வானவல்லி முதல் பாகம்: 4 – வனக் கள்வனும் வனத்தில் தேவதையும்

ர்க்கும் நுபுரங்கள் பேரி, வேற்கண், வெம்புருவம் போர் வில்என்ற கவிதை வரிகளில் உள்ளது போலப் பெண்களின் அங்கங்கள் யாவுமே ஆண்களைச் சாய்க்க வல்ல பேராயுதங்கள் தான் என்பதை உணர்த்துவது போல வானவல்லி அந்தத் தீப்பந்தத்தின் முன் நின்றுகொண்டிருந்தாள். தாழை இதழ்களின் மென்மையையும், செந்தாமரை மலரின் செந்நிறத்தையும் கொண்ட அவளது மேனியில் தினமும் தேய்த்த மஞ்சள் கலந்த அவளது தேகநிறம் அந்தத் தீப்பந்த செந்தீயின் ஒளியில் பொன்னை வாரி இறைப்பது போலக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

Vaanavalli
வானவல்லி

அந்தப் பயங்கரச் சூழ்நிலையிலும் அவளது சலனமற்ற பயமற்ற கண்கள் அழகிய மான் விழிகளை ஒத்திருந்தது. அவளது வேல் போன்ற கண்களின் மேலே வீற்றிருந்த இரண்டு கருத்த அடர்ந்த புருவங்களும் கெண்டை மீனைப் போல வளைந்து நெஞ்சைத் துளைக்கும் வில்லைப் போன்று தோற்றமளித்துக் கொண்டிருந்தது. அந்த இரண்டு புருவங்களுக்கிடையில் அவள் வைத்திருந்த வட்ட வடிவ செந்நிறப் பொட்டு அவளது விழிகளுக்குத் தனியொரு அழகை சேர்த்திருந்தது.  விழிகளுக்கு மேலே படர்ந்திருந்த அவளது குழலின் சிறு இழைகள் பயணத்தால் ஏற்பட்ட வியர்வையில் படிந்து அவளது பிறை நுதலுக்குப் புதுவித அழகைச் சேர்ப்பித்தது. நீர் கொண்ட கார் மேகம் பிறை நிலவை மறைப்பது போல அவளது அடர்ந்த நீண்ட பின்னிய கருங்கூந்தல் அவளது பிறை நுதலைத் தொட்டு முதுகைத் தழுவிப் பின்னழகையும் தாண்டி வளர்ந்து நீண்டு காற்றில் அலையடித்துக் கொண்டிருந்தது. காற்றில் அலையலையாய் நீண்டிருந்த கருங்கூந்தல் அவளது பின்னழகிற்கு மேலும் அழகு சேர்த்தது. நுதலுக்கு மேலே தலையிலிருந்து தனியாகப் பிரிந்த நீண்ட சில மயிரிழைகள் அவளது கன்னங்கள் மீது படர்ந்து காணப்பட்டது. இரு கன்னங்களையும் சேர்த்து அவற்றிற்கு இடையிலிருந்த செம்பருத்தியின் இதழ்கள் போன்று சிவந்து பழுத்த சிறுசிறு பிளவுகளுடன் காணப்பட்ட மிருதுவான உதடுகள் அமிர்த ஊற்றைத் தாங்கிக்கொண்டிருந்தது. மேலிருந்த நாசி அளவாகவும் கூர்மையாகவும் அவளது முகத்திற்கு அழகைக் கூட்டியது. அவளது கன்னங்களுக்கும், கருங்கூந்தலுக்கும் இடையில் வீற்றிருந்த சங்குப் பூவின் தோற்றத்தினையொத்த மெல்லிய காது மடலும், அதில் மின்னிக் கொண்டிருந்த சிறு தங்கத் தோடும், தொங்கலும் அவளுக்குப் பொருத்தமாக இருந்தது. காது மடலோரம் செழித்து வளர்ந்து கன்னங்களைத் தழுவியிருந்த அவளது குழல் அவளது முகத்திற்குப் புதுவித அழகை வாரி இறைத்தது மட்டுமல்லாமல் புதுவித கவர்ச்சியையும் வழங்கியது. சிவந்த உதடுகளுக்குக் கீழேயிருந்த தாழ்வாயும் அவற்றைத் தொடர்ந்த கழுத்தும் காண்பவர் கண்களை மட்டுமல்லாது கருத்தையும் பறிக்கும் வண்ணமிருந்தது.

