சிறுகதைப் போட்டி – 25 : அழகு எனப்படுவது யாதெனில் – தேவி பிரபா

காலையில் எழுந்ததிலிருந்தே சிவகாமி பரபரப்பாகக் காணப்பட்டாள்.” ஏன் இப்படிப் பரபரப்பாயிருக்கிறே ? ” என்ற  மனோகரனின் கேள்விக்கு ,
” நான் எப்போதும் போலத் தானே இருக்கேன்  ”  என்றபடியே , சமைப்பதில் கவனம் செலுத்தினாள்.
‘ ம்ஹ்ம் … இவ இப்படி எண்ணி எண்ணி பேசுற ஆள் இல்லையே ? பேசுறதுக்குப் பிறந்தவ மாதிரி , வாய் வலிக்கப் பேசுறவளாச்சே ! ஒரு கேள்விக்கு ஒம்பது பதில் சொல்லுறவளுக்கு என்னாச்சு ? … இன்னிக்கு ஏதும் விசேச நாளா ? … பிறந்த நாளாயிருக்காது ! அதை மறந்ததுக்குப் போன மாசமே திட்டு வாங்கியாச்சு !  கல்யாண நாளுமில்ல . அதுக்கு   இன்னும் இரண்டு மாசமிருக்கு .    அவக்கிட்டே எதையாவது செய்யறதாச் சொல்லி மறந்திட்டேனோ ?…  ‘ என்றெண்ணினான் .
 “என்ன விசேசம் சிவகாமி ?” என்றான் .
ஒன்றுமில்லை என்றபடியே தன்னுடைய வேலையைச் செய்தவளைக் கண்டு  எரிச்சலடைந்தான் மனோகரன் .
‘ இனி அவளே வந்து கெஞ்சற வரைக்கும் , நான் பேசறதா இல்லை . திமிர் அதிகமாயிடுச்சு ‘ என்று கருவியவன்  அலுவலகத்திற்குக் கிளம்பினான் .
” இன்னைக்கு நானே போய்க்கிறேன் . நீங்க என்னை விட வேண்டாம் . எனக்கு வெளியில கொஞ்சம் வேலையிருக்கு ” என்றவளின் பேச்சிற்கு , எந்தப் பதிலையும் சொல்லாமல் உண்டு கொண்டிருந்தான் மனோகரன் .
முறைத்து விட்டு வெளியேறியவனைக்  கண்டு ஒரு புன்சிரிப்பை வீசினாள் அவள் . வெளி வேலைகளை எல்லாம் முடித்து விட்டு , அலுவலகத்திற்குத் திரும்பியவளின் வாய்  எப்பொழுதும் போல ஓயவில்லை .
உணவு இடைவேளையின் போது , அவனுக்கு அலைபேசி அழைப்பு விடுத்தாள் சிவகாமி .  மாலை ஐந்துமணி வரை அவளின் எந்த அழைப்பையும் ஏற்காதவன் , அவளின் குறுஞ்செய்திகளுக்கும் பதில்அளிக்கவில்லை .
‘ முகத்தைத் தூக்கி வச்சுட்டாரா ?. இவருக்கு வேற வேலை இல்லை ‘ என்று என்றபடியே  வீட்டிற்குச் சென்றாள் சிவகாமி .
தாமதமாக வந்தவன் , தேநீரை நீட்டியவளைக் கவனியாமல் தன் அலைபேசியில் மூழ்கினான் .” என்னங்க … குடிச்சிட்டுப் பாருங்க  ” என்றாள் .
தேநீரை உறிஞ்சியவனிடம் , ” என்னங்க … இங்கே பாருங்க . என்னைப் பாருங்க ” என்றாள் .
அவளைக் கவனியாமல் எழுந்தவன் குளியலறைக்குள் புகுந்தான் . வெளியே வந்தவனிடம்  , ” இங்கே பாருங்களேன் ” என்றாள் .
 ” மனுசனை நிம்மதியா இருக்க விடமாட்டீயா ? ” என்று அவன்  கத்தினான் .
‘ ரொம்பத் தான் பண்ணுறாரு ‘ என்றபடியே , சமையலறைக்குள் நுழைந்தவளுக்குக் கோபம் வந்தது .
சமையல் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கையில் , ‘ காலையில எங்கே போறேன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருந்தா , அவருக்கு இந்தக் கோபம் வந்திருக்காதே ! அவர் குணம் தெரிஞ்சும் நான் இப்படிப் பண்ணியிருக்க வேண்டாம் ‘ என்று  தன்னைக் குற்றஞ்சாட்டிக் கொண்டாள் .
” என்னங்க …  நான் ஒருவார்த்தை
சொல்லியிருக்கலாம் .எம்மேல தப்பு தான் . இங்கே பாருங்களேன் ” என்றவள் அவனுக்கு முன்னால் வந்து நின்றாள் .
