வானவல்லி முதல் பாகம் : 51 – கரிகாலனின் காதலி

பகற்பொழுதில் போரிட்ட வீரர்கள் அனைவரும் பொழுது சாய்ந்ததும் ‘தலைவி தமக்காகக் காத்திருப்பாரே! தம்மைப் பிரிந்து வருந்துவாரே!’ என எண்ணி விரைவாக வீடு சென்று சேர வேண்டும் எனப் புரவியில் வேகமாகப் பயணிப்பார்கள். காற்றினை எதிர்த்து வேகமாகப் புரவியில் பயணித்ததால் அவர்களின் விழிகள் அந்தி வானம் போன்று சிவந்து காணப்படும். குறித்த நேரத்திற்குள் தலைவர் இன்னும் வரவில்லையே என ஏங்கிக் காத்திருந்த தலைவியர், “அவருக்காக இங்கு நான் வீட்டு வாசலையே பார்த்துக்கொண்டு காத்திருக்கிறேன். ஆனால், அவர் என்னை மறந்து அங்கு மகிழ்ச்சியாய் இருக்கிறார். இன்று அவருடன் பேசவே கூடாது!” என எண்ணி ஊடல் கொள்ளத் தயாராக இருப்பார்கள். ஆனால் வீட்டிற்கு வந்த தலைவனைப் பார்த்ததும் தனது ஊடலை மறந்த தலைவி வாசலுக்குச் சென்று வரவேற்று அழைத்து வருவாள். வீட்டு விளக்கு ஒளியில் தலைவனின் சிவந்த விழிகளைப் பார்க்கையில் அது தலைவனின் காமக் குறி எனத் தவறாக கருதியள் உடனடியாக அவனுடன் போகம் செய்யப் புன்முறுவல் செய்வாள். தலைவியின் புன்முறுவலைக் கண்ட தலைவனும் தலைவியின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்டவனாய் அவளுடன் கூடித் திளைக்க முற்படுவான்! கலவி இன்பத்தில் களித்ததால் மனம் மயங்கிக் காணப்படுவார்கள். அவர்கள் இடையும், இடையில் அணிந்திருந்த ஆடையும் நெகிழ்ந்து போகும். மயங்கிக்கிடக்கும் அவர்கள் விளக்கின் செந்நிற ஒளிக்கும் அவர்கள் அணிந்திருந்த சிவப்பு நிற ஆடைக்கும் வேறுபாடு தெரியாமல் மதி மயங்கி விளக்கு ஒளியை ஆடையென நினைத்து எடுத்து உடுக்க முயல்வார்கள். கையை வைத்துப் பார்த்தபிறகு தான் தெரியும் தான் எடுக்க நினைத்தது  உடை அல்ல அது விளக்கு ஒளி என்று! தனது பிழையை எண்ணி வெட்கமடைந்த தலைவி நாணம் கொண்டு தலைவனின் தோளில் தனது முகத்தைப் புதைத்துக் கொள்வாள். தலைவியின் முகப் புதைப்பைத் தவறாகப் புரிந்து கொண்ட தலைவன் மீண்டும் போகத்தில் திளைக்க ஆயத்தமாவான்! இத்தகு இரவு நேரத்தில் கடற்கரையோரம் இன்பத்தில் திளைத்த பரதவரும், பரத்தையரும் காதல் பாடல்களைப் பாடியவாறே இரவினைக் கழிப்பர். தலைவனும், தலைவியும் இரவில் வெகுநேரம் ஒலித்துக் கொண்டிருக்கும் அத்தகைய காதல் பாடல்களைக் கேட்டவாறே போகத்தில் திளைப்பார்கள்!

