ஹிப்பாலஸ் – கடலைக் கடந்த யவன மாலுமி..!
Hippalus

ஹிப்பாலஸ் – கடலைக் கடந்த யவன மாலுமி..!

வானவல்லி, யவன ராணி, நவயுக நாயகன் வேள் பாரின்னு சங்க கால வரலாற்று நாவல்கள் எல்லாத்துலையும் வர ஒரு கதாபாத்திரம் ஹிப்பாலஸ். சில நாவல்கள்ள அவன் ஒரு வணிகன், சில நாவல்கள்ள அவன் ஒரு வில்லன், சில நாவல்கள்ள அவன் ஒரு பேராசைக்காரன்… எழுத்தாளர்கள் எல்லாரும் அவுங்களுக்கு வசதியா அவனைப் பயன்படுத்தியிருப்பாங்க.

ஆனா, உண்மைல ஹிப்பாலாஸ் யாரு தெரியுமா? அவன் ஒரு ஹீரோ. ஆமாம்… சேர, பாண்டிய மற்றும் சோழ நாட்டை உள்ளடக்கிய தமிழ்நாடு மற்றும் யவனம்னு சொல்லப்படற கிரேக்கம், ரோமாபுரி பகுதில அவன் ஒரு ஹீரோவா வாழ்ந்து செத்தவன். 

வாங்க அவனைப் பத்தியும், உலக வணிகத்துல அவன் ஏற்படுத்துன தாக்கத்தையும் முழுசா தெரிஞ்சிக்குவோம்..!

சங்க காலத்துல தமிழ்நாடு தான் உலக வணிகத்துக்கே ஹாட்ஸ்பாட். தமிழ்நாட்டோட இயற்கை வளமான முத்து, நீல மணிகள், அலங்காரப் பொருட்கள் அப்றம் இங்க விளையற நறுமன சுவைப் பொருட்களான மிளகு, வெற்றிலை, வெட்டி வேர், பிரிஞ்சி இலை உலக நாடுகள் எல்லாத்தையும் இழுத்துப் போட்டுச்சு. போட்டி போட்டுக்கிட்டு வணிகம் செய்ய ஆரம்பிச்சாங்க. இந்தப் பொருட்களுக்கு ரோமாபுரில ஏகப்பட்ட கிராக்கி. 

அதனால, யவனம்னு சொல்லப்படற பண்டைய கிரேக்க, ரோமாபுரி வணிகர்கள் தமிழ்நாடு கூட வணிகம் செய்ய முயற்சி செஞ்சாங்க. அது அவ்ளோ சுலபமா இல்ல. ஏன்னா, முதல்ல மத்தியத் தரைக்கடல, செங்கடல கடக்கணும். அதுக்குப் பிறகு மிகப்பெரிய அரபிக் கடல கடக்கணும். இது அவ்ளோ சாதாரண வேலை இல்ல. கிரேக்க வணிகர்கள் அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல சேர்த்து எரித்திரையன் கடல்னு சொன்னாங்க. காரணம் அதுல மாலை வேலைல எரியற கடல் மாதிரி சிவப்பா இருக்கும். 

வணிகர்களுக்கு அந்தக் காலத்துல எரித்திரையன் கடல கடக்கறது ஒன்னும் அவ்ளோ எளிதான காரியமா இல்ல. எரித்திரையன் கடல சுத்திக்கிட்டு தான் தமிழ்நாட்டுக்கு வந்தாங்க. அதுக்குக் காரணம் தமிழ்நாட்டோட மேற்குக் கடற்கரை கிழக்கு மேற்கா இருக்குன்னு நம்புனாங்க. 

ஆனால், இந்த நம்பிக்கைய ஒருத்தன் உடைச்சான். 

அவன் தான் ஹிப்பாலாஸ். அவன் தான் நம்ம ஊருல வீசுற தென் மேற்குப் பருவக் காற்றோட திசைய சரியா கண்டுபுச்சி பாய் மரக் கலத்தை, அரேபியாவுல இருக்கற ஏடன் முனைலேருந்து நேரா எரித்திரையன் கடலுக்குள்ள செலுத்தி காற்றோட உதவியால பாய் மரம் மூலமா கடல கடந்து நேரா தமிழ்நாட்டோட மேற்குத் துறைமுகமான முசிறிக்கு வந்து சேர்ந்தான். இந்தப் பருவக்காற்றை சரியா அவன் தான் முதன் முதல்ல கண்டுபுடிச்சான். அதனால, இந்த தென்மேற்குப் பருவக்காற்றை கிரேக்க வணிகர்கள் எல்லாரும் ஹிப்பாலஸ் காற்றுன்னு அவனோட பேருலையே கூப்ட ஆரம்பிச்சிட்டாங்க. 

