சங்க கால சிறுகதை: 2 – நீங்கா காதல் நோய்

5
14

காவேரி நதி வளம் கொழித்த சோணாட்டின் உறைந்தைக்குத் தெற்கே ஆலமரத்து முற்றத்திற்கு அருகில் காணப்பட்ட செண்டுக் களம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. சோணாட்டின் உறைந்தைக் காவல் தலைவர் விழுப்பொறையர் சென்னி வளவன் நடுநிலை வகிக்க அவ்வூரின் நாட்டார், முக்கியப்பட்டவர்கள், பொதுமக்கள், வீரர்கள் என அனைவரும் அந்த செண்டுக் களத்தில் திரண்டிருந்தார்கள்.

மார்கழித் திங்களின் காலைப் பனி கூட விலகியிருக்கவில்லை. சற்றுத் தொலைவில் பாய்ந்து கொண்டிருந்த காவேரி நதியிலிருந்து குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. விலகாத பனியையும், குளிர்ந்த காற்றையும் பொருட்படுத்தாத சோணாட்டு மக்கள் செண்டுக் களத்தில் திரண்டிருந்தார்கள்.

வடக்கிலிருந்து மௌரியர்கள் படையெடுத்த வேளையில் சோணாட்டின் சார்பாகப் போட்டியிட்ட ஆலமரத்து முற்றத்துக் கிராமத்தின் வீரன் வெற்றி வேந்தன் இரண்டு யானைகளையும், மோரியத் துணைப் படைத் தலைவனையும், பல வீரர்களையும் கொன்று உடல் முழுக்க நூற்றுக் கணக்கான வெட்டுக் காயங்களுடன் வீர மரணத்தை அடைந்திருந்தான். அவனுக்கு எழுப்பட்டிருந்த நடுகல் செண்டுக் களத்தில் நடு நாயகமாக விளங்கிக் கொண்டிருந்தது.

வீரனின் நடு கல்லிற்கு முன் ஈட்டி ஒன்றும், செண்டு ஒன்றும் நடப்பட்டிருந்தது. நடு கல்லாக நின்றிருந்த வீரனைப் பெருமிதத்துடன் பார்த்தபடியே ஊர்ப் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் அனைவரும் நின்றுகொண்டிருந்தார்கள்.

அப்பொழுது நின்றுகொண்டிருந்த ஊர்ப் பொதுமக்களைப் பார்த்தபடியே கட்டியங்காரன், “ஆறு நாட்களாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இந்தச் செண்டுக் களப் போர் இன்றோடு முடிவடையப் போகிறது. கடைசி சுற்றுக்கு இரண்டு பேர் தேர்வாகியிருக்கிறார்கள். இருவரில் யார் வெற்றி பெறுகிறாரோ வெற்றி பெறுபவர் மொழி பெயர் தேயத்தில் நிலை கொண்டு நம் தமிழகத்தைக் காக்கும் பெரும் படையில் துணைப் படைத் தலைவராக இணைவார்கள். துணைப் படைத் தலைவராக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து உறைந்தை திரும்புவார்கள்” எனத் தெரிவிக்க சுற்றிலும் நின்றவர்கள் அனைவரும் ஆரவார முழக்கமிடலானார்கள்.

“ஆறு நாட்களாகத் தோல்வி என்பதையே சந்திக்காத பூததத்தனும், வெற்றி வளவனும் இறுதிச் சுற்றில் மோதப் போகிறார்கள். இருவருக்கும் நடைபெறப் போகும் போட்டி எப்படிப்பட்டது, போட்டியின் விதி முறைகள் பற்றி நடுவராக வந்திருக்கும் உறைந்தையின் காவல் தலைவர் விழுப்பொறையர் சென்னி வளவன் தெரிவிப்பார்” எனத் தெரிவித்துவிட்டு ஓரமாகப் போய் அமைதியாக நின்றான் கட்டியங்காரன்.

அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த விழுப்பொறையர் சென்னி வளவன் முகத்தில் வளர்ந்திருந்த கம்பீரமான மீசையை நீவிவிட்டபடியே நடுகல் தெய்வத்திற்கு முன் நின்றுகொண்டிருந்த பூததத்தன் மற்றும் வெற்றி வளவனை நோக்கினார். பிறகு சுற்றிலும் நின்ற ஊர்ப் பொதுமக்களைப் பார்த்தபடியே, “இந்தச் செண்டுக் களப் போட்டியின் விதி இதுதான்” எனத் தெரிவித்தவர் வீரர்கள் இருவரையும் உற்று நோக்கினார். இருவரில் பூததத்தன் மூத்தவனாகக் காணப்பட்டான். பூததத்தன் எனும் பெயருக்கு ஏற்றபடி பூதம் போன்ற பெரிய உடலைப் பெற்றிருந்தான் அவன். அவனுக்கு அருகில் நின்ற வெற்றி வளவன் பூததத்தனை விடவும் அகவையில் சிறியோனாகக் காணப்பட்டான்.

உருவத்தைக் கண்டு ஒருவனது வீரத்தை எடை போடுவது மடத்தனம் என்பதை அறிந்திருந்த விழுப்பொறையர் சென்னி வளவன் அதற்கு மேல் அவர்களின் உருவத்தைப் பற்றி ஆராயாமல், “இந்தப் போரின் முடிவை இரண்டு வகையில் தீர்மானிக்கிறேன். ஒருவனது இறப்பு மற்றவனது வெற்றியை உறுதி செய்யும். அப்படி இல்லாவிட்டால் தோல்வியை ஒப்புக்கொண்டு மற்றவனது வெற்றியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ஏனெனில் வீரர்கள் தமது உயிரை விடவும் வீரத்தையும், தன் குல மானத்தையும் பெரிதென நினைத்ததால் ஆயுதத்தை இழந்தாலும், ரணக் காயங்களை அடைந்தாலும் உயிர் பிரியும் வரை எவரும் தோல்வியை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆதலால் சென்னி வளவரின் போட்டி விதிமுறையைக் கேட்டதும் மக்கள் தங்களுக்குள், “இருவரில் ஒருவன் இறக்கப் போவது உறுதி” என்று கூறிக் கொண்டார்கள்.

அதிலும் சிலர், “வெற்றி வளவன் தொலைந்தான். எப்படியும் பூததத்தன் வெற்றி வளவனைக் கொன்று வெற்றிபெறப் போகிறான் அல்லது வெற்றி வளவன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு அவமானத்துடன் வெளியேறப் போகிறான்” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

பூததத்தன் மற்றும் வெற்றி வளவனை நோக்கி, “இருவரும் எந்த ஆயுதத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், போட்டியின் விதிமுறை நான் வகுத்தது தான்” எனத் தெரிவித்த சென்னி வளவன் தனது இருக்கையில் அமர்ந்தார்.

நின்றுகொண்டிருந்த பூததத்தன் நடுகல்லிற்கு முன் நடப்பட்டிருந்த செண்டாயுதத்தைப் பிடுங்கி கையில் எடுத்தான். வெற்றி வளவன் கொண்டு வந்திருந்த வேலினை உயர்த்தினான்.

அதுவரை நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஊர் நாட்டார், “காலம் விசித்திரமானது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த செண்டுக்களப் போரில் இறுதிச் சுற்றுவரை சமர் செய்து உயிர் நீத்த பொறையனின் மகன் பூததத்தன். அப்போரில் வெற்றி பெற்று மொழி பெயர் தேயம் சென்று மோரியர்களின் களிற்றினை வீழ்த்திய வெற்றி வேந்தனின் மகன் தான் இந்த வெற்றி வளவன். வெற்றி வேந்தன் மற்றும் பொறையனின் வீரம் மகத்தானது. பார்க்கலாம், யார் வெற்றி பெறுவார்கள் என்று” என விழுப்பொறையர்  சென்னி வளவனிடம் தெரிவிக்க அவர் வியப்புடன் வீரர்கள் இருவரையும் நோக்கினார்.

