வானவல்லி முதல் பாகம்: 9 – தனிமையில் வெளிப்பட்ட காதல்

0
20

விறல்வேல் சென்று, ஒரு முகூர்த்தப் பொழுதிற்கு மேலும் கடந்து கொண்டிருந்ததால், வானவல்லியின் நற்றாய், அவள் இன்னும் வீடு திரும்பாததை எண்ணி துயரப்பட்டுக் கொண்டிருந்தாள். விறல்வேல் அங்குச் சென்றுள்ளதால் அவர்களுக்கு எந்தவிதத் துயரமும் ஏற்படாது என்று அவள் திடமாக நம்பினாள். இருப்பினும் ஒவ்வொரு நாழிகையும் அவளுக்கு ஒரு பொழுதாகவே மெதுவாக நீண்டுகொண்டிருந்தது. வீட்டுத் திண்ணையில் சாய்ந்து வீதியையே நோக்கி மகள் வருவாள் என்று எதிர்பார்த்து அமர்ந்திருந்தவள், அப்படியே கண்ணயர்ந்து உறங்கிவிட்டாள்.

எவ்வளவு நேரம் அப்படி உறங்கியிருப்பார் என்று தெரியாது, திடீரென அவரை யாரோ உறக்கத்திலிருந்து எழுப்பியதை உணர்ந்தவர், தன் முன்னாள் வானவல்லி நின்று கொண்டு தன்னை எழுப்புவதைப் பார்த்தார்.

Vaanavalli
வானவல்லி

வானவல்லி தனது தாயாரிடம், “என்னம்மா, எனக்காகக் காத்திருந்து இப்படி வாசலிலேயே உறங்கிவிட்டீரா?” என்று வினவியபடியே பரிவோடு வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.

வானவல்லியின் தாயார், தன் மகளுக்குத் தயாராய் இருந்த இரவு உணவுகளைப் பரிமாறியபடியே அவளது பயணத்தைப் பற்றியும் அதன் அலுவல்களைப் பற்றியும் விசாரிக்களானாள். “வனத்தில் தங்களுக்கு எந்தவித துன்பமும் நேர்ந்துவிடவில்லையே! நான் உனது இரவு பயணத்தை எண்ணியே கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன் மகளே. இப்போதுதான் எனக்கு நிம்மதியாக உள்ளது. மாலை வேளையிலேயே வீட்டிற்கு வந்துவிடுவதாய்ச் செய்தி அனுப்பியும் நீங்கள் இருவரும் பரிதி மேற்குத் திசையில் மறைந்தும் வீடு திரும்பாமல் இருந்தது பெருங்கவலையை அளித்தது. உன்னைக் கண்ட பின் தான் எனக்குப் பெரும் நிம்மதி. மகளே, நீ பயணக் களைப்பில் மிகுந்திருப்பாய், உணவுண்டபின் மாளிகையில் உள்ள உனது அறைக்குச்  சென்று நிம்மதியாக உறங்கு. உனது படுக்கையையும் தயாராய் வைத்துள்ளேன். நீ சென்றதும் உறங்கலாம். அனைத்தும் தயாராய் உள்ளது” என்றார்.

வானவல்லியின் தாயார் பேசியதனைத்தையும் “ம்ம்ம்” கொட்டிக்கொண்டும், தலையசைத்துக் கொண்டும் கேட்டுக்கொண்டிருந்தாள் வானவல்லி.

மகளின் மௌனத்தைக் கலைக்கும் விதமாக அவளின் தாயார், “மகளே வானவல்லி, சம்பாபதி வனத்தினுள் தங்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை தானே! பயணத்தில் எதிரில் விறல்வேல் தம்பியை சந்தித்தீர்களா?” என்று கேள்வியெழுப்பினார்.

அதற்கு வானவல்லி, “வனத்தில் பெரும் ஆபத்து நேர்ந்தது அம்மா, அவற்றைப் பற்றி விடிந்ததும் நாம் பேசிக்கொள்வோம். தாங்கள் இப்போது சென்று உறங்குங்கள்! ஏற்கெனவே தாங்கள் எனக்காகக் காத்திருந்த சோர்வு தங்கள் கண்களில் தெரிகிறது” என்று கூறிவிட்டு அவளது தாயாரின் கேள்விகளுக்கு முறையாக எந்தப் பதிலும் அளிக்காமல் அவளது அறைக்குச் செல்லும் மாடிப் படிக்கட்டில் ஏறினாள்.

