வானவல்லி முதல் பாகம்: 2 – ஆபத்து

சாவடித் தலைவர் ஈழவாவிரையரிடமிருந்து விடைபெற்றுக் கொண்ட பத்திரையின் புரவித் தேரானது அடர்ந்த சம்பாபதி வனத்தை நோக்கி மெல்ல விரைந்துகொண்டிருந்தது. புரவித் தேர் குலுங்கி வண்டியில் பயணிப்பவர்களுக்கு எந்தவொரு இடையூறும் நேரா வண்ணமும், அதே நேரம் வண்டியை விரைவாகவும் திறம்படச் செலுத்திக்கொண்டிருந்தான் சாரதி.

Vaanavalli
வானவல்லி

வானவல்லியின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள் பத்திரை. வானவல்லியும் வண்டியில் சாய்ந்திருந்ததால் அவளது நீண்ட கருங்கூந்தலை முன்புறம் எடுத்து விட்டிருந்தாள். அவளது கூந்தலிலிருந்து வெளிவந்த வாசமும், மடியின் மெது மெதுப்பும் பத்திரைக்குத் தான் எங்கே தாழை மடலில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருக்கிறோமோ என மயங்கிக் கொண்டிருந்தாள். புரவித் தேர் விரைவாகச் செல்லும் போது ஏற்பட்ட குலுங்கல் பத்திரைக்கு இதமாக ஊஞ்சலாடுவது போல இருந்தது. புரவித் தேரில் விலக்கியிருந்த திரை வழியே வானத்தில் தோன்றிய அழகியக் காட்சிகளில் தன் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தாள்.

வானத்து மங்கை தன் தலைவன் திங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் ஆடைகள் அனைத்தையும் இழந்து பூத்துக் குலுங்குவது போல நட்சத்திரங்களைத் தன் நீல மேனியில் பிரகாசமாய்ப் பளபளக்கும் படி மின்னிக் கொண்டிருந்தாள். மேகக்கூட்டங்களில் பட்டு எதிரொளிக்கும் நிலவொளியானது நீலநிற வானுக்குப் புது அழகை வழங்கிக்கொண்டிருந்தது. இப்படி வானத்து மங்கை தன் தலைவன் நிலவுக்கு வாரி இறைத்திருந்த பேரழகினைக் காண விரும்பாது, நிலவோ வண்டியினுள் அமர்ந்திருந்த வானவல்லியையும் பத்திரையையும் காண விரும்பி தன் வெண்கதிர்களைச் செலுத்தி வண்டியில் விலகியிருந்த திரைச் சீலை வழியே திருட்டுத்தனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். நிலவின் திருட்டுத்தனத்தைக்  கவனித்துவிட்ட வானத்து மங்கை இதனை விரும்பாது நிலவுக்கும் இவர்களுக்கும் இடையில் தன் மேகச் சீலையைச் செலுத்தி நிலவை தனியாக மறைத்துக் கொண்டாள். வானமங்கை நிலவினை மறைத்துவிட்டதால் ஒளி மறைந்து பாதையெங்கும் இருள் கவ்வ ஆரம்பித்தது.

வண்டியினுள் படுத்திருந்த பத்திரை இந்த அற்புதமான காட்சிகளைத் தன்னை மறந்த நிலையில் ரசித்துக்கொண்டிருந்தாள்.

இத்தகைய ரம்யமான சூழ்நிலையில் புரவித் தேரும் காவல் வீரர்களும் சம்பாபதி வனத்தினுள்  நுழைந்துகொண்டிருந்தனர்.

இதுவரை அவர்களுக்கு வெளிச்சத்தைத் தந்து அவர்களுடன் துணையாக வந்த பங்குனி பௌர்ணமி நிலவு, தான் மேகங்களுக்கிடையில் மறைந்து விளையாடியது போலவே இவர்களும் வனத்தினுள் மரங்களுக்கிடையே சென்று மறைந்துவிட்டார்களே? என வருந்துமளவிற்கு நிலவொளியும் புக இயலாத அடர்ந்த மரங்களை உடையது சம்பாபதி வனம்.

நிலவொளியும் அற்ற சம்பாபதி வனத்தில் இருள் சூழ்ந்தது, ஆங்காங்கே தோன்றிய சிறு சிறு மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சமும் அவர்களின் புரவித் தேருக்கு அடியில் தொங்கவிடப்பட்ட சிறு விளக்கு மட்டுமே அவர்களுக்கு வெளிச்சத்தை அளித்துக் கொண்டிருந்தது.

