வானவல்லி முதல் பாகம்: 3 – கள்வர்களின் தலைவன்

வானவல்லி

ம்பாபதி வனத்தின் மையப்பகுதி அது. நிலவொளியும் புக இயலாத அளவிற்கு நெருக்கமாய், வானுயர அடர்ந்து வளர்ந்திருந்தன வேங்கை மரங்கள். எந்தவொரு சத்தமும் இல்லாமல் நிசப்தமாய்க் காட்சியளித்துக் கொண்டிருந்தது. இரவில் எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கும் கோட்டானின் சத்தம் கூட எழாமல் பயங்கரப் பேரமைதியாகக் காட்சியளித்தது. மனதிற்கு நிம்மதியும் பேரானந்தத்தை அளிக்கும் அமைதி இல்லை அது. சுடுகாட்டில் காணப்படுமே பேயமைதி, சம்பாபதி வனம் அந்த நடு இரவில் அப்படித்தான் காட்சியளித்தது. இந்தப் பேயமைதியானது துணையில்லாது தனியாக வந்தவர்களைப் பயத்தில் நடுநடுங்கி பித்துப் பிடிக்க வைக்கும் அளவிற்குப் பயங்கரமாகத் தோன்றியது.

Vaanavalli
வானவல்லி

அவ்வப்போது எழும் மூங்கில் மரங்களின் உராயும் சத்தம் கூட மனதில் உள்ள கொஞ்சம் நஞ்ச தைரியத்தையும் விரட்டச் செய்யும் அளவிற்குக் கொடூரமாக இருந்தது.

இப்படியான வனத்தைத் தான் வானவல்லி, பத்திரை முதலானோர் கடந்து கொண்டிருந்தனர். வனத்தின் மிகவும் ஆபத்தான பகுதி இது. இதைக் கடந்துவிட்ட பிறகு, அதற்கப்பால் எந்தவித இடையூறும் ஏற்படாது. ஏதேனும் ஆபத்து ஏற்பட்டாலும் உதவி விரைவில் கிடைத்துவிடும். ஆனால் சம்பாபதி வனத்தில் இவ்விடத்தில் ஏதேனும் துயரம் ஏற்பட்டாலும் உதவி கிடைப்பதும் கடினம், ஆபத்தை எதிர்கொள்வது அதைவிடக் கடினம் என்பதை அறிந்திருந்தாள் வானவல்லி.

மேலும், கொடிய விலங்குகள் நிரம்பிய பகுதி இது. அவற்றினால் ஏற்படும் ஆபத்தும் அதிகம், ஆகவே இங்குக் காவல் வீரர்களின் வருகையும் குறைவு. இரவின் ஒரு சாமப் பொழுதிற்குப் பிறகு இங்கு யாரும் வருகைதர அஞ்சுவர். ஆதலால் வனத்தின் காவலற்ற பகுதி இது. ஆகவே இங்குதான் கள்வர்களும், கபாலிகர்களும் தங்கள் கைவரிசையைக் காட்டத் துணிவர்!

புரவித் தேரின் மூடுதிரையை முற்றிலும் அகற்றிவிட்டு எச்சரிக்கையாக அமர்ந்து கொண்டாள் வானவல்லி. காவல் வீரர்களை எதற்கும் தயாராக இருக்கும்படி எச்சரிக்கை செய்தாள்.

வானவல்லி பத்திரையிடம் கவனமாக இருக்கும் படியும், எது நடந்தாலும் வெளியே வரக்கூடாதென்றும் கூறிவிட்டு, புரவித் தேரின் மூடுதிரையை முற்றிலும் மூடிவிட்டுப் பின்புறம் தன் கால்களைத் தொங்கவிட்டுக் கொண்டு கவனத்துடன் அமர்ந்திருந்தாள்.

காவலுக்கு வந்துகொண்டிருக்கும் வீரர்களின் வசமுள்ள நீண்ட வால்களின் கூர் முனையை விடத் தனது புத்தியைக் கூர்மையாக்கிக் கொண்டாள் வானவல்லி.

இத்தகைய நேரத்தில் தான் வானவல்லி எதிர்பார்த்தது போலவே காட்சிகள் வேகமாக மாறியது. வனத்தின் பாதையோர மரங்களின் பின்னால் மறைந்திருந்த சிலர் கூரிய நீண்ட ஈட்டி மற்றும் வாள்களைக் கொண்டு வீரர்களை அவர்கள் எதிர்பாராத நேரத்தில் தாக்க ஆரம்பித்தனர். காவலர்கள் “ஆபத்து!” “ஆபத்து!” என்று உரக்க ஒருவருக்கொருவர் கூக்குரலிட்டவாறே வாள்களைக் கள்வர்களை நோக்கிச் சுழற்ற ஆரம்பித்தனர். காவல் வீரர்களைவிடத் தாக்கும் கள்வர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகம்.

