சிறுகதை – 1 : முதல் இரவு

அங்கே தனி அறைக்குள் எனக்காக ஒருத்தி காத்துக் கொண்டிருக்கிறாள். இங்கே நான்… நான் மட்டும் தனிமையில் மொட்டை மாடியில் கடந்த காலத்தை மனதில் சுமந்து சிந்தித்தபடி நடந்துகொண்டிருக்கிறேன்.

திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்க்கையைக் கடந்த கால நினைவுகளுடன் தனிமையில் கழித்துவிடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால், நம் விருப்பப்படி வாழ்க்கையைக் கழிக்க விதி விடவா செய்கிறது?

இந்த வாழ்க்கையை நமக்குப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் பெற்றவர்களுக்காகவும், உடன் பிறந்தவர்களுக்காகவும் அவர்களது விருப்பபடி சில செயல்களை செய்துதானே ஆக வேண்டும். அதில் முக்கியமானது திருமணம்.

என் வாழ்க்கையில் எனக்கு நல்லது செய்வதாய் நினைத்து என்னை மட்டும் அல்லாமல் எதிர்காலம் பற்றிய கனவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் மற்றொரு அப்பாவிப் பெண்ணையும் படுகுழியில் தள்ளிவிட்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கவே எனக்குக் கோபமாக வருகிறது.

பாவம் அந்தப் பெண். அவள் அங்கே எத்தனைக் கனவுகளுடன் எனக்காக காத்துக்கொண்டிருப்பாள். விருப்பமில்லாமிட்டாலும் என்னுடன் பயணிக்க வேண்டும்  என்று பெற்றவர்களால் வலுக்கட்டாயமாக அனுப்பட்டிருக்கும் பேதை அவள்.

நீண்ட நேரம் சிந்தனையுடன் கிழக்கு வானில் தோன்றியிருந்த பிறை நிலவையே பார்த்துக் கொண்டிருந்த நான் பிறகு தயக்கத்துடன் புறப்பட்டு அறைக்குள் நுழைந்தேன்.

அறைக்குள் மல்லிகையின் மனம் மட்டுமே நிரம்பியிருந்தது. அந்த மல்லிகையின் மனம் என்னைக் கடந்த காலத்தில் என்னை மட்டுமே நேசித்த என் காதலியை நோக்கி இழுத்துச் செல்ல முயல பெரும் சிரமப்பட்டு நிகழ்காலத்தில் மனதைச் செலுத்தினேன்.

அறைக்குள் சென்ற நான் அமைதியாக அவளையே வெறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். என் அறையில் என்னுடன் யார் வாழ வேண்டும் என்று எதிர்பார்த்த பெண் என்னுடன் தங்கியிருக்கவில்லை. யார் என்றே தெரியாத பெண் என்னுடன் இருக்கிறாள்.

விதியை நொந்துகொண்டேன்.

அப்பொழுது அவள், “உட்காருங்க…” எனத் தெரிவித்தாள்.

நான் கட்டிலில் அமர்ந்தேன்.

அப்பொழுது நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் எனக்கு முன் மண்டியிட்டு, “என்ன மன்னிச்சிடுங்க…” எனத் தெரிவித்தாள்.

அவளது செயல் எனக்கு வியப்பை அளித்தது. நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு, “நான் தான் உண்ட மன்னிப்ப கேட்கணும். பொண்ணு பார்க்க வந்தப்ப பேசுனதோட சரி. அதுக்கு அப்பறமா உண்ட்ட என்னால பேச முடியல. சாரி” என்றேன் நான்.

“சாரி நான் தான் கேட்கணும்.”

“எதுக்கு?”

“நான் கிளம்பனும்.”

“கிளம்பனுமா?”

“ஆமாம் இளங்கோ.”

“எங்க?”

“எனக்காக அவரு அங்க காத்துகிட்டு இருப்பாரு.”

“யாரு.”

“அவரு…”

“அவரு யாருன்னு சொல்லுங்க.”

“என்னோட காதலர்.”

“நமக்குக் கல்யாணம் நடந்ததாவது ஞாபகம் இருக்குல்ல” எனக் கேட்டபோது எனக்கு கோபம் தலைக்கேறியது.

“இருக்குங்க இளங்கோ” அவள் கண்ணீர் வடித்தபடி அழுதுகொண்டிருந்தாள்.