வானவல்லியும், அவளது மடியில் தலை சாய்த்திருந்த பத்திரையும் வனத்தின் இருள் சூழ்ந்த ரம்மியமான அழகியக் காட்சிகளையும், அவ்வப்போது தோன்றும் பறவைகளின் சத்தங்களையும் கேட்டும், ரசித்துக்கொண்டும் பயணித்துக் கொண்டிருந்தனர்.

இத்தகைய இன்பங்கள் அனைத்தையும் விலகச் செய்து பயத்தை ஏற்படுத்தும் படி தூரத்தில் திடீரென ஒரு ஓநாயின் ஊளைச்சத்தம் இவர்களின் காதுகளை அடைந்தது.

திடீரென ஏற்பட்ட ஊளைச்சத்தம் பத்திரைக்குப் பெரும் பயத்தை அளித்தது. முதலில் கேட்ட ஒரேயொரு ஓநாயின் ஊளைச் சத்தமானது இப்போது பன்மடங்கு பெருகி தொடர்ந்து இவர்களை நோக்கி வருவது போல ஊளைச் சத்தத்தின் சுருதியானது அதிகமாகிக் கொண்டிருந்தது.

இதுவரைக்கும் அமைதியாய் இருந்த வனம் சிறிது சிறிதாகத் தனது பயங்கரமான மற்றொரு முகத்தைக் காட்ட ஆரம்பித்தது.

இந்தப் பயங்கரமான நெருங்கி வரும் ஊளைச் சத்தத்தைக் கேட்ட பத்திரைக்குப் பயத்தில் சற்று வியர்க்கவே ஆரம்பித்துவிட்டது.

உடனே பத்திரை, “வானவல்லி உனக்கு இந்தச் சத்தங்களைக் கேட்கும் போது அச்சமாக இல்லையா?” எனக் கேட்டாள்.

அதற்கு வானவல்லி “இந்தச் சத்தங்கள் அனைத்தும் எனக்குப் பழகியது பத்திரை, எனக்கு அச்சம் எல்லாம் ஏற்படவில்லை” என்று பதிலளித்தாள். மேலும், “தாங்கள் தான் பட்டினப்பாக்கத்து மாபெரும் வணிகனின் மகள், தங்களுக்கு இக்காட்சிகள் அனைத்தும் புதிது, இரவு பயணமும் புதிது. ஆனால் எனக்கு அப்படியில்லை. இவையனைத்தும் பழகிய ஒன்று. இந்த இருள் எனக்கு மிகவும் பிடித்ததும் கூட!” என்றாள்.

இதைக் கேட்ட பத்திரை பதிலேதும் கூறாமல், எழுந்து வானவல்லியின் கொடி போன்ற விரல்களைப் பற்றிக்கொண்டு புரவித் தேரில் தோய்க்கப்பட்ட பட்டுத் துணியின் மேல் சாய்ந்து கொண்டாள்.

நெருங்கிக் கொண்டே வந்த ஊளைச் சத்தம் திடீரென நின்று போனதால் பத்திரை சற்று நிம்மதி அடைந்தாள், ஆனால் ஓநாய்களின் ஊளைச் சத்தம் அறவே நின்று போனதைக் கண்ட வானவல்லி பெரும் எச்சரிக்கையுடன் காணப்பட்டவளாய் பார்வையையும் காதுகளையும் தீட்டிக்கொண்டு பாதித் திறந்திருந்த திரைச் சீலையை முற்றிலும் விலக்கினாள். முன்னால் சென்ற வீரர்கள் அப்படியே நின்றனர். வண்டியின் அடியில் எரிந்து கொண்டிருந்த விளக்கிலிருந்து தங்களது பந்தத்தை அனைவரும் கொளுத்திக் கொண்டனர்.

நடக்கும் நிகழ்வுகள் யாவற்றையும் கண்ட பத்திரை ஏதும் புரியாதவளாய் வானவல்லியை நோக்கி பார்வையைச் செலுத்தினாள்.

“ஓநாய்களும், நரிகளும் தூரத்தில் இருக்கும் வேளைகளில் மனித நடமாட்டங்களைக் கண்டால் மற்றவைகளுக்குத் தெரியப்படுத்த இப்படி ஊளையிட்டுத் தெரியப்படுத்திக் கொள்ளும், அப்படி நாம் பயணிப்பதை அறிந்து கொண்ட சில ஓநாய்கள் ஊளையிட்டு மற்றவைகளுக்குத் தெரியப்படுத்தின, மேலும் நம்மை நோக்கி வந்து கொண்டிருந்த ஊளைச்சத்தமானது ஓநாய்கள் நம்மை நோக்கி வந்ததைக் குறித்தது” என்றாள் வானவல்லி.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here