வானவல்லி முதல் பாகம்: 6 – செங்குவீரன்

0
40

புள் தேம்பப் புயல் மாறி

வான் பொய்ப்பினும் தான் பொய்யா

மலைத் தலைய கடல் காவிரி

புனல் பறந்து பொன் கொழிக்கும்.

விளங்கிய கதிர்களையுடைய ஞாயிறு எத்திசை சென்றாலும், பெரும் புகழினையுடைய வெள்ளி மீனானது, தான் வசிக்கின்ற வட திசையிலிருந்து தென் திசைக்குப் போனாலும், தன்னைப் பாடி, மழைத்துளிகளை மட்டுமே உணவாக உண்டு வாழும் வானம்பாடிப் பறவை தனக்கு உணவான மழைத்துளிகளைப் பெற முடியாமல் வருந்துமாறு கார் மேகம் திசை மாறி மழை பெய்யாது பொய்த்தாலும், தான் பொய்க்காமல் இருப்பது காவிரியாறு. இக்காவிரியானது குடகு மலையில் தோன்றி கடல் போன்று எங்கும் பறந்து பொன்னாக விளை நிலங்களைச் செழிக்கச் செய்யும் எனக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பிற்காலத்தில் காவிரி பற்றிப் பாடப் போவதை மெய்ப்பிக்கப் பிரியப்பட்டதைப் போல அந்தப் பங்குனி இரவின் பௌர்ணமி நிலவில் காவிரியில் புனல் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு கடலில் சங்கமித்துக் கொண்டிருந்தது. மழை பொய்த்தாலும் காவிரியில் நீர் செறிந்து ஓடிக்கொண்டிருப்பதைக் கண்ட பங்குனி முழு நிலவு நகைப்பது போல நட்சத்திரங்கள் அந்த மேகமற்ற பங்குனி இரவில் மின்னிக்கொண்டிருந்தன.

Vaanavalli
வானவல்லி

ஒரு பிடிபடியும் சீறிடம், எழு களிறு புரக்கும் நாடுஎன்ற ஒரு பெண் யானைப் படுத்து உறங்கும் இடத்தில் பத்து ஆண் யானைகளுக்கு வேண்டிய உணவினை விளைவித்துக் கொடுக்கக் கூடிய நீர் வளம் பெற்ற சோழ நாட்டின் உட்புறங்களில் விளைந்த நெல், வாழை, பாக்கு, மணக்கும் மஞ்சள், மா, இஞ்சி முதலியவற்றைக் குவித்துக் கொண்டு நாவாய்கள் சோழத் துறைமுகப் பட்டினமான புகாரை நோக்கி காவிரிப் புனல் வழியாக வந்து கொண்டிருந்தன. உள்நாட்டில் விளைந்த இந்தப் பொருள்களுக்குப் பதில் மாற்றிய தூர தேசங்களில் விளைந்த வெள்ளை உப்புக்களையும், மிளகு, கற்பூரம், சீனத்து வாசனைப் பொருள்கள் மற்றும் பல நாட்டு உணவுப் பொருள்களையும் ஏற்றி நாவாய்கள் காவிரிப் புனல் வழியாக நாட்டிற்குள் சென்று கொண்டிருந்தன. கட்டுத்தறியில் குதிரைகளை வரிசையாகக் கட்டி வைத்துள்ளதைப் போன்று படகுகளையும் காவிரிப் புனலின் கரையில் கட்டி வைத்திருந்ததனால் புனலின் வேகத்தில் ஒன்றோடொன்று மோதி ஏற்பட்ட சத்தம் கரையெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தன.

அருகில் பரந்து விரிந்திருந்த 1கரும்பு ஆலையில் கரும்பைக் காய்ச்சிப் பதப்படுத்தப்பட்ட வெல்லத்திலிருந்து வெளிவந்த வாசம் எங்கும் பரவிக்கொண்டிருந்தது.

