வானவல்லி முதல் பாகம்: 1 – கானகப் பயணம்

ங்க காலத்தில் காவிரியாறு குணக் கடலில் புகுமிடத்தில் வட கரையின் மேல் அமைந்த மாபெரும் புகழ்பெற்ற பட்டினம் காவிரிப்பூம்பட்டினம். இதனைப் புகார் என்றும், பூம்புகார் என்றும் அழைப்பர். இதனைப் பௌத்த நூல்கள் கவீரப் பட்டினம் என்றும், ‘பெரிபுளீஸ்’ எனும் யவன கடற்பயண நூலில் குறிப்பிடப்படும் மாபெரும் துறைமுகமான  ‘கமாரா’ என்ற பட்டினமும் இந்தப் புகார் தான். தாலமி எனும் யவனர் இதனைச் ‘சபரிஸ்’ எனக் கூறுகிறார். ஈழம், யவனரகம், சாவகத் தீவு, பவளத்தீவு, கலிங்கம், பாண்டிய நாடு, சீனம், கடாரம், ஸ்ரீ விஜய தேசம், புட்பகம், மிசிரம், மோகனித் தீவு போன்ற தேசங்களிலிருந்து வணிகர்களையும் கடலோடிகளையும் கவர்ந்து உலகப்புகழ் பெற்றிருந்தது.

Vaanavalli
வானவல்லி

காவிரியாறு தோன்றி குணக்கடலில் சங்கமிக்கும் முன் புகாருக்குப் பெயர் ‘சம்பாபதி’. சம்பாபதி என்பது பௌத்த மதத்தின் தரைக்காவல் தெய்வம்.

பௌத்தர்களுக்குரிய ஆறு தெய்வ உலகங்களுள் ‘மகாராஜித லோகம்’ என்பதும் ஒன்று. இந்த உலகத்தின் கிழக்குத் திசையை திருதராஷ்டிரன் என்பவரும், தெற்குத் திசையை விரூதாட்சன் என்பவரும், மேற்குத் திசையை விரூளாட்சன் என்பவரும், வடக்குத் திசையை வைசிரவணன் என்பவரும் ஆட்சி செய்தார்கள். இந்த நான்கு திசைக் கடவுளுக்கும் சாதுர் மகராஜிகர் என்று பெயர்.

துடித உலகத்தில் வீற்றிருக்கும் போதி சத்துவர் (உலகநாதர்) எனப்படும் அவலோகிதர் மாயாதேவியின் திருவயிற்றில் கருத்தரித்து மண்ணுலகிற் புத்தராகப் பிறந்து வாழ்ந்து இறுதியில் பரிநிர்வாணம் அடைகின்ற வரை எந்தவொரு தீங்கும் நேராதவண்ணம் அவரைக் காப்பதாக மேற்கூறிய நான்கு தெய்வங்களும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். மேலும் பௌத்த தர்மத்தைப் பின்பற்றியொழுகும் நல்லோர்க்கும், பெற்றோர், ஆசிரியர் ஆகியோர்களை வழிபட்டு ஒழுகும் சீரியோர்க்கும் யாதேனும் இடையூறு நேரிடுமாயின் அவற்றிலிருந்து அவர்களைக் காக்கவும் சாதுர் மகராஜிகர் உறுதியெடுத்துக் கொண்டனர். இவ்வாறு கடமை ஏற்றுக்கொண்ட இவர்கள் மண்ணுலகில் ஆங்காங்கே சிறு தெய்வங்களை இருக்கச் செய்து, நல்லோர்க்கு நேரிடும் துன்பங்களைத் தீர்க்கும்படி அச்சிறு தெய்வங்களுக்குக் கட்டளையிட்டனர். இவ்வாறு நிறுத்தப்பட்ட தெய்வங்களுள் தரைக்காவல் தெய்வமான சம்பாபதி அம்மனும், கடற்காவல் தெய்வமான மணிமேகலையும் முக்கியமானவர்கள்.

முன்பொருநாள் சாரங்கலன்0 என்னும் சிறுவன் தன்னந்தனியாகச் காட்டிற்குச் சென்றுவிட்டான். காட்டின் இருளில் கூத்தாடிக் கொண்டிருந்த பெண்ணைக் கண்ட சிறுவன் இரத்தம் உறைய பயந்து ஓடிவந்து தாய் கோதமையிடம் கூறிவிட்டு நடுங்கிக் கொண்டிருந்தான். அவன் தாய் கோதமை அவனை மார்போடு அனைத்து அச்சம் விலகும்படி ஆறுதல் படுத்த முயன்றாள், இருப்பினும் அவனது பயம் விலகியபாடில்லை. உடனே அவள் அடுப்பை மூட்டி எரிந்து கொண்டிருந்த கொள்ளிக் கட்டையைத் தண்ணீரில் நனைத்து எழும் ஸ்ஸ்ஸ்1 என்ற சத்தமும், புகையும் அவனது பயத்தைப் போக்கும் என்று முயற்சி செய்தாள். அப்படி முயன்றும் பயத்திலிருந்து விடுபடாமல் அந்தச் சார்ங்கலன் சிறுவன் பயத்துடனே இறந்து போனான்.