காற்றில் தவழ்ந்து வந்த அத்தகு காதல் பாடல்கள் பலரை இன்பத்தில் திளைக்க வைத்தாலும் மரகதவல்லிக்குப் பெரும் மன உளைச்சலையே அளித்தது. காரணம், இந்திரத் திருவிழாவில் நடைபெற்ற புரவித் தேர் ஓட்டத்தைக் கண்டவர்களுள் மரகதவல்லியும் ஒருத்தி. உப தலைவன் செலுத்திய இளஞ்சேட்சென்னியின் புரவித் தேரைக் கண்டு மகிழ்ந்து பெரும் ஆரவாரமிட்டவள், பின்னால் அமர்ந்திருந்த கரிகாற் பெருவளத்தானைக் கண்டதும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருந்தாள். தன்னுடைய வீட்டில் ஒரு நாள் வசித்துவிட்டுச் சென்ற கரிகாலன்தான் சோழ இளவல் வளவன் எனக் கனவிலும் அவள் எதிர் பார்த்திருக்கவில்லை! புரவித் தேரில் அமர்ந்து வந்த கரிகாலனைப் பார்க்க பார்க்க அவளது மனம் சொல்லொனாத் துயரடைந்து விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள். கனவிலும் ஆசைப்படத் துணியக்கூடாதவருக்குத் தான் ஆசைப்பட்டு விட்டேனோ? என எண்ணி வருந்தவே செய்தாள். தனது ஆசை எவ்வளவு முட்டாள் தனமானது என எண்ணியவளது கண்கள் கலங்கவே செய்தது. கண்களில் பெருகிய கண்ணீர்த் துளிகளைத் துடைக்கத் துடைக்க வழிந்த கண்ணீரோடு விரக்தியுடன் அமர்ந்திருந்தவளுக்கு ஆசிவகர் அருளிச் சென்ற வாக்கும் மனதில் தோன்றி அவளைத் திகைப்படையச் செய்திருந்தது. ஒரு வேலை ஆசிவகரது வாக்குப்படிதான் நடக்கப்போகிறதா? என்னை மணக்கப் போகிறவன் இமயம் வரை வெற்றிக்கொடி நாட்டுவான் எனக் கூறியது கரிகாலரைத் தானா? அவருக்கு மனைவியாக நானா? இது எப்படி சாத்தியமாகும்! அவரது கடைக்கண் அதிகாரப் பார்வையிலே சேரனும், பாண்டியனும், வேளிரும் தங்கள் புதல்விகளை அவருக்கு மணமுடித்துக் கொடுக்க தயாராக இருப்பார்கள். நாங்கூரில்  பயிர்த்தொழில் செய்யும் விவசாயக் குடியில் பிறந்தவள் நான். அவரோ நாட்டை ஆளும் வீர மன்னர்களின் சோழ குடியில் பிறந்தவர்! என் தந்தை அவரது படைப்பிரிவில் பணியாற்றும் சாதாரணத் தளபதி! என் நிலைக்குத் தான் அவரால் தாழ்மையடைய இயலுமா? அல்லது அவரது நிலைக்குத் தான் என்னால் உயர இயலுமா?  இனி என் வாழ்வில் அவரைச் சந்திக்க இயலுமா? ஒரு நாள் அவருக்குப் பணிவிடை செய்யும் பேறு கிடைத்ததே எனது பெரும்பாக்கியம். அவர் என்னை ஞாபகம் வைத்திருந்தாலே அதுவே எனது பூர்வ ஜென்மத்துப்  புண்ணியம்! தன் வீட்டிற்கு அடைக்கலம் தேடி வருகை புரிந்த கரிகாலனாகவே அவர் இருந்திருக்கக் கூடாதா? அவரை இனி எப்போது சந்திக்கப் போகிறோம்? எனத் தவித்தபடியே தன் வீட்டில் அமர்ந்திருந்தாள் மரகதவல்லி.

அப்போது திடீரென கதவு தட்டப்படுவதைக் கேட்ட மரகதவல்லி, ‘தந்தையும் இரவுக் காவல் பணிக்காக சென்றுவிட்டாரே! பொழுது சாய்ந்த இந்த முதல் சாம இறுதியில் தன் வீட்டுக் கதவைத் தட்டுவது யாராக இருப்பார்கள்!” என எண்ணியபடி கலங்கியிருந்த கண்களைத் துடைத்தபடியே கதவினைத் திறந்தாள்.

வெளியே நின்றவனைப் பார்த்த மரகதவல்லியின் கண்கள் அகல விரிந்தது! பதில் பேச வாய் வராமல் திகைத்து நின்றவளைக் கண்டவன், “உள்ளே செல்வோமே!” எனக் கூறியவாறே மரகதவல்லியின் பதிலைக் கூட எதிர்பாராமல் உள்ளே நுழையலானான்!

தனது அனுமதியைக் கூட எதிர்பாராமல் உள்ளே நுழைந்தவனைத் தடுக்க மனம் வராமல் அப்படியே உறைந்து நின்றுவிட்டாள் மரகதவல்லி. தான் ‘வேண்டாம்’ ‘வேண்டாம்’ எனக் கூறியும் பொன்னி நதியின் புனல் பிரவாகத்தில் குதித்துவிட்டவர், தன் வாழ்வில் இனியொருமுறை சந்திப்போமா என எண்ணியிருந்த கரிகாலன் தன் முன் மாறுவேடத்தில் நிற்பதைக் கண்ட மரகதவல்லி, “மாமன்னர் கரிகாலரை வணங்குகிறேன்!” எனக் கூறியபடியே பணிந்து மரியாதை செலுத்தலானாள்.

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here