எனக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் ஒப்பனைகள் செய்யப்படாத அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். நீண்ட நேரம் அவள் தேம்பித் தேம்பி அழுதிருப்பாள் என்பதை அவளது வீங்கியிருந்த கன்னத்தையும், சிவந்திருந்த கண்களைப் பார்த்ததுமே எனக்குப் புரிந்து போயிருந்தது.

எனக்குக் கோபம் வந்தாலும் அதனை அவள் மீது காட்டுவதற்கு எனக்கு விருப்பம் இல்லை. என்னைப் போன்றுதான் அவளும் என்னை விருப்பமில்லாமல் திருமணம் செய்துகொண்டிருக்கிறாள்.

கோபம் வந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “இப்ப என்னதான் நீங்க சொல்ல வரீங்க கயல்?” என்றேன் நான்.

“அவரு எனக்காக அங்க காத்திருக்காரு. நான் கிளம்பனும்.”

“பொண்ணு பார்க்க வந்தப்ப கூட உங்ககிட்ட யாரையாவது லவ் பன்றீங்கலானு நான் கேட்டேன் தானே?”

“கேட்டீங்க..”

“அப்புறம்?”

“அப்போ ரெண்டுபேருக்கும் பிரேக் அப் ஆகிடுச்சி.”

“இப்போ?”

“அதுக்கு அப்புறம் தான் புரிஞ்சிது அவரு இல்லாம என்னாலையும் வாழ முடியாது. நான் இல்லாம அவராலையும் வாழ முடியாதுன்னு.”

“அப்போ என்னோட நிலைமை?”

அவள் தலை குனிந்துகொண்டு மண்டியிட்டபடியே அமர்ந்திருந்தாள்.

“கிளம்பனும்னு முடிவு பண்ணிட்டீங்க. அப்புறம் எதுக்காக எண்ட அனுமதி கேட்டு உக்காந்துருக்கீங்க?”

“…..”

“கிளம்புங்க.”

அவள் என்னை ஆச்சர்யத்துடன் நோக்கினாள். “உங்களுக்கு கோபம் வரலையா?”

“வருது.”

“அமைதியா இருக்கீங்க.”

எனக்கு ஏனோ அப்பொழுது சிரிக்க வேண்டும் என்று தோன்றியது. புன்னகைத்தேன் நான்.

“ஏன் அமைதியா இருக்கீங்க?”

“இது உங்களோட வாழ்க்கை. நீங்கதான் முடிவு எடுக்கணும். மனசுக்கு புடிச்சவங்க கூட வாழற வாழ்க்கை எல்லாருக்கும் அமையாது கயல். உங்களுக்கு அமையப் போகுது. எனக்கு ரொம்ப சந்தோசம். போயிட்டு வாங்க.”

அவள் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினாள். பிறகு அவள், “உங்க கூட வாழறதுக்கு எனக்குதான் கொடுத்து வைக்கல” என்றாள்.

அவள் கூறுவது உண்மையா இல்லை என்னைப் புகழ வேண்டும் என்பதற்காக கூறுகிறாளா என்ற சந்தேகம் எனக்குள் எழுந்திருந்தது. பிறகு நான், “உங்க முடிவ நானு பாராட்டறேன். என்கிட்டயும் ஒருத்தி ஒரு நாள் இப்படித்தான் சொன்னா. கல்யாணம் ஆனதுக்கு அப்பறமா வந்தாலும் நீங்க ஏத்துக்கணும்னு.”

“நீங்க என்ன சொன்னீங்க?”

“முடியாதுன்னு சொல்லிட்டேன். நம்ம பழக்க வழக்கம், பண்பாடு முக்கியம். அதுலாம் தப்புன்னு சொல்லிட்டேன்.”

“……..”

“அந்த பதிலுக்காக நானு காலம் பூரா வருந்தறேன். நான் வாழ்க்கைல சொன்ன மோசமான பதில் அதுதான். ஆனால், இப்ப நான் அவ கேட்கமாட்டாளான்னு ஏங்கிகிட்டு இருக்கேன்.”

“……”

“அப்புறம் என்ன நடந்தது. வந்தாங்களா?”

“அதுக்கான அவசியமே இல்லாம போய்டுச்சி.”

“என்ன ஆச்சு?” அவளது பார்வையில் ஆர்வம் அதிகம் தென்பட்டது.