கடலில் மீன் பிடித் தொழிலைக் கொண்ட பரதவர்கள் 2குணக்கடலின் கடற்கரையையொட்டி வாழ்ந்து கொண்டிருந்தனர். பரதவரும், பரத்தியரும் சேரியில் ஆட்டுக் கடா சண்டைகளும், கவுதாரிச் சண்டைகளும், சேவல் சண்டைகளும் நடத்தி வேடிக்கை பார்த்து மகிழ்ந்த ஆராவர இரைச்சலும், இளைஞர்கள் பாடும் பாட்டு ஒலியும், அவர்கள் தட்டி எழுப்பும் ஓசையும், அந்த இசை ஒலிக்கு ஏற்ப நடனமாடும் யவன மற்றும் பல தேசத்து மங்கைகளின் சிலம்பொலிகளும் சேர்ந்து புகார் நகரக் கடற்கரையான நெய்தலங்கானலை அமர்க்களப் படுத்திக்கொண்டிருந்தது. இந்த நெய்தலங்கானல் கடற்பரப்பில் சிறு சிறு குடிசைப் போட்டு வசித்துக் கொண்டிருந்த பரத்தையர்கள் பகலில் உடுத்தியிருந்த பட்டு உடைகளைத் துறந்து புளிப்புச் சுவை மிகுந்த பனங் கள்ளைப் பருகிய பின் ஆடிய மாலை நேர ஆட்டங்களும் கடந்து பிறகு இரவு அணிந்துகொண்ட பருத்தி ஆடைகளும் மாறி, பின் அவரவர் துணையுடன் சேர்ந்து ஆடிய காம விளையாட்டுகளில் பின் அணிந்துகொண்ட வெள்ளை உடையும் காணாமற் போய்ப் பரத்தியர் அணிந்திருந்த மலர் மாலைகள் பரதவர் கழுத்திலும், பரதவர் அணிந்திருந்த சுறா முள்ளினால் செய்யப்பட்ட மாலைகள் பரத்தியர் கழுத்துகளுக்கும் இடம் மாறியது கூடத் தெரியாமல் தன் நிலை மறந்து களிப்புற்று களைப்புற்றிருந்தனர். பரத்தியர்  மாலை நேரத்தில் சூடியிருந்த தாழை மலர்களின் அடிப்பகுதில் வளர்ந்திருந்த வெண்டாள் காம ஆட்டத்தில் திளைத்திருந்த இவர்களின் உடல்களுக்கிடையே அகப்பட்டு, நசுங்கி அவர்களின் இருப்பிடம் மட்டுமல்லாது, கடற்கரையெங்கும் வாசத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது. அவர்கள் விளையாடிய காம விளையாட்டின் வெறிக் கூச்சல் வேறு நெய்தலங்கானல் கடற்கரையெங்கும் பீடித்துக்கொண்டு அமைதியில்லாமையே நிலவிக்கொண்டிருந்தது.

இந்த வெறிக் கூச்சலின் நிலையும் அடங்கக் காலம் வந்துவிட்டதை அறிவிக்கப் பிரியப் பட்டதைப் போல நெய்தலங்கானல் கடற்கரையின் மறுபுறத்தில் அமைந்திருந்த 4ஆலமரத்து முற்றத்து சிவன் கோயிலிலிருந்து வெளிப்பட்ட இரவு இரண்டாம் சாமத்து மணிச்சத்தம் எழுந்து கடற்கரையெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது.

ஆலமரத்து முற்றத்து சிவன் கோயிலில் அமைந்திருந்த பெரும் ஆலமரமானது தனது விழுதுகளை நிலைநாட்டி சிவபெருமானுக்கு ஆதிசேசன் குடைபிடிப்பது போல அந்தப் பெரும் கோயிலுக்குத் தன் கிளைகளைப் பரப்பிக் குடைபிடிப்பது போல அகன்று விரிந்திருந்தது. இந்தச் சிவன் கோயிலில் எரிந்து கொண்டிருந்த நெய் விளக்கானது புகார் நகர மக்களுக்கு வெளிச்சத்தை மட்டுமல்லாது ஞானவொளியையும் வழங்கிக் கொண்டிருப்பது போலச் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்தது.

இப்படிப் பட்ட நெய்தலங்கானல் கடற்கரையில் இரவு சாமம் முதலைக் கடந்து இரண்டை நெருங்கிக் கொண்டிருந்ததால் எப்போதும் பரபரப்புடன் இருக்கும் கடற்கரை இப்போது எந்தவொரு சலனமும் இல்லாமல் அமைதியாகக் காணப்பட்டது. ஆனால் இவை எதனிலும் கவனம் செலுத்தாமல் சோழப் பேரரசின் இணையற்ற வீரனும், ஒற்றர் பிரிவின் தலைவனும், தற்போது புகார் நகரத்திற்கும், அரண்மனைக் காவலுக்கும் தலைமைப் பொறுப்பேற்றுள்ள சோழ உப தலைவனுமான செங்குவீரன் எனப்படும் விறல்வேலின் மனம் மட்டும் சலனத்தொடும், நிலையில்லாமலும் வேதனையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது.

