வானவல்லி முதல் பாகம்: 8 – யவன நண்பன் டாள்தொபியாஸ்

0
20

காவிரி ஆறு குணக் கடலோடு சங்கமித்த இடத்திற்குக் கிழக்கே கடற்கரையையொட்டி, காவிரியாற்றின் ஓரமாக அமைந்திருந்த சிறு குன்று குன்றுத்துறை என அழைக்கப்பட்டது. புகார் நகரான பட்டினப்பாக்கத்தையும் மருவூர் பாக்கத்தையும் சற்று தள்ளி ஒதுக்குப் புறமாகக் அமைந்திருந்தது. இரு பட்டினங்கள், துறைமுகம், குணக்கடலின் விரிந்த கடற்பரப்பு என யாவற்றையும் ஒரு சேர கவனிக்கும் வண்ணம் பாங்குற அமைந்திருந்தது அந்தக் குன்று. புகார் நகரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளம் அந்தக் குன்று. இந்தக் குன்றின் மீது அமர்ந்துகொண்டே புகார் நகரம், துறைமுகம், குணக்கடல் என மூன்றையும் கண்காணித்து விட இயலும். இந்த ஒற்றைக் குன்றில் இருந்துகொண்டு தான் செங்குவீரன் ஒட்டு மொத்த தமிழக அரசியல் நிலையையும் கண்காணித்துக் கொண்டிருந்தான். புகார் பட்டினத்தை யாராவது தாக்குவதாக இருந்தாலும் இந்தக் குன்றைக் கடந்த பிறகே நெருங்க இயலும். இப்படிப்பட்ட குன்றில் தான், செங்குவீரனும் அவனது வீரர்களும் தளம் அமைத்துத் தங்கியிருந்தனர்.

Vaanavalli
வானவல்லி

புகார் நகர மாட மாளிகைகள் இரவு நேர விளக்கொளிகளால் மின்னிக்கொண்டிருந்தன. குணக் கடலின் பரந்த நீர்பரப்பிலிருந்து படகுகள் மற்றும் பாய்மரக் கப்பல்களின் விளக்கொளிகள் மெல்ல புகார் நகரக் கலங்கரை விளக்கை நோக்கி விரைந்தன. கடலின் பௌர்ணமி ஓதத்திலும், அலையின் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப அந்த விளக்கொளிகள் மேலும் கீழும் ஆடிக்கொண்டே வருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. குன்றின் மீது கூடாரத்தில் உறக்கமின்றி அமர்ந்திருந்த செங்குவீரனின் மனத்திரையில் வானவல்லியைக் காண நேர்ந்ததையும், பின் அவன் முற்றிலும் எதிர்பாராத விரும்பத்தகாத நிகழ்சிகளும் ஒவ்வொன்றாகத் தோன்றி அவனை ரணப்படுத்திக் கொண்டிருந்தது.

உடலில் ஏற்படும் காயங்களை விட மனதில் ஏற்படும் காயங்களே ரணமாகி அதிக வலியைக் கொடுக்க வல்லது என்பதை அவன் உணர்ந்தான். மனம் இதனை உணரவே செய்தாலும் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை இழந்திருந்தான் செங்குவீரன். அனைத்தையும் அவன் அனுபவிக்கவே செய்தான். இந்த அனுபவம் அவனது மனதை மெல்ல வலிமையடையவும் செய்துகொண்டிருந்தது.

ஒருவர் மீது நாம் கொண்டிருக்கும் அன்பும், காதலும் மிகையாகி அவர்களை ஏற்றுக்கொள்ளவும் இயலாத மறக்கவும் இயலாத சூழ்நிலையில் மனதில் ஒருவர் மீது ஏற்படும் தனிப்பட்ட விருப்பமின்றியும், விருப்பத்துடனுமான உளவியல் காரணமே வெறுப்பு என்று என்றோ படித்த மனோதத்துவக் கோட்பாடு மனத்திரையில் தோன்ற அவனது முகத்தில் ஒருவித நகைப்பு ஏற்படவே செய்தது.

செங்குவீரன் உறக்கமின்றி, வானவல்லியை எண்ணி கலங்கிக் கொண்டிருந்ததைக் கண்ட அவனது நண்பன் வருந்தினான். யவனத்திலிருந்து வாணிபம் மேற்கொள்ளப் புகார் வந்து, செங்குவீரனின் வீரத்திலும், அவனது திறமையாலும் கவரப்பட்ட யவன வீரன் டாள்தொபியாஸ், செங்குவீரனின் படைப்பிரிவில் சேர்ந்துகொண்டு அவனுக்கு உற்ற நண்பனாகவும் மாறியிருந்தான்.