அவளுக்குப் புன்னகை ஒன்றையே வெளிப்படுத்த வேண்டும் என்று தோன்றியது எனக்கு. நான் வேறு எந்த பதிலையும் அளிக்க வில்லை. “கிளம்புங்க… நான் கொண்டு வந்து விடறேன்” எனத் தெரிவித்தபடி தாழிடப்படாத கதவைத் திறந்துகொண்டு வெளியே சென்றேன்.

வீட்டில் யாருமே இருக்கவில்லை. அனைவருமே இருவரையும் தனிமையில் விட்டுவிட்டு கோயில் திருவிழாவிற்குச் சென்றிருந்தார்கள்.

அவள் அனைத்திற்கும் தயாராக இருந்தாள். அவளது உடைமைகளை தனியாக எடுத்து வைத்திருந்தாள். அவள் கிளம்புவதற்கு முன் மறக்காமல் நான் கட்டிய தாலியை என்னிடம் கழட்டிக் கொடுத்துவிட்டாள்.

என் கையில் இருந்த நான் கட்டிய தாலியையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு, என் சட்டைப் பைக்குள் வைத்துகொண்டேன்.

அவளை என் காரில் ஏற்றிக்கொண்டு அவள் தெரிவித்த இடத்திற்கு அழைத்துச் சென்றேன். அங்கே யாருமே காத்திருக்கவில்லை.

“நீங்க சொன்ன இடம் இதானே?”

“ஆமாங்க.”

“இங்க யாரும் இருக்கற மாதிரி தெரியலையே?”

“வந்துடுவாரு. நீங்க கெளம்புங்க. நான் இறங்கிக்கறேன்.”

“கார்லேருந்து எறங்க வேணாம்” எனத் தெரிவித்துவிட்டு நான் மட்டும் கீழிறங்கினேன். அருகில் காணப்பட்ட டீ கடையில் சென்று, “இங்க யாராவது வந்து நின்னாங்களா அண்ணே?” என்று கேட்டேன்.

“எனக்கு அப்படி யாரும் வந்த மாதிரி தெர்ல தம்பி.”

“நன்றி அண்ணா…” எனத் தெரிவித்துவிட்டு இரண்டு டீ வாங்கிக்கொண்டு சென்று ஒன்றை கயலிடம் நீட்டினேன்.

அவள், “வேண்டாம்” என்று மறுத்தாள்.

“கோபப்பட வேண்டியவன் நானு. நானே அமைதியாக இருக்கேன். இது உங்க வாழ்க்கை… சந்தோசமா இருங்க. காதல்ங்கறது வரம் மாதிரி. அந்த வரம் எல்லாருக்கும் ஈசியா கிடைக்காது. உங்களுக்கு கெடச்சிருக்கு. அதுவும் இன்னொருத்தன் தாலி கட்டி அவனோட உரிமையானவளா ஆனபிறகும் உங்கள ஒருத்தன் ஏத்துக்கப் போறான்னா அவன நெனச்சி பெருமைப்படுங்க. மகிழ்ச்சியா இருங்க. அவரு வர வரைக்கும் டீ குடிச்சிக்குட்டு இருங்க. வந்துடுவாரு” எனக் கூறியபடி வலுக்கட்டாயமாக அவளிடம் திணித்துவிட்டு டீ கடையில் இரண்டு தம் வாங்கி ஒன்றைப் பற்றவைத்தேன்.

காலம் மட்டும் தான் வேகமாகக் கடந்துகொண்டிருந்தது. முதல் தம் கையை சுட இரண்டாவதையும் புகைத்து முடித்தேன்.

நான் காருக்குள் சென்று, “இன்னும் யாரும் வரலீங்களே?” என்றேன்.

“இல்ல. அவரு வந்துடுவாரு.”

“சரி…” எனத் தெரிவித்துவிட்டு நானும் காருக்குள் அமர்ந்தேன்.

“போன் செஞ்சி பாருங்க.”

“வேணாம். அவரே வந்துடுவாரு.”

எனக்கு எந்தப் பதிலும் கூறத் தோன்றவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தேன். எனக்குக் கோபமோ, விரக்தியோ எதுவுமே தோன்றவில்லை அப்பொழுது. ஆழ்கடலின் அமைதியைப் போன்று மனம் சலனமில்லாமல் அமைதியாகக் காணப்பட்டது. எனது இந்தப் பக்குவம் எனக்குப் பெரும் ஆச்சர்யத்தை அளித்தது. அதே நேரம் கவலையாகவும் இருந்தது. எனக்கு இடப் புறமாக அமர்ந்திருந்தவளை நோக்கினேன். அவள் அழுது கொண்டிருந்தாள்.