அவனது இடுப்பில் நீண்ட வாளுறையில் இருந்த போர் வாளானது அவனது வீரத்தைப் பறைசாற்றுவது போல நீண்டு, அகன்று தொங்கிக் கொண்டிருந்தது. அவனால் அந்த வாளின் மூலம் மோட்சமடைந்தவர்களின் ஆன்மாக்கள், வாள் வீச்சில் இவனுக்கு நிகர் யாருமில்லை, இவனுக்கு எதிராய் யார் பகையோடு வந்தாலும் அவர்களின் கதியும் எங்களைப் போலத்தான். உயிரை இழந்துவிடுவர். இவனுடன் பகையின் நோக்கோடு யாரும் இவன் அருகில் வரக்கூடத் துணியாதீர்கள் என அறிவிப்பது போல அவனது நடையில் எதிரில் வருபவர்களுக்கு எச்சரிக்கை செய்வது போல ஆடிக்கொண்டிருந்தது. அந்தப் போர் வாளின் அகலம், நீண்ட பரிமாணம், கணம் என அனைத்தும் அவனது வீரத்தையும், பலத்தையும் அறிவிக்கப் போதுமானதாக இருந்தது. மேலும் அவனது இடையில் மறைந்திருந்த மூன்று குறுவாள்களும் எதிர்த்து வருபவர்கள் பத்து பாவம் தாண்டி இருந்தாலும் அவர்களுக்கு எமன் இருக்குமிடத்திற்கு வழிகாட்டிவிடுவோம் என்பதை மெல்ல அறிவிப்பது போல அதன் தலையில் பதித்திருந்த மூன்று முத்துக்களும் பளபளவெனச் சிரித்துக் கொண்டிருந்தது. அவன் உதிர்த்துச் சென்ற பார்வையோ இரண்டு வேல்களாய் நீண்டு எதிரில் வருபவர்களை அச்சப்படுத்தப் போதுமானதாயிருந்தது. அவனது உயரம், தோற்றம் இவற்றைக் கவனித்தால் அவனது அகவை இருபத்து மூன்றைத் தாண்டியிருக்காது போலத் தோன்றியது. மெல்ல மெல்ல அவன் அந்தக் குளிர்ந்த கடற்மணலில் நடந்த வேளையில் இத்தகைய வீரனின் பாதத்தில் முத்தமிட்டுத் தன் பாவங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என முயன்று அவனது பாதத்தில் ஓரிரு முறை தன் அலைக் கரத்தால் முத்தமிட்டாள் கடலரசி. இத்தகைய வீரனுக்குச் சமர்ப்பணமாகக் கிளிஞ்சல்களையும், பாசிகளையும் அவனது பாதத்தில் சமர்ப்பித்தது கடலலை. இவை அனைத்தையும் வேண்டாதவனாயும், வெறுத்தவன் போலவும், கடலலைகள் தொடமுடியாதபடி தூர நகர்ந்து விட்டான். இரண்டொரு முறை அவனது பாதத்தில் சரணடைய முயன்று, முடியாத வருத்தத்தில் தோல்வியைத் தழுவிய பேரலைகள் பிறகு அவனது பாதங்களைத் தழுவ இயலாததால் அவனது நடைக்கேற்ப தனது அலைக் கரங்களால் மெல்ல இசைக்கத் தொடங்கினாள் கடலரசி.