யவன தேசத்தில் மாசிடோனிய மன்னன் பிலிப்பின் மகன் அலக்சாந்தரின் படையெடுப்பில் யவனம், ரோமாபுரி, பெருசியா மற்றும் பல தேசங்களை வென்றான். யவனத்தில் தோன்றிய மாபெரும் பேரரசு அதுதான். அவனது திடீர் உடல் நலக் குறைவால் அவன் கைப்பற்றிய தேசங்கள் அனைத்தையும் அவனது தளபதிகளிடம் ஒப்படைத்தான். அவன் இறந்த பிறகு அவனது தளபதிகள் அனைவரும் மாசிடோனிய புதிய மன்னனுக்குக் கட்டுப்பட மறுத்து, சுதந்திரமாகச் செயல்பட ஆரம்பித்தனர். அப்படி அவர்கள் சுதந்திர அரசாக அறிவித்த பின், அலெக்சாந்தரின் கீழ் ஒரே குடையாக ஆளப்பட்ட அந்த மாபெரும் தேசம் பல சிறு சிறு அரசுகளாகச் சிதறுண்டு வலிமையிழந்தது. பிறகு யவனத்தில் கிரேக்கர்களின் வலிமையும் பெருமையும் குன்றி ரோமின் ஆதிக்கத்திற்குப் பணிந்து அடிமைப்பட ஆரம்பமானது. ரோமிற்கு பணிந்து கிரேக்கத்தில் தங்களைத் தனியரசாக அறிவித்துக்கொண்டவர்கள், தங்களுக்கு யார் யாரெல்லாம் கட்டுப்பட மறுக்கிறார்களோ அவர்களை உயிரோடு தொங்கவிட்டும், அந்தக் கிராமங்கள் அனைத்தையும் தீக்கிரையாக்கியும் அனைவரையும் அடக்கினர். இருப்பினும் சில பிரிவினர் புது அரசுக்கெதிராகத் தொடர்ந்து கிளர்ச்சிகளைச் செய்துகொண்டும், போராடிக்கொண்டும் இருந்தனர். யார் யார் மேலெல்லாம் சந்தேகங்கள் தோன்றுகிறதோ அவர்கள் தங்கள் குடும்பப் பெண்களை இழப்பதும், அவர்களின் உடமைகளை இழப்பதும் தான் யவன தேசங்களின் நிலைமையாக இருந்தது. அப்படிக் கொடூரமாகத் தாக்கப்பட்ட ஒரு கிராமத்தில் இருந்து தப்பி, வணிகன் என்ற போர்வையில் புகாரில் தஞ்சம் புகுந்தவன் தான் டாள்தொபியாஸ். வீரனான டாள்தொபியாஸ், செங்குவீரனின் தனிப்பட்ட திறமையின் மீது கொண்ட பற்றினாலும் அவனது நட்பினாலும் புகாரிலேயே, யவனர் படைப்பிரிவிற்குத் தலைமையேற்றுத் தங்கிவிட்டான். இவன் இங்குத் தங்கிவிட்டாலும், இவனது நினைப்பு அனைத்தும் தேச விடுதலையிலேயே இருந்தது.