“கால் பண்ணுங்க…” என்றேன் நான்.

அவள், “ம்ம்ம்…” என மட்டும் தெரிவித்துவிட்டு கொண்டுவந்திருந்த பையிலிருந்து அவளது போனை எடுத்து அழைத்தாள்.

நீண்ட நேரம் காதிலேயே வைத்திருந்தாள். பிறகு அதை நீக்கி, “எடுக்கல” என்றாள்.

“ரெண்டாவது வாட்டி முயற்சி செய்ங்க.”

“ம்ம்ம்…” என்றவள் மீண்டும் அழைத்தாள்.

நீண்ட நேரம் காதில் வைத்திருந்தவள், “எடுக்கல அவரு” என மீண்டும் தெரிவிக்கையில் அவளிடம் பதற்றம் தென்படத் தொடங்கியது.

“பதற்றப் படாம நம்பர் கொடுங்க. நான் முயற்சி பண்றேன்.”

அவள் தொடர்பு எண்ணைத் தெரிவிக்க நான் முயற்சி செய்தபடியே, “அவரு பேரு என்ன?” என வினவினேன்.

“கார்த்திக்.”

நான் இரண்டு முறை முயற்சித்தேன். யாரும் எடுக்கவில்லை. மூன்றாவது முறை முயற்சித்த போது யாரோ அழைப்பை ஏற்றார்கள்.

நான், “கார்த்திக்???” என வினவினேன்.

“நீங்க?”

“இளங்கோ.”

“கார்த்திக் பிரண்டா?”

“ஆமாங்க. கார்த்திக்ட பேசணும்?”

“கார்த்திக் குடிச்சிட்டு பைக்ல போறப்ப லாரில மோதிட்டான். அவன் விதி முடிஞ்சிபோச்சு. சின்ன வயசு பையன். பாவம்” என யாரோ கூறிக்கொண்டிருந்த போதே நான் அழைப்பைத் துண்டித்துவிட்டு கயலை நோக்கினேன். அவள் தெரு முனையையே கார்த்திக் வருகிறானா என்று பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்குப் பாவமாக இருந்தது. அவளிடம் எதைப் பற்றியும் தெரிவிக்காமல் வண்டியை எடுத்து வீடு நோக்கித் திருப்பினேன்.

கயல் பதறியபடி, “நிப்பாட்டுங்க… கார்த்திக் வந்துடுவான். ப்ளீஸ் இளங்கோ” எனக் கெஞ்சினாள்.

அவளிடம் எதையும் கூறாமல் நான் வீட்டிற்கு முன் காரை நிறுத்தினேன். திருவிழாவிற்குச் சென்றவர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.

“கண்ண தொடச்சிக்கோங்க.”

“எதுக்கு?”

“சொன்னத செய்ங்க கயல்.”

அவள் அழுதபடியே அமர்ந்திருந்தாள்.

“இப்ப கண்ண தொடச்சிக்கப் போறீங்களா இல்லையா?” மிரட்டினேன் நான்.

பயந்திருப்பாள் என்று கருதுகிறேன். உடனே முகத்தைத் துடைத்துக்கொண்டாள்.

என் பையில் வைத்திருந்த தாலியை எடுத்துக் கொடுத்து, “கழுத்துல மாட்டிக்கோங்க…” என்றேன்.

மிரட்சியுடன் அவள் என்னை நோக்கினாள். பிறகு, “கார்த்திக் என்ன சொன்னான்?” என்றாள்.

“உள்ள வாங்க சொல்றேன்.”

“இப்ப சொல்லப் போறீங்களா இல்லையா?”

“அவசரப்பட்டு நாம செய்யற சின்ன சின்ன தவறுகள்ள தான் நம்ம வாழ்க்கையே தடம் மாறிடுது. கடவுள் நமக்கு வேண்டிய சந்தர்ப்பத்த எப்போதும் கொடுக்க மாட்டாரு. கொடுக்கறப்போ தவறவிடக் கூடாது. புரிஞ்சிகோங்க. தாலிய மாட்டிகிட்டு என்கூட வீட்டுக்குள்ள வாங்க” எனக் கூறிவிட்டு காரை விட்டுக் கீழிறங்கினேன்.