ஊன்றியிருந்த செண்டினைக் கையில் எடுத்த பூததத்தன், “இன்றைய பொழுதிற்காகத் தான் இத்தனைக் காலமாக நான் காத்திருந்தேன். எனது தந்தையின் இறப்பிற்கு இன்று நிச்சயம் பழி தீர்ப்பேன் நான். உனது குருதியைக் கொண்டு எனது தந்தையின் அவமானத்தைக் கழுவப் போகிறேன்” எனத் தெரிவித்துக்கொண்டு வெற்றி வளவனை நோக்கிக் கோபத்துடன் பாய்ந்தான்.

தன்னை நோக்கி வேகமாக ஓடிவந்து கொண்டிருந்த பூததத்தனை நோக்கிய வெற்றி வளவன், “பூததத்தரே, பொறையரின் இறப்பிற்காக தந்தை காலம் முழுக்க வருந்திக் கொண்டிருந்தார். தங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நினைக்கையில் தாங்கள் தங்களது குடும்பத்துடன் குடிபெயர்ந்து விட்டீர்கள்” எனக் கூறிக்கொண்டிருந்தே பொழுதே பூததத்தன் கையில் வைத்திருந்த செண்டினை வேகமாக வெற்றி வளவனின் மீது பாய்ச்சினான்.

தன் கையில் வைத்திருந்த வாளினால் பூததத்தனின் வீச்சை எளிதாகத் தடுத்து நிறுத்தினான் வெற்றி வளவன். போர் ஆயுதங்களில் மிகவும் அபாயகரமானது செண்டாயுதம் தான். ஏனெனில் ஈட்டியைப் போன்று நீண்டு காணப்பட்டாலும் அதன் ஒரு முனை வாளினைப் போன்றும் மற்றொரு முனையில் ஈட்டியின் முனையைப் போன்றும் காணப்படும். அந்த ஈட்டி முனைக்குக் கீழே செதில் செதிலாக கூர்மையான முட்கள் கீழிறங்கி இருக்கும். செண்டாயுதத்தை எளிதில் தடுத்து நிறுத்துவது சிரமம். ஏனெனில் அதனை வாளினைப் போன்றும் பயன்படுத்தலாம் அதே நேரம் ஈட்டியைப் போன்றும் பயன்படுத்தலாம்.

செண்டினை நன்கு பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே பயன்படுத்த இயலும். சிறு பிழை ஏற்பட்டாலும் செலுத்துபவனின் உயிரையே பறித்துவிடும் செண்டு. ஆதலால்தான் கொடிய ஆயுதமான செண்டினை வெற்றி வளவன் தேர்ந்தெடுத்திருக்கவில்லை.

வெற்றி வளவன் எதிர்பார்த்ததை விடவும் அபாரமாக பூததத்தன் செண்டினைக் கையில் வைத்து சுழற்றி சுழற்றி வெற்றி வளவனைத் தாக்கிக் கொண்டிருந்தான். வெற்றி வளவன் நிதானமாக அவனது தாக்குதலை மட்டும் தடுத்துக் கொண்டிருந்தவன் எதிர்தாக்குதல் தொடுப்பதற்கு தகுந்த சமயத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தான்.

இருவருக்குமிடையில் ஒரு நாழிகைப் பொழுதிற்கும் மேலே சண்டை நீடித்துக் கொண்டிருந்தது. ஆயுதங்கள் இரண்டும் மோதிக்கொண்ட சத்தம் தான் தொடர்ந்து எழுந்து கொண்டிருந்ததே தவிர அங்கு வேறெதுவும் நடைபெறவில்லை. நேரம் கடக்கக் கடக்க பூததத்தனின் கரம் ஓங்கிக் கொண்டிருந்தது. வெற்றி வளவனுக்கு செண்டின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தவே நேரம் போதுமாக இருந்தது.

சமர் நடந்துகொண்டே இருக்கையில் வெற்றி வளவனைத் தாக்கிவிட்டு மீண்டும் தாக்குவதற்கு உடலைத் திருப்பி செண்டினை ஓங்கினான் பூததத்தன். அந்தச் சிறு இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட வெற்றி வளவன் முதல் முறையாக பூததத்தன் எதிர்பாராதவாறு எதிர் தாக்குதல் தொடுத்தான். ஓங்கிய செண்டினை கீழே இறக்கித் தடுத்து நிறுத்துவதற்குள் பாய்ந்த வெற்றி வளவனின் வேலானது பூததத்தனின் சென்டில் பட்டு அவனது தொடையைக் கிழித்தது.

ஒரு நாழிகைப் பொழுதிற்கும் மேலே நடந்த சண்டையில் முதல் முதலாக பூததத்தனின் குருதி களத்தில் சிந்தியது. தனது குருதியைப் பார்த்தபிறகு பூததத்தன் நிதானத்தைக் கைவிட்டான். அவனது தாக்குதல் எதிர்பாராதவிதமாகவும், பலமாகவும் வெற்றி வளவனை நோக்கி விழுந்து கொண்டிருந்தது. இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்கள்.

இருவரது உடலையும் ஆயுதங்கள் கிழித்து குருதி வழியத் தொடங்கியது. இருவரும் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த பூததத்தன் தலைக்கு மேலே வந்த வெற்றி வளவனின் வேலினைத் தனது செண்டினால் தடுத்து அவனது மார்பில் எட்டி உதைத்தான். நான்கடி பின்னால் சென்று விழுந்த வெற்றி வளவன் எழுந்து நிற்பதற்குள் அவனது கழுத்தில் தனது செண்டினை வைத்த பூததத்தன், “தோல்வியை ஒப்புக்கொள் வெற்றி வளவா” என்றான்.

சிரித்தபடி வெற்றி வளவன், “ஒன்று நான் இறக்க வேண்டும் அல்லது தாங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் பூததத்தரே” எனத் தெரிவித்தபடி செண்டினைத் தனது வேலினால் தட்டிவிட்டு மீண்டும் எழுந்து நின்று தாக்கினான்.

மீண்டும் சமர் தொடங்கியது. இயற்கையிலேயே பூததத்தன் வெற்றி வளவனை விடவும் பலமுடையவனாகக் காணப்பட்டதால் வெற்றி வளவன் அதிகமாகத் தாக்கப்பட்டான்.

அவனது உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு குருதி வழிந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் நின்றவர்கள் அனைவரும், “வெற்றி… ஆயுதத்தைக் கீழிறக்கு” எனக் கத்திக் கொண்டிருந்தார்கள்.

வெற்றி வளவன் புன்னகையுடன், “என்னைக் கொன்று தங்களது வெற்றியை நிலைப் படுத்திக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தபடி வேலினை சுழற்றிக் கொண்டிருந்தான்.

தனது பலம் முழுவதையும் திரட்டி வெற்றி வளவனின் வேலினைத் தனது செண்டினால் தாக்கினான் பூததத்தன். வெற்றியின் கையிலிருந்து விடுபட்ட வேலானது பறந்து சென்று கூட்டத்தினருக்கு அருகில் விழுந்தது.

“ஆயுதத்தை இழந்த நீ தோற்றவனாகி விட்டாய் வளவா” எனத் தெரிவித்த பூததத்தன் நடந்தான்.

அப்பொழுது வெற்றி வளவன், “விதிமுறையை மறந்து விடாதீர்கள்” எனத் தெரிவித்தபடி நடந்தவன் பூததத்தனை நோக்கிப் பாய்ந்தான்.

வெற்றி வளவன் தன் மீது ஆயுதமில்லாமல் பாய்ந்ததைக் கண்ட பூததத்தன் தன் கையிலிருந்து செண்டினை வீசிவிட்டு அவன் மீது பாய்ந்தான்.

இருவருக்கும் இடையில் மல் யுத்தம் தொடர்ந்தது. மல் யுத்தம் அரை நாழிகைப் பொழுது கூட நீடிக்க வில்லை. பூததத்தன் வெற்றி வளவனைத் தாக்கி தூக்கி எறிந்திருந்தான்.

எவ்வளவு அடி வாங்கியும், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத வெற்றி வளவன், “நான் எனது தந்தையைப் போன்று வீரனாக இறக்க ஆசைப் படுகிறேன். என்னைக் கொன்றுவிடுங்கள்” எனத் தெரிவித்தபடியே மீண்டும் எழுந்து நின்றான்.

முகத்தில் பட்ட அடியில் அவனது உதடு கிழிந்து போயிருந்தது. உடல் முழுவதும் செண்டின் மூலம் ஏற்பட்ட காயத்தினால் குருதி வழிந்து கொண்டிருந்தது.

அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த ஊர் நாட்டார், “அவனைக் கொன்று  உனது பழியைத் தீர்த்துக் கொள் பூததத்தா…” எனக் கத்தினார்.

ஊர் மக்கள், “வெற்றி, தோல்வியை ஒப்புக்கொள்” என வேண்டினார்கள்.

குருதி வழிந்து கொண்டிருந்த வேளையிலும் புன்னகையுடன் சிரித்துக்கொண்டு கால்கள் இரண்டும் நடுங்கிக் கொண்டிருந்த வேளையிலும் நிற்க இயலாமல் நின்றுகொண்டிருந்த வெற்றி வளவனைக் கண்ட பூததத்தன் கீழே போட்டிருந்த தனது செண்டினைக் கையில் எடுத்துக்கொண்டு வேகமாக அவனை நோக்கி நடந்து சென்றான். கையில் வைத்திருந்த செண்டினை ஓங்கினான். “இதைத் தான் உன்னிடம் எதிர்பார்த்தேன். வீரனிடம் கருணை இருக்கக் கூடாது. என்னைக் கொன்றுவிடு” என வெற்றி வளவன் தெரிவிக்க தன் கையில் வைத்திருந்த செண்டினை தூர வீசிய பூததத்தன், “உன் தந்தையைப் போன்று நானும் காலம் முழுக்க குற்ற உணர்வில் என்னால் தவிக்க இயலாது” எனத் தெரிவித்தவன் விழுப்பொறையர் சென்னி வளவனை நோக்கி, “இவனது மன வலிமைக்கு முன் எனது வீரம் தோற்றுவிட்டது. நான் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தபடி நடந்து சென்றான்.

குருதி வழிந்தபடி வெற்றி வளவன், “பூததத்தரே…” என அழைத்தான்.

நடந்து சென்ற பூததத்தன் திரும்பிப் பார்த்தான்.

கீழே கிடந்த செண்டினை எடுத்து வந்து பூததத்தனிடம் கொடுத்த வெற்றி வளவன், “எனது வீரத்தை அங்கீகரித்தமைக்கு நன்றி. வெற்றிக்கு உரியவர் தாங்கள் தான். மொழி பெயர் தேயத்தில் தங்களது வீரத்தை எதிரிகள் போற்றட்டும்” எனத் தெரிவித்துவிட்டு நடக்கலானான்.

விழுப்பொறையர் சென்னி வளவன் பூததத்தனின் வெற்றியை அங்கீகரித்துவிட்டு சென்றார்.

அடுத்த மூன்று திங்கள் கழித்து பூததத்தன் எல்லைப் படையில் இணைய மொழிப் பெயர் தேயத்தை நோக்கி புறப்படுவதற்கு நாள் குறித்தார்கள்.

ஊரே உற்சாகமானது.

வெற்றி வளவன் மட்டும் குருதி வழிய தனி ஒருவனாகத் தனது குடிலை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தான்.

******

அமைதியாகப் பாய்ந்து கொண்டிருந்த காவேரி நதிக்கரையில் பெருத்து வளர்ந்திருந்த புங்கை மரத்தின் குளிர்ந்த நிழலில் படுத்திருந்தான் வெற்றி வளவன். தொலைவில் அவனது ஆநிரைகள் சில மேய்ந்துகொண்டிருந்தன. சில கிழமைக் காலங்கள் கழிந்திருந்ததால் உடலில் ஏற்பட்டிருந்த விழுப் புண்கள் மறையத் தொடங்கியிருந்தன. புங்கை மரத்தின் மீது அமர்ந்திருந்த இரண்டு கிளிகளைப் பார்த்தபடியே படுத்திருந்தான்.

அப்பொழுது காவேரி நதியிலிருந்து நீறேடுத்துச் சென்றுகொண்டிருந்த கன்னியர்களில் ஒருத்தி குடத்தில் நிரம்பியிருந்த நீரைக் கையில் அள்ளி அவன் மீது வீசிவிட்டு எதுவுமே தெரியாதவளைப் போன்று நடந்து சென்றுகொண்டிருந்தாள்.

தன் மீது குளிர்ந்த நீர்த் துளிகள் விழுந்ததும் படுத்திருந்த வெற்றி வளவன் எழுந்து பார்த்தான். கரையில் கன்னியர் நால்வர் தலை மற்றும் இடுப்பில் நீர்க் குடங்களைச் சுமந்து சென்று கொண்டிருந்தார்கள். கிராமத்துப் பெண்களில் ஒருத்தி அணிந்திருந்த காற்சிலம்பின் முத்துப் பரலின் சத்தம் நன்கு அவனுக்கு எழுந்தது. அவளது கரத்தில் நீர் சொட்டிக் கொண்டிருந்ததைக் கண்டான். நால்வருமே அவனது கிராமத்துப் பெண்கள் தான் என்பதைக் கண்டவன் புன்னகையுடன் மீண்டும் அதே புங்க மரத்தின் கரையிலேயே அமர்ந்தான்.

செண்டு களப் போட்டியில் வெற்றி பெற்று தனது தந்தையைப் போன்றே பெயரெடுக்க வேண்டும் என்று விரும்பிய வெற்றி வளவன் தோல்வியால் மனம் உடைந்து போய் அமர்ந்திருந்தான். இந்தப் போட்டிக்காக பல வருடங்கள் பயிற்சி மேற்கொண்டு உழைத்திருந்தான். அவன் பெற்ற தோல்வியை அவனால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மனதளவில் தளர்ந்து போயிருந்தான். தோல்வியைத் தழுவிய பிறகு உயிர் வாழவே விருப்பம் இன்றி உலாவிக் கொண்டிருந்தான்.

பொழுது வேகமாக மேற்கில் விழுந்து கொண்டிருந்தது. பொழுது மேற்கில் விழுந்ததும் அவனது ஆநிரைகள் தாமாக அவனது அகம் நோக்கித் திரும்பியிருந்தன. ஆநிரைகள் திரும்பியதும் தனது நண்பன் அவற்றைப் பட்டியில் அடைத்துவிடுவான் என்பதால் ஆநிரைகளைப் பின்தொடராமல் அந்தக் கரையிலேயே விருப்பு வெறுப்பின்றி அமர்ந்திருந்தான் வெற்றி வளவன்.

பொழுது வேகமாகக் கடந்து இரவின் முதல் ஒரையை அடைந்திருந்தது. வானில் கிடந்த வளர்பிறையைப் பார்த்தபடியே படுத்திருந்தான் வெற்றி வளவன். திடீரென்று அவனை நோக்கி சிலம்பின் முத்துப் பரல் ஒலி கேட்க திடுக்கிட்டு எழுந்து நோக்கினான் வெற்றி வளவன். ஏனெனில், இந்த வேளையில் அவனது நண்பன் ஒருவன் தான் எப்பொழுதும் அவனைத் தேடி வருவான்.

திடீரென்று சிலம்பின் முத்துப் பரல் ஒலி கேட்க ஆச்சர்யத்துடன் நோக்கினான். இருளில் பெண் ஒருத்தி அவனை நோக்கி வந்துகொண்டிருந்தாள். அவனிடம் நெருந்கியவள், “இன்னும் தாங்கள் அகத்திற்குத் திரும்ப வில்லையா?” என வினவினாள்.

காற்சிலம்பின் முத்துப் பரல் ஒலியைக் கேட்டதுமே யார் என்பதை ஊகித்திருந்த வெற்றி வளவன் குரல் எழுந்ததும் யார் என்பதை அடையாளம் தெரிந்துகொண்டு, “செல்ல வேண்டும் தேவி” என ஒற்றை வரியில் மரியாதையுடன் பதில் அளித்தான்.

ஏனெனில் அவனைத் தேடி வந்திருந்தவள் ஊர் நாட்டாரின் மகள் நல்வெள்ளியாள். நல்வெள்ளியாளின் தந்தைக்கு சோணாட்டின் தலைநகர் உறைந்தைப் பட்டினம் வரை செல்வாக்கு உண்டு. ஊரிலேயே அதிக செல்வச் செழிப்புடைய மனிதர். ஊரில் பாதி நன்செய் நிலம் அவருக்கு உரியது. ஊரிலேயே பெரும் மதிப்புடைய மனிதர். முத்துப் பரல்கள் நிரம்பிய தங்கக் காற்சிலம்பை அணியும் அளவிற்கு செல்வச் செழிப்புடையவள் நல்வெள்ளியாள்.