தவித்துக் கொண்டிருந்த செங்குவீரனின் நிலையைக் கண்ட டாள்தொபியாஸ், ஒரு கிண்ணம் முழுக்க உரோமாபுரி தேச உயர்ரக மதுவைக் கொண்டுவந்து அவன் முன் நீட்டினான். செங்குவீரன் அந்த மதுவை ஏறெடுத்தும் பார்க்காமல் அமர்ந்திருந்ததைக் கண்ட டாள்தொபியாஸ், “இதனைப் பருகுங்கள் தலைவரே, நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் மருந்து இதுதான். உங்களின் அனைத்துவித வலிகளையும் மறக்கடிக்கச் செய்துவிடும். இதனை உடனே பருகிவிடுங்கள். எதனைப் பற்றியும் சிந்திக்காதீர்கள். இப்படியே தாங்கள் கவலையில் உய்த்திருப்பதைக் கண்டால் எனக்கு ஆச்சர்யமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. நாங்கள் எங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் எங்கள் தலைவரை இழந்துவிடுவோமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது. உங்கள் கவலைகள் அனைத்திற்கும் காரணமும், மருந்தும் வானவல்லி சகோதரியே என்பதை என்னால் யூகிக்க இயலுகிறது. அவர்களால் தான் உற்ற மருந்தாகவும் இருக்க முடியும் என்பதையும் அறிவோம். ஆனால் தங்களது நிலையையும், அவரது பிடிவாதத்தையும் பார்த்தால், எனக்குத் தங்களைப் பற்றிய கவலைகள் அதிகரிக்கவே செய்கிறது. அவர்களது பிரிவு உங்களைப் பலவீனப்படுத்திக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நாங்கள் தான் அறிவோம். மதுவைப் பருகி உறங்கிவிடுங்கள் தலைவரே!” என்று அவன் மீது அக்கறைப் பட்டு அவனுக்காக அவனிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்.

அவனது ஆலோசனைகள் அனைத்தையும் கேட்டபடியே அமைதியாக அமர்ந்திருந்த செங்குவீரன், நீட்டிக்கொண்டிருந்த மதுக்கிண்ணத்தை வாங்கித் தூர வைத்துவிட்டு, “டாள்தொபியாஸ், உனது அக்கறை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நீ என் மீது கொண்டிருக்கும் அன்பும் தனிப்பட்ட மரியாதையும் எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், மன நிறைவையும் அளிக்கிறது. உங்கள் தேசங்களைப் போலக் காதலையும், அதன் பிரிவையும் சிறு கோப்பை மதுவைக் கொண்டு மறக்கடிக்கவோ விலக்கவோ இயலாது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும் டாள்தொபியாஸ். காதலும் வீரமும் எங்கள் எண்ணத்தோடு மட்டுமல்லாமல் உயிரோடும், அறிவோடும், குருதியோடும் கலந்தது. காதலின் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு நிலத்தைக் கொண்டு எங்கள் முன்னோர்கள், தனித்தனி இலக்கணங்களையும், இலக்கியங்களையும் படைத்துள்ளனர். காதலில் இருவரது அன்பும் ஒத்த நிலைகளான புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என ஒவ்வொன்றுக்கும் ஒரு திணையைப் பாடுபொருளாகக் கொண்டு அகத்திணை என்றும், மறஞ்செய்தலையும் அறஞ்செய்தலையும் புறத்திணை என்றும் இந்தக் காதலின் ஐந்து நிலைகளின் உருப் பொருள்களைக் களவு, கற்பு என்றும் நெறிப்படுத்தியுள்ளனர். இப்படிக் காதல், வீரம், அறம் முதலானவற்றை வெறும் அறிவு சம்பந்தப்பட்டது மட்டுமல்லாமல் அதனை எங்கள் வாழ்வோடும், வாழ்வியல் கலைகளாகவும், வாழ்வியல் இலக்கியங்களாகவும் நெறிப்படுத்தியுள்ளனர் எங்கள் முன்னோர்கள். உதாரணமாக.

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்போடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

மறையோர் தேஎத்து மன்றல் எட்டினுள்

துறையமை நல்லியார்த் துணைமையோர் இயல்பே. (தொல்களவி…1)

என இலக்கணம் வழங்கியுள்ளனர் டாள்தொபியாஸ்.

காதல் என்பது உடல் சம்பந்தப்பட்ட கூறு மட்டும் அல்ல. அது எங்கள் அறிவோடும், உயிரோடும், உணர்வோடும் கலந்தது என்பதை நீ நிச்சயம் உணர்ந்து கொள்ள வேண்டும். நாங்கள் எப்படி அறத்தையும், வீரத்தையும் போற்றுகிறோமோ அப்படியே தான் காதலையும் போற்றுகிறோம்.

யார் கேட்டாவது, நான் எனது வீரத்தையும், அறத்தையும் விட்டுக்கொடுக்க இயலுமா? இயலாது டாள்தொபியாஸ். அப்படியேதான் காதலையும்.

