மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கர் தனக்குப் பெண் கொடுக்கவில்லை எனும் காரணத்துக்காக, தஞ்சை நாயக்கர்கள் மீது படையெடுத்தார். ஆனால், தஞ்சை விஜயராகவ நாயக்கரோ தன் மகளை வெடிவைத்துக் கொன்றாலும் கொல்வேனே தவிர, மதுரை நாயக்கருக்குப் பெண் கொடுக்க மாட்டேன் என்று வெடிவைத்து அந்தப் புரத்தையே தகர்த்து விட்டார். அதற்குக் காரணம், விஜயராகவ நாயக்கரின் சகோதரியை திருமலை நாயக்கர் திருமணம் செய்துகொண்டு கொலை செய்தது தான். அது மட்டும் அல்லாமல், தஞ்சை நாயக்கர்கள் அரசர் வழி வந்தவர்கள். ஆனால், மதுரை நாயக்கர்களோ அரசருக்கு வெற்றிலை மடித்துக்கொடுக்கும் அடைப்பக்காரர்களாக இருந்த விசுவநாத நாயக்கர் வழி வந்தவர்கள். அந்தக் காரணமும் கூட.
தஞ்சை நாயக்கரின் அரச குடும்பத்துப் பெண் தனக்குக் கிடைக்காமல் போக, மதுரை சொக்கநாத நாயக்கர் தனது தளபதி தப்பகுள லிங்கம நாயக்கரின் மகளான மங்கம்மாள் எனும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். சொக்கநாத நாயக்கருக்கும் மங்கம்மாளுக்கும் மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர் என்பவன் பிறந்தான். சொக்கநாத நாயக்கன் இறந்த பிறகு, கி.பி 1682 முதல் 1689 வரை ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார், முத்து வீரப்ப நாயக்கர்.
இவர் தமது ஆட்சிக் காலத்தில், சொக்கநாத நாயக்கர் இழந்த மதுரை நாட்டின் பகுதிகளை மீட்டார். முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சி செய்த போது, முகலாய அரசன் ஔரங்கசீப், தம் செருப்பை, நாடெங்கும் ஊர்வலமாக அனுப்பினான். அச்செருப்புக்கு அரசர்கள் எல்லோரும் மரியாதை செய்ய வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் முத்து வீரப்ப நாயக்கர் அந்தச் செருப்பைத் தன் காலில் அணிந்து கொண்டு, ’உங்கள் மன்னர் இன்னொரு செருப்பை அனுப்பவில்லையா?’ எனக் கேட்டார். ஆனால், இவரது போதாத காலம், இவருக்கும் நோய் ஏற்பட்டுவிட, மகன் பிறந்த ஒரு சில மாதங்களில் இறந்து போனார்.
பிறந்து மூன்று மாதமே ஆன முத்து வீரப்பனின் மகன் விசயரங்க சொக்கந்தானுக்குப் பட்டம் கட்டி, அவனது பாட்டியான மங்கம்மாள் அந்தக் குழந்தையின் சார்பில் மதுரையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தலானாள். அமைச்சர்கள், உறவினர்கள் என்று பலர் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்த போதும், மங்கம்மாள் பாகுபலி சிவகாமியைப் போல அனைவரையும் ஓரங்கட்டிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டாள். ஒரு ராணியாக, ராஜமாதாவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டாள்.
பெயரன் விசயரங்க நாயக்கன் மங்கம்மாவை சிறையில் அடைத்து, ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றும் வரை கி.பி.1689இலிருந்து 1706 வரை அவள் தான் மதுரையில் கோலோச்சினாள்.

அவளது ஆட்சிக் காலத்தில் முகலாய மன்னன் ஔரங்கசீப்பின் அதிகாரம் தென்னாட்டிலும் பெருகத் தொடங்கியது. அதனால், மைசூர் மன்னன் முதல் தஞ்சை மராட்டிய மன்னன் ஷாஜி என்பவன் வரை ஔரங்கசீப்புக்குத் தலை வணங்கி திறை செலுத்த ஒப்புக்கொண்டனர். அதனால், மங்கம்மாலும் ஔரங்கசீப்புக்குத் திறைப் பணம் செலுத்தி தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டாள்.