கள்வர்கள் இவர்களைத் தாக்க ஆரம்பித்ததும் வானவல்லி மீண்டும் பத்திரையிடம், “எது நடந்தாலும் நான் அழைக்கும் வரை வண்டியிலிருந்து இறங்கவோ, எந்தவித சத்தமோ இடக்கூடாது!” என்று எச்சரிக்கை செய்து விட்டுக் கள்வர்கள் யாரும் கவனிக்குமுன் வண்டியின் திரைச் சீலையை முற்றிலும் மூடிவிட்டுக் கீழே இறங்கிவிட்டாள்.

கள்வர்கள் ஒவ்வொருவரும் தங்கள் முகங்களை நீண்ட கருந்துணியால் மறைத்து வெற்றுடம்புடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் வைத்திருந்த நீண்ட, வளைவில்லாத வாள்களின் மூலம் இவர்கள் நாகக் குலத்தைச் சேர்ந்த கள்வர்களாக இருக்க இயலாது என்பதை அறிந்து கொண்டாள். இவர்களின் வெற்றுடம்பில் எந்தவொரு மண்டையோடோ அல்லது  நீண்ட எலும்புகளால் ஆன மாலைகளோ இல்லாததைக் கண்டு இவர்கள் கபாலிகர்களாகவும் இருக்க இயலாது என்பதையும் யூகித்துக் கொண்டாள். இந்தக் கள்வர் கூட்டத்தினர் எயினர் பிரிவினரோ அல்லது ஆறலைக் கள்வர்களாக இருந்திருந்தால் இத்தனை வீரர்களை எதிர்க்க அவர்கள் துணிந்திருக்க மாட்டார்கள் என்பதை நொடிப்பொழுதில் அனுமானம் செய்த வானவல்லி இவர்கள் நிச்சயம் காளனின் குழுவைச் சேர்ந்த கள்வர்களாகத் தான் இருக்க இயலும் என்பதை யோசிக்காமலே அறிந்து கொண்டாள்.

வீரர்கள் வீரமாக, தைரியமாக அவர்களை எதிர்த்துச் சண்டையிட்டாலும் கள்வர்களின் எண்ணிக்கை அதிகமாயிருந்ததால் கள்வர்களின் கை நேரமாக நேரமாக ஓங்கிக் கொண்டிருந்தது. காவல் வீரர்களுக்கும், கள்வர்களுக்கும் நடந்த சண்டையில் பல வீரர்களும், சில கள்வர்களும் குத்துப்பட்டுச் சாய்ந்திருந்தனர். ஆனால் இழப்பு என்றால் வீரர்களின் பக்கம் அதிகமாகவே இருந்தது. வீரர்களும் பலமிழந்து ஓய்ந்து கொண்டிருந்தனர்.

இனி இவர்களுடன் சண்டையிட்டு வெற்றிபெற இயலாது என்பதையறிந்த வீரர்கள் எதிர்தாக்குதல் தொடுக்காமல் வண்டியிலிருந்து இறங்கியிருந்த வானவல்லியை சுற்றித் தடுப்புப் போரில் ஈடுபட்டுப் புரவி வண்டியில் யாரும் இல்லாதது போல, அதைத் தனியே தனித்திருக்கவிட்டு வானவல்லிக்கு காவல் புரிவது போலச் சுற்றி நின்றுகொண்டனர்.

இதுவரை நடந்த சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கள்வர்களில் ஒருவன் “சண்டையை நிறுத்துங்கள்!” என உரக்க கர்ஜித்தபடியே தீப்பந்தத்தை வாங்கிக் கொண்டு கூட்டத்தை நோக்கி முன்னேறி நடந்து வந்தான். அவனது அதிகாரம், அவனது உடை இவற்றிலிருந்து அவன்தான் கள்வர்களின் தலைவன் என்பதை உணர முடிந்தது.

அவன் தலையில் அணிந்திருந்த சிறு முண்டாசும், அவற்றில் தொங்கிய கள்வர்கள் அணியும் ஒருவித வண்ண மணியும் அவன் தான் அந்தக் கூட்டத்திற்குத் தலைவன் என்பதை யாவர்க்கும் உணர்த்தும்படியாய் இருந்தது. மற்றவர்கள் அணிந்திருந்த கருப்பு முகமூடியிலிருந்து இவனது திறந்த முகம் அவனை முற்றிலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. அவனது முகத்திற்கும் அவனது கொடூர எண்ணத்திற்கும் துளியும் தொடர்பு இல்லாமல் அவனது முகம் அமைதியுடனும், கவர்ச்சிகரமாகவும் காணப்பட்டது. அவனது முகத்தில் வளர்ந்திருந்த உரோமங்களைப் பாங்குற அவன் சவரம் செய்திருந்த விதம், அவனது வலிய உதடுகளுக்கு மேலே வளர்ந்திருந்த மீசை அவனது முகத்திற்குப் பெரும் அழகை அளித்தது. திரண்டு, திண்மையாகியிருந்த வலிமையான அவனது தோள்களும், அவனது மார்பிலும், கைகளிலும் வளர்ந்திருந்த அடர்ந்த ரோமங்களும் அவனுக்குக் கம்பீரத்தை அளித்தது. மங்கைகளை மயக்கும் முக அழகையும், தேக அமைப்பையும் குறைவின்றி இயல்பாகவே பெற்றிருந்தான் அவன்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here