தான் கேட்ட எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் வானவல்லி நழுவிச் செல்வதை உணர்ந்த வானவல்லியின் தாயார், அவளின் கையைப் பற்றி நிறுத்தி, “நான் கேட்டதற்கு நீ இன்னும் பதில் கூறவில்லையே வானவல்லி?” என்று வார்த்தைகளில் சிறிது கடினத்தைக் கூட்டினார்.

“வனப் பயணத்தின் போது, காளனின் கள்வர் குழுவிடம் சிக்கிக் கொண்டோம். நமது சில வீரர்கள் அவர்களை எதிர்த்து மாய்ந்தும் போனார்கள். அங்கிருந்து எந்தவித துன்பமும் நேராமல் வந்து சேர்ந்தது குச்சரக்குடிகை சம்பாபதி அம்மனின் அருள் தானம்மா. இதைக் கேட்டால் தாங்கள் பதறிவிடுவீர்கள் என்றுதான் காலையில் பேசிக்கொள்ளலாம் என்றேன்” என்று மறுமொழி அளித்தாள் வானவல்லி.

மகளுக்கு வந்த துயர் விலகியதை அறிந்த வானவல்லியின் தாயார் அகமகிழ்ந்து, “நீங்கள் இருவரும் தப்பித்து வந்ததே நாம் என்றோ செய்த புண்ணியம் தான்!” என்று வானவல்லியைத் தழுவி உச்சி முகர்ந்தாள்.

மேலும், “எதிரில் விறல்வேல் தம்பியை சந்தித்தாயா வானவல்லி?” என்று பெரும் எதிர்பார்ப்போடு கேள்வியெழுப்பினார் வானவல்லியின் தாயார்.

“ஏன் அம்மா, இந்த ஒரு கேள்வியை மட்டும் நீங்கள் விடாப்பிடியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என்னை விடுங்கள் அம்மா, நான் உறங்க வேண்டும்” என்று பொய்யாகக் கோபம் காட்டினாள் வானவல்லி.

“நில் மகளே, பொழுது சாய்ந்து இரண்டு சாமம் கடந்த பின், இந்த வழியாகக் காவலுக்குச் சென்ற தம்பி விறல்வேல் நான் உனக்காகக் காத்துக் கொண்டிருந்ததைக் கண்டு என்னிடம் விசாரித்தார். நான் நீயும் பத்திரையும் வீடு திரும்பாதது பற்றிக் கூறினேன். விறல்வேல் உங்களை நோக்கி எதிரில் வந்திருப்பான், அவன் உங்களை எதிரில் சந்திக்கவில்லை எனில் உங்களைத் தேடி வனம் முழுக்கத் தம்பி அலைந்துகொண்டிருப்பான். ஆதலால் தான் விறல்வேலை சந்தித்தாயா? என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன்!” என்றார்.

காளனிடம் அகப்பட்ட முழு விபரங்களையும் கூறி கடைசியில் “விறல்வேல் தான் அவர்களிடம் இருந்து எங்களை மீட்டார். காவல் தலைவர் மட்டும் அங்குச் சரியான நேரத்திற்கு வந்திராவிட்டால், எங்களின் நிலை படுமோசமாகியிருக்கும் அம்மா“ என்றாள் வானவல்லி.

“அப்பொழுது நீங்கள் காளனிடமிருந்து தப்பி வந்தது குச்சரக் குடிகை சம்பாபதி அம்மனது அருள் இல்லை தம்பி விறல்வேல் வந்த புண்ணியம் தான் என்று கூற வேண்டியதுதானே மகளே!” என்று வானவல்லியை பரிகாசம் செய்தார் வானவல்லியின் தாயார்.

“அவர் என்னைப் பார்த்தார். சந்திக்கவும் முற்பட்டார். நான் சந்திக்கவுமில்லை, பேசவில்லை!” என்றாள் வானவல்லி.