ஊரிலேயே நிரம்ப அழகையும், வனப்பையும் பெற்றவள் அவள்.

ஊர் நாட்டாரின் மகள் நல்வெள்ளியாளைப் பலமுறை வெற்றி வளவன் சந்தித்திருந்தாலும் அவளுடன் அவன் நேரடியாக இதுவரைப் பேசியதில்லை. ஊரில் காணப்படும் ஆடவர்கள் அனைவருக்குமே அவளின் மேல் எப்பொழுதுமே ஒரு கண் உண்டு. ஏனெனில் ஊரில் இருந்த அழகான கன்னிகளில் அவளும் ஒருத்தி. அழகும், செல்வச் செழிப்பும் நிரம்பியிருந்தாலும் கர்வம் சிறிதும் இல்லாத நல்வெள்ளியாளை அனைவருக்குமே பிடித்திருந்தது. பிடித்திருந்தாலும் அவளை இதுவரை ஒருவரும் நெருங்கியிருக்கவில்லை. ஏனெனில் அவளது பேரழகும், செல்வச் செழிப்பும் அனைவரையும் தாழ்மையாக நினைக்க வைத்திருந்தது.

தனக்கருகில் நின்ற நல்வெள்ளியாளை ஆச்சர்யத்துடன் கண்ட வெற்றி வளவன், “இந்த நேரத்தில் தாங்கள் இங்கு என்ன தேவி செய்துகொண்டு இருக்கிறீர்கள்?” என வினவினான்.

“தங்களை சந்திப்பதற்காகத் தான் தங்களைத் தேடி வந்திருக்கிறேன்.”

“என்னைச் சந்திக்கவா?”

“ஆமாம்.”

“காலையில் வேலைக் காரனிடம் சொல்லி அனுப்பியிருந்தால் தங்களைத் தேடி வந்திருப்பேனே, இந்தக் காரிருளில் எதற்காகத் தாங்கள் தனியாக வந்திருக்கிறீர்கள். தனியாக வந்திருக்கும் தங்களுக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் என்ன செய்வது?”

“எனக்கு எதுவும் ஆகாது. வென்வேல் சென்னி அரசாலும் சோணாட்டில் பெண் மீது கைவைக்கும் தைரியம் எவனுக்கு இருக்கிறது? அப்படியே என்னை நோக்கி நெருங்கினாலும் எனக்கு இந்த வேல் துணை இருக்கிறது” எனக் கூறியபடி தன் கையிலிருந்த வேலினை அவனுக்கும் அவளுக்கும் இடையில் ஊன்றினாள்.

நல்வெள்ளியாளுக்கும் அவளுக்கும் இடையில் இருந்த வேலினைப் பார்த்ததுமே வெற்றி வளவன் செண்டுக் களப் போரில் தான் கைவிட்டு வந்த வேல் தான் அது என்பதைப் புரிந்து கொண்டிருந்தான்.

“இந்த வேலினைக் கொடுப்பதற்காகத் தான் இந்தக் காரிருளில் என்னைத் தேடி வந்தீர்களா தேவி?”

“ஆமாம்” எனக் கூறியவள் கையில் வைத்திருந்த வேலினை அவனை நோக்கி நீட்டினாள்.

அவள் நீட்டிய வேலினையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், “என்னைக் கைவிட்ட இந்த வேலினை நான் இனிமேல் தீண்டுவதாக இல்லை தேவி” எனத் தெரிவித்தவன் அவளது பதிலை எதிர்பாராமல், “நேரம் வேகமாகக் கடந்து கொண்டிருக்கிறது. வாருங்கள் புறப்படுவோம்” எனத் தெரிவித்தவன் நடக்கத் தொடங்கினான்.

வெற்றி வளவன் முன்னால் நடக்க அவனைத் தொடர்ந்து நடந்து வந்த நல்வெள்ளியாள், “உடல் நிலை இப்பொழுது எப்படி இருக்கிறது?” என வினவினாள்.

“பரவாயில்லை.”

“ஆயுதத்தை இழந்த பிறகு தங்களது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டியது தானே?”

“வீரனாக அந்த செண்டுக் களத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று தீர்மானம் எடுத்திருந்தேன்.”

“பிறகு எதற்காக இறுதியில் தங்களது தீர்மானத்திலிருந்து பின்வாங்கினீர்கள்?”

“பூததத்தன் பெரும் வீரன். அவனும் என்னைப் போன்றே பிறப்பிலிருந்தே பயிற்சி செய்து கொண்டு வந்தவன். தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்த என்னைக் கொன்று அவன் தனது வெற்றியை அடைவான் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவன் எனது வீரத்தை மதித்து தனது தோல்வியை ஏற்றுக் கொண்டான். அவ்வீரனுக்கு அளிக்கும் உயர்ந்த மரியாதையாக எனது தோல்வியை ஏற்றுக்கொண்டு வெளியேறிவிட்டேன்.”

“தங்களது மன உறுதி எனக்கு வியப்பை அளிக்கிறது.”

எதுவும் பேசாமல் அமைதியாக நடந்து வந்தான் வெற்றி வளவன்.

அப்பொழுது சில அடிகளை வேகமாக வைத்த நல்வெள்ளியாள் வெற்றி வளவனுக்கு முன்னால் வந்து தன் கையில் வைத்திருந்த வேலினை அவனிடம் கொடுத்து, “இதை இறுக்கமாகப் பற்றிக் கொள்ளுங்கள். இனி இந்த வேல் தான் நம்மைக் காக்கும்” எனத் தெரிவித்தாள்.

வெற்றி வளவன் குழப்பத்துடன், “நம்மையா?” என வினவினான்.

“ஆம்.”

“எனக்குப் புரியவில்லை?”

“அனைத்தும் புரியும் வீரரே” எனத் தெரிவித்தவள் சில அடிகளை முன்னால் வைத்து அவனது நெற்றியில் முத்தம் ஒன்றைக் கொடுத்தாள்.

வெற்றி வளவன் உறைந்து போய் நின்றுகொண்டிருந்தான்.

“இதே செண்டுக் களத்தில் ஆயுதத்தை இழந்து உயிர் பிழைத்தால் போதும் என்று மண்டியிட்ட பலரைப் பார்த்திருக்கிறேன். ஆறு நாட்களாக தங்களது வேல் வீச்சைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பலரது உயிரைப் பறிக்கும் சூழல் நேர்ந்த காலத்திலும் அவர்களைக் காத்தருளினீர்கள். எனக்கும் வேல் சுழற்றத் தெரியும். ஆதலால் தங்களது வேல் வீச்சைப் பற்றி நன்கு புரிந்து கொண்டேன். தாங்கள் நினைத்திருந்தால் பூததத்தனின் உயிரை முதல் நாழிகைப் பொழுதிலேயே தங்களது வேல் மூலம் பறித்திருக்கலாம். அவனைக் கொல்ல நினைக்காமல் வெற்றியடைய வைத்த தங்களது கருணை எனக்குப் பிடித்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் உயிரே போவதாக இருந்தாலும் கொண்ட தீர்மானத்திலிருந்து மாறாமல் இறுதி வரை போரிட்டீர்கள் அல்லவா அந்த வீரம் என்னைக் கவர்ந்துவிட்டது. இனி வாழ்ந்தாலும், இறந்தாலும் தங்களுடன் தான் என்று முடிவெடுத்துவிட்டேன். பெரியவர்கள் ஒப்புக் கொண்டால் இதே கிராமத்தில் வாழலாம், இல்லையேல் உடன்போக்கு மேற்கொண்டு விடலாம் வெற்றி” எனத் தெரிவித்தவள் மடியில் கட்டிக் கொண்டுவந்திருந்த மூலிகையை அவனிடம் கொடுத்து, “இதனை உடலில் பூசிக்கொள்ளுங்கள். தங்களுக்காக நானே அரைத்து கொண்டு வந்திருக்கிறேன்” எனத் தெரிவித்தவள் வெற்றி வளவனின் பதிலை எதிர்பார்க்காமல் நடக்கலானான்.

