வானவல்லி – ஆசிரியருரை

Vaanavalli
வானவல்லி

மிழக வரலாற்றில் பொற்காலம் என்றால் அது காதலையும், வீரத்தையும் போற்றி வாழ்ந்த சங்ககாலத்தின் ஆரம்பக் காலம் தான். அச்சங்க கால மன்னர்களுள் மிகச் சிறந்தவன் கரிகாலன். சோழர்கள் தங்களது வல்லமையை இழந்து குறுநில மன்னர்களாகி புகழை இழந்து தஞ்சைக்கு அருகில் ஒடுங்கிய வேளையில் இக்கரிகாலனைத்தான் முன்னுதாரணமாகக் கொண்டு இழந்த புகழை மீட்டெடுத்து தெற்கே குமரி, வடக்கே கங்கை, கிழக்கே கடாரம் வரை வென்றனர். பிற்காலச் சோழர்கள் அன்றி முற்கால சேரர்களான இமயவரம்பன், நெடுஞ்சேரலாதன் மற்றும் செங்குட்டுவனுக்கும் முன்னுதாரணமாக விளங்கியவன் கரிகாற் பெருவளத்தான். தமிழக மன்னர்களுள் முதன்முதலில் இலங்கையை வெற்றி பெற்ற பிறகு இமயம் வரைப் படையெடுத்து வென்று தனது புலிச் சின்னத்தை இமயத்தில் பொறித்து போரில் தோற்ற பிற நாட்டு வீரர்களைக் கொண்டு காவிரிக்குக் குறுக்கே அணையைக் கட்டி, இரு புறங்களிலும் கரை எடுத்த மாபெரும் மன்னன் கரிகாற் பெருவளத்தான். தமிழக வரலாற்றில் யாராலும் நெருங்க இயலாத புகழின் உச்சியை அடைந்த கரிகாலன் அவனுக்குரிய அரியாசனத்தை அடைவதற்குள் அவன் அடைந்த இன்னல்களும், துயரங்களும் பல! தாய் வயிற்றில் இருக்கும்போதே தந்தையை இழந்தவன் பிறகு வளர்ந்ததும் எதிரிகளால் கைது செய்யப்பட்டு மாளிகைக்குள் அடைத்துவைக்கப்பட்டு மாளிகையோடு எரிக்க முயன்ற கொடுமையும் அவனது வாழ்வில்தான் அரங்கேறியது. அதிலிருந்து அவன் எப்படித் தப்பி எங்கெங்கு ஓடியிருப்பான் என அறியும்பொருட்டு காவிரியில் மரக்கலம் சென்றதாய் கூறும் சங்கப் பாடல்களை முனகிக்கொண்டே துளி நீர் கூட இல்லாமல் வறண்ட காவிரிக் கரையோரமாகவே முக்கொம்பு முதல் கல்லணை வரை நடந்து சென்ற அனுபவங்களை எளிதில் மறக்க இயலாது!

Vaanavalli
வானவல்லி

கரிகாலன் அமர்ந்து ஆட்சி செலுத்திய புகார்ப் பட்டினம் நான்கு காத தூரம் பரந்து விரிந்திருந்தது என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. நான்கு காத தூரம் என்பது சோழர்களின் முற்காலத் தலைநகர் உறைந்தைக்கும் சேரர்களின் தலைநகர் கருவூர் வஞ்சிமா நகரத்திற்கும் இடைப்பட்ட தொலைவு என்பதை அறிந்த போது வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டேன். தற்போதைய திருச்சிக்கும் கரூருக்கும் இடைப்பட்ட தொலைவு தான் நான்கு காத தூரம். அவ்வளவு தூரம் பரந்து விரிந்திருந்த பிரமாண்டப் பட்டினமான பூம்புகார் இன்று குணக்கடல் கொண்டது போக எஞ்சியிருக்கும் அதன் எச்சங்களைக் காணுகையில் பட்டினப்பாலையில் புகார்ப் பட்டினத்தின் சிறப்பினைக் கூறும் கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பாடல் வரிகள் மனதிற்குள் தோன்ற கண்களின் கண்ணீர்ப் பெருக்கை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. வழிந்த இருதுளிக் கண்ணீர் புகாரைக் கொண்ட குணக்கடலின் இரக்கமற்ற அலைகளில் சிந்தி கலக்கத்தான் செய்தது.

