Yours Shamefully : பாலியல் வறட்சி, பாலியல் குற்றங்கள்… சில கேள்விகள்…

ரு பெண் பல ஆண்களைத் திருமணம் செய்து வாழ்வது புராணக் கதைகளில் வேண்டுமானால் கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் அது மாதிரி திருமணங்கள் இப்போது நடக்க நேரிட்டால்… இதை அடிப்படையாகக் கொண்டதுதான் Yours Shamefully என்ற குறும்படம். ட்யூபில் அதிகம் பார்க்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, பகிரப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த வைரல் குறும்படமான Yours Shamefully என்ற ஆங்கிலப்பெயருடன் வெளியாகியிருக்கும் குறும்படம் பற்றிய விவாதம் தான் இந்த கட்டுரை…

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

Yours Shamefully
Yours Shamefully

12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வக்கிரங்களுக்கு மட்டுமே தூக்கு தண்டனை என்கிற சட்டத்திருத்தம்  நடைமுறைப் படுத்தப்பட்ட நடப்பு ஆண்டில் (2018 ஆம் வருடம் ) நடப்பது போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது கதை. 12 வயதும் 45 நாட்களுமான குழந்தை ஃபாத்திமா, ஆதவன் மற்றும் டேனியல் தாமஸ் என்கிற இரண்டு பேரால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட  வழக்கிற்கு இறுதித் தீர்ப்பு வழங்கவிருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெமினி . இது தான் இந்த குரும்படத்தின் ஒன்லைன் கதை.

தூக்குத் தண்டனை கட்டாயமில்லை என்கிற நிர்பந்தம் – 2067 க்குப் பிறகான பெண்களின் நிலை பற்றி அவரது மகளின் திருமண பந்தத்தை தொடர்புபடுத்தி நீதிபதிக்கு வரும் ஒரு Fantasized  கனவு – அவர் என்ன தீர்ப்பு வழங்கினார் என்கிற மக்களின் எதிர்பார்ப்பு. இந்த மாதிரி வழக்குகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்கிற டைரக்டர் விக்னேஷ் கார்த்திக்- ன் கருத்து தான் இந்தப் படத்தின்  ஹார்ட் பீட்.

இக்குறும்படம் கிட்டத்தட்ட இதை  பார்க்கும் எல்லோராலும் பாராட்டப்படுகிறது, இக்குறும்படத்திற்கு வந்திருக்கும் டிஸ்லைக்குகளும், நெகடிவ் கமெண்ட்களும் முழு படம் பார்க்க பொறுமை இன்றி அந்த நீதிபதி காணும் கனவு காட்சியை மட்டும் கண்டுவிட்டு கடுப்பானவர்கள் என்றே நினைக்கிறேன்.  2067- க்கு பின் நடப்பதாகக் காட்டப்படும் அந்தக் காட்சி மட்டும் படமாக எடுக்கப்பட்டிருப்பின் ஒட்டுமொத்தமாக எல்லோரும் நெகடிவாகத்தான் இந்த படத்தை விமர்சித்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

2067-க்குப் பிறகான பெண்களின் நிலை என்று காட்டப்படும் அந்தக் காட்சியில் போலிஸ் பாதுகாப்போடுதான் பெண்கள் நடமாடுகிறார்கள், பாலியல் கொடுமைகளாலும், பெண் குழந்தைகளை விரும்பாத பெற்றோர்களாலும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து குறைந்து (2013- 1000 ஆண்களுக்கு 950 பெண்கள் , 2026ல்  –  1000 ஆண்களுக்கு 785 பெண்கள் என 2064 – ல் 1000 ஆண்களுக்கு 270 பெண்கள் எனக்  குறைவதாக இந்த குறும்படத்தில் ஒரு பயடேட்டா முன்வைக்கப்படுகிறது. 2016 ல் மட்டும இந்திய தேசம் முழுக்க 36000 பாலியல் வக்கிர புகார்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனவாம்! ஆண்டு தோறும் அதிகரித்துக்கொண்டே போகும் இந்நிலை இப்படியே தொடர்ந்தால்.. பெண் குழந்தைகள் வளரும் முன்னரே பாலியல் பசிக்கு இறையாகி சாகடிக்கப்படுவார்கள்.