உடனே கோதமை இறந்த தன் மகனது உடலை தன் தோளில் போட்டுக் கொண்டு அருகிலிருந்த சம்பாபதி கோட்டத்திற்கு வந்து, அவனை உயிர்ப்பித்துக் கொடுக்கும்படி அம்மனிடம் வேண்டி அழுதாள்.

அவளது வேண்டுதலையும், துயரத்தையும் கண்ட சம்பாபதி அம்மன் அவள் முன் தோன்றி, “உன் மகன் விதிவசத்தால் தான் இறந்தான், மாறாக அந்தப் பெண்ணினால் கொல்லப்படவில்லை! அவனது ஆயுளே அவ்வளவுத்தான். என்னால் அவனை உயிர்ப்பிக்க இயலாது” என்று கூறியது.

இதனைக் கேட்ட கோதமை மனம் வருந்தி, “தெய்வங்கள் என்றால் கேட்ட வரத்தை அளிக்கும் ஆற்றல் உடையது தானே? நீ என் மகனது உயிரை திரும்ப அளிக்க இயலாது என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அத்தகைய ஆற்றல் உனக்கு இல்லாதது ஏன்?” எனக் கோபத்துடன் வினவினாள்.

“தரைக் காவல் தெய்வமான எனக்குத் தரையில் துன்பப்படுபவர்களைக் காக்கும் அளவிற்குத்தான் ஆற்றல் உள்ளது. இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் வல்லமை எனக்கு இல்லை” என்றது சம்பாபதி அம்மன்.

இதனைக் கேட்ட கோதமை, மகனை மீண்டும் உயிரோடு காண இயலாததை எண்ணி மனம் நொந்து கதறி அழுதாள். இவளது துயரைக் கண்ட சம்பாபதி அம்மன் தனது தெய்வ ஆற்றலினால் நாட்டிலுள்ள அனைத்து தெய்வங்களையும் அவள் முன் தோன்றச் செய்தது.

சம்பாபதி அம்மன், “இந்தக் கடவுள்கள் யாருக்கேனும் இறந்தவரை உயிர்பிக்கும் ஆற்றல் வாய்த்திருந்தால் எனக்கும் அத்தகைய ஆற்றல் இருந்திருக்கும்” என்றது.

கடல் தெய்வமான மணிமேகலை, எதிர்காலத்தில் நடக்கப் போவதை முன் கூட்டியே அறிந்து கூறும் கந்திற் பாவை, சாதுர் மகாராஜிகர்களான நான்கு திசைக் கடவுள்கள், இவர்களுக்குத் தலைவனான சக்கன் என்னும் விண்ணுலக அரசனான இந்திரன் என அனைவரும் “இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் வல்லமை எங்களுக்கு இல்லை” என்றுக் கைவிரித்தார்கள்.

இந்திரனோ “எங்களுக்குத் தலைவரான போதி சத்துவர் அவலோகிதரால்3 இறந்தவர்களுக்கு உயிர் அளிக்கும் வல்லமை இருக்கலாம், ஆனால் அவர் எங்களுக்கு அப்பாற்பட்டவர்” என்று கூறி மறைந்துவிட்டான்.

“நாவலந்தீவு4 முழுமைக்கும் நான் தான் காவல் காக்கிறேன். இமய மலையிலிருந்து நான் தமிழகத்திற்கு வந்த பின் நாவல் மரத்தின் கீழ் தவமிருந்துகொண்டே மக்களுக்கு எந்த வித துன்பமும் ஏற்படாவண்ணம் காவல் காத்துக்கொண்டிருக்கிறேன். இருப்பினும் உன் மகன் இறந்தது விதி வசத்தால் மட்டுமே! அந்தப் பெண்ணினால் உனது மகனுக்குத் துன்பம் ஏற்பட்டிருந்தால் நான் நிச்சயம் அங்குச் சார்ங்கலனைக் காத்திருப்பேன்” என்றது சம்பாபதி அம்மன்.

13 COMMENTS

  1. […] உண்மையான ஆபத்து இனிதான் தோன்றப் போகிறது என்பதை உணர்ந்த வானவல்லி மட்டும் எச்சரிக்கை உணர்வுடனே புரவி வண்டியில் அமர்ந்திருந்தாள். ஆனால் வானவல்லி எதிர்பார்ப்பதை விடப் பெரியதும், கொடிய ஆபத்தும் வரப்போவதை யாருமே அத்தருணத்தில் எதிர்பார்த்திருக்கவில்லை. […]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here