அதிர்ச்சியிலிருந்து விடுபடாத வெற்றி வளவன் அவள் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

*******

முழு நிலவு உச்சி வானில் காய்ந்து குளிர்ந்த ஒளியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. காவேரி நதி பாய்ந்துகொண்டிருந்த வாய்க்காலுக்கு வடக்கே காணப்பட்ட வயல் வெளியில் காணப்பட்ட கயிற்றுக் கட்டிலின் மீது அமர்ந்திருந்தாள் நல்வெள்ளியாள். அவளது மடியில் தலை வைத்து படுத்திருந்தான் வெற்றி வளவன். தொலைவில் சதிர்க் கூத்து நடந்து கொண்டிருந்த பாடலின் சத்தம் இருவருக்கும் மெல்லிய ஒலியில் கேட்டுக் கொண்டிருந்தது. ஊரே சதிர்க் கூத்தைப் பார்த்துக் கொண்டிருக்க இருவரும் தனிமையில் சந்தித்துக் கொண்டு காதலை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.

தன் மடியில் படுத்திருந்த வெற்றி வளவனின் தலையைக் கோதிக் கொண்டிருந்தாள் நல்வெள்ளியாள். வெற்றி வளவன் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நெடு நேரம் பார்வையைத் திருப்பாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த வெற்றி வளவனை நோக்கி, “இந்தப் பொழுது எவ்வளவு இனிமையாக இருக்கிறது?” என வினவினாள்.

“ஆமாம். என் வாழ்வில் இத்தனை இன்பத்தை ஒரே இரவில் நான் அனுபவித்தது இல்லை” எனத் தெரிவித்த வெற்றிவளவன் அவளது மடியில் படுத்தபடியே அவளது வயிற்றில் முகத்தைப் புதைத்து அவளை அணைத்துக் கொண்டான்.

நல்வெள்ளியாள் பேச்சினை இழந்திருந்தாள்.

நெடுநேரம் அவளை அணைத்தபடி படுத்திருந்தவன் விடுபட்டு அவளது முகத்தையும், உச்சி வானில் தோன்றியிருந்த நிலவையும் மாறி மாறி நோக்கியவன், “விண்மீன்கள் பாவம்” எனத் தெரிவித்தான்.

“ஏன்?”

“வானில் காணப்படும் முழு நிலவையில் என்னுடன் காணப்படும் உனது முகத்தையும் கண்டு நட்சத்திரங்கள் குழம்பிப் போய் தவித்துக் கொண்டிருக்கின்றன.”

அவன் என்ன கூற வரப் போகிறான் எனத் தெரிந்தும் அவள், “எதற்காக அவை குழம்புகின்றன?” என வினவினாள்.

“வானில் காணப்படும் நிலவை விடவும் உனது விழிகள் அதிக குளிர்ச்சியையும், உனது முகம் அதிக பொலிவையும் பெற்றிருப்பதால் நட்சத்திரங்கள் யாருடன் பயணிக்க வேண்டும் என்று நினைத்து குழம்பித் தவிக்கின்றன.”

அவன் கூறிய உவமையை எண்ணி வியந்தவள் தன் மடியில் படுத்திருந்தவனின் தலையை உயர்த்தி முத்தமிட்டவள் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.

பிறகு இருவரும் கட்டிலில் சாய்ந்தார்கள். வெற்றி வளவன் கட்டிலில் படுத்திருக்க அவனது மார்பின் மீது தலைவைத்து படுத்திருந்தாள் நல்வெள்ளியாள்.

அங்கு நீண்ட அமைதி நிலவியது.

பிறகு நல்வெள்ளியாள், “வெற்றி…” என அழைத்தாள்.

“கூறு நல்வெள்ளி.”

“பிறந்தது முதல் பஞ்சணையில் தான் உறங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால், வாட்களும் வேல்களும் ஏற்படுத்திய விழுப்புண்கள்ளின் தழும்புகள் நிறைந்த தங்களது மார்பில் தலை சாய்கையில் நான் அடையும் இன்பத்திற்கு அளவே இல்லை. பஞ்சணைகள் கொடுக்க இயலாத நிம்மதியை என் தலைவனின் தோள் எனக்குத் தருகிறது” எனத் தெரிவித்தவள், அவனது மார்பில் நிறைந்திருந்த விழுப்புண்கள் ஏற்படுத்தியிருந்த தழும்புகளின் மீது முத்தமிடத் தொடங்கினாள்.

அவளது ஒவ்வொரு இதழ் தீண்டலிலும் உடல் சிலிர்த்த வெற்றி வளவன், “நீ இப்படி முத்தமிடுவாய் என்று முன்பே தெரிந்திருந்தால் உடல் முழுவதும் இன்னும் ஆயிரக்கணக்கான விழுப் புண்களைப் பெற்றிருப்பேனே…” எனத் தெரிவிக்க அதற்கு மேல் அவன் பேசக் கூடாது என நினைத்த நல்வெள்ளியாள் அவனது இதழின் மீது தன் இதழ்களைப் பதித்தாள்.

அதற்கு மேல் அவன் பேசுவதற்கு முயற்சிக்கவில்லை. அவளை இறுக்கமாகத் தழுவிக் கொண்டான். இருவரும் ஒரே கட்டிலில் எல்லை மீறாமல் ஒருவரை ஒருவர் இறுக்கமாகத் தழுவியபடி நெல் வயல்களில் நிறைந்திருந்த நெற்கதிர்களின் மணத்தில் தம்மை மறந்து கிடந்தார்கள்.

காலம் வேகமாக ஓடி நள்ளிரவை அடைந்த வேளையில் சதிர்க் கூத்து முடிந்திருந்தது. ஊர் மக்கள் தமது இல்லம் திரும்பினார்கள். திரும்பிய தனது தோழிகளுடன் சேர்ந்து நல்வெள்ளியாளும் தனது மாளிகையை அடைந்தாள்.

********

காதலர்கள் இருவரும் எவருக்கும் தெரியாமல் வாய்ப்பு கிடைக்கையில் சந்தித்து தமது காதலை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். இருவரது வாழ்வும் மகிழ்ச்சியுடன் சென்றுகொண்டிருக்க அப்பொழுதுதான் அந்த துயரச் செய்தி வெற்றி வளவனை நோக்கி வந்தது.

காலையில் தனது வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வெற்றி வளவனை நோக்கி ஓடி வந்த அவனது நண்பன், “வெற்றி… பூததத்தன் இறந்துவிட்டான்” எனத் தெரிவித்தான்.

அதிர்ச்சியில் தனது கையில் வைத்திருந்த மண் வெட்டியைக் கீழே போட்ட வெற்றி வளவன், “என்ன நடந்தது, தெளிவாகக் கூறு” எனக் கட்டளையிட்டான்.

“என்ன நடந்தது எனத் தெரியவில்லை நண்பா. அவனது இறப்பு மர்மமாக இருக்கிறது. நேற்றிரவு கள் பருகிவிட்டு படுத்தவன் தான். காலையில் அவன் எழுந்திருக்கவே இல்லை.”

செய்தியைக் கேள்விப்பட்ட வெற்றி வளவன் பூததத்தனை நோக்கி ஓடினான். பூததத்தனின் இல்லத்தில் ஊரே திரண்டிருந்தது. அவனது மரணத்தைக் கேள்விப்பட்டது முதல் அனைவரும் வருந்திக் கொண்டிருந்தார்கள்.

“ஊரில் இறந்ததற்குப் பதிலாக அவன் போர்க் களத்தில் இறந்திருந்தால் அவனுக்கு மங்காத புகழும், பெயரும் கிடைத்திருக்கும். நமனுக்கு அப்படி என்ன அவசரமோ?” என ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது ஓடி வந்து வருத்தத்துடன் நின்றுகொண்டிருந்த வெற்றி வளவனை நோக்கி வந்த ஊர் முக்கியப் பட்டவர்கள், “வெற்றி வளவா… உன் தந்தையைப் போன்று நீ தான் இந்த ஊரின் பெயரையும், மானத்தையும் காக்க வேண்டும் என்று இறைவன் எழுதி வைத்திருக்கிறான் போலிருக்கிறது” எனத் தெரிவித்தார்கள்.

