சங்க கால சிறுகதை: 1 – நீ நீப்பின் வாழாதாள்

அப்பொழுதுதான் வந்து சேர்ந்திருந்த மின்னஞ்சலையே பார்த்துக் கொண்டிருந்தான் செழியன். அந்த மின்னஞ்சலைப் படிக்கப் படிக்க அவனது முகத்தில் மகிழ்ச்சியும், வருத்தமும் ஒரு சேர கலந்திருந்தது. வெகு நேரம் செயலின்றி அமர்ந்திருந்தான் செழியன். அவனது நிலையைப் பார்த்த அவனது நண்பன் துரை, “டேய்… என்னடா ஆச்சி உனக்கு? ஏன் இப்படி உக்காந்துருக்க?” எனக் கேட்டபடியே கணினித் திரையில் தோன்றியிருந்த மின்னஞ்சலைக் கவனித்தான்.

அதைப் படிக்கப் படிக்க துரையின் முகத்தில் வியப்பு பெருகியது. மகிழ்ச்சிப் பெருக்கில், “டேய்… மச்சான். வாழ்த்துக்கள் டா. எதிர்பார்த்துக் கிட்டிருந்த விசா கடைசில வந்தாச்சு. ரொம்ப மகிழ்ச்சிடா…” எனத் தெரிவித்தபடியே செழியனின் கையை இழுத்துக் குலுக்கினான்.

செழியன் பெயரளவிற்கு புன்னகையை வரவழைத்துக்கொண்டு அவனுடன் சேர்ந்து தனது கையைக் குலுக்கினான்.

செழியனின் முகத்தில் மகிழ்ச்சி துளியளவும் இல்லாததைக் கண்ட துரை, “டேய்… உனக்கு என்னா ஆச்சு? எதுக்கு இப்ப மூஞ்சிய இஞ்சித் தின்ன கொரங்கு மாதிரி வச்சிருக்க?” என வினவினான்.

“ஒண்ணும் இல்லடா?”

“இல்ல, ஏதோ இருக்கு?”

“அதான். ஒன்னும் இல்லன்னு சொன்னேன்ல.”

“என்னன்னு சொல்லப் போறியா இல்லியா?”

“அதான் ஏதும் இல்லேன்னு சொல்றேன்ல.”

“ஒரு வருசத்துக்கே மேலே நீ முயற்சி செஞ்சி கெடச்சிருக்க வேல டா இது. அமேரிக்காவுக்குப் போறது தானே உனது கனவு. ஒரு வருசம் வேல செஞ்சா போதும். நீ இங்க செட்டில் ஆகிடலாம். இல்லன்னா அங்கேயே செட்டில் ஆகிடலாம்” எனத் தெரிவித்தவன் அத்துடன் இணைக்கப் பட்டிருந்த மேலும் சில கோப்புகளைக் கண்டவன் மகிழ்ச்சியுடன், “சம்பளமும் நல்ல சம்பளம் தானடா கொடுக்கறாங்க? நீ எதிர் பார்த்ததை விடவும் அதிகமாகத் தானே கெடச்சிருக்கு. எத நெனச்சியும் கவலைப் படாத. பறந்து போயிடு.”

செழியன் சிந்தித்த படியே, “அதுல போட்டுருக்க கண்டிஷன படிச்சிப் பாரு?” எனத் தெரிவித்தான்.

“என்ன போட்டுருக்கானுங்க?” என வினவியபடியே மின்னஞ்சலை மேயத் தொடங்கினான் துரை.

“மூணு வருசம் கட்டாயமா அங்க வேலை பார்க்கணும்.”

“ஆமாம்.”

“இடைல ஊருக்கு வர முடியாது. கல்யாணம் செஞ்சிக்க கூடாது. மூணு வருசத்துக்கு அப்புறம் தான் எனக்கு லாங் லீவே கொடுப்பேன்னு சொல்லிருக்கானுங்க.”

“மூணு வருசம் தாண்டா? அமெரிக்கன் பொண்ணுங்கள சைட் அடிச்சிட்டு இருந்தாலே ஓடிப் போயிடும்.”

செழியன் ஆர்வமின்மையால், “இந்த வேல, என்னோட கனவு. ஆனா, இப்ப ஏனோ எனக்கு இந்த வேல சுத்தமா புடிக்கல” எனத் தெரிவித்தான்.

