காதலர் தினம்னாலே நம்ம எல்லாருக்கும் பிப்ரவரி 14 – ம் தேதி தான் ஞாபகத்துக்கு வரும். பிப்ரவரி 14, தமிழர்களோட உண்மையான காதலர் தினம் இல்லைங்கறது தெரியுமா?
தமிழர்கள், 2500 வருடங்களுக்கும் மேலா சித்திரை முழுநிலவு அன்னைக்குத்தான் காதலர் திருவிழாவ காமன் திருவிழான்னும், இந்திரத் திருவிழான்னும் கொண்டாடிக்கிட்டு இருந்தாங்க. ஆனால், இன்னைக்கு அப்படியொரு திருநாள் இருக்கறதையே நாம எல்லாரும் மறந்துட்டோம். இல்லை இல்ல, அதை சுத்தமா தொலைச்சிட்டோம்.
வாங்க… தமிழர்கள் மறந்து போன காதலர் திருவிழாவான காமன் பண்டிகைப் பத்தி தெரிஞ்சிக்குவோம்.
காதலர் தினம் ரோம்ல கி.பி மூன்றாம் நூற்றாண்டுலேருந்து தான் கொண்டாடப்படுது. ஆனால், 2500 ஆண்டுகளாகவே தமிழ்நாட்டுல இந்திரத் திருவிழாவானது, காதலர் விழா, காமன் பண்டிகைன்னு கொண்டாடப்பட்டு வருது. பூம்புகாருக்கு வருகை தந்த யவனர்கள் தான் அங்கயும் போய் இந்தப் பண்டிகைய உருவாக்கியிருக்கணும்.
மேற்கத்திய கலாச்சாரமான வேலண்டைன் திருவிழா ஒரு வாரத்துக்கு நடக்கும். முத்தம் கொடுக்கறதுக்கு ஒரு நாள், பரிசு கொடுக்க ஒரு நாள், ப்ரபோஸ் பன்றதுக்கு ஒரு நாள், சாக்லேட்கொடுக்கறாதுக்கு ஒரு நாள்னு நீளும். ஆனால், தமிழர்களோட சித்திரைத் திருவிழா ஒரு மாத காலத்துக்கு நடக்கும். அதாவது 28 நாள். அந்தக் காலத்துல ஒரு மாசம்னா அது பௌர்ணமி டூ பௌர்ணமி தான்.
இளவேனில் காலத்துல இவ்விழா தொடங்கும். காமன் பண்டிகைக்கான அறிவிப்பை மன்னன் தண்டோரா போட்டு ஊர் முழுக்க சொல்லுவான். அரசு அறிவிப்பைக் கேட்டதுமே, மக்கள் தங்களோட வீட்டைச் சுத்தப்படுத்தி அலங்கரிப்பாங்க. ஊர் முழுக்க பந்தல் கட்டுவாங்க. பாட்டு, கூத்து, பட்டிமன்றம் எனத் திருவிழாவுக்கான அனைத்துக் கொண்டாட்டங்களும் தங்குதடையின்றி நடக்கும். இதுல சாதி, மதம்னு மக்கள் எந்த வேறுபாடுகளும் இல்லாம ஒன்னா சேர்ந்து கொண்டாடுனாங்க.
அந்த ஒரு மாத காலமும் பொதுமக்கள் மகிழ்ச்சியோட கொண்டாடுனாங்க. அந்தத் திருவிழாவோட உச்சம் தான், காமன் பண்டிகை. சித்திரை முழுநிலவு அன்னைக்கு ஆற்றங்கரைல, கடற்கரைல நடக்கற பண்டிகை. காதலர்கள் சேர்ந்து பேரின்பத்துல மூழ்குன திருநாள் அது. அதுக்கு காம தேவனான மன்மதனே சாட்சி.
காதல், வீரம் – இது ரெண்டையும் தமிழர்கள் தங்களோட ரெண்டு கண்களா நெனைச்சாங்க. ரெண்டையும் கொண்டாடுனாங்க. நம் பண்பாட்டோட அடிப்படையா இது ரெண்டையும் வகுத்தாங்க. தமிழர் தம் மறத்தையும் காதல் அறத்தையும் ஒன்னு சேர்த்து உருவாக்குன திருவிழா தான், இந்திரத் திருவிழா. அதாவது காமன் திருவிழா.
தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் – இவன் சங்க காலத்தைச் சேர்ந்த சோழ வேந்தன். இந்த செம்பியன் தான் முதன் முதல்ல இந்திரத் திருவிழாவைத் தொடங்கி வச்சான்னு நம்பப் படுது. இவனோட வேண்டுகோளை ஏத்துக்கிட்டு விண்ணவர் தலைவனான இந்திரனே புகார் நகருக்கு வந்து 28 நாளும் தங்கி பூசனையை ஏற்றுக்கொண்டான்னு சங்க இலக்கியங்கள் சொல்லுது. இந்தப் பெருவிழாவோட உச்சம் தான், காமன் பண்டிகை.
அன்னைக்கு சித்திரை முழுநிலவு நாள்.தென்றல் இதமா வீசுற இளவேனில் காலம், கடற்கரை இல்லன்னா ஆத்து மணல். எப்படி இருக்கும் நெனைச்சுப் பாருங்க..!
சித்திரை முழுநிலவு நாள்ள, தொடித்தோட் செம்பியன் கொண்டாடுன காதல் திருவிழாவைப் பத்தி இளங்கோவடிகள் இப்படித்தான் சொல்லியிருக்காரு.
’வெள்ளிப் பெருமலையின் வடபுறத்தில், மது ஒழுகும் மலர்களை உடைய பூம்பொழிலில், தனது காதலி ரதியுடன் அமர்ந்திருந்த காமக் கடவுளாகிய மன்மதனுக்குப் படைக்கும் விருந்தாகக் காதல் திருவிழாவை விரும்பிச் செய்வான் ஒரு விச்சாதர வீரன்.’
காமன் திருவிழா அப்போ, மன்மதனும் அவனோட காதலி ரதி மட்டும் பூம்பொழில்ல இருக்க மாட்டாங்க. கடற்கரை, ஆற்றங்கரை முழுக்க காதலர்கள் தங்களோட இணை கூட சேர்ந்து மகிழ்ச்சியா முழுநிலவ ரசிச்சிக்கிட்டே காதல் செஞ்சி, கொண்டாடுவாங்க.
பூம்புகார்ல இந்திரத் திருவிழான்னு கொண்டாடப்பட்ட காதலர் திருவிழா மதுரைல வில்விழான்னும் வேனில் விழான்னும் கொண்டாடப்பட்டுச்சி. காதலர்கள் வைகை நதில நீராடி, வைகைக் கரைல மகிழ்ந்திருந்து கொண்டாடுனாங்க.
அந்தக் காலத்துல ஆடவர்கள் பெரும்பாலும் பொருள் ஈட்ட வெளியூருக்குப் போயிடுவாங்க, இதை வினைன்னு சொன்னாங்க. இல்லைன்னா போர் செய்யக் கிளம்பிடுவாங்க. வினை காரணமாகவும், போர் காரணமாகவும் பிரிஞ்சியிருக்கற காதலர மீண்டும் சேர்ந்து கூடி இன்பம் அடைய வேணும்னு பெண்கள், தங்கள் காதல் தேவனை வணங்கி, ‘காமன் திருநாள்ள வெளியூர் போன ஆளு திரும்பி வந்து, என் கூட சேர்ந்திருந்து மகிழ்ச்சியா இருக்க அருள் செய்யணும்’னு கடவுள் கிட்ட வேண்டிக்குவாங்கன்னா பார்த்துக்கோங்களேன்.
‘காதலன் தன்னை, தன் கண்ணால் காணுமாறு காணச் செய்யவேண்டும்! அவன், பனை ஈன்ற மடற்குதிரையில் ஏறி விரைந்து வரச் செய்ய வேண்டும், காதலன் விரைந்து வரவேண்டும் என்பதற்காக காமனின் கால்களைக் கட்டிக் கொண்டு இரப்பேன். அவனின் அம்புகள் எனக்குக் கிடைக்க அருள் செய்ய வேண்டுமென்று காமனை இன்று மட்டுமல்ல, என்றும் இரப்பேன்,”
காதலனைப் பிரிஞ்சி ஏங்கித் தவிக்கற காதலி ஒருத்தியப் பத்தி கலித்தொகை இப்படித்தான் சொல்லியிருக்கு.
உங்களுக்கும் இந்த மாதிரி ஒரு காதலியோ இல்ல காதலனோ இருந்தா கமெண்ட்ல மறக்காம சொல்லுங்க.
சிலப்பதிகாரம், கலித்தொகை மட்டுமில்லாம மணிமேகலையும் காமன் பண்டிகை பத்தி சொல்லியிருக்குது.