” நல்லாயிருக்கா ? ” என்று கேட்டவளிடம் ,
” நல்லாருக்கு சிவகாமி  ” என்று கோபம் மறைந்து , பேசியவனைப் பார்த்து புன்னகைத்தாள் அவன் மனைவி .
மனோகரனுக்கும் ,  சிவகாமிக்கும் திருமணம் நிச்சயமான பொழுது , அவளின் இடுப்பைத் தாண்டி நீண்ட கூந்தலைப் பற்றிப் பேசியவர்கள் அதிகம் .
” சிவகாமி …  பராமரிக்கச் சிரமமாயிருக்கிறதா சொல்லி , இப்போ பலரும் முடியை வெட்டிக்கிறாங்க . நம்ம உறவுல யாருக்கும்  இவ்வளவு நீளமா , அடர்த்தியா முடி  இல்ல ! எப்படி இதைப் பராமரிக்கறே ? இதுக்கு அரைத்தொட்டித் தண்ணி தேவைப்படுமே ? ” என்றவனிடம் தன்னுடைய கூந்தல் பராமரிப்பு முறைகளைச் சொன்னவள் ,
” நீங்க என் முடியை பத்தி கேட்கவும் , நான் கேட்க வந்ததை மறந்துட்டேங்க . எனக்கு ஐம்பது பத்திரிகைக் கூடுதலா தேவைப்படுது . நீங்க அடுத்த முறை பார்க்க வர்றப்போ கொண்டு வாங்க ” என்ற செல்வி . சிவகாமியின்  கூந்தலை ரசித்தான் , மனோகரன் .
வீட்டில் அவனது தங்கையிடம் , ” உங்கண்ணி முடி எவ்வளவு நீளமாயிருக்கு ! அவகிட்டே முடி வளர்ப்பு பத்தி நிறையக் கேட்டுட்டு வந்திருக்கேன் . அது மாதிரி பராமரி!  உன் எலி வால் முடி , குறைஞ்சது பூனை வால் மாதிரியாவது வளரும் ” என்று கேலி செய்தான் மனோகரன் .
” அண்ணே ! கல்யாண மாப்பிள்ளையாச்சேனு சும்மா விடுறேன் . இல்லேன்னா கத்தரிக்கோலால் மண்டைலக் கோலம் போட்டு வெச்சிருவேன் .  அண்ணிக்கு முடி அழகாயிருக்கு . ஆனா அதுக்காக , நீ பேசுற கூந்தல் புராணத்தைத் தாங்க முடியலைண்ணே . ஏதும் கவிதை கிவிதை எழுதுனே ! உன் மண்டைல நாலு முடி மட்டும் இருக்கிற மாதிரி செஞ்சிருவேன்  ” என்று கேலியாக மிரட்டினாள் அவன் தங்கை .
திருமணத்துக்கு முந்தைய நினைவுகளில் தங்கியிருந்த மனோகரனுக்கு , சிவகாமி செய்தது  வருத்தமளித்திருந்தது .
அழகு நிலையம் சென்று தனது  தனது சுருட்டை முடியை  கோரை முடியாக்கியிருந்தாள் சிவகாமி .
 ” சுருட்டை முடி உனக்கு அழகாயிருந்துச்சு . அது உனக்குத்   தனி அழகைக் கொடுத்துச்சு சிவகாமி ” என்றான் .
” உங்களுக்குப் பிடிக்காதுன்னு நினைச்சு தான் காலைல சொல்லாம போனேன் ” என்றவளிடம் , ” உனக்குச் செய்ய விருப்பமிருந்து செஞ்சிருக்கே . ஆனா , செயற்கையை விட இயற்கை எப்போதுமே அழகு. மனம் தான் ரொம்ப அழகானது “
என்றான் மனோகரன் .
—-
குறுந்தொகை 116
யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல்
வளம் கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை
நுண்மணல் அறல் வார்ந்தன்ன
நல் னெறியவ்வே, நறும் தண்ணியவே.
– இளங்கீரன்
திணை: குறிஞ்சி
சூழல்: காதலியைச் சந்தித்துத் திரும்பும் காதலன் தன் நெஞ்சுக்குச் சொல்வது
நெஞ்சே,
நான் விரும்பித் தங்கும் என் காதலியின் கூந்தலில் வண்டுகள் பாய்கின்றன, அந்தக் கூந்தல் எதைப்போல இருக்கிறது தெரியுமா?
வளம் நிறைந்த சோழர்களின் உறையூரில் உள்ள ஆற்றங்கரையில் படிந்திருக்கும் நுட்பமான கருமணலைப்போல நெறிந்து, வாசனையுடன், குளிர்ச்சியுடன் இருக்கிறது!

Leave a Comment