அவன் நடந்ததில் கழுத்து வரை நீண்டு, சுருண்ட கருங்குழல்கள் அவனது திரண்ட, அகன்ற வலிமை வாய்ந்த தோள்களில் வீசும் தென்றலின் வேகத்திற்கேற்ப நடனமாடிக் கொண்டிருந்தது. அவனது மார்பிலும் முகத்திலும் ஏற்பட்டிருந்த நீண்ட சில தழும்புகள், அவனது வீரத்திற்கு அடையாளமாய்க் காட்சியளித்தது. இந்தத் தழும்புகள் அவனுக்கு அவலட்சணத்தை அளிக்காமல், புதுப் பொலிவையும் கம்பீரத்தையும் வழங்கியிருந்தது. பிறர் யாரும் பார்த்து அறிந்துவிடாதபடி எப்போதும் பெரும் அமைதியுடனே காணப்பட்டது அவனது முகம். அவனது நாசிக்குள் செல்லுமுன் எத்தகைய அமைதியான, அழகு வாய்ந்த திருமுகமிது என வியந்தபடியே உள் சென்ற கடல் காற்று வெளிவருகையில் ‘இவனது முகம் மட்டும் தான் இப்படி அமைதியாகக் காட்சியளிக்கிறது. ஆனால், இவனது உள்ளமானது யாரும் அறியாத வண்ணம் கொதித்துக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் யாதோ?’ எனக் காரணம் ஏதும் அறியாதபடி சூடேறி வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அவனது கழுத்தில் அணிந்திருந்த முத்து மாலையானது, உங்கள் யாருக்கும் இவனது உள்ளக் கொதிப்பு பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவனுக்காகக் துடித்துக் கொண்டிருப்பதாய் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் இவனது இதயமானது, இவனுக்காகத் துடித்தே பல காலம் ஆகிறது. இப்போதெல்லாம் அந்த மருவூர்ப்பாக்க மறவர் குலக் கன்னியை நினைத்தே முப்பொழுதும் துடிப்பதை நான் மட்டுமே அறிவேன் என்பதை அனைவருக்கும் அறிவிப்பது போல அவனது மார்பில் தழுவி ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. இந்த முத்து மாலையை இவனுக்கு எந்த வஞ்சிக் கொடி பரிசளித்தாளோ! அவளால் தான் இவன் பலவாறு துயரப் பட்டுக்கொண்டிருந்தான். இவன் சில காலங்களாக நிம்மதியில்லாமலும், மகிழ்ச்சியை இழந்தும் வாடிக் கொண்டிருக்கிறான் என்பதற்கு அத்தாட்சியாக அவனது முகம் பொலிவிழந்து காணப்பட்டது. கழுகைவிடக் கூர்மையான அவனது கண்கள், ஒளியை இழந்து, விழிப் படலத்தைச் சுற்றி சற்று கருத்து அவன் அயர்ந்து தூங்கியும் பல காலங்கள் ஆகின்றது என்பதை அறிவிக்கத்தான் செய்தது. மெலிந்திருந்த அவனது உடலானது, எப்படி இவன் உறக்கத்தை அவளால் துறந்தானோ, அப்படியே உணவையும் தவிர்க்க ஆரம்பித்து விட்டான் என்பதைச் சுட்டிக் காட்டியது. அவனது உடலின் பலம், கைகளில் இறுகியிருந்த தசைகள் இவன் இன்னும் தன் பயிற்சியை நிறுத்திவிடவில்லை என்பதைக் காட்டியது. இவனது உடல் தான் அந்த வஞ்சிக் கொடியின் பிரிவை எண்ணி மெலிகிறதேத் தவிர அவனின் மனம் நாளுக்கு நாள் அவளது காதலை எண்ணி வலிமையடைந்து கொண்டுதான் இருந்தது.

தூரத்தில் சோழப் பேரரசின் அரண்மனையில் இருந்த இரண்டு கதவுகளில் பொறிக்கப்பட்ட புலிச் சின்னத்தில் பொதிக்கப்பட்ட இரத்தினங்கள், முத்துக்கள், வைரங்கள் முதலியன பங்குனிப் பௌர்ணமி நிலவின் ஒளியிலும், இரவு விளக்குகளின் ஒளியிலும் பலவாறு ஒளிர்ந்துக் கொண்டிருந்தன. அவற்றின் ஒளி காற்றின் சலனத்தில் பிரகாசமாகவும், மங்கலாகவும் மாறி மாறி காட்சியளித்துக் கொண்டிருந்தது. கடலில் மிதந்து கொண்டிருந்த பல தேசத்து நாவாய்களில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளும் மங்கலாகவும், பிரகாசமாகவும் மாறி மாறி எரிந்துகொண்டு நிலையில்லாமல் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