வானவல்லி எனது முதல் புதினம். வானவல்லி எழுதத் துவங்கிய பிறகுதான் சங்க இலக்கியங்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் வாசிக்க ஆரம்பித்தேன் என்ற உண்மையையும் இங்குக் கூறிவிடுவது சரி என்றே நினைக்கிறேன். சங்க இலக்கியங்களை வாசிக்கும்போது நம் முன்னோர்கள் வாழ்ந்த சிறப்பையும், தற்போதைய நாம் வாழும் நிலையையும் எண்ணுகையில் மட்டும் ஏனோ மனம் வலிக்கத்தான் செய்கிறது. எனக்குக் கிடைத்த குறிப்புகள், நான் அறிந்துகொண்ட உண்மைகள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் அனைத்து உசாத்துணை நூல்களையும் குறிப்பிட்டுள்ளேன். ஆதாரக் குறிப்புகள் அனைத்தையும் எங்கிருந்து எடுக்கப்பட்டவை, எந்தெந்த பக்கங்கள் என்பதனையும் ஆராய்ச்சியை விரும்புபவர்களுக்காகக் கொடுத்திருக்கிறேன்.

இக்கதையில் வரும் வளவன், இளந்திரையன், இரும்பிடர்த்தலையர், இருங்கோவேள், சேரன் பெருஞ்சேரலாதன், பாண்டியன் தென்னவன், ஹிப்பாலாஸ் ஆகியவர்களே வரலாற்றுப் பாத்திரங்கள். மற்றவர்களான வானவல்லி, விறல்வேல், வளவனார், திவ்யன், யவன வீரன் டாள்தொபியாஸ், அடிமை வீரன் இம்ஹோடெப் ஆகியவர்கள் அனைவரும் என்னால் உருவாக்கப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள். யவன வீரன் எதற்கு என்ற கேள்வியும் சிலருக்கு எழலாம்? பன்னெடுங்காலமாக சிறந்து விளங்கிய கிரேக்கம் சங்ககாலத்தின் தொடக்கத்தில் அதன் புகழினை இழந்து உரோமிற்கு அடிமைப்பட நேர்ந்தது. அப்போது உலகப் புகழ் பெற்றிருந்த பட்டினமான புகாருக்கு வாணிபம் செய்ய வந்த யவனர்கள் பலர் புகாரிலேயே தங்கிவிட்டனர் என்பதைப் பட்டினப்பாலை மூலம் அறியலாம். ஆதலால் யவனர்களை விடுத்தும் சங்ககால சோழர்களின் வரலாற்றை எழுத இயலாது.

வாசிப்பை மட்டுமே முதன்மையாகக் கொண்ட காலத்தில் என்னை முதன் முதலில் எழுதச் சொல்லி வாழ்த்தியவர் எனது பெரும் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய அக்கா திருமதி ப.தென்றல் அவர்கள். தொடக்கம் முதலே எனக்குத் துணையிருந்த என் நண்பன் விசயன் துரை, திருமதி கிரேஸ் பிரதிபா, பிரியா, சக்தி ஸ்ரீ, வேதா இலங்காதிலகம், கவிஞர் நாகா மற்றும் நான் கேட்டதற்கிணங்க விறலிக் கூத்து பற்றிய தகவல்களையும், விறலிப் பாடலையும் இயற்றித் தந்த அன்பு அண்ணன் திரு.ப.மகேந்திரன் ஆகியோர்களது பெயர்களையும் இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.

நான் எழுதத் துவங்கிய போது நான் என்ன எழுதுகிறேன் என்றே தெரியாமல் எனக்கு உற்சாகத்தையும், ஆதரவையும் அளித்த அம்மா, தம்பி வெற்றிச்செல்வம், மாமா மற்றும் என் வானவல்லி எழுதுவதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் துணையிருந்த என் நண்பர்கள் அனைவருக்கும் இந்நூலைச் சமர்ப்பணம் செய்வதில் மகிழ்கிறேன்.

நான் எழுதுவதற்குப் பலர் ஊக்கத்தை அளித்தாலும் வானவல்லி புத்தக வடிவம் பெறுகிறதென்றால் அதற்கு முழு முதற்காரணம் அண்ணன் திரு.சுந்தர் அவர்களே! வானவல்லியை எழுதிக்கொண்டிருந்த போதே என்னைத் தொடர்புகொண்டு தகுந்த ஆலோசனையை வழங்கி வழி நடத்தியவர். அவரது பெயரை இங்கு நன்றியோடு கூறிக்கொள்கிறேன்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here