அடுத்த சில நிமிடங்கள் கழித்து அவளும் கீழிறங்கினாள்.

அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றேன். அங்கே அம்மா, “இந்த நேரத்துல எங்கடா ரெண்டு பேரும் போயிட்டு வரீங்க?” என வினவினார்.

“இல்லம்மா… அவளோட பிரண்டு ஊருக்கு கெளம்புனா. அதான் வழி அனுப்பி வச்சிட்டு வரோம்” எனத் தெரிவித்துவிட்டு கயலை அறைக்குள் அழைத்துச் சென்று தாழிட்டேன்.

“கார்த்திக் என்ன சொன்னான்?”

“அவன் குடிச்சிட்டு வண்டிய ஓட்டிட்டு போய் லாரி மேல மோதிட்டான்.”

“அப்டிலாம் இருக்காது. அவன் எவ்ளோ குடிச்சாலும் தெளிவாதான் இருப்பான்.”

அவளது நம்பிக்கை எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது.

ஒரு பெண் ஒருவனை நம்பத்தொடங்கினால் அவனுக்காக எது வேண்டுமானாலும் செய்யத் துணிகிறாள் என்பதை இரண்டாவது முறையாக கண் முன் கண்டேன் நான்.

அவள் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள். பிறகு, “நீங்க பொய் தான சொல்றீங்க?” என்று ஏதோ நம்பிக்கையில் கேட்டாள்.

என் போனில் இருந்த வாய்ஸ் ரெகார்டரை ஆன் செய்து அவளைக் கேட்கவைத்தேன்.

அவள் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள்.

நீண்ட நேரம் நின்ற நான் கட்டிலின் மறு பக்கத்தில் அமர்ந்தேன். அப்பொழுது அவள் எழுந்து வந்து எனக்கு முன் நின்றாள். என்ன நினைத்தாலோ எனது கைகள் இரண்டையும் எடுத்து அவள் தனது வயிற்றில் வைத்தாள்.

அவள் எதை எனக்கு உணர்த்துகிறாள் என்பதைப் புரிந்த நான் ஆடிப்போய் எழுந்து நின்றேன். என் கைகளை விழிகளில் ஒற்றிக்கொண்டு “ஓஓஒ…” என்று அழத் தொடங்கினாள்.

அவளுக்காக நான் அழவில்லை என்றாலும் அவளது வலியை உணர்ந்தேன் நான். எவன் ஒருவனை நம்பி தன்னை, தனது எதிர்காலத்தை நம்பிக்கையுடன் ஒப்படைத்தாலோ அவனே தன்னை விட்டுச் சென்ற பிறகு அவளது நிர்கதி நிலைமையை எண்ணி எனக்குக் கவலையே ஏற்பட்டது. அவளுக்கு என்ன ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் அவளுக்கு அருகிலேயே நின்றுகொண்டிருந்தேன்.

“என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியல கயல். இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும். தப்பான எந்த முடிவும் எடுத்துடாதீங்க” எனத் தெரிவித்துவிட்டு என்னுள் எழுந்த கோபம் அனைத்தையும் எனக்குள்ளேயே புதைத்துவிட்டு விளக்கை அணைத்தேன்.

இரவு முழுவதும் எனக்கு உறக்கம் துளி கூட வரவில்லை. ஆனால், தேம்பித் தேம்பி அழும் விசும்பல் சத்தம் மட்டும் எனக்குக் கேட்டுக்கொண்டே இருந்தது. கோபத்தை விடவும் எனக்குக் கயலை எண்ணி வருத்தமாகவே இருந்தது. உணர்சிகள் அனைத்தையும் இழந்து வாழும் எனக்கு எந்த உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்றுத் தெரியாமல் பிணம் போன்று படுத்திருந்தான்.

அதற்குப் பிறகு அவளிடம் இதைப் பற்றி நான் பேசவே இல்லை. எப்பொழுதும் அறைக்குள்ளேயே அமர்ந்து அழுதுகொண்டிருப்பாள்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. திருமண விடுமுறையும் தீர்ந்து போயிருந்தது. புறப்படுவதற்கு முன் இருவீட்டாரின் குல தெய்வக் கோயிலுக்கு  விளக்கேற்றிவிட்டு புறப்படலாம் என்று இருவரும் குல தெய்வக் கோயிலுக்குச் சென்று ஒவ்வொரு கோயிலாக விளக்கேற்றினோம்.