‘நிலையாமை’ என்ற தருக்க விதி உலகிலுள்ள அனைத்திற்கும் பொதுவானது. உலகில் உள்ள அனைத்துமே நிலைக்காதது, முன்பு அரசாண்ட பெரும் பேரரசுகள் தற்போது, அவற்றின் சுவடுகளே அறிய முடியாதபடி காணாமல் போயுள்ளது. நேற்று காணப்பட்ட தேய்ந்த நிலவோ, இன்று முழு நிலவாகக் காட்சியளிக்கிறது. நாளை இந்த நிலவே தேய்ந்து காணாமல் போய்விடும். வீசிக் கொண்டிருக்கும் இந்தக் கடல் காற்றானது இன்று தென்றலாக உடலை வருடுகிறது. நாளை இதுவே புயலாகி, சூறாவளியாகி கடற்கரைப் பிரதேசங்கள் அனைத்தையும் நாசம் செய்துவிடும். மனிதனுக்கு வேண்டிய உணவு, நீர், வசிக்க இடம் என அனைத்தையும் இந்த மண் நமக்கு அளிக்கிறது. ஆனால் நாளை இந்த மண்ணே அனைத்தையும் தின்று விடும். ஆசீவக மதத்தின் கொள்கைப் படி இந்த உலகம் இன்னும் எண்பத்துநான்கு மகா லட்ச கல்ப காலம் தான் நிலைத்திருக்கும். பின்பு அது அழிந்து விடும். இப்படி உலகில் உள்ள அனைத்து உயிருள்ள உயிரற்ற பொருள்களும் நிலைத்திருக்காமல் அழிந்துவிடும். உலகில் உள்ள அனைத்துமே நிலையற்றது தான். அன்றும் அவளுடளான உறவு முதலில் நட்பாக மலர்ந்தது, பின்பு காதலாகி இப்போது அவளிடம் நிலைக்காமல், என்னிடம் மட்டும் நிலைத்துக் கொண்டு என்னைக் கொன்று கொண்டு இருக்கிறது. இப்படி உலகில் உள்ள அனைத்துமே நிலையில்லாமல் இருக்கிறது. ஆனால் என் மனதில் உள்ள வலி மட்டும் அன்று முதல் இன்று வரை மாறாமல் நிலைத்திருப்பதேன்? என அவன் பலவாறு தனக்குள்ளே கேள்வி கேட்டுக் கொண்டான். பிரிவின் வேதனை என் மனதை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து என் வலிமையனைத்தையும் .காணாமல் போகச் செய்து கொண்டிருக்கிறதே! கருநாகச் சர்ப்பத்தினால் கடியுண்ட கீரியோ செங்காநல்லியைத் தின்று வலியை முறித்துவிடுகிறது. ஆனால் இந்தக் காதல் பிரிவினால் ஏற்படும் வலியை முறிக்க யாரேனும் மருந்தைக் கண்டறிந்திருப்பார்களா?  அந்த வலி என்னை முழுவதும் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறதே! எனப் பலவாறு சலனத்துடன் அவனது மனம், அவனை ஏற்க மறுத்த மருவூர்ப் பாக்கத்தின் மறவர் குலப் பேரழகியை எண்ணி நினைத்துத் துடித்துக் கொண்டிருந்தது.

எதிரில் எத்தனை பேர் மல்லுக்கு வந்தாலும், அத்தனை பேரையும் தன் பலத்தினால் புறமுதுகிடச் செய்யும் வீரனான அவன், அவன் உள்ளிருந்தே அவனைத் தாக்கிக் கொண்டிருக்கும் அந்த மங்கையை, அவன் உள்ளத்திலிருந்து தூக்கியெறியவும் முடியாதவனாயும்,  வைத்திருக்கவும் இல்லாதவனாயும் துடித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வேண்டிய மகிழ்ச்சியை அவளால் மட்டுமே அளிக்க இயலும் என்பதை அவன் மனம் நன்கு அறிந்திருந்தது.

இப்பொழுது அவள் என்னைப் பிரிந்து அந்தத் துயர் என்னை மெல்ல கொன்றுகொண்டு இருந்தாலும், ஒரு நாள் அவள் தன்னைப் புரிந்து கொள்வாள், அவளது காதலும் அணைப்பும் நிச்சயம் இந்தக் காயங்களுக்கு மருந்திடும் என அவன் திடமாக நம்பிக்கொண்டிருந்தான். அந்த நம்பிக்கை மட்டுமே அவனை உயிருடன், திடமாக நடமாடத் துணையாயிருந்தது.

