சிறுகதைப் போட்டி – 27 : பயந்து ஓடிய பயம் – மாலா உத்தண்டராமன்

அவர்கள்

சமையலறையில் பாத்திரம் உருளும் சத்தம் கேட்டு கண் விழித்தாள் அவள். வயது இருபத்தி மூன்று. சடாரென்று படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து,கடிகாரம் பார்த்து அதிர்ந்தபோது-எதிரில் காபி டம்பளரோடு அவன் நின்றிருந்தான்.வயது இருபத்தியேழு.

குட் மார்னிங் என் செல்லமே.. வாயைக் கொப்புளிச்சிட்டு வா..சூடாக காபி குடி..புன்னகைத்துச் சொன்னான்.

அசந்து தூங்கித் தொலைச்சிட்டேன்..நீங்களாவது எழுப்பியிருக்கலாமே..ஏன் உங்களுக்கு இந்த சிரமம்..லேட்டா எழுந்தவளுக்கு காபி வேறயா.?”இன்முகம் காட்டிச்  சிணுங்கினாள்.

ராத்திரி மூணுமணியிலிருந்து உடம்பெல்லாம் நடுங்கிற அளவுக்கு உனக்கு செமகாய்ச்சல் டாக்டருகிட்டே போகலாம்னா வர மறுத்திட்டே.ஜுரமாத்திரை முழுங்கிட்டு சமாளிச்சிட்டே. அதனாலே தூங்கினது தப்பில்லே..அப்பத்தான் உடம்பு குணமாகும்..இப்போ காய்ச்சல் நின்னுடுச்சு பார்த்தியா?” வாஞ்சையோடு அவளது நெற்றியைத் தொட்டுப்பார்த்தான்.

உங்களுக்கும்தான் ஒருவாரமாக சளி,இருமல்..தொடர்ந்து மாத்திரை முழுங்கிட்டு வர்றீங்க. நான்தான் உங்களைச் சரியாகக் கவனிச்சுக்கணும்..அது மனைவியின் கடமை..

ஓ..அப்படியா சங்கதி.?அப்போ மனைவிக்கு உடம்பு முடியலைன்னா கணவன் கண்டுக்காமல்  இருக்கணுமோ..அதனால்தான் உனக்கு இட்லியும் தயார்பண்ணி வச்சிச்சாச்சு..இன்னிக்கு குளியல் வேணாம்..

அது வேறயா..உங்களை திருத்தவே முடியாதுங்க..நான் செஞ்சுக்கமாட்டேனா..உங்களுக்கு டிபன் வேணாமா ?”

அதுவும் தயார்..ஒரே பாத்திரத்திலே ஒரு டஜன் இட்லி..உனக்கு நாலு.எனக்கு நாலு. நம்ம செல்லப் பயலுக்கு நாலு.. சாப்பிட்டு நல்லா ஓய்வெடும்மா..நாளைக்கு டூட்டிக்குப் போயிக்கலாம்

நம்ம மகன் எங்கேங்க..?”

இங்கேயிருந்து எழுந்திருச்சுபோய் சோபாவில் தூங்கிட்டிருக்கான் சுட்டிக்குட்டி.

சரிங்க.எங்களைக் கவனிச்சது போதும்..நீங்க குளிச்சி,சாப்பிட்டு,டூட்டிக்குக் கிளம்புங்க.இப்பவே மணி ஒன்பது..

ஓகேம்மா..உங்க கட்டளைபடி நடந்துக்கிறேன்..

இந்த கிண்டலுக்கொண்ணும் குறைச்சலில்லை..ஒரேயடியாய் இன்னிக்கு உங்க லொல்லு தாங்க முடியலை..என்னை பழி வாங்கிட்டீங்ககொஞ்சலாக முறைத்தாள்.

தினமும் எனக்காக நீ கஷ்டப்படறே..இன்னிக்கு ஒருநாள் மட்டும் நான் உதவறேன் .. அவ்வளுதான் டியர்..கரம் குலுக்கினான்.

