சிறுகதைப் போட்டி – 33 : இதெல்லாம் வீண் செலவு! – மாலா உத்தண்டராமன்

சுந்தரத்திற்கு கடவுள் நம்பிக்கை உண்டு. வீட்டு பூஜையறையில் நின்று இருகரம் கூப்பி கடவுள் படத்தைக் கும்பிட்டு வேண்டிக் கொண்டால் அதுவே போதும் என்ற மன நிறைவு கொண்டவன்.

கொஞ்ச காலமாக – அவனுக்கு சோதனை மேல் சோதனை- அடுத்தடுத்து வந்து அலைக்கழித்தது. அவனது கார் பழுது ஆகி மெக்கானிக்ஷாப்புக்கு போய் ஒரு வாரம் ஆகியும் இன்னும் சரி செய்யப் படாமல் அங்கேயே கிடக்கிறது. ஏ.டி.எம் கார்டு சமீபத்தில் தொலைந்து போனது. புது ஏடிஎம் கார்டுக்கு ஏற்பாடு செய்திருந்த போதிலும் அது இன்னும் வந்த பாடில்லை. போதாத குறைக்கு அன்று ஞாயிற்றுக் கிழமை வேறு! பேங்க் விடுமுறை என்பதால் பணம் எடுக்க முடியாது. உடம்பு சரியில்லாத அம்மா- 70வயதில் – உயிருக்கு போராடும் நிலையில் – மருத்துவமனை படுக்கையில்-அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறாள். பதட்டத்தில் மொபைல் ஃபோன் பேட்டரி சார்ஜ் இல்லாமல் பாக்கெட்டில் உறங்கிக் கொண்டிருந்தது. சிலந்தி வலையாய் குழப்பங்கள் சூழ்ந்து நொந்து போயிருந்தான்.

அன்றையதினம் – கடற்கரை ஒட்டி உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை அகற்றி விட்டு, கனரக கண்ட்டெயினர் தொடர்புடைய உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற்றிருந்த தனியார் நிறுவனம் வேலையை ஆரம்பிப்பதற்கான பூமி பூஜை போடப் போக-அவ்வளவுதான்! அதனைஎதிர்த்துமக்கள்போராட்டம். திடீரென ஸ்டிரைக்..

பேருந்துகள் ஓடவில்லை! வாடகை டாக்ஸிகள் ஏதும் இயங்கவில்லை!ஆட்டோகாரர்களும் இணைந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு! எங்கெங்கு நோக்கினும் ஒரே கூச்சல்.. கலவரம்..!அம்மாவுக்குஉணவுஎடுத்துச்செல்வதற்காக-மருத்துவமனையிலிருந்து ‘ஓலா’ டாக்ஸியில் வீடு திரும்பும் வழியில் – திடீர் போராட்ட எதிரொலி!

“சாரி சார்.. கல் வீசி காரை காலி பண்ணிடுவாங்க.. நீங்க இங்கேயே இறங்கிக்குங்க சார். என்னை மன்னிச்சிடுங்க”.

‘அம்போ’வென பாதி வழியில் கழட்டி விட்டு விட்டு, விர்ரென அகன்றான் டாக்ஸி டிரைவர். என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்த படி, முழித்துக் கொண்டு தவித்தான்.

அன்று – ஞாயிற்றுக்கிழமை – கந்தர் சஷ்டி விரத நாள். மாலை ஆறு மணிக்கு முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை..! கண்டுகளித்து வணங்கிச் செல்வதற்காக-ஆறுமுகம் ‘ஹீரோ ஹோண்டா’ பைக்கில் அங்கே வந்து கொண்டிருப்பதைக் கண்டதும் சுந்தரத்திற்கு நிம்மதி பிறந்தது.

இருவரும் ஒரே அலுவலகத்தில் பணி புரியும் சகவயது நண்பர்கள். அவர்களின் வீடுகளும் தோதாக ஒரே தெருவில் அடுத்தடுத்து அமைந்திருந்தன.

பைக்கை அமைதி படுத்தி நிறுத்தியவாறு – “அடடே..! சுந்தரம்.. என்னப்பா இங்கே நிற்கிறே?” புன்னகைத் தூவினான்ஆறுமுகம்.

“அதை ஏன் கேட்கிறே..” என ஆரம்பித்து, திடீர் ஸ்டிரைக்கால் தனக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையையும், அம்மாவுக்கு சாப்பாடு எடுக்க வந்த விஷயத்தையும் கவலையோடு கூறினான் சுந்தரம்.

“ஆமாம். ஊரே அல்லோலப்பட்டிட்டிருக்கு. பாவம் ஜனங்க”

“ஆறுமுகம்.. நீதான் ஹெல்ப் பண்ணனும்..”