சிவகாமிக்கு ஒரு கட்டப்பா கிடைத்ததைப் போல, மங்கம்மாவுக்கு தளபதி நரசப்பய்யா என்பவர் துணையாக இருந்தார். அவரது துணையால் தஞ்சை, மைசூர்ப் படைகளை வென்றார். தம் கணவர் காலத்தில் இழந்த பகுதிகளை மீட்டார். வஞ்சகமாகத் தன்னை ஏமாற்றிய திருவிதாங்கூர் மன்னன் இரவிவர்மனைத் தன் தளபதி நரசப்பய்யரின் தலைமையில் படை நடத்தி வெற்றிகண்டு அவனிடம் இருந்து திறை பெற்றாள்.
முகலாயப் படைத்தலைவன் மதுரைக்கு வந்த போது அவனுக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருட்களைக் கொடுத்து, தஞ்சை மன்னன் ஷாஜி பிடித்துக்கொண்ட பகுதிகளை மீட்டுக்கொண்டாள். எனெனும் அவ்வப்போது தஞ்சை மராட்டியர்கள் தொல்லை கொடுத்து வந்தனர், அவர்களுக்கும் பணம் கொடுத்து சமாதானப் படுத்திக்கொண்டாள்.
தனது பெயரனுக்காக மதுரையையும் சிம்மாசனத்தையும் காப்பாற்றி வைத்திருந்த மங்கம்மாவின் இறுதிக்காலம் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. மங்கம்மாவின் வானளாவிய அதிகாரம் பெயரன் விஜரங்க சொக்கநாதனுக்குப் பிடிக்கவில்லை. ராஜ மாதாவைப் போல அதிகாரம் செலுத்தியே பழக்கப்பட்ட மங்கம்மாவை விஜயரங்க சொக்கநாதன் வெறுக்கத் தொடங்கினான். அதற்குத் தூபமிட்டாள், அவனது மனைவி மீனாட்சி. உரிய வயது வந்தும் தன்னிடம் ஆட்சி, அதிகாரத்தை ஒப்படைக்காமல் மங்கம்மாவே ஆட்சி செய்ததை நினைத்து மனம் வெதும்பினான் விஜயரங்க சொக்கநாதன்.

மங்கம்மாவால் பாதிக்கப்பட்ட அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் உறவினர்களுடன் விஜயரங்க சொக்கநாதன் சேர்ந்துகொண்டான். அவர்களுடைய தவறான வழிகாட்டுதல்களைக் கேட்கத் தொடங்கினான். முதலில் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தான் விஜரங்க சொக்கநாதன்.
மங்கம்மாவுக்கும் அரசியலில் உதவிக்கொண்டிருந்த இராயசம் அச்சையாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக மதுரை அரண்மனை மட்டுமல்லாமல், வெளியேயும் தகவல்களைப் பரப்பினான் விஜயரங்க சொக்கநாதன். இதனால், மங்கம்மாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படத் தொடங்கியது.
மங்கம்மாவின் ஆட்சியை ஒழித்து எப்படியாவது மதுரையைக் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்தான். அதற்காக காய் நகர்த்தத் தொடங்கினான் விஜயரங்க சொக்கநாதன். தளபதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் என்று ஒவ்வொருவரையும் தன் பக்கம் சேர்க்கத் தொடங்கினான். பிறகு, மங்கம்மாவுக்குத் துணையாக இருந்தவர்களையும் கோட்டையிலிருந்து விலக்கி வைக்கத் தொடங்கினான். எதிர்த்தால் தீர்த்துக்கட்டவும் துணிந்தான். மங்கம்மாள் உயிருடன் இருக்கும் வரை தனக்குத் தேவையானது கிடைக்காது என்று முடிவுக்கு வந்தான். அவளுக்கு எதிராக சதி செய்யத் தொடங்கினான்.
மங்கம்மாள் அந்தப்புர அறையில் இருந்த போது, அவள் அங்கிருந்து வெளியேறாத வண்ணம் அங்கேயே பூட்டி சிறை வைத்தான். பிறகு, மங்கம்மாவின் விசுவாசிகள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தான். மதுரைக் கோட்டை முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தவன், தனது மனைவி மீனாட்சியுடன் அரண்மனையில் தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்டான் விஜயரங்க சொக்கநாதன்.
தான் வளர்த்து ஆளாக்கிய தனது பேரனை தன்னை சிறையில் அடைத்துவிட்டு, தனக்குத் தெரியாமல் தனக்குத் தானே முடிசூட்டிக்கொண்டதை நினைத்து பதறினாள் மங்கம்மாள். சிறையில் அடைக்கப்பட்ட மங்கம்மாள் தனக்கு நேர்ந்த துரோகத்தை நினைத்துப் பதறினாள். தவித்தாள். குமைந்தாள். குமுறினாள். அழுதாள்.
