வானவல்லி முதல் பாகம் : 49 – இறந்தவன் வந்தான்?

செங்குவீரன் இல்லாத புகாரை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருந்தான் டாள்தொபியாஸ். இளவல் மற்றும் செங்குவீரனைப் பற்றி பல விதமான வதந்திகள் வந்துகொண்டிருந்தன. இருங்கோவேளின் தரப்பிலிருந்து செங்குவீரனும், இளவலும் மடிந்துவிட்டார்கள் என்ற செய்தியே தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்ததால் செய்வதறியாது திகைத்த டாள்தொபியாஸ், தலைவர் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் இந்நேரம் தனக்கு செய்தி அனுப்பியிருப்பார் என நினைத்து வருந்தினாலும் மனம் தளராமல் வேண்டிய ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தான். எதிரிகள் குறிப்பிடுவதைப் போன்று தலைவர் மாளிகைத் தீயில் இறக்கவில்லை என்பதை மட்டும் தீர்க்கமாக அறிந்திருந்த டாள்தொபியாஸ், தலைவர் நிச்சயம் தக்க சமயத்தில் இளவலோடு வருகைத் தருவார் என்றப் பெரும் நம்பிக்கையில் வேண்டிய கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தான். செங்குவீரன் கூறியதைப் போன்று இருங்கோவேளை வரவேற்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில் தான் வஞ்சி மா நகரில் இருந்து வானவல்லியை வில்லவன் அழைத்துக்கொண்டு வந்திருந்தான். நடந்த நிகழ்வுகளைக் கேட்டுத் தெரிந்துகொண்ட டாள்தொபியாஸ் கடும் கோபத்துடன், “என்ன துணிச்சல் இருந்திருந்தால் இத்தகைய செயலைச் செய்யத் துணிந்திருப்பார்கள்! அவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்டுகிறேன்!” எனக் கூறியவன் பிறகுதான் உறைந்தையிலிருந்து வந்திருக்கும் ஒவ்வொருவரையும் அன்பாக உபசரித்து வானவல்லியை சிறை வைக்க முயன்றதைப் போன்றே அனைவரையும் தனித்தனி மாளிகையில் சிறை வைத்தான்.

செங்குவீரன் இல்லாத அபாயகரமான சூழலில் இருங்கோவேளுக்கும் புகாரைக் கைப்பற்ற ஊடுருவியிருக்கும் உறைந்தை வீரர்களுக்கும் இடைப்பட்ட தகவல் தொடர்பைத் துண்டித்துவிட்டாலே எதிரிகளை முடக்கிவிடலாம் எனத் திட்டமிட்டே கடும் பாதுகாப்புடன் மாளிகைக்குள் அடைத்தவன் வெளியிலிருந்து யாரும் அவர்களை தொடர்பு கொள்ளாத வண்ணமும் கவனித்துக்கொண்டான்! மன்னரிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் வெளியில் செல்ல வேண்டும் எனக் கிடைத்த செய்திகள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டான். அதே நேரம் மன்னரைக் காண அரண்மனைக்குள் புக முயன்ற வேந்தனின் ஒற்றர்களையும் தயவு கொள்ளாமல் கொன்று குவித்தான்.

‘பாதுகாப்பு அளிக்கிறேன்’ என்ற பெயரில் இருங்கோவேள், யுவராஜன், வைதீகர் மற்றும் உறைந்தைத் தளபதிகளை சிறைவைத்த மூன்றாம் நாளில் டாள்தொபியாஸ் வானவல்லியை அழைத்துக்கொண்டு யுவராஜனை அடைத்து வைத்திருந்த மாளிகைக்குச் சென்றான்!

மாளிகைக்குள் சென்ற வானவல்லி, “என்ன யுவராஜரே! டாள்தொபியாசின் உபசரிப்பு எப்படி உள்ளது?” என யுவராஜனைப் பார்த்து ஏளனத்துடன் கேட்கலானாள்.

அவளைக் கண்ட யுவராஜன், “பெண்ணே, இவையனைத்தும் உனது ஏற்பாடு தானா?” என அவள் மீது கோபம் கொண்டு வெகுண்டெழுந்தான்.