வெற்றி வளவன் எதுவும் புரியாமல் குழப்பத்தில் அவர்களை நோக்கினான்.

அப்பொழுது ஊர் நாட்டார், “ஆமாம் தம்பி. இந்த ஊரின் மானத்தை நீ தான் காக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

வெற்றி வளவனுக்கு ஓரளவு அவர்களின் வேண்டுகோள் தெரிந்திருந்தாலும் அதை மறைத்து, “நான் என்ன ஐயா செய்ய வேண்டும்?” என வேண்டினான்.

“பூததத்தன் அடுத்த கிழமை மொழி பெயர் தேயம் நோக்கி எல்லைக் காவலுக்குச் செல்வதாக இருந்தான். ஆனால், அதற்குள் அவன் இறந்துவிட்டான். நம் ஊரிலிருந்து வீரன் ஒருவன் புறப்பட்டுச் செல்ல வேண்டிய கட்டாயம்.”

“அதற்கு?”

“பூததத்தன் தான் முதலில் தோல்வியை உன்னிடம் ஒப்புக் கொண்டான். ஆதலால் நீ அவனுக்குப் பதில் எல்லைக் காவலுக்குச் செல்ல வேண்டும்.”

“நானா?”

“ஆமாம்.”

“இனி நான் வேலையே தொட மாட்டேன் என்று தீர்மானம் எடுத்திருக்கிறேனே?”

“உனது தீர்மானத்தை விடவும் இந்த ஊரின் மானம் முக்கியம் தம்பி.”

ஊர் முக்கியப்பட்டவர்கள் அனைவரும் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். நல்வெள்ளியாளை சந்திக்காமல் இருந்திருந்தால் அவன் மறு பேச்சே பேசியிருக்காமல் புறப்பட்டுச் சென்றிருப்பான். ஆனால், தன்னை நம்பி மனதைப் பறிகொடுத்திருக்கும் நல்வெள்ளியாளை விட்டு எப்படிச் செல்வது என்ற தயக்கத்துடன் கூட்டத்தோடு கூட்டமாக நின்றுகொண்டிருந்தவளை நோக்கினான் வெற்றி வளவன்.

அவள், “ஒப்புக் கொள்ளுங்கள்” என முணுமுணுத்தபடி தலையை ஆட்டினாள். அப்பொழுது ஊரார் எவரும் பார்க்காதபடி விழிகளில் வழிந்த கண்ணீர்த் துளிகளைத் துடைத்துக் கொண்டாள்.

அவளது நிலையைப் பார்த்துக் கண் கலங்கிய வெற்றி வளவன், “சரி… நான் ஒப்புக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துவிட்டு விரைவாக அந்தக் கூட்டத்தை விட்டு வெளியேறினான்.

ஊர் மக்கள் பூததத்தனின் உடலுக்கு செய்ய வேண்டிய மரியாதையை செலுத்தினார்கள்.

தனது மாளிகையை நோக்கி நடந்து கொண்டிருத்த நல்வெள்ளியாளின் தந்தையான ஊர் நாட்டாரிடம் கட்டியங்காரன், “ஐயா… நினைத்ததைப் போன்றே காரியத்தை சாதித்துவிட்டீர்கள். வெற்றி வளவன் ஒப்புக்கொள்ள மாட்டான் என்று பயந்தேன். ஆனால், அவன் ஒப்புக் கொண்டான். தங்களது திட்டப்படி அனைத்தும் சரியாக நடந்துவிட்டது” எனப் பெருமிதத்துடன் தெரிவித்தான்.

“என் மகள் செல்வச் செழிப்பிலேயே வளர்ந்தவள். எதுவும் இல்லாத ஓட்டாண்டி அவன். அவனுக்கு எனது மகளை எப்படிக் கொடுப்பேன்? ஒருவேளை நாளையே போர் ஏற்பட்டு அவன் இறந்து போய் விட்டால் எனது மகளை கைம்பெண் கோலத்தில் என்னால் எப்படிப் பார்க்க இயலும்?”

கட்டியங்காரன் அமைதியாக நடந்து வந்தான். பிறகு, “பாவம், தொடர்பே இல்லாமல் பூததத்தன் தான் மாண்டுவிட்டான். அவனது ஆயுள் அற்பமாக முடிவடைய வேண்டும் என்பது விதியாக இருந்தால் அதற்கு நாம் என்ன செய்வது?”

“பூததத்தனை நாம் தான் கொன்றோம் என்று மூச்சி விட்டு விடாதே. சரியா?”

“சரிங்க தலைவரே…” எனத் தெரிவித்த கட்டியங்காரன் வெற்றிலையை எடுத்து வாயில் போட்டு மென்றபடியே நடக்கலானான்.

******

வெற்றி வளவன் புறப்படுவதற்கு ஓரிரு நாட்களே எஞ்சியிருந்த இரவில் தன் வீட்டுற்கு முன் காணப்பட்ட தோட்டத்தில் கிடந்த கட்டிலில் படுத்திருந்தான். இரவு முதல் சாமம் முடிந்து இரண்டாவது சாமம் தொடங்கியிருந்தது. ஊரே உறக்கத்தில் அடங்கியிருந்தது. வடக்கே மொழி பெயர் தேயத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்று முடிவான தினத்திலிருந்தே அவன் நல்வெள்ளியாளைக் காணாமல் தவிர்த்து வந்தான் வெற்றி வளவன். அவளது நினைப்பு அவனைக் கொன்று கொண்டிருந்தாலும் அவளை சந்திப்பதைத் தவிர்த்தான்.

அப்பொழுது அவன் எதிர்பார்த்திருக்க வில்லை. அவனது தோட்டத்திற்குள் நுழைந்தாள் நல்வெள்ளியாள். அவளைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த வெற்றி வளவன், “நல்வெள்ளி, இங்கு என்ன செய்கிறாய்?” எனப் பதற்றத்துடன் வினவியபடியே கட்டிலிலிருந்து எழுந்தான்.

நல்வெள்ளியாள் கோபத்துடன், “தங்களை சந்திப்பதற்காகத் தான் வந்தேன்” எனத் தெரிவித்தாள்.

வெற்றி வளவன் அமைதியாக அமர்ந்திருந்தான்.

அவனுக்கு அருகில் அமர்ந்தாள் நல்வெள்ளியாள்

“எதற்காக என்னைத் தவிர்க்கிறீர்கள்?” என எழுந்த கேள்விக்குப் பதில் கூற இயலாமல் அமைதியாக அமர்ந்திருந்தான் வெற்றி வளவன்.

“என்னிடம் பேசாமல் சென்றுவிட்டால் தங்களை மறந்து வேறொருவனை மணந்துகொள்வேன் என்று நினைக்கிறீர்களா?”

“…..”

கீழே தரையைப் பார்த்துக் கொண்டிருந்தவனது தலையை உயர்த்திய நல்வெள்ளியாள், “தங்களை மறந்துவிடுவேன் என்ற எண்ணம் இருந்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தாள்.

“போர்க்களம் புகப் போகும் நான் திரும்பி வருவேனா அல்லது எனது தந்தையைப் போன்று நானும் வீர மரணத்தைத் தழுவுவேனா என்று எனக்குத் தெரியவில்லை.”

“அதற்கு?”

“இடைப்பட்ட நமது ஒரு திங்கள் கால காதலுக்காக எதற்காக உனது வாழ்வைப் பாழ்படுத்த வேண்டும் என்று தான் உன்னைத் தவிர்க்கிறேன்.”

அப்பொழுது நல்வெள்ளியாள் அவனுக்கு முன் நின்றாள். தனது மார்பை மறைத்திருந்த மாராப்பை விலக்கியவள், “தாங்கள் தீண்டிய எனது மார்பை வேறொருவன் தீண்டுவதற்கு அனுமதிப்பேன் என்று கருதுகிறீர்களா?” என வினவினாள்.

அவள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க முடியாத வெற்றி வளவன் கண்ணீர் சிந்தினான். அவனது விழிகளைத் துடைத்த நல்வெள்ளியாள், “வீரர்கள் கண்ணீர் சிந்தக் கூடாது” எனத் தெரிவித்தபடியே அவனது முகத்தைத் தனது மார்போடு புதைத்துக் கொண்டாள்.