காமன் பண்டிகை கொண்டாடப்பட்ட இடம் எப்படி இருந்துச்சுன்னு தெரியுமா?
காமன் திருவிழாவுக்குச் செல்லும் காதலர்கள் தங்குறதுக்கு அமைக்கப்பட்ட இடத்தை மூதூர்ப் பொழில்னு சொன்னாங்க. அதுக்கு இளவந்திகை எனும் சிறப்பு பெயரும் இருந்துச்சி. காமதேவனுக்கு விழா எடுக்கும் தொடித்தேட் செம்பியனுக்குத் திறை செலுத்த காமதேவனே ரதிய அழைச்சிக்கிட்டு தன்னோட மன்மத வில்லோட வருவாங்கற நம்பிக்கை இருந்துச்சி. காமதேவன் கொண்டு வந்த திறை என்னன்னு தெரியுமா? அவன் வேனிலோடும், தென்றலோடும் சேர்ந்து திறை எடுத்துக்கிட்டு வருவான்னு நம்புனாங்க.
வேனில், தென்றலோட வர காம தேவன் தங்குறதுக்காக மலர்ச்சோலை ஒன்னை உருவாக்கியிருந்தாங்க. அதுல நுணா, கோங்கம், குரா, அதிரல், பாதிரி, புங்கம், வலஞ்சுரி மராஅம், வேம்பு, செருந்தி, காஞ்சி, ஞாழல் மலர்களை மலர்விக்கும் செடிகளையும், மலர்க் கொடிகளையும் பயிரிட்டுருந்தாங்க.
சித்திரைத் திருவிழானாலே பேரு பெற்றிருந்த காம தேவனோட புகழ் பிற்காலத்துல குறைஞ்சி போச்சு. தற்காலத்துல அந்த இடத்தை சிவபெருமானும், பார்வதி தேவியும், பெருமாளும் புடிச்சி வச்சிக்கிட்டாங்க. ஒவ்வொரு கோயில்கள்ளையும் சித்திரைத் திருவிழா வேற வேற வடிவங்கள்ள நடக்குது. மதுரைல மீனாட்சி கல்யாணம், கூவாகத்துல கூத்தாண்டவர் கோயில் திருவிழான்னு பல பேரு. ஆனால், எல்லாரும் காமன் பண்டிகையையும் அதன் கொண்டாட்டத்தையும் மறந்துட்டாங்க.
இப்பவும் கிராமப் புறங்கள்ள காமன் பண்டிகை மாசி மாதம் தஞ்சாவூர், அரியலூர், கொங்கு பகுதிகள்ள கொண்டாடப்படுது. ஆனால், எதுக்காக கொண்டாடப்பட்டுச்சோ, அதுக்காகக் கொண்டாடப்படல. அதோட வடிவமே மாறிடுச்சு. மக்களை மகிழ்விச்ச காம தேவன் போயி, இப்போ சிவபெருமானோட தவத்தைக் களைச்ச மன்மதன் வந்துட்டாரு. தவத்தைக் கலைச்சதுனால சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து, மன்மதனை எரிச்சதைச் சொல்ற புராணக்கதைய அடிப்படையா வச்சி கொண்டாடபடுது… காமன் பண்டிகையோட உண்மையான உணர்வும் நோக்கமும் மங்கிப் போய்டுச்சி.
நாம மறந்துபோன இந்த காதலர் திருவிழாவை மறுபடியும் கொண்டுவர்றது, நம்ம பண்பாட்டு வேர்களை தூசி தட்டி உயிர்ப்பிக்குற முயற்சியா இருக்கும். காமன் பண்டிகையை புதுப்பொலிவோட மீட்டெடுத்து, இளசுகளுக்கு இதோட பெருமையை சொல்லிக் கொடுப்போம். சித்திரை பௌர்ணமி நாள்ல, தென்றல் காற்றோட இதமான மூடுல, காதலோட கைக்கோர்த்து நாமும் கொண்டாடுவோம்—நம்ம தமிழர் காதல் பண்பாட்டை உலகமே திரும்பிப் பார்க்குற மாதிரி!
எல்லாருக்கும் காமன் பண்டிகை வாழ்த்துக்கள். சித்திரை முழு நிலவு அன்னைக்கு, மே 12 ம் தேதி, திங்கள் கிழமை தான் காமன் பண்டிகை. நீங்களும் மகிழ்ச்சியா காமன் பண்டிகைய கொண்டாடுங்க..!.