“உங்கள் இருவரையும் இவ்வளவு பெரிய துயரத்திலிருந்து காப்பாற்றியதே அந்தத் தம்பிதான். ஒரு மரியாதை நிமித்தமாகக் கூடவா பேசி நன்றி சொல்லத் தோன்றவில்லை உனக்கு. எனக்குக் கேட்கவே வருத்தமாக உள்ளது மகளே. அந்தத் தம்பியின் மனம் எப்படியெல்லாம் வருத்தப்பட்டிருக்கும்! உன் மனம் வர வர இந்தக் காரியத்தில் மிகவும் கல்லாக ஆகிக் கொண்டிருக்கிறது. எனக்கு இது சரியாகப் படவில்லை” என்று கடுமை பாராட்டினார் வானவல்லியின் தாயார்.

“ஒவ்வொருமுறை அழைக்கும் போதும் தம்பி விறல்வேல் என்று உரிமையோடு அழைக்கிறீரே! உங்களோடு பிறந்திருந்தாலும் அவருக்கு இத்தனை மரியாதை கிடைத்திருக்காது போலிருக்கிறதே அம்மா!” என்று தாயிடம் திருப்பிக் கேட்டாள் வானவல்லி.

மேற்கொண்டு “அம்மா, தந்தைக்கு நான் கொடுத்துள்ள வாக்கை என்று நான் மீறியிருக்கிறேன். அவரது சொல் எனக்கு வேத வாக்கு. அவரது சொல்லிலிருந்து சிறிது கூடப் பிறழ முயற்சிக்கமாட்டேன் என்பதைத் தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” எனப் படபடவெனப் பதிலளித்துவிட்டு தனது அறையை நோக்கி விறுவிறுவென அவளது தாயாரின் மறுமொழியைக் கூட எதிர்பார்க்காமல் சென்றுவிட்டாள் வானவல்லி.

வானவல்லிக்கும் அவளது தாயாருக்கும் இடையில் நடந்த உரையாடல்கள் அனைத்தையும் கேட்டபடியே பக்கத்து அறையில் உறங்குவதாக நினைத்துக்கொண்டிருந்த வானவல்லியின் தந்தையார் உறங்குவதுபோல  அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அக்கணம் அவர் வானவல்லியை எண்ணிப் பெருமைப்படாமல் இருக்க இயலவில்லை.

புகாரில் அக்காலத்தில் யாருக்கும் தெரியாமல் காதலர்கள் காந்தருவத் திருமணம் செய்துகொள்வதும், வீட்டில் காதலை ஏற்காத பட்சத்தில் உடன்போக்கு சென்றுவிடும் பெண்களுக்கிடையில் தந்தையின் சொல்லிற்குப் பெரிதும் மதிப்பளிக்கும் தன் மகளை எண்ணி அவர் பெருமையாகக் கர்வம் கொள்ளவே செய்தார்.

ஆனால், அவளது மனதில் உள்ள ஆசையினை அறிந்திருக்க வாய்ப்பில்லையாதலால் அவளது மனப் போராட்டத்தையும் அவர் அறிந்திருக்கவில்லை.

படிக்கட்டின் வழியாகத் தனது அறைக்குள் வந்த வானவல்லி, அறையின் மாடத்தில் அடுக்கி வைத்திருந்த அவளது ஆடைகளுக்கிடையில் யாவருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்த தாழை மடலை, அந்தத் தாழை மடலினும் மென்மையான அவளது கைகளால் மெல்ல எடுத்து விளக்கிற்கருகில் வைத்தாள். அழுத்தினால் நொறுங்கிவிடும் அளவிற்குக் காய்ந்து போயிருந்தது அந்த ஒற்றைத் தாழை மடல். அந்தத் தாழை மடல் காய்ந்து போயிருந்தாலும், அதிலிருந்து வெளிப்பட்ட மணம் அந்த அறை முழுவதும் நறுமணத்தைப் பரப்பியது. அதில் எழுதியிருந்த எழுத்துகள் அந்த மங்கலான இரவு விளக்கு வெளிச்சத்திலும் பளிச்சென்று காட்சியளித்தது வானவல்லிக்கு. அதில் எழுதியிருந்த வார்த்தைகளை அவள் மெல்ல வாய்விட்டு வாசிக்கவே செய்தாள். அதனை அவள் வாசிக்கையில் அவளது உடலின் அனைத்துப் பாகங்களிலும் புது இரத்தம் வேகமாகப் பாய்வதை உணர்ந்தாள். வாசித்த அவளது குரல், அவளது காதுகளை அடைந்த வேளையில் அவளது உடலிலும், உயிரிலும் பெருமகிழ்ச்சி, பெரும் உணர்வு ஊற்றெடுப்பதை அவளால் கட்டுப்படுத்த இயலவில்லை.

