கரிகாலன் யானைகளைப் பயன்படுத்தி போரில் வென்றது எப்படி?
கரிகாலன்

கரிகாலன் யானைகளைப் பயன்படுத்தி போரில் வென்றது எப்படி?

தமிழனின் வீரம் மற்றும் அவனது போராட்ட குணத்தை உலகுக்கே காட்டிய மாவீரன் சோழப் பேரரசன் கரிகாலன்.

கரிகாலனைக் கொன்று சோழ வம்சத்தையே அடியோடு அழிக்க வேண்டும் என்று அவனுக்கு எதிராக நின்றவர்கள் ஒருவர், இருவர் அல்ல. சேரர், பாண்டியர், வேளிர்கள் மற்றும் சிற்றரசர்கள் என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மன்னர்கள் அனைவரும் கரிகாலனுக்கு எதிராக ஓரணியில் திரண்டு நின்றார்கள். தனியொருவனாக நின்ற கரிகாலன் அவர்கள் அனைவரையும் எப்படி வீழ்த்தினான்??? 

வாருங்கள் அறிந்துகொள்வோம்… 

கரிகாலனின் இயற்பெயற் வளவன். அவனது தந்தை உருவப் பஃறேர் வென்வேல் சென்னி. அவருக்கு இன்னொரு அடைய்மொழியும் உண்டு. அதுதான் செருப்பாழி எறிந்த வென்வேல் சென்னி. தமிழ் நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்று வடுகர்கள் மற்றும் கோசர்களின் துணையுடன் நுழைந்த மோரியர்களை செருப்பாழி வரை படையெடுத்துச் சென்று தாக்கி, யானைகளால் மிதித்துக் கொன்று விரட்டியடித்த மாவீரன் வென்வேல் சென்னி.

வாள் கொண்டு யாராலும் வீழ்த்த முடியாத மாவீரனான வென்வேல் சென்னியைத் துரோகம் கொன்றது. வென்வேல் சென்னியின் மனைவி சூல் கொண்டிருந்த போதே வென்வேல் சென்னி மரணத்தைத் தழுவி முன்னோர்களிடம் சென்றான். அதனால், தாயின் வயிற்றிலேயே சோழ வேந்தனாக முடிசூட்டிக் கொண்டான் வளவன். அவன் பிறந்த பிறகு, தாயையும் இழந்தான். தனியொருவனாக இருந்த சோழ இளவரசனுக்குத் துணை அவனது தாய் மாமன் இரும்பிடர்த்தலையர் மட்டுமே. அவர் அழுந்தூர் இளவரசர். 

தாய் மாமனின் பாதுகாப்பில் சோழ இளவரசன் வளவன் வளரும் போது அவனைக் கொலை செய்ய பலர் முயற்சி செய்தார்கள். உணவில் நஞ்சு கலந்தார்கள். ஒற்றர்களை ஏவினார்கள். அவனது பாதுகாப்பு வீரர்களை விலைக்கு வாங்கினார்கள். யாராலும் வளவனை எதுவும் செய்ய முடியவில்லை.  சோழ குலத்தின் கடைசி வாரிசு வளவன் தான். அவனைக் கொன்றால் சோழ நாடு அரசனற்ற நாடாகிவிடும். பிறகு, அதைப் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று எதிரிகள் பலரும் முயற்சி செய்தார்கள். அந்த முயற்சிகள் அனைத்தையும் வென்று, முறியடித்து மாவீரனாகவும் பலசாலியாகவும் வளர்ந்தான் வளவன். 

விடலையாக இருக்கும் போது வளவன் ஒரு முறை எதிரிகளிடம் சிறைபட்டுக் கொண்டான். அவனை இருட்டு மாளிகைக்குள் அடைத்து இரும்பு சங்கிலித் தளைகளால் அவனைக் கட்டிவிட்டார்கள். இரும்பிடர்த்தலையர் உதவிப் படையுடன் வருவதற்குள் மாளிகைக்குள் தீவைத்து விட்டனர் பாவிகள். வளவனின் உடல் சங்கிலித் தலையோடு சிக்கியிருக்க அந்த மாளிகையில் தீ கிடுகிடுவென்று பற்றி எறிந்தது. அத்துடன் இல்லாமல், வளவன் தப்பிவிடக் கூடாது என்று அவனைக் கொலை செய்யவும் முயன்றனர்

தீப்பற்றி எரியும் மாளிகைக்குள் வளவன் எதிரிகளுடன் போர் புரியத் தொடங்கினான். நெருங்கி வந்த பகைவர்களைத் தன் கையில் மாட்டியிருந்த சங்கிலித் தளைகளால் அடித்துக் கொன்றான். பிறகு, அவனைக் கொலை செய்ய வந்த எதிரிகளிடமிருந்து கைப்பற்றிய வாளால் சங்கிலித் தலையை அடித்து உடைத்து, அந்த எரியும் மாளிகைத் தீயிலிருந்து தப்பினான். அப்படித் தப்பும் போது, அவனது ஒரு கால் தீயில் சிக்கிக் காயம் ஏற்பட்டுக் கருகியது. 