“கவலைப் படாதே நண்பா.. இனி நான் இருக்கேன். ஏறி உட்கார். ரிலாக்ஸ்.. ஆனால் கொஞ்சம் லேட் ஆகும்” புதிர் போட்டவாறு, கோவில் வாசலில் பைக்கை நிறுத்தினான் ஆறுமுகம்.

“உள்ளே வா சுந்தரம். சாமிக்கு அபிஷேகம் முடிச்சிட்டு போயிடலாம். நான் இந்த கோயிலில் பக்தர் சங்க ஆயுள் உறுப்பினர். சஷ்டி பூஜை ரொம்ப சக்தி வாய்ந்தது.. இப்ப வருத்தத்தில் இருக்கிற உனக்கும் மனசுக்கு ஆறுதலாக இருக்கும். முருகனைக் கும்பிட்டு முறை இட்ட பேருக்கு முற்றிய வினை தீரும். இன்று கந்தக் கடவுளுக்கு உகந்த நாள்.. ஒரு மணி நேரத்தில் அர்ச்சனை முடிஞ்சிடும்.” நண்பனின் நிலைமை தெரிந்திருந்தும் சர்வ சாதாரணமாகச் சொன்னான்.

‘வேறுவழியில்லை..நிறையவேலைஇருக்கு. இங்கிருந்துவீடுஏழுகிலோமீட்டர்தூரம். அவசரப்பட்டுபலனில்லை.’அரைமனதோடுதளர்நடை போட்டு ஆறுமுகத்தைப் பின் தொடர்ந்தான் சுந்தரம்.

குருக்கள் தயாராக இருந்தார் ஆண்களும் பெண்களுமாக அதிக கூட்டம். அவர்களுள் பல பேர் பால், தேன், பத்தி, சந்தனம், பூக்கள், பன்னீர், நெய், நல்லெண்ணெய்-என தங்களின் பங்களிப்பை குருக்களிடம் வழங்கிக் கொண்டிருந்தனர்.

முதலில்-முருகர் சிலைக்கு எண்ணெய் காப்பு செய்ய ஆரம்பித்தார் குருக்கள்.

சுந்தரம் முணுமுணுத்தான். ’எண்ணெய் விற்கிற விலையில் லிட்டர் கணக்கில் ஊத்தறாங்களே.. அவ்வளவும் வேஸ்ட்..! .வீண்செலவு!’ கடுப்பானான்.

அதையடுத்து-சந்தனம், பன்னீர்-பிறகு செம்பு,செம்பாக பால் குளியல்!

‘அம்மாடி..!எவ்வளவு பாலை கல்லு சிலை மேல் கொட்டி வீணடிக்கிறாங்களே..’ சுந்தரம் அங்கலாய்த்து நின்றான்.

அடுத்ததாக-தேன், தயிர், பஞ்சாமிர்தம்.. என அபிஷேகம் தொடர்ந்த நிகழ்ச்சி கண்கொள்ளா காட்சி!

ஆறுமுகம் பரவசமாகி, “ஓம் முருகா”என்று கன்னத்தில் ‘படபட’ வென தட்டிக் கொண்டான். ஆனால் -சுந்தரமோ, ’பூஜை எப்போது முடியும்’ என முள் மீது நிற்பது போல நெளிந்து கொண்டிருந்தான்.

ஒருவழியாக-அபிஷேக பூஜை முடிந்ததும் கோயில் வாசலுக்கு வந்து பைக்கை உசுப்பினான் ஆறுமுகம். பின்னிருக்கையில் அமர்ந்தபடி “என்ன ஆறுமுகம் இது அநியாயம்.? படிச்ச விபரம் தெரிஞ்ச நீயே இப்படி அபிஷேகம் ‘அது’ ‘இது’ன்னு காஸ்ட்லி அயிட்டங்களை வீணாக கொட்டி பாழாக்குவதைப் பார்த்துட்டு, சாமி கும்பிட்டுவர்றீயே.. ரொம்ப செலவு தேவை தானா? வேஸ்ட்..!வேஸ்ட்!”முகம் சுளித்தான்.

“காலாகாலமாக இந்த மாதிரியான பூஜைகள் நடத்துவது கடவுளுக்கு நாம் செய்யும் நேர்த்திக்கடன்.. இவையாவும் கடவுளுக்கு அவசியம் செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள்.. இதை கிண்டலாக நீ பார்க்கக் கூடாது நண்பா.. சரி.. சரி. வீடு வந்தாச்சு.. அப்புறம் பேசிக்கலாம்..” சொன்னதருணத்தில்-சுந்தரத்தின் மனைவி கோமளா வாசலில் பதைபதைப்புடன் நிற்பதைக் கண்டு இருவரும் திகைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here