வானவல்லி முதல் பாகம்: 5 – விலகியது திரை வெளிப்பட்டது மாயச்சிலை

டுயாமத்தில் சம்பாபதி வனத்தினுள் கொடிய கொலைப் பழிக்கும் அஞ்சாத கள்வர்களிடம் சிக்கிக்கொண்ட பத்திரை புரவித் தேரினுள் அமர்ந்தபடியே வெளியே வானவல்லிக்கும், கள்வர்களின் தலைவனுக்கும் நடந்த உரையாடலைக் கேட்டபடி பதற்றத்தோடு அமர்ந்திருந்தாள். பயத்தில் உறைந்து நடுங்கியவளாய் என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ? என்பதை அறியாதவளாய், பயத்தில் சத்தம் ஏதும் செய்து தன்னைத் தானே காட்டிக் கொள்ள விரும்பாதவளாய் வாயில் கையை வைத்து மூடிக் கொண்டு பதறிக் கொண்டிருந்தாள். அவள் விடும் மூச்சுக் காற்றின் சத்தம் கூட அப்பொழுது அவளுக்குப் பயத்தை விளைவித்துக் கொண்டிருந்தது. மூடிய வண்டியினுள் எந்த வெளிச்சமும் இல்லாமல், பங்குனி பௌர்ணமி நிலவின் முதுகில் உள்ள இருள் அனைத்தையும் அவள் அமர்ந்திருந்த வண்டியினுள் கவிழ்த்துக் கொட்டியது போன்ற உணர்வை அளித்தது.

Vaanavalli
வானவல்லி

இதுதான் அவளுக்கு இது போன்ற முதல் அனுபவம். இதற்கு முன் அவள்  இப்படியொரு பயங்கரமான இரவை சந்தித்ததே இல்லை. கள்வர்களின் தலைவன் கூறிய ‘வண்டியைச் சோதனைச் செய்’ என்ற சொல்லானது பத்திரையின் காதில் புகாரின் ஆயுதக் கிடங்கில் காய்ச்சிய இரும்புக் குழம்பை ஊற்றுவது போல் இருந்தது.

ஏற்கெனவே அச்சத்தின் உச்சியில் இருந்தவளுக்கு அவளது மூச்சுக் காற்றின் சத்தம் பயங்கரத்தை விளைவித்தது மட்டுமல்லாது, இப்போது அவளது இதயமே பயத்தில் நின்றுவிடுவது போன்று வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது. இதற்கு முன் அவளது இருதயத் துடிப்பின் சத்தத்தை அவள் கேட்டதில்லை. இப்போதுதான் முதன் முதலாக அவள் தனது உயிரின் துடிப்புச் சத்தத்தைக் உணர்ந்தாள்.

வாளுடன் நின்றுகொண்டிருந்த கள்வன் ஒருவன் கள்வனின் தலைவனிடமிருந்து தீப்பந்தத்தைப் பெற்றுக் கொண்டு வண்டியை நோக்கி மூடியிருந்த திரைச் சீலையைத் திறந்து பார்க்க விரைந்து கொண்டிருந்தான். அவனது காலடிச் சத்தமானது மெல்ல வண்டியை நோக்கி விரைந்து வருவதை, மிதிபடும் சருகுகள் எழுப்பும் சத்தத்திலிருந்து பத்திரை உணர்ந்தாள்.

இந்த நிலையில் வண்டியினுள் அமர்ந்திருந்த பத்திரை இனியும் இங்கு வண்டியினுள் அமர்ந்திருப்பது நல்லதல்ல என்பதை உணர்ந்தவளாய், திரைச் சீலையை நீக்கி வெளியே வந்தாள். பந்தத்தோடு வந்த கள்வன் திரைச் சீலையை நீக்க கையை உயர்த்திய வேளையில் திரைச்சீலை தானாகவே, முத்து மோதிரம் அணிந்திருந்த அழகிய கரங்களால் விலக்கப்பெற்றதைக் கவனித்தவன் சற்று மிரட்சியடைந்தான்.

திரைச் சீலையைப் பத்திரை விலக்கிய வேளையில் அவளது கரங்களில் அணிந்திருந்த வளையல்கள் குலுங்கி எழுந்த இனிய ஓசை மெல்ல காற்றில் பரவி கள்வனையும் வானவல்லியையும் அடைந்தது. அவளது கைகளில் பவள முத்து பதித்த வளையளிலிருந்து எதிரொளித்த பந்தத்தின் ஒளியானது கண்களைக் கூசச் செய்யும் அளவற்கு ஒளிர்ந்தது.

இப்படிப் பத்திரை, முந்திக்கொண்டு வண்டியிலிருந்து வெளிவருவாள் என்று வானவல்லி எதிர்பார்த்திருக்கவில்லை. கள்வன் வண்டியினுள் அவள் இருப்பதைப் பார்த்த பின் மற்றவர்களிடம் அவன் கூறும் கால இடைவெளியில் புரவியை மட்டும் சாரதியில்லாமல் ஓடச் செய்து அவளை மட்டுமாவது தப்பிக்கச் செய்துவிடலாம் என எண்ணியிருந்தாள் வானவல்லி. அவளது ஏமாற்றத்தின் எண்ண ஓட்டம் அவளது முகத்தில் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொண்டாள்.