தன் மேல் விசுவாசமாக இருக்கும் யாராவது ஒருத்தன் விஜயரங்க சொக்கநாதனுக்குத் தெரியாமல், தன்னை விடுவிடுக்க வருவார்கள் என்று வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். யாராவது வருவார்கள் என்று நம்பினாள். ஆனால், யாரும் வரவில்லை. அனைவரும் விலை போயிருந்தார்கள். எஞ்சியவர்கள் அடக்கப்பட்டிருந்தார்கள். மீறி செயல்பட நினைத்தவர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். வெளியே என்ன நடக்கிறது என்று மங்கம்மாவுக்கு வந்து சொல்லக் கூட ஆள் இல்லை. அவளது தனிமையே அவளைக் கொடுமைப்படுத்தத் தொடங்கின. உணர்வுகள் சித்ரவதை செய்யத் தொடங்கின.
அதற்குப் பிறகு மங்கம்மாள் அந்த அறையை விட்டு வெளியே வரவே இல்லை. அந்த அறையில் கவனிப்பாரற்றுக் கிடந்தாள். வேளைக்கு யாரும் உணவு கொண்டு வந்து கொடுக்கவில்லை. குடிக்கத் தண்ணிர் கொடுக்கப்படவில்லை. மாற்றுத் துணி இல்லை. அவளது நிலைமை மோசமாகத் தொடங்கின. அவளுக்கு யாராவது மனம் இறங்கி உதவி செய்தாலும், அவர்களையும் தடுத்து தண்டித்தான் விஜயரங்க சொக்கநாதன். எதிரிகளுக்குக் கூட இந்த நிலை வரக்கூடாது. அந்த அளவுக்குக் கொடுமைப்படுத்தப்பட்டாள் மங்கம்மாள்.

தான் பாசமாக வளர்த்து ஆளாக்கிய தனது பேரனே தன்னை இப்படி சித்ரவதை செய்வதை நினைத்து மனம் வெதும்பினாள். தான் கட்டிய சிறைக்குள் இராணி மங்கம்மாள் அடைக்கப்பட்டு எலும்பும் தோலுமாக நலிந்து மெலிந்து போனாள். அந்தப்புரத்தின் ஒதுக்குப்புறமான படுக்கையறையிலேயே அவளுடைய துயரம் நிறைந்த இறுதி நாட்கள் ஒவ்வொன்றாகக் கழியலாயின.
தனது பாட்டியை பேரன் விஜயரங்கன் சிறையில் வந்து பார்க்கவில்லை. மற்றவர்களுக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இறுதிக் காலத்தில் அநாதையாக மங்கம்மாள் விடப்பட்டாள். தான் புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம், தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறோம் என்ற உணர்வே மங்கம்மாளைச் சரிபாதியாகக் கொன்று விட்டிருந்தது. இத்தனைக் கொடுமைகளை அடையத் தான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லையே என்று நினைத்துப் பார்க்கப் பார்க்க அவளுள் அழுகை குமுறியது.
பேரனோ பாட்டியின் தவிப்புகளையும், வேதனைகளையும் அனுபவித்தபடி அவளுக்குப் பருக நீரும், உண்ண உணவும் கூடத் தரக்கூடாது என்று கடுமையான உத்தரவுகள் போட்டுக் கொண்டிருந்தான். அவன் நெஞ்சில் ஈவு இரக்கமே இல்லை. பாட்டியைத் தன் முதல் எதிரியாகவே நினைத்து நடத்த ஆரம்பித்திருந்த அவனுக்கு அறிவுரை கூற முதியவர்களும், பெரியவர்களுமாக எவருமே அப்போது அந்த அரண்மனையில் இல்லை. இருந்தவர்கள் அற்பனான அவனுக்கு எதையும் எடுத்துக் கூறப் பயந்தார்கள்.
விஜயரங்கன் ஈவு இரக்கமற்றுக் குரூரமாகவும், கொடூரமாகவும் நடந்து கொண்டான். நாளாக நாளாக அவனது குரூரம் அதிகமாகத் தொடங்கியதே தவிர சிறிதும் குறையவில்லை. பாட்டியைச் சித்திரவதை செய்தே கொல்வது என்று முடிவெடுத்தான். மங்கம்மாவைச் சிறை வைத்திருந்த அறைக்குள் உணவு, பருகத் தண்ணீர் எதுவும் கொடுக்கக்கூடாது என்று தடை விதித்திருந்த விஜயரங்கன் பின்பு அதை விடக் கொடூரமான வேறொரு முறையைக் கையாண்டான்.