அடுத்த அரைமணி நேரத்திற்குள்-குளித்து, உடை மாற்றி,இட்லி சாப்பிட்டு முடித்து, “டார்லிங் நான் புறப்படறேன்..சாயங்காலம் சந்திப்போம்..மறுபடியும் உடம்பு வம்பு கொடுத்தால் போன் பண்ணு..உடனே வந்திடுவேன்..பைக்கை உசுப்பினான்.

நான் நல்லாயிட்டேன் மணாளா..என்னைப்பத்தி கவலை வேணாம்..நீங்க மெதுவா வண்டி ஓட்டுங்க கவனமாகப் போகணும்வாசல்வரை வந்து கையசைத்து வழி அனுப்பி வைத்தாள்.

  காமாட்சி

வயல்வெளியில் கூலிவேலை செய்து அந்த வருமானத்தில் கொஞ்சம் ஒதுக்கி,நிறைய சிரமங் களுக்கிடையே காமாட்சியை ஒருவழியாக பள்ளியிறுதி வகுப்பு வரை படிக்கவைத்தாள் விதவைத்தாய் மங்களம்.

அம்மா அம்மா..நான் டவுன்ல கூரியர் தபால் கம்பெனியில் பில் போடற வேலைக்குப் போகப் போறேன்..என் சினேகிதியின் அப்பா சிபாரிசு பண்ணி இந்த வேலையில் சேர்த்திருக்கார். காலையில் நம்மூர் பஸ்ஸிலே போயிட்டு சாயங்காலம் வீடு திரும்பிடு வேன்..டவுன் இங்கேயிருந்து மூணு கிலோமீட்டர் தூரம்தானே.. மாசம் ரெண்டாயிரம் ரூபாய் சம்பளம்..நம்ம குடும்பச் செலவுக்கு உதவுமே..நீ இனி வயல் வேலைக்குப் போகவேணாம் கெஞ்சினாள்.

முடியாது காமாட்சி.. சின்னவயசுப்பொண்ணு நீ..டவுனுக்குப் போயிட்டு வரதெல்லாம் சரிபட்டு வராது.. நான் அன்னாடம் மடியில் நெருப்பைக் கட்டிட்டுப் பதறணுமா.உனக்கு கஞ்சி கொடுக்க என்னால முடியும். கூலி வேலை செஞ்சி பழகிட்டேன்..ஒடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் வேலையை விட்டு நிக்கமாட்டேன்கறாராய் மறுத்தாள்.

சரி உன் இஷ்டம்.போயிக்கோ.சினேகிதியும் என்னோட இருக்கிறதால பயமில்லைம்மா வீட்ல சும்மா அடைஞ்சு கிடக்கப் பிடிக்கலை. சரின்னு சொல்லும்மாபிடிவாதம் பிடித்தாள்.

அப்படின்னா பரவாயில்லை..சந்தோசமாப் போ..உனக்கும் பொழுது போகும்..பிரச்னை எதுவும் வந்தால் உடனே வேலை விட்டுடு..அரைமனசோடு சம்மதித்தாள்.

இரண்டாண்டுகள் தாய்-மகள் இருவரது உழைப்பின் மூலம் ஓரளவுக்கு பணப்பிரச்னை குறைந்து அமைதியான வாழ்க்கை நகர்ந்த சமயத்தில் எதிர்பாராத சோதனைகள் பூதாகரமாக முளைக்கத் துவங்கின.

வயல் வேலையில் ஈடுபட்டிருந்த மங்களத்தை,விஷப்பூச்சி கடித்துவிட-அதன் பாதிப்பால் திடீர் நோயாளியாகிப் படுத்தாள்.உடம்பெல்லாம் விஷம் பரவி, வீங்கிப்போய்,நம்பிக்கை இழந்து நாட்களை எண்ணிக்கொண்டிருந்தாள்.எங்கே மகளை தனியாகத் தவிக்கவிட்டு செத்துவிடு வோமோவென்று அச்சம் தொற்றிக்கொண்டது. இறுதி ஆசையாக மகளை கலியாணகோலத்தில்  காண விரும்பினாள். அக்காவின் நிலைமை குறித்து சேதி கிடைத்து, அவளது சொற்பச் சொத்தையும் அபகரித்துக் கொள்ளும் அற்ப ஆசையோடு அப்போது தான் திடீரென்று ஊருக்கு வந்திருந்தான் மாணிக்கம். தூரத்துச் சொந்தம்; மங்களத்திற்கு தம்பி உறவு முறை. அவனிடம் மகளை ஒப்ப¨டைக்க முடிவெடுத்தாள் மங்களம்.