இப்படி வண்டியிலிருந்து வெளிப்பட்ட அழகுப் பதுமையான பத்திரையைப் பார்த்த கள்வர்கள் அனைவரும் வியந்தனர். திரை மூடிய வண்டியினுள் இப்படி ஒரு அழகுப் பதுமை வெளிப்படுவாள் என்று கள்வர்களின் தலைவன் உட்பட யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன், அழகின் மொத்த சொரூபமாய்ச் செருக்கோடு நின்றிருந்த வானவல்லிக்கு போக்குக் காட்டவே வண்டியைச் சோதனை செய்யச் சொன்னான். அவள் வண்டியினுள் ஏதேனும் விலையுயர்ந்த பொருட்கள் அல்லது வேறு ஏதாவது வைத்திருப்பாள், வண்டியை சோதனைச் செய்யச் சொன்னதன் மூலம் அவளைப் பயமுறுத்திப் பார்க்கலாம் என நினைத்திருந்தான் அவன்.

அனைவரின் எண்ண ஓட்டத்திற்கும் மாறாக, யாரும் எதிர்பார்க்காமல் பத்திரை என்ற அழகு சிற்பம் வெளிப்படும் என அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. பத்திரை வெளிப்பட்டதும், வானவல்லியின் முகத்தில் ஏதேனும் மாறுதல் ஏற்படுகிறதா எனக் கூர்ந்து நோக்கினான் கள்வர்களின் தலைவன். இத்தகைய அச்சமூட்டும் சூழ்நிலையிலும் அவளது முகம் எத்தகைய பதற்றத்தையும், பயத்தையும் வெளிக்காட்டாமல் சூரியனின் கொடிய செந்நிற ஒளியைப் பெற்று பொன்னாய் எதிரொளிக்கும் பொன்நிலவாய் இருந்தது அவனுக்குப் பேராச்சரியத்தை வழங்கியது. அவளது முகத்தில் பட்டு எதிரொளித்த அந்தச் செந்நிற ஒளி அவளது முகத்திற்கு இன்னும் ஒளியூட்டி சுற்றி நின்ற கள்வர்களின் கண்களுக்குப் பேரழகாய் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. இந்தப் பேரழகின் கர்வம் ஏதுமில்லாமல் அமைதியாய் நின்றுகொண்டிருந்தாள் வானவல்லி.

வண்டியிலிருந்த வெளிப்பட்ட அழகு சிற்பமான பத்திரையின் உடலை செதுக்கிய சிற்பி அவளது உடலை எந்தக் குறையுமின்றிச் செதுக்கியிருந்தான். எதையெதை எப்படிப் படைக்க வேண்டுமோ அதை அறிந்து அவ்வளவு நேர்த்தியாக அவளது உடலை வடித்திருந்தான். அவளைப் பார்க்கும் நேரத்தில் அவளது இடையைப் வடித்த சிற்பி கஞ்சனாகவும், அதே நேரம் அவளது இடைக்கு மேலேயும் கீழேயும் அவன் வடித்திருந்த அழகுகளைப் பார்க்கும் போது இவனைப் போன்ற வள்ளலை காண்பது அரிது என நினைக்கும்படி வேண்டிய யௌவனத்தை அழகுற பெற்றிருந்தாள் பத்திரை. அவளது கழுத்துக்குக் கீழே அவளது அழகை மறைத்திருந்த பட்டு துணியையும் மீறி காட்சியளித்த பிறை வடிய பள்ளம் ஆடவர்களைப் பைத்தியங் கொள்ளச் செய்பவை. அவள் கூந்தலை சுருட்டி கொண்டை போட்டு அதில் சுற்றியிருந்த ரத்தினப் பட்டையும், கட்டியிருந்த மலர் மாலையும் அவளது முகத்திற்கு அழகை கூட்டியிருந்தது. அவளது தலையின் உச்சியிலிருந்து கீழிறங்கிய அவளது நெற்றிச் சுட்டியானது பல கிளைகளாகப் பிரிந்த காவிரி மருத நிலத்தை வளப்படுத்துவது போல அவளது வளமான கருங் கூந்தலைத் தழுவி அவளது வெண்ணிற பிறை நுதலில் சங்கமித்துக் கொண்டிருந்தது. அந்த நெற்றிச் சுட்டியில் இருந்த செந்நிற முத்து, அவளது பவளம் போன்ற வெண்மையான நெற்றியில் தீப் பந்த ஒளியில் அந்தி வான பரிதி போலச் செந்நிறக் கதிர்களை வாரி இறைத்து அவளது முகத்திற்கு அழகைக் கொட்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here