இந்நிலை இப்படியே தொடர்ந்தால்… என்கிற நூலைப் பிடித்துக்கொண்டு மிக நேர்த்தியாக தான் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் விக்னேஷ் கார்த்திக். கடந்த காலம் எப்படி இருந்ததோ அதன் அடிப்படையில் தான்  நிகழ்காலம் இருக்கும் , அதே மாதிரி நிகழ்கால செயல்களின் தாக்கம் எதிர்காலத்தை பாதிக்கும். தற்போதைய நிலவரப்படி தினசரி 50 க்கும் மேற்பட்ட பாலியல் கொலை வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக அரசு புள்ளிவிவரம் சொல்கிறது. பதியப்படாமல் பலியாகும் அபலைகள் எத்தனை பேரோ தெரியவில்லை! இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் பெண்களின் எண்ணிக்கை குறைந்து விடும் தான், இக்கருத்தைத் தான் இக்குறும்படத்தின் முதல் பகுதி சித்தரித்திருக்கிறது.

நீதிபதி ஜெமினியின் கனவில் வரும் காட்சியில் 2067ம் வருடத்திய இந்திய அரசு ஒவ்வொரு பெண்ணும் ஆண்களின் எண்ணிக்கையை ஈடு கட்டுவதற்காக குறைந்தது இரண்டு திருமணமாவது செய்து கொள்ள வேண்டும் என சட்டம் போடுகிறது, தனது மகளுக்கு இரண்டாம் கனவனை தேடிக் கட்டிவைக்கும் கணம் நீதிபதி அவர்கள் இரண்டு கணவன்மார்களுடன் படுக்கையில் தன் மகள் இருக்கும் திடுக்கிடும் காட்சியைக்கண்டு அதிர்ச்சியில் கண் விழிக்கிறார்.

இந்த குறும்படம் எழுப்பும் கேள்விகள்:

1)ஹாஸினி, ஆசிஃபா பானு, என எத்தனை குழந்தைகளை நாம் காமுகர்களுக்கு சாகக்கொடுக்கப் போகிறோம்.

2)இத்தகைய மிருகங்களை கொடுமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.வெறுமனே தூக்குதண்டனை போதாது. அப்பொழுது தான் இதற்குப் பின் வருகி்ற காமுகர்கள் இதை பாடமாக எடுத்துக்கொண்டு திருந்துவார்கள் .

3)கற்பழிப்புக் கொலைகள் தொடரும் பட்சத்தில் ஆண்களுக்கான பெண்களின் எண்ணிக்கை குறைந்து போய் 1000 ஆண்களுக்கு வெறும் 270 பெண்கள் என்பதாக குறைந்துபோகும் காலம் வரலாம். அப்போது ஆண்களின் ஆசையை ஈடுகட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் 2 திருமணங்கள் கட்டாயம் எனும் சட்டபூர்வமாக சொல்லப்படலாம்.

இந்தக் குறும்படம் நிலைப்படுத்தும் கேள்விகள் நம் பொதுபுத்தி மனோநிலையில் ஏற்கனவே இருந்த ஒன்று தான், நம் வீட்டாருக்கு இப்படியொரு நிலைமை வந்தால் நாம் என்ன செய்வோம் என்கிற சைக்காலஜிக்கல் தாக்குதல் தான் இதுவும் “நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கல” என்கிற வசவின் மாறுபட்ட வடிவம் தான் இத்திரைப்படம் சொல்லும் விசயமும், நாம் இத்தகு பிரச்சினைகளுக்கு சிந்திக்கும் தண்டனைகளும்.

ஏன் நாம் ஒரு விசயத்தை சரியா, தவறா என மனசாட்சிப்படி சிந்திக்காமல், பயத்தின் அடிப்படையில் சிந்திக்கிறோம், பயமுறுத்தும் வகையில் தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்று ஏன் யோசிக்கிறோம்?