காமாட்சி..இனி பிழைக்க மாட்டேன்..என்  கடைசி விருப்பத்தை நீதான் நிறவேத்தணும்மா உனக்கும் மாமனுக்கும் நம்மூர் முருகன் கோயில்ல நாளைக்குக் காலையில் கலியாணம்..!

இக்கட்டான சூழலை நினைத்து விக்கித்து நின்றாள் காமாட்சி.

டவுனில் நேர்மையான உழைப்பை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு. என் கண்ணெதிரே, படிப்படியாக முன்னேறிட்டிருக்கிற இளைஞனை அம்மாவின் ஒப்புதலோடு மணம்புரிய விரும்பினேன். ஆனால், அடுக்கடுக்காக சோதனை வந்து இப்போ இருதலைக்கொல்லி எறும்பாய்த் தவிக்கிறேனே .. இந்த சமயம் என் காதலைப்பத்தி பேச்செடுத்தா அம்மா கதிகலங்கி உசிரை விட்டிடுவாங்க. காதலா ? அம்மாவின் கடைசி ஆசையா ?’ காமாட்சியின் உள்ளத்தில் யுத்தம் நடந்தது.முடிவில்-தாயின் விருப்பமே வெற்றி அடந்தது.

ஊரை வீட்டு மும்பை, பெங்களூரு என வெளி மாநில ஊர்களுக்கு ஓடி. பொறுப்பில்லாமல் சுற்றித் திரிந்து, சகோதரியின் சொத்துக்கு ஆசைபட்டு ஊர் பக்கம் வந்த ஒரு தீயவனுக்கு வேறு வழியில்லாமல் கழுத்தை நீட்டினாள் காமாட்சி. இந்த விஷயங்கள் ஏதும் அறியாமல்-மகளின் கலியாணக்காட்சியைக் கண்குளிரக் கண்டுவிட்டு சிலநாட்களில் கண்மூடினாள் தாய். சொத்தைக் காசாக்கிக்கொண்டு, காமாட்சியை சென்னைக்கு அழைத்துச் சென்று ஒரு சிறிய வாடகைவீட்டில் குடியமர்த்தினான் மாணிக்கம். நான்கு மாதங்கள் உருண்டோடின.

அன்று-காமாட்சிக்கு உடம்பு காய்ச்சல் ஏற்பட்டு வாட்டியெடுத்தது.

மாமா நான் லேடி டாக்டர்கிட்டே வைத்தியம் எடுக்கணும்.அழைச்சிட்டுப் போகமுடியுமா?” கெஞ்சிக் கேட்டாள்.

அவனுக்கு தூக்கிவாரி போட்டது. மாசமாயிட்டா போலிருக்கு..ஐய்யய்யோ!.இவளை இப்போ ஆசுபத்திரிக்குக் கூட்டிட்டுப் போய் காட்டினால் என் குட்டு அம்பலமாயிடும். சிக்கலில் மாட்டிடுவோம்..காலம்பூரா அவஸ்தை தான்.இங்கே இனி ஒரு நிமிஷம்கூட தங்கக் கூடாது தப்பிச்சிடணும்துரத்தப்போகிற பின் விளைவுகளைச் சுதாகரித்துக்கொண்டான் மாணிக்கம்

திடுதிப்புன்னு சொன்னா எப்படி..? இப்போ என்னை கூட்டிட்டுப் போறதுக்கு லாரி வருது. அதிலே ஏறி அவசரமா மும்பை போறேன்..ஓனர்கிட்டேயிருந்து பழையபாக்கியை வசூல் பண்ணிட்டு திரும்பி வந்திடறேன். நீ வேணும்னா ஆட்டோவிலே போயிக்கோயேன் ..அலட்சியப் பதிலை உதிர்த்துவிட்டு,வாசல் பக்கம் ஓடினான், அங்கே காத்திருந்த ஒரு லாரியில் தாவி ஏறிக்கொண்டான்.உறுமலுடன் அந்த லாரி புறப்பட்டது.