அது நாள் வரை சோழ இளவரசன் வளவனாக இருந்தவன், அந்த மாளிகைத் தீயிலிருந்து வெளியே வரும் போது கருகிய காலைக் கொண்டிருந்ததால், அவன் ’கரிகாலன்’ என்று அழைக்கப்பட்டான். அந்த நிகழ்வு, கரிகாலனின் மனதை மாற்றியிருந்தது. இதற்கு மேல் தன் மாமன் இரும்பிடர்த்தலையரைத் தவிர வேறு யாரையும் நம்பக்கூடாது என்று முடிவெடுத்தவன் அனைவரின் பார்வையிலிருந்தும் மறைந்தான். 

சோழ இளவரசன் இல்லாத நாட்டை பலர் சொந்தம் கொண்டாடினார்கள். இறுதியாக மதங்கொண்ட சோழ நாட்டின் பட்டத்து யானையை அடக்கி யார் அதன் கழுத்தில் அமர்ந்து வருகிறார்களோ, அவர்களே சோழ நாட்டின் மன்னன் என்றும் அவர்களுக்கு முடிசூடப்படும் என்றும் அமைச்சர்களும் பெரியவர்களும் சேர்ந்து முடிவெடுத்து அறிவித்தார்கள். பட்டத்து யானையை அடக்க பலர் முயற்சி செய்தனர். அனைவரையும் கொன்று போட்டு மிதித்தபடி சென்றது பட்டத்து யானை. 

இந்த செய்தி சோழ நாடு முழுவதும் பரவ, கரிகாலனின் காதிலும் வந்து விழுந்தது. உடனே தன் நாட்டுக்காகவும், தன் மக்களுக்காகவும் பட்டத்து யானையுடன் மோதினான். பட்டத்து யானையின் உச்சந்தலையில் கொழுவால் அடித்து, அதை அடக்கி அதன் மீதேறி அவன் மீண்டும் சோழ நாட்டின் தலைநகர் உறைந்தைக்கு வந்த போது, அவனை அதுவரை எதிர்த்தவர்கள் அனைவரும் அவனுக்கு முன்பு அடிபணிந்து மண்டியிட்டனர். 

கரிகாலன் சோழ நாட்டின் வேந்தனாக மீண்டும் முடிசூட்டிக் கொண்டான். ஆனால், அதை சேரர், பாண்டியர், வேளிர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் பலரும் ஏற்கவில்லை. கரிகாலனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர், போர்முரசைக் கொட்டினர். எதிரிப் படையினர் அனைவரும் ஒன்று சேர்ந்து சோழ நாட்டின் எல்லையைத் தாக்கினார்கள். 

அனைவரையும் தனித்தனியே சென்று தாக்கி வெற்றி பெறுவது முடியாத காரியம் என்பதை உணர்ந்த கரிகாலன், அவர்கள் அனைவரையும் சோழ நாட்டுக்குள் இழுத்தான். வெண்ணியில் அனைவரும் ஒன்று திரண்டனர். கரிகாலன் தன் மாமன் இரும்பிடர்த்தலையரின் படையுடன் ஒரு பக்கம் நின்று கொண்டிருந்தான். மற்றொரு பக்கம் எதிரணியில் சேரர், பாண்டியர் மற்றும் பதினொரு வேளிர்கள் அனைவரும் ஒன்று திரண்டு நின்றுகொண்டிருந்தனர். 

வெண்ணிப் போர்க்களத்தில் தேர், குதிரை, காலாட்படை இவற்றுடன் அனைத்தையும் விட வலிமையான யானைப் படையும் அணிவகுத்து நின்றுகொண்டிருந்தது. அக்காலத்தில் வலிமை மிகு ஆயுதம் எது தெரியுமா? யானைப் படை தான். 

மதங்கொண்டு பிளிரியபடி ஓடிவரும் யானைகளைப் பார்த்தாலே முதுகுத் தண்டில் பயம் உறைய ஆரம்பிக்கும்.