அப்பொழுது நல்வெள்ளியாள், “நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன்” என்றாள்.

அவளது மார்பில் தனது முகத்தைப் புதைத்தபடியே, “என்ன?” என வினவினான்.

“நாம் மனம் செய்து கொள்வோம்.”

“இது அபத்தமான முடிவு.”

“இல்லை, சிந்தித்துதான் முடிவெடுத்திருக்கிறேன்.”

வெற்றி வளவன் எதையோ பேச வாயெடுத்தான், ஆனால் அவன் பேசுவதற்குள் நல்வெள்ளியாள், “தங்களது தந்தை போர்க்களம் புகுவதற்கு முன் அவர் மனம் செய்து கொண்டதனால் தான் அவருக்குப் பிறகு தங்களால் போர்க்களம் புக முடிகிறது. உங்களுடன இணைந்து வாழும் நாள் இந்த ஒரு நாளாக இருக்கட்டும். உங்களுக்குப் பிறகு உங்களது மகனும் நமது மண் காக்க வாளேந்த வேண்டும். ஒரு மாவீரனின் காதலியாக தங்களது குழந்தையை எனது வயிற்றில் ஏந்திக் கொள்வதே எனது கடைமையாக நினைக்கிறேன்” எனத் தெரிவித்தவள் அவன் அமர்ந்திருந்த கட்டிலில் படுத்தாள்.

வெற்றி வளவன் அதிர்ச்சியில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்த நல்வெள்ளியாள், “எனது போதாத காலம், எனக்கு இது சூல் கொள்ளும் காலம் இல்லை. இறைவனை நம்புகிறேன் தலைவரே” எனத் தெரிவித்தவள் அவனைத் தன் மீது இழுத்து அணைத்துக் கொண்டாள்.

வானில் தோன்றியிருந்த நூறாயிரக் கணக்கான விண்மீன்கள், பிறை நிலவு, தோட்டத்தில் வளர்ந்திருந்த வன்னி மரத்தின் மீது அமர்ந்திருந்த குருகுப் பறவைகளை சாட்சிகளாகக் கொண்டு காதலர்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் கூடலானார்கள்.

********

கரும்பெண்ணை நதிக்குத் தெற்கே மொழி பெயர் தேயத்தில் நிலை கொண்டிருந்த சேரர், சோழர், பாண்டியர் மற்றும் வேளிர்களின் கூட்டுப் படைகளில் வெற்றி வளவனும் ஒருவனாக நின்றிருந்தான். அப்பொழுது அவனுக்கு வணிகன் ஒருவன் ஆலமரத்து முற்றத்துக் கிராமத்திலிருந்து செய்தியைக் கொண்டு வந்திருந்தான்.

வந்த வணிகன் வெற்றி வளவனிடம், “நல்வெள்ளியாள் தேவி செய்தி அனுப்பியிருக்கிறார்” எனத் தெரிவித்தான்.

தன் குழந்தை பற்றிய செய்தியை வணிகன் கொண்டு வந்திருப்பான் எனும் எதிர்பார்ப்பில், “என்ன செய்தி?” என வினவினான்.

“தேவிக்கு மணமுடித்து வைத்துவிட்டார்கள். ஆதலால், தேவியாரைத் தாங்கள் மறந்துவிடும்படியும் மன்னிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.”

இடையில் தரித்திருந்த வாளுறையிலிருந்து வாளினை உருவிய வெற்றி வளவன் வணிகனின் கழுத்தில் வைத்து, “உண்மையைக் கூறு. இல்லையேல் உனது கழுத்தை இங்கேயே வெட்டிப் போட்டுவிடுவேன்” என மிரட்டினான்.

தன் கழுத்தில் வாள் வைக்கப்பட்டதும் பதறிய வணிகன் இடையில் முடித்து வைத்திருந்த முத்துமாலை ஒன்றை அவனிடம் நீட்டினான். அதை வாங்கிய வெற்றி வளவன் தன் கையில் வைத்திருந்த வாளினைத் தவறவிட்டான். “தேவியார் அடையாளத்திற்கு இதை என்னிடம் கொடுத்து அனுப்பினார்கள்” எனத் தெரிவித்தவன் மேற்கொண்டு பதிலை எதிர்பாராமல் அங்கிருந்து நடக்கலானான்.

செய்தியைக் கேள்விப்பட்டதும் வெற்றி வளவன் நிற்க முடியாமல் அருகில் கிடந்த பாறையில் அமர்ந்தான். அவனது விழிகளிலிருந்து பெருக்கெடுக்கத் தொடங்கிய கண்ணீர் கையில் வைத்திருந்த முத்து மாலையை நனைத்துக் கொண்டிருந்தது.

**********

நல்வெள்ளியாள் தனது மாளிகையில் அமர்ந்திருந்தாள். எதன்பொருட்டு அவள் வெற்றி வளவனுடன் கூடினாலோ, அவள் அச்சப் பட்டதைப் போன்றே அவளுக்குச் சூல் கொள்ளாமல் தள்ளிப் போயிருந்தது.

தனது விதியையும், தனது நேரத்தையும் எண்ணி நொந்தபடி அமர்ந்திருந்தவளிடம் அவளது தந்தை, “மகளே, உன் முகத்தில் இப்பொழுதெல்லாம் முன்பிருந்த மகிழ்ச்சியைக் காண இயலவில்லையே?” என வினவினார்.

நல்வெள்ளியாள் முகத்தில் போலியாக புன்னகையை வரவழைத்துக் கொண்டு, “அப்படியெல்லாம் இல்லை தந்தையே. சற்று உடல் நிலை சரி இல்லை. அவ்வளவுதான்” எனத் தெரிவித்தாள்.

“எனக்கு உனது காதலைப் பற்றி தெரியாது என்று நினைத்தாயா? அறிவேன் நான். ஆனால், நாம் ஒன்று நினைக்க காலம் வேறுமாதிரி நினைத்து விட்டதே” எனத் தெரிவித்தவரை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் நல்வெள்ளியாள்.

அப்பொழுது அவர், “வடக்கிலிருந்து வணிகன் ஒருவன் வந்திருக்கிறான். அவன் நம் ஊரிலிருந்து சென்ற வெற்றி வளவனைப் பற்றியும் செய்தி கொண்டு வந்திருக்கிறான்” எனத் தெரிவிக்க நல்வெள்ளியாள் உற்சாகத்துடன் அவனை நோக்கி ஓடினாள்.

வந்திருந்த வணிகன், “ஆலமரத்து முற்றத்து வெற்றி வளவன் என்றாலே மொழி பெயர் தேயத்தில் உள்ள வீரர்கள் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்தான்.

“அப்படியா, அவரைப் பற்றிய வேறு செய்திகள் என்னென்ன கொண்டு வந்திருக்கிறீர்கள்?”

“அவன் வேல் சுழற்றுவதிலும், வாள் வீசுவதிலும் அசகாய சூரனாக இருக்கிறான். இரண்டு முறை மொழி பெயர் தேயத்தில் நிலை கொண்டிருக்கும் கோழியூர் வேந்தர் வெற்றிவேல் சென்னியிடமே நல்ல பெயர் வாங்கியிருக்கிறான் என்றால் அவனது புகழைப் பார்த்துக் கொள்ளுங்கள்.”

நல்வெள்ளியாள் மகிழ்ச்சியில் பூரித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது வணிகன், “அவனது புகழ் பெருகியதைப் போன்றே அவன் மதுவுக்கும் அடிமையாகி விட்டான். இப்பொழுது கணிகையர் விடுதிக்கும் செல்லத் தொடங்கிவிட்டான் அவன். தந்தை சேர்த்து வைத்திருந்த புகழை இவன் மதுவிடமும், மாதுவிடமும் இழந்து கொண்டிருக்கிறான்” எனத் தெரிவித்துக் கொண்டிருந்த வேளையில் அதற்கு மேல் அங்கு இருக்க இயலாத நல்வெள்ளியாள் அங்கிருந்து எழுந்து தனது அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.

