக் கண்ட இருவருமே அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள்! அவளைச் சூழ்ந்துகொண்ட ஆபத்தை எண்ணியவர்கள் அக்கணம் என்ன செய்து தப்பச் செய்யலாம் என சிந்தித்தார்கள்!

அமைதியாக நடந்து வந்து நின்ற வானவல்லி காளனிடம், “சம்பாபதி வனத்தில் முயன்று இயலாததை ஒரு வழியாக கருவூர் வஞ்சி மா நகரில் சாதித்துவிட்டீர்கள்!” எனக் காளனின் கண்களில் தனது பார்வையை நிலைநாட்டியபடியே கேட்கலானாள்.

காளன் குழப்பத்துடனே, “எதைப் பற்றி….” எனப் பேசிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட வானவல்லி, “எங்களைக் கவரலாம் என முயன்றீர்களே! அதைத்தான் குறிப்பிடுகிறேன்!” என ஆத்திரத்துடன் பதிலளித்தாள்.

“எங்களை என்றால்?”

“என்னையும், பத்திரையையும் தான் குறிப்பிடுகிறேன்!”

“பத்திரையும் இங்கு தான் இருக்கிறாளா?”

“ஏன் இந்தக் கேள்வி? அவளை இங்கு நீ எதிர்பார்க்கவில்லையா? உன் வேடம் இன்றே களையப் போகிறது கள்வனே! கள்வன் வேடத்தில் சுற்றிய இருங்கோ வேளின் ஒற்றன் நீ என்பதை அவளும் அறிந்துகொள்ளட்டும்! உன்னை நம்பி அவளது தந்தையைக் கூட எதிர்த்து துறவறம் மேற்கொள்ள வைத்து விட்டாள்! அவள் பாவம்! உன்னை நம்பியவள் நிர்கதியற்று நிற்கப்போகிறாள்!”

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here