யானைப் படை யாரிடம் அதிகம் இருக்கிறதோ, போர்க்களத்தில் யானைகளை யார் சரியாகக் கையாள்கிறார்களோ அவர்களால் தான் போரில் வெற்றி பெற முடியும். 

யானைகளைப் போர்க்களத்தில் அப்படியே பயன்படுத்த மாட்டார்கள். யானைகளின் நெற்றியில் இரும்புத் தகட்டைப் பொருத்தி விடுவர். எதன் மீதாவது மோதினால் அவ்வளவு தான். கோட்டைச் சுவராக இருந்தாலும் இடிந்து விழுந்து விடும். பிறகு, யானைகளின் தந்தங்களில் நீண்ட கிம்புரிகளையும், கூர் வாட்களையும் சொருகி விடுவர். எதிரே யானைகள் வந்தாலும் சரி புரவிகள் வந்தாலும் சரி குத்திக் கிழித்து விடும். இத்துடன் அவற்றின் தந்தங்களில் கூர்மையான இரும்புச் சங்கிலியை சுற்றி விடுவர். எதிர்ப்படும் வீரர்களைத் தும்பிக்கையால் சுற்றித் தூக்கி அடித்தால் எமனே வந்தாலும் அவர்களைக் காப்பாற்ற முடியாது. கரிகாலன் தனது யானைப் படையை இப்படித்தான் கட்டமைத்திருந்தான்.

வெண்ணிப் போர்க்களத்தில் கரிகாலனின் படையும் எதிரிகளின் கூட்டுப் படையும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. கரிகாலன் வெண்ணிப் போர்க்களத்தை திட்டமிட்டே பயன்படுத்தியிருந்தான்.  அங்கு, ஆங்காங்கே புதை குழிகளை வெட்டி வைத்திருந்தான். திட்டமிட்டு எதிரிகளின் யானைப் படையை வரவழைத்து புதை குழிக்குள் சிக்கவைத்து கைப்பற்றிக் கொண்டான். போர் தொடங்கிய சில நாட்களிலேயே எதிரிகளிடமிருந்து கைப்பற்றிய யானை மற்றும் புரவிகளால் அவனது படை பலம் பல மடங்கு பெருகிப் போயிருந்தது. 

பல நாட்களாக நடந்துகொண்டிருந்த போரை முடிவுக்குக் கொண்டுவர நினைத்தான் கரிகாலன். கரிகாலன் பட்டத்து யானையின் மீதமர்ந்து சோழ நாட்டின் ஒட்டுமொத்த யானைப் படையையும் வழி நடத்தி நேருக்கு நேர் எதிரிகளின் படையுடன் மோதினான். அவனுடன் புரவிப் படையும் காலாட் படையும் துணைக்கு தாக்கின. 

யானைகளின் மோதலால் எதிரிகளின் தடுப்புகள் அனைத்தும் உடைந்து நொருங்கின. ஆவேசமாகத் தாக்கிய யானைகளின் கிம்புரிகளில் சிக்கி யானைகளும் புரவிகளும் உடல் கிழிந்து கீழே விழுந்தன. அனைத்தையும் மிதித்துத் துவைத்த படி கரிகாலன் யானைப் படையுடன் முன்னேறினான். எதிரிப் படையை வழிநடத்திய சேர வேந்தன் பெருஞ்சேரலாதனை நோக்கிச் சென்றவன் அறைகூவல் விடுத்தான். 

கரிகாலன் விடலைப் பையன். வாழ்நாள் முழுக்க எதிரிகளின் தாக்குதலால், உயிர்ப் போராட்டத்திலேயே வாழ்ந்தவன். ஆனால், எதிரே நின்ற சேர வேந்தன் பெருஞ்சேரலாதனோ மறவோன். அவரது முகத்தில் ஓரிரு நரைமுடிகள் கூட தென்பட்டன. மறவோனும் விடலையும் அந்தப் போர்க்களத்தில் யானைகள் மீது அமர்ந்தபடி சண்டையிட்டனர். ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். யானைகளின் கிம்புரிகள் ஒவ்வொன்றும் தாக்கி மற்றதைக் கிழித்தன. ஒரு கட்டத்தில் இரண்டு யானைகளும் அடிபட்டு, உடல் கிழிய கீழே விழ அவற்றுடன்  கீழே விழுந்தனர் பெருஞ்சேரலாதனும், கரிகால் சோழனும். 