கழுத்துக்குக் கீழே முனிவர்களையும், துறவிகளையும் கூடப் பைத்தியங்கொள்ளச் செய்யுமளவிற்குத் திரண்டு வளர்ந்திருந்த அழகைத் தான் கற்றிருந்த குலப் பழக்கத்தைப் பேணும்படி, பட்டுத் துணியால் மறைத்து நீண்டிருந்த அந்தப் பட்டுத் துணி மாராப்பு முதுகைச் சுற்றி இடுப்பில் அவள் சுற்றியிருந்த விதம் பல கற்பனைகளுக்கு இடம் கொடுத்து சொக்க வைத்தது. அவள் கழுத்தில் அணிந்திருந்த ஒரு வெண் முத்துமாலை கழுத்தைக் கடந்து, அவளது அழகுகளைத் தழுவி பட்டுத் துணியில் மறைந்திருந்தது, ‘இந்த முத்து மாலை முற்பிறப்பில் என்ன பாக்கியம் செய்ததோ?’ என எண்ணுமளவிற்கு அவ்விடத்தில் பாங்குற வீற்றிருந்தது. ‘இருக்கிறதா?’ என நினைக்கும்படி சிறுத்திருந்த அவளது இடையில் பட்டுத் துணி நழுவிடாமல் கட்டியிருந்த தங்கப் பட்டைக்குக் கீழே பட்டு துணியின் மடித்த கொசுவத்துடன் அவள் நின்றிருந்த தோரணை அவளது ஈடு இணையற்ற அழகையும் வனப்பையும் அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. இறைவன் இவளை விட அழகிய பெண்ணைப் படைத்திருக்க இயலுமா! என எண்ணுமளவிற்கு வேண்டிய எழில்கள் அனைத்தையும் ஒருங்கே பெற்றிருந்தாள் அவள். மொத்தத்தில் அவளது உடல் சிறுக்க வேண்டிய இடங்களில் சிறுத்தும் எழுச்சி பெற வேண்டிய இடங்களில் எழுச்சி பெற்றும் யௌவனத்திற்கு இலக்கணம் வகுக்கவே இயற்கை இவளை படைத்துள்ளதாய் தோன்றிக் கொண்டிருந்தாள். கற்பு, அழகு இந்த இரண்டும் முரணானது. ஆனால் இந்த இரண்டையும் ஒருங்கே நிரம்பப் பெற்றிருந்தாள் வானவல்லி.

தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு வானவல்லியிடம் வந்த கள்வர்களின் தலைவன் அவளது தோற்றத்தைக் கவனித்தபடியே “வண்டியினுள் என்னென்ன பொருள் இருக்கிறது? உனக்கிங்கு இந்தப் பின்னிரவில் என்ன வேலை, இந்தத் தகுதியில்லாத காவலர்களை எண்ணி, இவர்களின் துணையோடா இங்கு வரத் துணிந்தாய்!” என்று ஏளனத்தோடு மிரட்டும் தொனியில் அதிகாரத்துடன் கேட்டான்.

வானவல்லி அவனது கேள்வியைச் செவி மடுக்காமல் அவன் மீது ஒரு வெறுப்புக் கலந்த ஏளனப் பார்வையை உதிர்த்தாள். “வண்டியில் எந்தப் பொருளும் இல்லை. நான் மட்டும் தான் வந்தேன்” என்று பதிலளித்தாள். அவளின் பதிலைக் கேட்டுக்கொண்டே பந்தத்தைத் தூக்கிப் பிடித்து மீண்டுமொருமுறை வானவல்லியை நோட்டமிட்டான்.

பந்தத்தை அவன் மேலிருந்து கீழாகக் கொண்டு செல்வதிலிருந்து தன்னைத் தான் ஆராய்கிறான் என்ற நினைப்பு வானவல்லிக்கு எரிச்சலைக் ஏற்படுத்த, அவனை முறைத்தாள். அவளது விழிகளில் இருந்து வெளிப்படும் பார்வை, கோபம் கலந்து  எதிரில் இருப்பவர்களை எரித்து விடுவது போல் வெளிப்படுவதை கள்வர் தலைவன் உணர்ந்தான்.

பந்தத்தைத் தூக்கி அவளது முகமருகே கொண்டு சென்ற போது அவளது கருமை நிற விழிகளில் பிரதிபலித்த பந்தத்தின் நெருப்புப் பிம்பம் கள்வனுக்குச் சற்றுப் பயத்தை அளிக்கவே செய்தது. அவளது முகத்தில் காணாத பயம், கண்களில் தெரிந்த கோபம் என இவையனைத்தும் இவள் முற்றிலும் ஆபத்தானவள் என்பதைக் கள்வனுக்கு உணர்த்தத் தவறவில்லை. இருப்பினும், ‘இவளும் பெண் தானே! இவளாள் தன்னை என்ன செய்ய இயலும்’ என நினைத்துக் கொண்டான்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here