மங்கம்மாள் சிறைபடுத்தப்பட்டிருந்த அறை வாசலில் அறுசுவை உணவை அவள் பார்வையில் படும்படி வைக்குமாறு கூறி அவளுக்கு உண்ணக் கொடுக்காமல் தவிக்கவிடச் செய்தான் விஜயரங்கன். மற்றவர்களை அங்கு உண்ணச் செய்தான். பசியில் கிடந்த மங்கம்மாள் மற்றவர்கள் சாப்பிடுவதைப் பார்ட்து ஏங்கிக் கிடந்தாள். அவள் பசியாலும் தாகத்தாலும் தவித்துத் துடிதுடிப்பதைத் தன் கண்களாலேயே பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தான் விஜயரங்கன்.
18 ஆண்டுகள் மதுரையை ஆண்ட மங்கம்மா, பசியும் பட்டினியுமாக, எலும்பும் தோலுமாக அந்த அறையிலேயே 1706 – ம் ஆண்டு மரணம் அடைந்தாள்.
விஜயரங்கனின் பக்குவமின்மையாலும், அவசரப் புத்தியாலும் ஆத்திரத்தாலும் மதுரை நாயக்க அரசு ஒளிமங்கி அழிய ஆரம்பித்தது. எங்கும் விலக முடியாத இருள் சூழ்ந்தது. மங்கம்மாளின் மரணத்திற்குப் பின் புதிய தளவாய் கஸ்தூரி ரங்கய்யாவும், பிரதானி வெங்கடகிருஷ்ணய்யாவும் கூறிய யோசனைகளின்படி விஜயரங்க சொக்கநாதன் நாட்டின் வருவாயைப் பெருக்கக் கருதி மக்கள் மீது அதிக வரிச்சுமைகளைத் திணித்துக் கொடுமைப் படுத்தினான்.
அவன் இட்ட புதிய வரிப்பளுவைத் தாங்க இயலாமல் மதுரை மக்கள் அரசுக்கு எதிராகக் கொதித்து எழுந்தார்கள். கிளர்ச்சிகளும் கலகங்களும் நாடெங்கும் பரவின. நாட்டில் அமைதி குலைந்தது. முன்பு மங்கம்மாளால் தானமாகக் கொடுக்கப்பட்ட இறையிலி நிலங்களுக்குக் கூட விஜயரங்கன் ஆட்சியில் வரி கொடுக்குமாறு அதிகாரிகளால் மக்கள் வற்புறுத்தப்பட்டார்கள். தனது இறையிலி நிலத்துக்கு வரி கொடுக்கச் சொல்லி வற்புறுத்தியது பொறுக்க முடியாமல் கோயில் பணியாளர் ஒருவர் கோபுரத்தின் உச்சியில் ஏறிக் கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
விஜயரங்கனின் ஆட்சித் தொடக்கத்திலேயே நிகழ்ந்த பாட்டி மங்கம்மாளின் மரணமும், கோயில் பணியாளரின் தற்கொலையும் ஆட்சிக்குப் பெரிய அபசகுனங்களாக அனைவரும் கருதத் தொடங்கினர். அந்தக் கெட்ட பெயரே தொடர்ந்து நீடித்தது. பின்பு மனம் மாறித் தளவாயும், பிரதானியும் புதிய வரிகளை நீக்கி மக்களிடம் நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் நினைத்தபடி மக்களிடமிருந்து எதிர்பார்த்த நல்ல பெயர் மீளவில்லை. இழந்தவை இழந்தவை தான். விஜயனின் திறமைக் குறைவால் நாளடைவில் ஆட்சியின் எல்லைகள் சுருங்கின. ராஜதந்திரக் குறைபாடுகளால் எதிரிகள் பெருகினர். கவலைகள் அதிகமாயின. ஒன்றும் செய்ய இயலவில்லை.

பாட்டிக்கு அவன் செய்த துரோகமோ என்னவோ தெரியவில்லை. அவனுக்குக் குழந்தைகளே பிறக்கவில்லை. வாரிசு இன்றியே அவன் மறைந்து போனான்.
அவன் மறைந்து போக, வாரிசு இல்லாத மதுரையை விஜயரங்க சொக்கநாதனின் மனைவி மீனாட்சி ராணியாக முடிசூட்டிக் கொண்டாள். அவளுடன் மதுரை நாயக்கர் அரச மரபே அழிந்து போனது. அதுவும் ஒரு மாபெரும் துரோகத்தினால்… அது என்னவென்று தெரிய வேண்டுமா காத்திருங்கள்..!