இப்படி அவன், தன்னை மறந்து மனதை அந்த மருவூர்ப் பாக்க வஞ்சிக் கொடியிடம் பறிகொடுத்துவிட்டு, அவளது பிரிவின் வேதனையைத் தாங்கமாட்டாதவனாய்ச் சுமந்துகொண்டு கடற்கரையில் அன்னம் மெல்ல நடப்பதுபோல மெதுவாக நடந்து சென்றுகொண்டிருந்தான். இப்படிப் பட்ட சூழ்நிலையில் அவனது புரவி அவனைப் பின் தொடர்ந்தபடியே, எந்தவொரு இடையூறும் செய்யாமல், இரண்டு பாவம் தள்ளி நடந்து வந்துகொண்டிருந்தது. ஒரு வெள்ளை நிற பருத்த யவன தேசத்துப் பழக்கப்பட்ட புறா ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து காற்றில் தவழ்ந்து, அதன் நீண்ட இறக்கையைச் சுருட்டி உடலோடு ஒட்டிக் கொண்டு அவனது தோளின் மீது மெல்ல அமர்ந்தது. அவனது தோளின் மீது அமர்ந்த புறாவையும் அவன் கவனிக்காமல் நடந்துகொண்டிருந்தான். அவனது தோளில் அமர்ந்த புறாவானது, செய்திகளை அவசரமாகப் பரிமாறும் பொருட்டு நன்கு பழக்கட்டு வளர்க்கப்பட்டது. அதில் மறைத்து அனுப்பட்டிருக்கும் தூது சீட்டை சம்பந்தப்பட்டவர் எடுத்து வாசிக்கும் வரை அது அவ்விடத்தை விட்டு நகராது. அவனது காதருகே “கூ…” “கூ…” வெனச் சத்தத்தை எழுப்பியும், இறக்கைகளை வேகமாக அடித்துக் கொண்டும் அவனது கவனத்தை ஈர்க்க புறா முயன்ற பின்னும், அவன் தன்னிலை மறந்தே நடந்து கொண்டிருந்தான். இதுவரை அவனை அமைதியாகப் பின்தொடர்ந்த அரேபிய தேசத்துக் கொழுத்த புரவி, நிலைமையைப் புரிந்தவாறு கால்களை உயர்த்தி வேகமாகக் கனைத்தது. கனைப்பின் சத்தத்தைக் கேட்டு உணர்வு பெற்றவனாய், புறாவைப் பிடித்து அதன் தலையைக் கோதியபடி சுற்றியுள்ள வானத்துப் பகுதிகளை ஆராய்ந்தான். புறாவைப் பிடித்து அதன் கழுத்தைத் தடவிக் கொடுத்துக் கொண்டே வெளிச்சம் உள்ள பகுதியை நோக்கி விரைவாக நடந்தான் விறல்வேல்.

அந்த யவன தேசத்து மணிப் புறாவானது கொண்டு வந்திருக்கும்  செய்தி, அவனது எஞ்சியிருக்கும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அடையாளம் தெரியாதபடி தகர்க்கப் போகிறது என்பதை அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவை அனைத்தையும் அறிந்த, எதிர்காலத்தில் நடக்கப் போவதை முன்கூட்டியே அறியும் வல்லமை வாய்ந்த கடற்கரையில் மணிமேகலை தெய்வத்துடன் வீற்றிருந்த 3கந்திற் பாவை மட்டும் அவனை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

1.கார்க் கரும்பின் கமழ் ஆலைத், தீத் தெருவின் கவின்- என்ற பட்டினப் பாலை (9-1௦) பாடல் வரியின் மூலம் சங்ககாலத்திலே தமிழகத்தில் கரும்பைக் காய்ச்சும் ஆலைகள் இருந்திருப்பதை அறியலாம்.

2.சங்க காலத்தில் வங்கக் கடலுக்கு (வங்காள குடாக் கடல்) குணக் கடல் என்று பெயர். (குணக்கு-கிழக்கு) அதாவது கிழக்குக் கடல்.

3.கந்திற்பாவை: எதிர்காலத்தில் நடைபெறுவதை முன்பே அறிந்திருக்கும் பௌத்த மதக் கடவுள்.

  1. புகாரில் ஆலமுற்றத்து இறைவன் கோயில் இருந்ததாக அகநானூறு பாடலில் பரணர் கூறுகிறார்.

ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய (17 வது வரி) பாலை -181

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here