கடைசியாக பெரிய கருப்பு கோயிலுக்கு விளக்கேற்றிக் கொண்டிருந்தோம். அங்கு வேறொரு புதுமணத் தம்பதிகளும் வந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்ததுமே கயலின் முகம் மாறியது.

உடனே அவள், “வாங்க போகலாம்” என்றாள்.

நான் எதிர்கேள்வி எதுவும் கேட்காமல் உடனே புறப்பட்டேன்.

இருவரும் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது அவள், “கார்த்திக்” என்றாள்.

“யாரு?”

“கோயிலுக்கு வந்துருந்தாங்கள்ள…”

“அப்போ அவன் எறந்துட்டான்னு சொன்னது.”

“பொய்.”

அதற்கு மேல் நான் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. அவளும் எந்தப் பதிலையும் கூறவில்லை. இரவு வீடு வந்து சேர்ந்தோம். அன்றைய இரவும் அவள் அழுதபடியே உறங்கினாள்.

பொழுது விடிந்து போயிருந்தது. நான் வழக்கம்போல நேரம் கழித்தே கண் விழித்தேன். எப்பொழுதும் அதிகாலையில் கண் விழிப்பவள் அன்று மணி ஒன்பதைக் கடந்தும் உறங்கிக் கொண்டிருந்தாள்.

கயலை எழுப்பினேன்.

அவளுக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. போர்வையை விளக்கினேன். அவளது படுக்கை முழுவதும் குருதியால் நனைந்து போயிருந்தது. அவளைத் தூக்கிக்கொண்டு குளியலறையில் விட்டுவிட்டு வந்தேன். அரைமணி நேரம் கழித்து வெளியே வந்தாள்.

“எதை நினைத்தும் கவலைப் படாதே. நடக்கறது எல்லாமே நல்லதுக்குதான். நாம சென்னைக்கு இன்னைக்கு கிளம்பறோம்” என மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

சென்னையில் இருவரும் தனியாக ஒரு வீட்டில் தங்கினோம். இருவருக்குமே பிடித்த ஒரு விஷயம் புத்தகங்கள் மட்டுமே. இருவரைச் சுற்றிலும் சூழ்ந்திருந்த தனிமையைப் போக்குவதற்கு புத்தகங்களின் துணையையே நாடினோம்.

இருவருக்குமிடையில் எப்பொழுதும் ஒரு இடைவெளி நீடித்துக் கொண்டிருந்தது. அந்த இடைவெளி தான் எனக்கும் தேவையாயிருந்தது. சில மாதங்கள் இப்படியே கழிந்துகொண்டிருந்தது.

அப்பொழுது அலுவலகத்தில் வேலை செய்துகொண்டு இருக்கையில் சேமித்து வைக்கப்பட்டிருக்காத புது எண் ஒன்றிலிருந்து செய்தி ஒன்று எட்டிப் பார்த்தது.

என்ன என்று பார்த்தேன்.

வரும்போது மல்லிகைப் பூ வாங்கி வாங்க இளங்கோ.

செய்தியைப் பார்த்ததுமே அது கயலிடமிருந்து தான் வந்திருக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன்.

அலுவலகம் முடிந்து திரும்பிச் செல்லும்போது மறக்காமல் நான்கு முழம் நெருக்கமாகக் கட்டப்பட்ட மல்லிகையை வாங்கிக் கொண்டேன்.

இரவு உணவை முடித்த பிறகு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது, “இளங்கோ…” என அழைத்தாள் கயல்.

பார்வையைப் புத்தகத்திலிருந்து நீக்கி எனக்கு முன் நின்றுகொண்டிருந்த கயலை நோக்கினேன். அழகாக ஒப்பனை செய்திருந்தாள் அவள். புது ஆடை உடுத்தியிருந்தாள்.

நான் வாங்கி வந்திருந்த மல்லிகைச் சரத்தைக் கொண்டு வந்தவள் என்னிடம் கொடுத்து, “வச்சி விடுங்க…” என்றாள்.

அதை வாங்கிய என் கை நடுங்கத் தொடங்கியது.

அந்த நடுக்கத்துடனே அவளது கூந்தலில் மல்லிகையைச் சூட்டினேன். கூந்தல் முழுவதும் நிரம்பியிருந்த மல்லிகையின் அழகைக் கண்ணாடியில் பார்த்து பிரமித்தபடியே என்னருகில் வந்து என்னை அணைத்துக் கொண்டாள் அவள்.