ஐந்தே நிமிடங்களில் இடி, மின்னலாய் அநியாயங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து அவளை ஏமாற்றத்துக்குத் தள்ளிற்று.

அரசு மருத்துவமனை

என்னம்மா காமாட்சி.. உன்னைப் பார்த்தால் நல்ல பெண்ணாகத் தெரியுது..ஆனால், உன் ரத்தத்தைப் பரிசோதனை ரிசல்ட் அதிர்ச்சி தருதே..உதவியாளர்களை வெளியே அனுப்பி விட்டு,தனிமையான தருணம் ஏற்படுத்தி-பரிதாபத்துடன் தகவல் தெரிவித்தார் தலைமைப்பெண் மருத்துவர்.

எனக்கா ஹெச்ஐவீ..? என்ன சொல்றீங்க டாக்டர்..ஒன்றும் புரியாமல்,அழுது புரண்டாள்.

தனக்கு நடந்த கட்டாயத்திருமணம் குறித்தும், தன்கணவன் மாணிக்கம் சொந்த மாமா தான் என்பதையும் கண்ணீருடன் விவரித்தாள்.

உன் கணவர் எங்கே.?அவருக்கு ரத்தப்பரிசோதனை செஞ்சா உண்மை விளங்கும்என்றார் மருத்துவர்.

அம்போன்னு என்னை நடுத்தெருவிலே விட்டுட்டு ஓடிட்டார்.இதிலிருந்தே அவர்தான் குற்றவாளின்னு தெரிஞ்சிடுச்சே..இனி இந்த குழந்தை எனக்கு எதுக்கு ? உங்க காலைப் பிடிச்சு கேட்டுக்கிறேன்..தயவுசெஞ்சு கலைச்சிடுங்க டாக்டரம்மா..அதுக்கும் இந்த நோய் பரவியிருக்கும்தானேபாதம் தொட்டு கும்பிட்டுக் கெஞ்சினாள்.

அதுக்கும் நோய் தொற்றிக்கிறதுக்கு வாய்ப்பில்லை.. நூத்துக்கு தொண்ணூற்றுஐந்து பெர்செண்ட் குழந்தைகளுக்கு நோய்வராதுன்னு உறுதியாக நம்பலாம். உன் குழந்தைக்கு எதிர்ப்புச்சக்தி அதிகமாக இருந்து அந்த நோய் தொற்றாமல் விரட்டிடும்னு நல்லதை நினைப்போமே..அது மட்டுமில்லாமல், உன் வயிற்றிலே குழந்தை நல்லா வளர்ந்திருக்கு  அதை அழிக்க முடியாது.. டூ லேட்…உன் உயிருக்கு ஆபத்து.. ரிஸ்க் எடுத்து எதாவது விபரீதம் ஆகிட்டா அப்புறம் நானும் சிக்கலில் மாட்டிப்பேன்..பதமாகஎடுத்துரைத்தாள்.

இதுக்கு தற்கொலைதான் முடிவு..வேறு வழி தெரியலைவார்த்தையில் அனல் தெறித்தது. விழிகள் அக்னியாய் சிவந்துபோனது.

நோ..ஏன் தற்கொலை, அது, இதுன்னு அவசரப்பட்டு தீர்மனிக்கிறேம்மா..இந்த இடத்துக்குப் உடனே போ..நான் அனுப்பியதாகச் சொல்லு.. போனில் அவங்ககிட்டே நான் விவரம் தெரிவிச்சிடறேன்.. இப்ப இருக்கிற வீட்டைக் காலி பண்ணிட்டு சீக்கிரம் அங்கே போய்த் தங்கிக்கோ..உன்னை மாதிரி பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவுகிற தொண்டு நிறுவனம் அது..முகவரி அட்டையை வழங்கி, அந்தத் தொண்டு மையத்துக்குப் போகும்வழியையும் சொன்னாள்.