மலர்களில் பல விதங்கள் உள்ளன. நிறம், அழகு, நறுமணம், வடிவம் என ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உண்டு. அவை ஒவ்வொரு மலருக்கும் வேறுபட்டுக்கொண்டே இருக்கும். சில மலர்கள் பார்க்கும் மாத்திரத்திலேயே அவற்றின் வண்ணத்தாலும் அழகாலும் பார்வையைக் கவர்ந்துவிடும், சில மலர்களின் மணம் தூர இருந்தாலும் மனத்தைக் கவர்ந்து இழுக்கும். இப்படி மணம், நிறம், என ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புற்று மாறுபட்டுக் காணப்படுகிறது. சில மலர்கள் பூத்த அன்றே உதிர்ந்தும் விடுகிறது. சில மலர்கள் பூத்தும் பல நாட்கள் உதிராமல் அழகு சேர்த்துக் கொண்டிருக்கும். பூக்கும் விதத்தில் வாடாவள்ளி எனப்படும் குறிஞ்சி மலர் குறிஞ்சி நிலத்தில் மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது. அது பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும், அது மலர்ந்ததிலிருந்து ஆறு திங்களுக்கு வாடாது, பளிச்சென்று அழகினையும், மணத்தையும் பரப்பிக்கொண்டேயிருக்கும். இப்படிப்பட்ட விசித்திர மலர்களுக்கிடையில் காலை புலர்ந்ததும் பரிதியைக் கண்டு மலரும் செந்தாமரையும், பரிதி மறைந்து இரவில் தோன்றும் நிலவைக் கண்டதும் மலரும் அல்லியும், மாலைப் பொழுதில் மேற்கு வானில் சிவந்து காணப்படும் செம்பரிதி, கீழை வானில் உதித்திருக்கும் பிறை நிலாவெனப் பரிதி, நிலவு என இரண்டையும் கண்டு மாலைப் பொழுதில் மலர்வது குமுதப் பூ.

இப்படி வாடாவள்ளி, செந்தாமரை, அல்லி, குமுதப் பூ என ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்புக் காணப்பட்டாலும், இந்த மலர்கள் எதற்கும் இல்லாத அருபெரும் தனிச்சிறப்பு தாழம்பூவிற்கு உண்டு. செந்தாமரை, அல்லி, குமுதப் பூ என இவை இரு பொழுதுகளிலும் பரிதி, நிலவைக் கண்டு மட்டுமே மலர்வது. ஆனால் தாழம் பூ மட்டும் கார்காலத்தில் சூழும் கருமையான கார்மேகத்தில் தோன்றும் தூய்மையான மின்னலைக் கண்டு மலரும். வெண்டாள் எனப்படும் தாழையின் அடிப்பகுதி அதன் மடல் என அனைத்தும் தூய்மையான மின்னலைக் கண்டு மலர்வதாலோ என்னமோ தாழை மலர் காய்ந்து சருகாகியிருந்தாலும் அதிலிருந்து மணம் வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கும். தலை முழுக்கத் தொடுத்த மல்லிகை வைத்த போதும் வீசாத மணம் தாழை மலரின் ஒரேயொரு மடலை கிள்ளி வைத்தால் போதும், அது காய்ந்து சருகாகினாலும் அது தலையில் உள்ளவரை நறுமணத்தை வீசிக்கொண்டே இருக்கும். இப்படி எந்த மலருக்கும் இல்லாத தனிச்சிறப்பையும், தனித்தன்மையும் கொண்டது தாழை மலர்.

வல்லி என்றால் அழகுத் தமிழில் கொடி என்று பொருள். (வல்லி- கொடி) வானவல்லி என்றால் கரிய கார் மேகங்களுக்கிடையில் தோன்றும் பரிசுத்தமான அப்பழுக்கற்ற தூய்மையான கொடி மின்னல் என்று பொருள். வானவல்லி என்றால் சுருக்கமாக மின்னல் கொடி அல்லது மின்னல் என்று பொருள் கொள்ளலாம்.

வானில் தோன்றிய தூய மின்னலைக்கண்டு மலர்ந்த தாழையின் மடல், அறையில் வானவல்லியின் கையில் தவழ்ந்து கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த தாழை மடலில் எழுதியிருந்தவற்றை அறையில் அவளுக்கு மட்டுமே மெல்ல கேட்கும் படியாக வாய்விட்டுத் திரும்பத் திரும்ப வாசித்தாள் வானவல்லி.

