வானவல்லி வாசகர் கடிதம் : 2

2

என்னவொரு வித்தியாசமான பயணம். புறவுலகைத் துறந்து கலைநயமான ஈராயிரம் ஆண்டுத் தொலைவை எட்டச் செய்து துள்ளிக் குதித்தது மனம். புகார்த் துறைமுகம், உறைந்தை எனச் சோழர்களின் ஊர்களையும், வஞ்சிமாநகரம், மதுரை எனச் சேர பாண்டியர்களின் ஊர்களும், டாள்தொப்பியாஸ், ஆண்டிரிமெடா, ஹிப்பலாஸ், இம்போடெக் என யவனர்களின் தமிழக ஈடுபாடுகளையும், சேர, பாண்டிய, கலிங்க, அவந்தி, சுங்க அரசுகளின் அரசியல் நிலைகளையும் கண்டு அது அந்தக் காலத்திலேயே இன்னும் ஸ்தம்பித்து நிற்கிறது. இன்னும் மீள முடியவில்லை.

தமிழகத்தின் மிக உயர்ந்த மன்னன் கரிகாலனை அருகில் இருந்து கண்டு அது ரசித்தது. மன்னன் என்றால் அவனும் மனிதன் தானே. அவன் வாழ்வில் நேர்ந்த ஏற்ற இறக்கங்களைப் பாடல்களாக, சிறு வரலாற்றுக் குறிப்புகளாக மட்டுமே கண்டு வந்த மனம் இரத்தமும் சதையுமாக உயிருள்ள மனிதனோடு பயணிக்கும் வகையில் மாயவசப்பட்டது.

மற்றுமொரு வந்தியத் தேவன் என்று சொல்லுமளவுக்கு செங்குவீரன். வந்தியத் தேவனுக்காவது அயல் பெண்களிடம் ஒரு மயக்கம் இருந்ததை மென்மையாக உணர முடியும். ஆனால் இந்த செங்குவீரன் ராமனைப் போல அல்லவா நம் கண் முன் உலவுகிறான். குந்தவைக்குச் சற்றும் குறையாத வானவல்லி, போருரி தரித்துப் போரிடச் செல்கையில், பெண்மையைக் கொண்டாடிய அந்தக் காலம் கண் முன்னே விரிகிறது. பச்சிளம் பாலகனையும் வைத்துக் கொண்டு போர் முகாமுக்குள் இருக்கும் வானவல்லியின் செயல் வியப்பின் உச்சத்தை அல்லவா அளிக்கிறது.

செங்குவீரனைத் தவிர்த்து திவ்யன், இளந்திரையன், வில்லவன் ஆகியோரும் கரிகாலனுக்கு இணையான கதாநாயகர்களாக நம் கண் முன் மலை போல நிற்கிறார்கள். சிவகாமியின் சபதம் புத்த பிக்கு போல இங்கும் ஒரு சமண அடிகளார் ஈழவாவிரையர் இருக்கிறார். மரகதவல்லி, இளந்திரையன் காதலி பத்திரை, அவந்தி இளவரசி என்று காதல் ததும்பும் மங்கையரும் ஆங்காங்கே தங்கள் ஆளுமைகளைச் செலுத்துகின்றனர். காதல், கடமை, போர் என விரியும் காட்சிகள் ஈராயிரம் வருடத்திற்கு முந்தைய பிரம்மாண்டங்களை நம் அகக்கண் முன் மலைப்பாகத் தெரிகிறது.

கரிகாலன் கல்லணையை எப்படிக் கட்டியிருப்பான் ? அதைக் கட்ட அவனைத் தூண்டியது எது ?அதற்கு யாரெல்லாம் பயன்படுத்தப்பட்டார்கள்? என்ற விபரிப்பு நமக்கு எவ்வளவு தெளிவான ஊகங்களை முன்வைக்கிறது? இளஞ்சேட்சென்னி, இரும்பிடர்த்தலையர், சேரமன்னன் பெருஞ்சேரலாதன், கலிங்கம் , அவந்தி, சுங்க மன்னர்களின் யுத்த தந்திரங்கள், போர்வியூகங்கள், அரண் அமைப்பு, நான் கேள்விப்பட்டிராத வித்தியாசமான ஆயுதங்கள், இறுதிநேர வியூக மாறுதல்கள் போன்றவை பறவைப் பார்வையுடன் நம்மை யுத்த களத்தில் திரியச்செய்கிறது. சைவம், வைணவம், சமணம், ஆசிவகம் போன்ற மதங்களைக் குறித்த மறைமுக விமர்சனங்கள் தற்காலத்திற்கே நம்மைப் பின்னிழுத்தாலும் மனம் அதை அந்தக் காலத்திற்குள் வலிய பொருத்திக் கொள்கிறது.

மொத்தத்தில் வானவல்லி என்ற நான்கு பாக புதினத்தை மீண்டும் மனத்தில் செலுத்தினால் பிரம்மாண்டம் மட்டுமே எஞ்சுகிறது. இந்தப் பிரம்மாண்டங்களை நம் மனத்திற்கு ஊட்டியவர் இருபத்தாறே வயதான அறிமுக எழுத்தாளர் என்பது இன்னும் நம்மை மலைக்கச் செய்கிறது. வெற்றிவேல் என்ற இந்த இளைஞர் மற்றுமொரு கல்கியாக, சாண்டில்யனாக…. ஏன் அதற்கும் மேலாக சரித்திரப் புதின இலக்கிய உலகை ஆள்வார் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. வாழ்த்துகள் சி.வெற்றிவேல் சாளையக்குறிச்சி. நீவிர் மென்மேலும் வளர்க…

அன்புடன்
ரதிதேவி

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here