ஹிப்பாலஸோட பெரிய சாதனை என்னனு கேட்டா, அவன் தென்மேற்கு பருவமழைக் காற்றை வச்சு எரித்திரையன் கடலைக் கடந்து சூப்பர் ஸ்பீடா பயணிச்சது தான்! அதனால தான் இந்தக் காற்றுக்கு “ஹிப்பாலஸ் காற்று”னு பேர் வந்துச்சு. அதுக்கு முன்னாடி, தெற்கு அரேபிய ஆளுங்களும் தமிழ்நாட்டு மாலுமிகளும் இந்தக் காற்றை பயன்படுத்தியிருந்தாலும், மேற்கத்திய உலகத்துல இந்தக் காற்றை முதல் முறையா சிஸ்டமாடிக்கா பயன்படுத்துனது ஹிப்பாலஸ் தான். 

பெரிப்ளஸ் ஆஃப் தி எரித்ரேயன் சீனு ஒரு பழைய புக் இருக்கு, அதுல ஹிப்பாலஸ் இந்திய கடற்கரையோட துறைமுகங்களோட சரியான லொகேஷனை கண்டுபிடிச்சு, நேரடியா பயணிக்கிற வழியை செட் பண்ணான்னு சொல்லியிருக்கு. பிளினி தி எல்டர்னு ஒரு ஆளு, “ஹிப்பாலஸ் இந்தக் காற்றையே கண்டுபிடிச்சான்”னு சொல்றாரு. ஆனா, பல ஹிஸ்டரியன் ஆளுங்க, “அட, இந்தக் காற்று ஏற்கனவே எல்லாத்துக்கும் தெரிஞ்சது தான், ஆனா வியாபாரத்துக்கு பயன்படுத்தி மரக்கலத்தை செலுத்துனது ஹிப்பாலஸ் தான்”னு சொல்றாங்க!

ஹிப்பாலஸ் கடலக் கடக்கறதுக்கு முன்னாடி யனவத்துலேருந்து ஆண்டுக்கு இருபது முப்பதுன்னு புறப்பட்ட வணிக மரக்கலங்கள், பிறகு ஒரு நாளைக்கு ஒன்னுன்னு புறப்பட்டு தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்துச்சு. மாசக் கணக்கா பயணித்து தமிழ்நாடு வந்த காலம் போயி, வெறும் 40 – 50 நாட்கள்ள தமிழ்நாட்டுக்கு வர ஆரம்பிச்சாங்க. தமிழ்நாட்டுல இருக்கற முசிறி, கொற்கை, புகார், அரிக்கமேடு பகுதிக்கு எப்போதும் கிரேக்க கப்பல்கள் கூட்டம் கூட்டமா படையெடுத்து வர ஆரம்பிச்சிது.

இதை அகனாநூறு பாடலும் பதிவு பண்ணுது. 

“சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க 

யவனர் தந்த வினை மாண் நன் கலம் 

பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 

 வளம் கெழு முசிறி”

சுள்ளியாறு என்று அழைக்கப்பட்ட  பேரியாற்றில்   நுரை பொங்கும்படி  யவனர்கள்  உறுதியான, கட்டமைதி கொண்ட மரக்கலங்களை ஓட்டினார்கள்.பொன்னைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு மிளகை வாங்கிச் சென்ற வளமான  முசிறித் துறைமுகம். 

கிரேக்கர்களுக்கு நம்ம ஊருல கிடைச்ச முத்து, நீல மணி, வெற்றிலை, மிளகு, பிரிஞ்சி இலை, தேறல்  ரொம்ப புடிச்சிது. தங்கத்தையும் வெள்ளியையும் கொட்டிக் கொடுத்து யவனத்துக்குக் கொண்டு போனாங்க. தங்கம், வெள்ளி, கண்ணாடி, பவளம், கிரேக்க மது, மஞ்சற்குருந்தம் ஆகியவற்றையும் இறக்குமதி செஞ்சாங்க. அதிலும் நம்ம ஆளுங்களுக்கு அப்பவே கிரேக்க தேறல்னா ரொம்ப புடிக்கும்.