விளம்பிடத்தான்

       எத்தனித்தேன்

புலம்பல்களைச்

       சித்தரித்தேன்

தாழையிது உன்கை

       தவழ்கையில்

செழுமையாய் என்நெஞ்சில்

       ஆணிவேர் விட்டாயடி…!

விறல்வேல், வானவல்லிக்கு எழுதிக் கொடுத்த பாடல் அது. புகாரில் சித்திரைப் பெருவிழாவான இந்திரத் திருவிழா முடிந்த அடுத்த நாளில் அவளது பிறந்த தினத்தின் போது, தன் மனதில் உள்ள காதலை வானவல்லிக்கும் அறியச் செய்யும்படி விறல்வேல் எழுதிக் கொடுத்த பாடல் தான் இது.

மின்னலைக் கண்டு மலர்ந்த தாழை மடலில் காதல் மடல் எழுதி கொடி மின்னலுக்கே கொடுத்த அவனது திறத்தை எண்ணி அவள் வியக்கவே செய்தாள். பாடலில் செறிந்துள்ள பொருள் வளமும் அவளை வியப்படையச் செய்தது. தமிழகத்தின் பெரும் வீரனுக்கு இவ்வளவு அழகாகக் கவி படைக்கவும் இயலுமா? என்று வியந்தாள் அவள். “தாழையிது உன்கை தவழ்கையிலே,  செழுமையாய் என்நெஞ்சில் ஆணிவேர் விட்டாயடி” என்ற கவிதை வரிகளை அவள் பெருமை பொங்க காதலுடன் திரும்பத் திரும்ப வாசித்தாள். இந்தத் தாழை மடல் அவளது கைகளில் தவழ்கையில், அவனது மனதில் மட்டுமல்லாமல், தன் நெஞ்சிலும் அவனது காதல் ஆணிவேர் விட்டு வளர்ந்துவிட்டதை அவள் உணரவே செய்தாள்.

தாழையிலிருந்து வெளிப்பட்ட மணம் அறை முழுவதும் பரவிக்கொண்டிருந்தது போல, தாழையின் கவிதையிலிருந்து வெளிப்பட்ட பொருள் அவள் மனம் முழுக்கக் காதலை பரப்பிக்கொண்டிருந்தது.

மடலை மார்பில் அணைத்தபடியே கண்களை மூடி, மனம் முழுக்க நிறைந்துள்ள விறல்வேலை நினைத்து, காதலில் மையலுறத் தொடங்கினாள் வானவல்லி.

இங்கு வானவல்லி விறல்வேலை எண்ணியே அமர்ந்திருந்தாள். அங்கு விறல்வேலும் மனம் முழுக்க நிறைந்துள்ள வானவல்லியை எண்ணியே உறக்கமில்லாமல் வீற்றிருந்தான். இருவரது மனங்களும் ஒன்றிணைந்து மற்றவர் அறியாத வண்ணம் காதலில் திளைத்துக்கொண்டிருந்தது.

திடீரெனத் தந்தையின் நினைப்பும், அவரது பிடிவாதமும், தந்தைக்கு வீரர்கள் மேலுள்ள வெறுப்பும் அவளது நினைவிற்கு வர, அவள் அக்கணம் கலங்கவே செய்தாள்.

அவளது மனதில் யாரும் அறியாதபடி வளர்ந்துவிட்ட, அவள் மட்டுமே அறிந்த காதலா அல்லது இவளது குடும்பமா என இரண்டும் சேர்ந்து அவளுள் ஒரு மனப்போரை உருவாக்க அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

ஒன்று காதலிக்காமல் இருந்திருக்க வேண்டும் அல்லது காதலித்தால் யாரையும் எதிர்க்கும் மன வலிமையாவது இருந்திருக்க வேண்டும். இப்படி ஏதும் இயலாத பேதைப் பெண்ணாக மட்டும் இருக்கவே கூடாது என அவள் மனம் கலங்கி அவள் கண்களில் இருந்து வெளிப்பட்ட கண்ணீர் துளிகள் கன்னம் கடந்து அவளது மார்பில் அணைத்திருந்த தாழை மடலின் மீது சொட்டு சொட்டாக விழுந்து நனைக்கத் தொடங்கியது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here