“எது செஞ்சாலும் யோசிச்சி முடிவெடு. என்னால அததான் சொல்ல முடியும்” எனத் தெரிவித்துவிட்டு அவ்விடத்தை விட்டு நீங்கிச் சென்றான் துரை.

மேலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலே சிந்தித்தவன் தனது தொலை பேசியிலிருந்து தனது காதலியை அழைத்தான்.

“சொல்டா…”

“கயல், ப்ரீயா இருக்கியா?”

“நான் அய்யாவுக்கு எப்பவுமே ப்ரீ தான். என்ன விசயம்?”

“உன்ன உடனே பாக்கணும்.”

“டேய். காலைல தானடா பாத்த. அதுக்குள்ள என்னவாம்?” எனப் புன்னகையுடன் வினவினாள் அவள்.

“உடனே பாக்கணும் உன்னைய.”

“அவ்ளோ லவ்வாடா?”

செழியன், “நாம எப்பவும் சந்திக்கற பூங்காவுக்கு வந்துடு” எனத் தெரிவித்தபடியே அழைப்பைத் துண்டித்தான்.

அடுத்த அரை மணி நேரத்திற்கெல்லாம் எப்பொழுதும் தன் காதலியைச் சந்திக்கும் பூங்காவை அடைந்தான் செழியன். அவனுக்கு முன்னரே அங்கு வந்திருந்த கயல் அவனுக்காகக் காத்திருந்தாள்.

“நீ போன்ல பேசுனதக் கேட்டதும் உடனே ஓடி வந்துடுவன்னு வந்தா எப்பவும் போல லேட்டு” எனத் தெரிவித்தபடியே செல்லமாக அவனது தலையில் கொட்டினாள் கயல்.

“இல்லடி, வழில கொஞ்சம் டிராபிக். அதனால தான் லேட்டு” எனத் தெரிவித்தபடியே பூங்காவில் கிடந்த கல்லில் அமர்ந்தவன் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னடா, என்னோட முகத்த பார்த்துகிட்டு இருக்கறதுக்கு தான் என்ன வர சொன்னியா?”

“ஆமாம்டி. உன்னோட முகத்த பார்த்துகிட்டு இருந்தா எனக்கு காலம் போறதே தெரிய மாட்டங்குது” எனத் தெரிவிக்க அவள் நாணத்தில் தலை கவிழ்த்தாள்.

கயல் போன்று நீண்டு காணப்பட்ட கயலின் விழிகளைப் பார்த்தவன், “என்னைக்கும் இல்லாம இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க” எனத் தெரிவித்தான்.

“இப்படி பொய் சொல்லியே என்ன கவுத்துடுடா பொருக்கி” என்றவள் அருகில் அமர்ந்திருந்த செழியனின் கன்னத்தை நறுக்கென்று கிள்ளினாள்.

“போடா பொருக்கி. எதுக்கு வரசொன்ன, சீக்கிரம் சொல்லு?”

“அப்படி என்ன அவரசம்?”

“அம்மா தேடுவாங்க.”

“என்ன பொய் சொல்லிட்டு வந்த?”

“அதெல்லாம் இப்போ உனக்கு எதுக்கு?”

செழியன் அமைதியாக அமர்ந்திருந்தான். பிறகு மின்னஞ்சலை அவளிடம் காட்டினான்.

“என்னடா இது?”

“நீயே பாரேன்.”

“என்னன்னுதான் சொல்லித் தொலையேன்” என்றபடியே மின்னஞ்சலை நோக்கினாள்.

அதைப் படிக்கப் படிக்க அவளது முகம் மாறியது. அதுவரை மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தவளின் முகம் சட்டென்று இருண்டது. விழியோரம் ஓரிரு துளி கண்ணீர் கூட எட்டிப் பார்த்தது.

“மூணு வருசமாடா?”

“ஆமாம்.”

“மூணு வருசம் உன்னைய நானு எப்படிடா பார்க்காம இருக்கறது?”

“எனக்கும் அந்தக் கவலை தான்.”

“ஆறு மாசம், ஒரு வருசம் கழிச்சி திரும்பி வந்துட்டு என்னைய கல்யாணம் செஞ்சி அழச்சிக்கிட்டு போயிடுவன்னு பார்த்தா மூணு வருசம் கல்யாணமே செஞ்சிக்கக் கூடாதுண்ணுல இந்த அக்ரிமென்ட் இருக்கு.”