காலக்கணக்கில் குழம்பிய காலதேவன்

பேருந்தில் அமர்ந்திருந்தேன்…

நடக்க முடியாத கிழவர் ஒருவர்
‘தர்மம் செய்யுங்க சாமீ’
என்று காலில் விழுந்தார்.

பத்துரூபாயை எடுத்துக் கொடுத்தேன்.

‘உங்க தலைமுறையே நல்லா இருக்கும்’
என்று வாழ்த்திவிட்டுச் சென்றார்.

அவர் கடந்து சென்றதும்
வயிறு வீங்கிய பெண் ஒருத்தி வந்தாள்.
ஐந்து ரூபாயை எடுத்துக் கொடுத்தேன்.

‘உங்க குழந்தை நல்லா இருக்கும்’
என்றபடி கடந்து சென்றாள்.

நெற்றி நிறைய அப்பிய மஞ்சள், குங்குமம்
நாக்கில் குத்தியிருந்த நீண்ட அலகு
கழுத்தில் தொங்கிய ருத்ராட்ச மாலை…
பாதி கூட நிரம்பியிராத உண்டியலை
முகத்திற்கு முன்பு நீண்ட நேரம் குலுக்கிக் கொண்டிருந்தாள் அம்மன்.
பைக்குகள் கையை விட்டு
கடைசி இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களை
உண்டியலுக்குள் போட்டேன்.
‘இரண்டு ரூபாய் தானா???’ என அம்மன்
‘ஏளனப் பார்வை’யுடன் கடந்து சென்றாள்…

மார் பெருத்த மங்கை இடுப்பில் குழந்தையுடனும்,
வீங்கிய கால்களைத் துணியால் சுற்றி
தேய்த்துக் கொண்டே வந்த இளைஞன்,
முடி நிறைந்திருந்த மார்புடன்  கீழ் வயிறு தெரிய
அரைகுறையாக சேலை உடுத்திய திருநங்கைகள்,
‘அண்ணா… அண்ணா…’ என்று பேருந்து நகரும் வரை
நம்பிக்கையுடன் காத்திருந்த சிறுவன் என
யாரையும் நான் திரும்பிக் கூட பார்த்திருக்கவில்லை.

கையில் படிப்பதைப் போன்று பாசாங்கிற்கு வைத்திருந்த
புத்தகத்திற்குள் எப்போதோ தொலைந்து போயிருந்தேன் நான்.

முன்னவர்கள் என்னை வாழ்த்திவிட்டுச் சென்றார்கள்.
பின்னவர்கள் தூற்றிவிட்டுச் சென்றார்கள்…

இப்போது கால தேவனும்
நிச்சயம் தடுமாறிக் கொண்டிருப்பான்
என்னைப் போன்றே …

என் ஏட்டுக் கணக்கில்
தர்மத்தைக் கூட்டுவதா அல்லது
கழிப்பதா என்று!!!

சி.வெற்றிவேல்,
சாளையக்குறிச்சி…

2 COMMENTS

  1. அருமையான கவிதை. தொழில் செய்து பிழைக்காமல் யாசகம் கேட்பதை தொழிலாகவே இக்காலத்தில் பலர் செய்து வருகிறார்கள். வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here