இதுனால வணிகம் மட்டும் இலல் கலாச்சார பரிமாற்றமும் நடந்துச்சி. யவனர்கள் அதிகமா நம்ம ஊருக்கு வர ஆரம்பிச்சாங்க. மதுரை, புகார்ல யவனக் குடியிருப்புகள் கூட இருந்துச்சி. பார்க்கவே பயங்கரமா வாட்ட சாட்டமா இருந்த யவனர்கள் நம்ம ஊருல அரண்மனைக்குக் காவல் காரவங்களா இருந்தாங்க. தமிழ்நாட்டு வணிகக் குழுக்கள் யவனர்களைத் தங்களோட காவலுக்கு சம்பளம் கொடுத்து வச்சிக்கிட்டாங்க. இதனால தான் தமிழ்நாட்டுல பல இடங்கள்ள யவன நாணயங்க்ள் மண் பாண்டங்கள் கிடைச்சிருக்கு. 

யவனர்கள் பயன்படுத்துன பாய்மரக் கப்பல்கள் 100-115 அடி நீளம் இருந்துச்சி. அதுல 200 லேருந்து 500 டன் சரக்கு ஏத்தலாம். அம்ஃபோரா குடங்கள்ல மது, ஆளிவ் எண்ணெய் எல்லாம் கொண்டு வந்தாங்க. இந்தக் கப்பல்கள் தமிழ்நாட்டு பொருளாதாரத்தை பல மடங்கு உயர்த்துச்சி. 

தமிழ்நாட்டு கூட வணிகம் செய்யறதுனால ரோமாபுரியோட கருவூலமே காலி ஆகிடும்னு பயந்து போய் வணிகத்துக்கே தடை விதிச்ச சம்பவம்லாம் நடந்துருக்கு.

அவரோட பேரு Gaius Plinius Secundus, (கைஸ் பிளினியஸ்) செக்குண்டஸ் ). இவரு வரலாற்றாய்வாளராகவும் , ரோமப் பேரரசின்  தளபதியாகவும் பேரரசர் வெஸ்பாசியானின் நண்பராகவும் இருந்தவர்.  இவர் கிபி 77 இல்  எழுதி  வெளியிட்ட இயற்கை வரலாறு (Naturalis Historia) என்னும் இலத்தீன் மொழியிலான நூலில் ஒரு செய்தியை பதிவு செய்யறாரு. 

கிரேக்கர்கள் தமிழர்களுடனான வணிகத்தால், உலக சாம்ராஜ்யங்களின்  உச்சமான ரோமப் பேரரசின்  கருவூலத்திற்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டது.  கிரேக்கத்தின் ஒட்டு மொத்த தங்கம் மற்றும் வெள்ளியை தமிழகத் துறைமுகங்களில் குவித்துவிட்டு மாற்றாக மிளகு, வாசனைப் பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்களை ரோமானிய வணிகர்கள் வாங்கிசென்றனர். கிரேக்கத்தின் செல்வங்கள் அனைத்தும் தமிழகத்தில் குவிந்ததால் தமிழகப் பொருட்களை இறக்குமதி செய்ய ரோமானிய அரசு தடையும் கடும் கட்டுப்பாடுகளையும் விதித்தது என்று பிளினி குறிப்பிட்டிருக்கிறார். 

மேலும், தமிழ் வணிகர்கள் கிரேக்கம் லத்தீன் போன்ற மொழிகளையும்  ரோமானிய வணிகர்கள் தமிழ் மொழியையும் அறிந்திருந்தனர் என்கிறார் பிளினி.

ஹிப்பாலஸ் ஒரு வணிகன், மாலுமி மட்டும் இல்ல, சங்க காலத்துல உலக வணிகத்தை மாத்தியமைச்ச ஹீரோ! இவனோட நேரடி வழியால, முசிரி, கொற்கை, புகார் துறைமுகங்கள் எல்லாம் உலக வணிகத்தோட மையமா மாறுச்சு. தமிழ்நாட்டோட பெருமையையும் வணிக சிறப்பையும் இவன் தான் உலகுக்குக் காட்டுனான்..! 

Writer Vetrivel

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.