“மூடனே, என்னையா சிறை வைக்க முயன்றாய்? இன்னொரு முறை என்னிடம் உன் அதிகாரத்தைக் காட்ட முயலாதே! என் மார்க்கத்திலும் குறுக்கிடாதே, பின் விளைவுகள் உன் எதிர்பார்ப்பையும் கடந்து அபாயகரமானதாக இருக்கும்!” என எச்சரிக்கை செய்தவள் டாள்தொபியாசை அழைத்து, “இவனை அடைத்து வைத்திருப்பதால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. இன்று மாலையில் புகாரில் புரவித் தேர் போட்டி நடைபெறவிருக்கிறது. சோழ சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைப்பது மரபு! காலம் காலமாக புழங்கி வரும் மரபினை இந்தக் கயவர்களைக் கண்டு அச்சப்பட்டுச் சிதைக்க வேண்டாம். இவர்களால் என்ன செய்துவிட இயலும் என்பதையும்தான் பார்த்துவிடுவோமே! அனைவரையும் விடுவித்துவிடு!” எனக் கட்டளையிட “அப்படியே ஆகட்டும்!” எனக் கூறியவன் தனது வீரனை அழைத்து சில ரகசியக் கட்டளைகளைப் பிறப்பித்தான். அதைக்கேட்டவன், மாளிகையில் அடைத்து வைத்திருந்த அனைவரையும் விடுவித்து இருங்கோவேள் தங்கியிருந்த மாளிகைக்கு அழைத்துச் சென்று விட்டான்.

வெளியில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள இயலாமல் தவித்த மன்னர் தனது மகன், வைதீகர் மற்றும் தளபதிகளைச் சந்தித்த பிறகுதான் உற்சாகமடைந்தார். அவர்களிடம் பேசியபிறகு அவர்களும் தன்னைப் போலவே மாளிகையில் சிறை வைக்கப்பட்டதை அறிந்தவர் வேறு நாட்டிலிருந்து அடைக்கலம் புகுந்த யவனனுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என நினைத்து வெகுண்டெழுந்தவர், “டாள்தொபியாசை உடனே இங்கு அழைத்து வாருங்கள்!” எனக் கட்டளையிட்டார்.

அவரது கட்டளையைக் கேட்ட யவன வீரர்கள் முன்போன்று அலட்சியம் செய்யாமல் உடனே ஓடிச் சென்று டாள்தொபியாசை அழைத்து வந்தார்கள்.

மன்னரைப் பார்த்த டாள்தொபியாஸ், “மன்னிக்க வேண்டும் அரசே! இந்திரத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததால் தங்களைச் சந்திக்க இயலவில்லை! எங்கள் உபசாரத்தில் மன்னருக்குத் திருப்தி தானே!” எனச் சிரித்துக்கொண்டு அவரது கண்களைப் பார்த்தபடியே வினவினான்.

“டாள்தொபியாஸ் உனக்கு எவ்வளவு செருக்கு இருந்திருந்தால் எங்கள் அனைவரையும் தனித்தனியே மாளிகையில் சிறை வைத்திருப்பாய்! நான் உன்னைச் சந்திக்க வேண்டும் எனப் பல முறை சொல்லி அனுப்பியும் நீ செவி சாய்க்கவில்லை. உனது வீரர்களும் எனக்குப் பணியவில்லை! உன் மனதில் என்ன நினைத்திருக்கிறாய்?” எனக் கடும் கோபத்துடன் வினவினார்.

“அரசே! நீங்கள் அனுப்பிய செய்தி எனது காதுகளுக்கு எட்டியது! வெளியே வந்தால் எங்கே உங்கள் உயிர் பறிக்கப்பட்டு விடுமோ என அஞ்சியே உங்களை மாளிகையை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டாம் என நான்தான் எனது வீரர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்!”

“என்ன உளறுகிறாய் டாள்தொபியாஸ்?”

“அரசே, நான் கூறுவது உளறல் அல்ல! உங்கள் உயிருக்கு உண்மையிலேயே ஆபத்து உருவாகியிருந்தது. புகாரில் உங்களை வரவேற்ற போதே தெளிவாகத் தெரிவித்திருந்தேன். நீங்கள் புகாரில் இருக்கும் வரை உங்கள் உயிருக்கு நான் தான் பொறுப்பு என்று! அதன்பொருட்டே சிலக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து மன்னரின் கோபத்திற்கு ஆளாகிவிட்டேன்!” எனப் பணிவுடன் தெரிவித்தான் டாள்தொபியாஸ்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here