நல்வெள்ளியாள் அங்கிருந்து சென்றதும் பொன் முடிப்பு ஒன்றை எடுத்தவர் வணிகனிடம் கொடுத்து, “இது நமக்குள் இருக்கட்டும்” என அனுப்பி வைத்தார்.

காலங்கள் வேகமாகக் கழிந்தன. சில திங்கள் கடந்த பிறகு நல்வெள்ளியாளின் தந்தை அவளிடம், “உனக்கு ஏற்ற ஆடவன் ஒருவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

அவர் கூறியதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த நல்வெள்ளியாள், “தந்தையே இந்தப் பிறவி மட்டும் அல்ல. இன்னும் ஈரேழு பிறப்பெடுத்தாலும் எனக்குத் துணைவன் வெற்றி வளவன் ஒருவன் தான்” எனத் தெரிவித்தாள்.

“அவன் உன்னை மறந்தே போய் விட்டான். நீ அவனையே எண்ணி வருந்திக் கொண்டிருக்கிறாய். ஆனால், அவன் கணிகையருடன் மகிழ்ச்சியில் வாழ்ந்துகொண்டு இருக்கிறான்.”

“எனக்கு என் மீதும், நான் கொண்ட காதல் மீதும், அவர் மீதும் நம்பிக்கை இருக்கிறது. நானே நேரில் கண்டாலும் அவர் மீது நான் சந்தேகம் கொள்ள மாட்டேன்” எனத் தெரிவித்தவள் நடக்கலானாள்.

“எங்கே செல்கிறாய்?”

“என் காதலனின் இல்லத்திற்கு” எனத் தெரிவித்தவள் நேராக வெற்றி வளவனின் இல்லத்தில் தஞ்சமடைந்தாள்.

வெற்றி வளவனின் இல்லத்தின் தோட்டத்தில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் சோகத்துடன் அமர்ந்திருந்தாள் நல்வெள்ளியாள். அப்பொழுது அங்கு வந்த வெற்றி வளவனின் நண்பன், “தங்கை… கணிகையைத் தேடிச் சென்ற அவனை நீ மறந்து விடு. உன் வாழ்வை நீ மகிழ்ச்சியுடன் அமைத்துக் கொள்” எனத் தெரிவித்தான்.

அவன் கூறியதைக் கேட்டதும் நகைத்த நல்வெள்ளியாள், “அவருடன் இதே கட்டிலில் தான் மகிழ்ச்சியுடன் பல நாட்களைக் கழித்திருக்கிறேன். அவருடன் வாழ்ந்த என்னால் இனி வேறு யாருடனுன் வாழ இயலாது” எனப் பதில் அளித்தாள்.

“ஆனால், அவன் தான் கணிகையரைத் தேடிச் சென்று விட்டானே.”

“அவர் என்னை மறந்துவிட்டார் என்பதற்காக என்னால் வேறு ஒரு ஆடவனை நினைக்க இயலாது.”

“சிந்தித்து தான் பதில் கூறுகிறாயா?”

“ஆமாம்.”

“அவனை மறந்துவிடு.”

“அது முடியாது.”

“முயற்சி செய்தால் முடியாதது என்று எதுவும் இல்லை.”

“நான் அவர் மீது கொண்டிருக்கும் காதல் எப்படிப் பட்டது தெரியுமா?”

“எப்படிப்பட்டது?”

“பரிதி எரிக்கும் உச்சி வேளைப் பொழுதில் வெம்மையான பாறையினிடத்தே கையில்லாத ஊமையன் தன் பார்வையாலே பாதுகாக்க முயலுகின்ற உருகிய வெண்ணெயைப் போல எனது காதல் நோயும் பரவிக் கொண்டிருக்கிறது. முடவனான ஊமையானால் எப்படி உருகும் வெண்ணையை பாதுகாக்க இயலாதோ அப்படியே என்னாலும் அவர் மீதான காதலை அகற்ற முடியவில்லை. அவர் இல்லாவிட்டால் என்ன அவருடன் இனிமையாக வாழ்ந்த நாட்கள் எனக்குப் போதும்” எனத் தெரிவித்தவள் அந்தக் கட்டிலில் சாய்ந்துகொண்டு அழுதாள்.

அதற்கு மேல் அவளிடம் பேசிப் பயன் இல்லை என்பதை உணர்ந்த வெற்றி வளவனின் தோழன் அங்கிருந்து செல்லலானான்.

*******

“மொழி பெயர் தேயத்தில் கரும்பெண்ணை நதியைக் கடந்து எதிரிகளின் நடமாட்டத்தைக் கவனிக்க விருப்பமான வீரர்கள் புறப்படலாம்” என்று மூவேந்தர் படைத்தலைவர் அறிவித்தார்.

புறப்பட்டுத் தயாராக இருந்த வயதான வீரர்களுடன் வெற்றி வளவனும் இணைந்து கொண்டான். அவனிடம் வயதான வீரர் ஒருவர், “நாம் எதிரி நாட்டிற்கு ஒற்றறிய செல்கிறோம். உயிருடன் திரும்பி வருவோம் என்று கனவிலும் நினைக்காதே” எனத் தெரிவித்தார்.

“அறிவேன் முதுவீரரே.”

“பிறகு எதற்கு இங்கு வருகிறாய். திரும்பிச் செல்.”

அப்பொழுது புன்னகைத்த வெற்றி வளவன், “எனது உயிரை நான் எப்பொழுதோ இழந்துவிட்டேன் முதியவரே. இப்பொழுது உயிரற்ற உடல் மட்டுமே எஞ்சி இருக்கிறது. உயிரற்ற உடல் இருந்தால் என்ன? அழிந்தால் என்ன?” எனத் தெரிவித்தபடியே முன்னால் நடக்கலானான்.

கரும்பெண்ணை நதியில் நின்றுகொண்டிருந்த மரக்கலத்தில் ஏறிய வெற்றி வளவன் இடையில் தரித்திருந்த வாளினைக் கையில் எடுத்தான். பிறகு இடையில் பத்திரமாக வைத்திருந்த முத்து மாலையைக் கழுத்தில் மாட்டியவன், “என்னைத் தழுவிய என் காதலி என் மீது கொண்ட காதல் உண்மையாக இருந்தால் நான் உயிருடன் திரும்புவேன். இல்லையேல் காதலை மறந்துவிட்ட பெண்ணைத் தழுவிய எனது உடல் எதிரிகளின் கரங்களால் கோரமாக அழிக்கப்படட்டும்” எனத் தெரிவித்தபடி நதியைக் கடந்துகொண்டிருந்தான்.

அதே வேளை நல்வெள்ளியாள் வெற்றி வளவனை எண்ணியபடி கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள். மரக்கலத்தில் மோதிய கரும்பெண்ணை நதி நீர் நின்றுகொண்டிருந்த வெற்றி வளவனின் மார்பில் தெரித்தது.

சங்கப் பாடல்:

குறுந்தொகைப் பாடல் – 58; பாடியவர் – வெள்ளி வீதியார்; திணை – குறிஞ்சி.

சி.வெற்றிவேல்,

சாளையக்குறிச்சி…

 

5 COMMENTS

  1. ஆகா மிக அற்புதம் வெற்றி. வெற்றியும், வெள்ளியும் இணையட்டும்

  2. அற்புதமான எழுத்தோவியம்! கண்முன்னே காட்சிகள் நிழலாடுகின்றன! பண்பட்ட எழேத்து! மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  3. அற்புதமான எழுத்தோவியம்! கண்முன்னே காட்சிகள் நிழலாடுகின்றன! பண்பட்ட எழுத்து! மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  4. மிக அழகான நடை பாத்திரங்களின் கனம் அழுத்தமாக உள்ளது மறக்க முடியாத கதை

  5. […] http://writervetrivel.com/vetri-short-story-2/ சங்க கால இலக்கியங்களை அனைவரும் எளிமையாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம். அனைவரும் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். பங்குகொள்ளும் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்… சி.வெற்றிவேல், சாலைக்குறிச்சி… (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Categories கட்டுரைகள், கதைகள், சிறுகதைTags சங்க இலக்கியப் போட்டி, சிறுகதைப் போட்டி, சிறுகதைப் போட்டி 2018, வென்வேல் சென்னி […]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here