அப்படி நான் எனது வீரத்தை விட்டுக் கொடுத்திருந்தால், என்றோ நான் எனது காதலியை அடைந்திருப்பேன். காதல் எனக்கு முக்கியம் தான். ஆனால் வீரத்தை இழந்து, வீரத்திற்குப் பதிலாகக் காதலை அடையும் மனப்பக்குவம் இன்னும் எனக்கு ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

எப்படி வீரத்திற்குப் பதிலாகக் காதலை என்னால் ஏற்க இயலாதோ? அப்படியேதான், இந்த மதுவைப் பருகியும் என்னால் அதன் பிரிவின் வலியிலிருந்தும் தப்பிக்க இயலாது.

பெருங்கடலின் சீற்றத்தை கரையில் சிறு தடுப்புகளை ஏற்படுத்திக் கட்டுப்படுத்த இயலுமா?. இயலாது. அப்படியே தான் என் மனதில் தோன்றிக்கொண்டிருக்கும் உணர்ச்சிகளும். ஒரு சிறு கிண்ண மதுவைக் கொண்டு என் மனதில் எழும் உணர்ச்சி அலைகளைக் கட்டுப்படுத்த இயலாது என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும்.

அவள் என்னைப் புரிந்துகொண்டு, ஒரு நாள் என் காதலுக்கு இசைவு தெரிவிப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவளது இசைவில் தான் என் எதிர்காலமும், மகிழ்ச்சியும் அடங்கியுள்ளது. ஒரு நாள் அவளது இசைவே அனைத்திற்கும் பெரும் அருமருந்தாக அமையப்போகிறது டாள்தொபியாஸ்.

அப்படி அவள், ஏற்கவில்லை எனில் அவளது பிரிவில் என் மனம் மரத்து, பக்குவப்பட்டுவிடும். இல்லையேல் அவளது பிரிவே, என்னைச் சிறிது சிறிதாகக் கொன்றுவிடட்டும். எது நடந்தாலும் அதனை மகிழ்ச்சியோடு ஏற்கும் மன நிலைக்கு வந்துவிட்டேன்” என மறுமொழி கூறினான் செங்குவீரன்.

“தலைவரே, இப்படி நம்பிக்கையிழந்து ஏதும் கூறவேண்டாம். தாங்கள் தான் அனைவருக்கும் பெரும் நம்பிக்கையாக உள்ளீர்கள். நான் இங்கு வருவதற்கு முன் குடும்பம் அனைத்தையும் இழந்து, கண் முன் நடந்த பெரும் அக்கிரமங்களைத் துணிந்து பார்க்கக்கூடத் தகுதியற்றவனாய், தப்பித்துக் கடல் நாடோடியாக அலைந்து, பெரும் பயணத்திற்குப் பின் வாழ்வின் நம்பிக்கை அனைத்தையும் இழந்து ஏதுமற்றவனாய் புகார் வந்து தஞ்சமடைந்தேன். வந்த பிறகு, தாங்கள் தான் எனக்குப் பெரும் ஆதரவாகத் தோன்றினீர்கள். அன்று கடலில் திரிந்த வேளையில் துருவ நட்சத்திரம் எப்படி எனக்குப் பெரும் வழிகாட்டியாக இருந்ததோ, அப்படியே தான் இன்று நீங்களும் எனக்கு” என டாள்தொபியாஸ் கூறிக்கொண்டிருந்த போது அவனது கடந்த கால நிகழ்வுகள் அனைத்தும் மனத்திரையில் தோன்றியதால் அவனது கண் கலங்கியது. அவனது கலங்கிய கண்ணைக் செங்குவீரன் அறியாத வண்ணம் துடைத்துக் கொண்டு மேலும் தொடர்ந்தான்.

“ஒரு நாள் தங்களால் தான், எனது அனைத்து துயரங்களுக்கும், துன்பங்களுக்கும் விடுதலை பிறக்கும் என்று நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். தாங்கள் இனியொரு முறை என்னிடம் விரக்தியாக ஏதும் கூற வேண்டாம் தலைவரே.

தாங்கள் கூறியதில் சிறு திருத்தம்! அனைத்திற்கும் வானவல்லி சகோதரிதான் அருமருந்து என்று கூறினீர், ஆனால் காலம் தான் உங்களுக்கு மிகச்சிறந்த மருந்தாக இருக்கப் போகிறது. இரவு நடுசாமத்தைக் கடந்துவிட்டது. மனதில் எந்தக் குழப்பமும் இல்லாமல் உறங்குங்கள். நான் விடைபெறுகிறேன் தலைவரே!” என்று கூறியவாறே செங்குவீரனின் அறையைவிட்டு வெளியே புறப்பட்டான் டாள்தொபியாஸ்.