அப்பொழுது அவள், “இளங்கோ… கடந்த காலத்த மறந்துடுவோம் நாம. இனி நமக்காக வாழ்வோம். இந்த உலகம் இனி நமக்கு மட்டும்தான். நீங்களும் துன்பப்படுறீங்கண்ணு எனக்குத் தெரியும். அந்த துன்பம் ரெண்டு பேருக்குமே வேணாம். கல்யாணத்துக்கு அப்பறமும் வரண்ணு சொன்ன அந்த பொண்ணு வந்தாலும் இனி வேண்டாம். அவுங்களுக்கு கொடுத்து வைக்கல. பாவம்” என்று கூறியவள் என்னை மேலும் இறுக்கமாக அணைக்கலானாள்.

அப்பொழுது ஏனோ ஆடு மேய்க்கையில் எனக்கு என் தாத்தா கூறிய கதை பாஞ்சாலி, குந்தியின் கதைகள் நினைவிற்கு வந்துவிட்டுச் சென்றது. சிறு வயதில் என் தாத்தா கூறிய கதைகளைக் கேட்டுத்தான் எனது வாழ்வில் நெறியுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

குந்தி முனிவர்களுடன் சேர்ந்து கர்ணன், தர்மன், பீமன் மற்றும் அர்ச்சுனன் என்று நான்கு புதல்வர்களையும், பாஞ்சாலி ஐவருடன் தனது வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டிருந்தாலும் அவர்கள் ஒருவருடன் சேர்ந்து வாழ்கையில் மற்றவர்களைப் பற்றி மனதில் நினைத்துப் பார்க்க மாட்டார்களாம். அருகில் இருப்பவனை மட்டுமே மனதில் நினைத்துக்கொண்டு வாழ்ந்ததால் தான் அவர்கள் இன்றளவும் போற்றப்படுகிறார்கள் என்று எனது தாத்தா கூறியிருக்கிறார்.

‘மனதில் ஒருத்தியை நினைத்துக்கொண்டு வேறோருத்தியோடு வாழும் வாழ்க்கையானது மனதில் அன்பு என்பதே இல்லாமல் பணத்திற்காகக் கூடும் வேசி மகளிரின் செயலை விடவும் கேவலமானது’ என்று என் தாத்தா தெரிவித்த கருத்து என் காதுகளில் அப்பொழுதும் ஒலித்தது.

நான் சிந்தனையில் இருக்கையில் அவள் என் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

அந்த ஒற்றை முத்தச் சத்தம் என்னை என் கடந்த காலத்தை நோக்கி இழுத்துச் சென்று விட்டது. அதிகாலைப் பொழுதில் என் காதலி எனக்கு முன் நின்றுகொண்டிருந்தாள். அவளுக்கு நான் கொடுத்த முதல் முத்தத்தின் வாசத்தை என்னால் உணர முடிந்தது.

அப்பொழுது, எங்கிருந்தோ நெடுந்தொலைவிலிருந்து, ‘இளங்கோ…’ என்ற குரல் கேட்க திடுக்கிட்டவனாய் நிகழ்காலத்திற்கு நினைவுகளைக் கொண்டுவந்து விழிகளைத் திறந்தேன்.

கயல் என்னை முழுவதும் ஆக்கிரமித்திருந்தாள்.

விழிகளை மூடிக்கொண்டு அவள், “இளங்கோ… இளங்கோ…” என்று என் பெயரை மட்டுமே கூறி என்னை மட்டுமே நினைத்துக்கொண்டு முணகியபடி என்னை முழுவதும் ஆக்கிரமித்து முத்தமிட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் என்னை மட்டுமே மனதிலும், உடலிலும் தரித்திருந்தாள். ஆனால், நான் மனதோடு ஒருத்தியும், உடலோடு ஒருத்தியுமாக வாழத் தொடங்கினேன் நான்.

————————————–

சி.வெற்றிவேல்,
சாலைக்குறிச்சி

One thought on “சிறுகதை – 1 : முதல் இரவு

  1. சிறப்பு. எதிர்பாரா திருப்பம். பலரும் வாழ்க்கையில் சந்திக்கக் கூடிய தருணங்கள் தான் இவை. வாழ்த்துக்கள். தொடருங்கள்.

Leave a Comment