கீழே விழுந்த பிறகும், இருவரும் சண்டையிடுவதை நிறுத்தவில்லை. இருவரில் ஒருவரின் வெற்றி தான் அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும். அதனால், இருவரும் நிறுத்தவில்லை. தங்களது ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தாக்கிக் கொண்டனர். பெருஞ்சேரலாதனின் வாளும், கரிகாலனின் வேலும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. பெருஞ்சேரலாதனின் அனுபவத்தை விடவும், கரிகாலனின் வேகம் அதிகமாக இருந்தது. 

சிறு வயது முதலே எதிரிகளால் ஓயாமல் அலைக்கழிக்கப்பட்ட கரிகாலன் வெறியுடன் போரிட்டுக் கொண்டிருந்தான். அதனால், அவன் அதே வெறியுடன் பெருஞ்சேரலாதனைத் தாக்க அவரது வாள் உடைந்து பறந்து சென்று கீழே விழுந்தது. கரிகாலன் உடனே தன் கையில் இருந்த வேலை பெருஞ்சேரலாதனின் மார்புக்குள் இறக்கினான். 

அவனது வேகத்தினால் பெருஞ்சேரலாதனின் இரும்புக் கவசம் கிழிக்கட்டு, மார்பில் இறங்கிய வேலானது முதுகு வழியே வெளிவந்திருந்தது. முதுகில் புறப்புண் வாங்கியதால், பெருஞ்சேரலாதன் தனது குலத்துக்கே அவமானம் தேடித் தந்துவிட்டதாக எண்ணி நாணினார். 

அதே போர்க்களத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து தனது கழுத்தைத் தானே அறுத்துக்கொண்டு, வாள் வடக்கிருந்த்தல் மேற்கொண்டார். பெருஞ்சேரலாதனின் வாள் வடக்கிருத்தல் செயலால், போரில் வெற்றிகொண்டும் கரிகாலனை விட பெருஞ்சேரலாதனே பெரும் புகழை அடைந்தார். 

பெருஞ்சேரலதன் வாள் வடக்கிருத்தல் மேற்கொண்ட செய்தி போர்க்களம் முழுக்க பரவ எதிரிகள் அனைவரும் சிதறி ஓடினர். இனிமேல் பகைவர்கள் யாரும் சோழ நாட்டைத் தாக்க நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாது என்று பின்வாங்கிய பகைவர்களை தேடித் தேடிக் கொன்றான் கரிகாலன். அவர்கள் விட்டுச் சென்ற ஆயுதங்களையும் யானை மற்றும் புரவிகளைக் கைப்பற்றிக்கொண்டான். அதன் துணையுடன் அவன் வட நாட்டுக்கும் படையெடுத்துச் சென்று, கரிகாலனின் தந்தை செருப்பாழி எறிந்த வென்வேல் சென்னியின் கனவையும் நிறைவேற்றினான். இமயத்தில் புலிக்கொடியை நாட்டினான்.

யானை குழிக்குள் சிக்கிக்கொண்டால், அது எப்படி ஆவேசத்துடன் அந்தக் குழியைத் தூர்த்து தனது பெண் யானையுடன் சென்று சேர்ந்துகொள்ளுமோ அதைப் போலவே கரிகாலனும் எதிரிகளிடம் சிக்கினாலும், அவர்களை வென்று தன் காதலியைத் தழுவிக்கொண்டான் என்று கூறுகிறது பட்டினப் பாலை. 

மற்றொரு இடத்தில்,  வனத்தில் வளர்ந்த புலிக் குட்டி எதிரிகளின் கூண்டுக்குள் சிக்கிக் கொண்டாலும், அது தன் பலத்தை இழக்காது. அதே போல கரிகாலனும் எதிரிகளின் சிறையில் சிக்கிக் கொண்ட போதும் தன்  மன பலத்தை இழக்காமல் வல்லவன் ஆனான் என்று கூறுகிறார் உருத்திரங் கண்ணனார். 

கரிகாலன் யானைகளைக் கொண்டு போர்க்களத்தில் மட்டும் வெல்லவில்லை. காவிரியின் குறுக்கே அணையைக் கட்டி சோழ நாட்டை சோறுடைத்த நாடாக்கினான். தொண்டை நாட்டில் காஞ்சி எனும் நகரை உருவாக்கினான். பிறகு, உறைந்தையில் கோட்டைச் சுவரைக் கட்டி எழுப்பினான். புகாரை உலகம் போற்றும் நகரமாக மாற்றிக் காட்டினன. 

வரலாற்றில், ’ஒப்பாரும் மிக்காரும் இல்லாப் பேரரசன்’ என்று பெயரெடுத்தவன் ஒரேயொருத்தன் தான். அவன் சோழப் பெருவேதன் கரிகாற் பெருவளத்தான் மட்டுமே.

Writer Vetrivel

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.