அவன் புறப்படும் தருவாயில், செங்குவீரன் அமர்ந்திருந்த இருக்கையின் அருகில் எரிந்துகொண்டிருந்த விளக்கிற்கருகில் இருந்த எழுத்தாணியும், ஒரு ஓலையும் அவனது கவனத்தைக் கவர்ந்தது.

தனது கவனத்தைக் கவர்ந்த ஓலையினைப் பார்த்தவன், “தலைவரே தங்கள் அனுமதியுடன்…” எனக் கூறியவாறே சம்மதத்தை எதிர்பார்த்து, செங்குவீரனை நோக்கினான். செங்குவீரன் மறுப்பு ஏதும் தெரிவிக்காததையடுத்து, அந்த ஓலையை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்.

செங்குவீரன் ஒற்றர் பிரிவிற்கும் தலைவனுமாகையால் அவனுக்கு அரசியல் சம்பந்தமான பெரும் ரகசிய ஓலைகளும் வருவதுண்டு, ஆகையால் தான் டாள்தொபியாஸ் செங்குவீரனின் சம்மதத்தை எதிர்பார்த்தான்.

முக்கியமான, இரகசியம் வாய்ந்த ஓலைகளைப் பிறர் கண் படும்படி வெளிப்படையாக வைத்திருக்க மாட்டான் செங்குவீரன். செங்குவீரன் வெளிப்படையாக வைத்ததிலிருந்தே அந்த ஓலையை வாசிக்க ஆர்வம் கொண்டான் டாள்தொபியாஸ். மேலும், அச்சாணியும் அருகில் இருந்ததனால் அந்த ஓலை அப்பொழுதுதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டான்.

டாள்தொபியாஸ் பிறந்து வளர்ந்தது யவன தேசமாயிருந்தாலும், அவன் தற்பொழுது முழுவதும் புகார் நகரவாசியாகிருந்தான். அவனது தாய்மொழி கிரேக்கமாக இருந்தாலும், தமிழில் பிழையின்றிப் பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டு, தற்போது இலக்கணங்களையும், இலக்கியங்களையும் கற்கும் அளவிற்கு முன்னேறியிருந்தான் அந்த யவன வீரனான டாள்தொபியாஸ்.

“ஓலையைப் படித்துக்கொண்டே, தலைவரே பெரும் வீரர்களையும் கவிஞர்களாக மாற்றும் வல்லமையை இந்தப் புகார் நகரப் பெண்கள் மட்டும் எங்கிருந்து தான் கற்றார்களோ? தெரியவில்லை!” என்று வியந்தபடியே செங்குவீரன் எழுதியிருந்த ஓலையை உரக்க வாசிக்கத் தொடங்கினான் டாள்தொபியாஸ்.

வில்லின் நாணோசை மங்கிப் போனதுவே

        விளம்பியதோர் வாய்மொழியால்!

சொல்லால் நானும் சிதறுண்டு போனேனடி

        செவ்வாய் இதழ்பிரித்த பொழுதினிலே!

கல்லுக்கும் ஈரம் உண்டென்றார்

        கனிமொழியாள் உனக்கில்லையோ?

செல்லரித்துப் போனதடி என்நெஞ்சம்

        செப்பியதோர் வார்த்தையிலே!

நில்லடி என்றிடத்தான் நாதுடிக்க

        நிற்காது சென்றயிடம் ஏதடியோ?

நல்மொழி தேடிநின்ற எனக்குள்ளே

        நஞ்சேற்றி சென்றதுவும் ஏனடியோ?

ஓலையை வாசித்து முடித்த டாள்தொபியாஸ், “தலைவரே, தங்கள் முன் வாளேந்தி தான் யாரும் நிற்க இயலாது என நினைத்திருந்தேன். ஆனால் கவி எழுதுவதிலும் தங்களுக்கு நிகர் தாங்கள்தான் என்பதை இந்தப் பாடல் மூலம் அறிந்துகொண்டேன். தங்களது பிரிவின் ஏக்கம் இந்தப் பாடலில் நன்கு வெளிப்பட்டுள்ளது. நான் விடைபெறுகிறேன் தலைவரே, இனி இங்கிருத்தல் ஆகாது!” எனக் கூறியபடியே, செங்குவீரனின் மறுமொழியை எதிர்பாராது அங்கிருந்து கிளம்பினான்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here