அதுதான் சரியான இடம். பிள்ளை பிறக்கும் வரை தங்கிக்குவோம். யார் பிழைத்தாலும் அங்கே அடைக்கலம் ஆகிடலாம்..காப்பாற்ற நல்ல உள்ளங்கள்,,பாதுகாப்பாக நடமாட சிறந்த இல்லம்முடிவெடுத்து அந்த முகவரி நோக்கி விரைந்தாள் காமாட்சி.

வாசு

தனியார் மருத்துவமனை

டாக்டர்  எனக்கு சின்ன வயசிலேருந்து மூச்சுத்திணறல் தொடருது..குளிர்காலம் வந்துச்சுன்னா ஒரே சளி இருமல்..தூசு கண்டால் அலர்ஜி..ஆனால் எனக்கு தினமும் தூசு,அழுக்கோடுதான் வேலை..ஏன்னா நானொரு டிப்ளமா முடிச்ச கார்மெக்கானிக்..

கலகலப்பாக பேசறீங்க மிஸ்டர் வாசு.கவலைப்படாதீங்க. கொஞ்சம் கொஞ்சமா உங்க வியாதியை சரி பண்ணிடலாம்நண்பனாகப் பாவித்து வாசுவைத் தேற்றினார் டாக்டர் வசந்த்.

சார்..இந்தாங்க..இவருடைய பிளட் டெஸ்ட் ரிப்போர்ட்உதவியாளர் நீட்டிய பேப்பரை உன்னித்துப் படித்த வசந்த்தின் நெற்றியில் எக்கச்சக்க சந்தேக ரேகைகள் பரவிற்று.

வாட் மேன்..நீங்க ஜாலியாகப் பேசனப்பவே நினைச்சேன்.. ஜாலிபேர்வழின்னு இந்த பேப்பர் நிரூபிக்குது..அவனைத் தனிஅறைக்கு அழைத்துச்சென்று ஹெச்ஐவி இருப்பதை பவ்வியமாகக் கூறினார்.

என்ன டாக்டர் ஜோக் அடிக்கிறீங்களா.. தப்பு தண்டா செய்றதுக்கு வாய்ப்பே இல்லை. தாய்,தந்தையை இழந்தவன்.கருணை அடிப்படையில்-வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மாணவன் என்கிற கணக்கில் இலவச ஹாஸ்டலில் தங்கி, படிப்பை முடித்து, தற்போது உழைத்துச் சம்பாரிக்கும் நல்லமனிதன்..என்று தன் உண்மைக்கதையைச் சொல்லிக் கதறினான்.

உங்க ரத்தத்திலே இது எப்படி கலந்திருக்கும்னு யோசியுங்க..க்ளு கொடுத்து, அவனது நினைவுகளைக் கிளறினார் வசந்த்.

ஆமாம் சார்..ஒரு மாசத்துக்கு முன்பு, ஒரு அம்பாசிடர்டாக்ஸிக்கு டயர் மாத்தினேன்..பின் பக்க சீட்டிலிருந்த ஸ்பானரை எடுத்தப்ப, கையில் முள் மாதிரி ஏதோ குத்திச்சு.. என்னவா யிருக்கும்னு தேடித் தடவிப் பார்த்தா இன்ஜெக்ஷன் போடற ஊசி டாக்டர்.. அதுபத்தி அந்த டிரைவர்கிட்டே சொன்னேன். அன்னாடம் நிறைய சவாரி ஏறுது,,எவன் பையிலிருந்தோ நழுவி விழுந்திருக்கும்னு தமாஷா சிரிச்சு சொல்லிட்டுப் போயிட்டான் சார்..விவரித்தான்.

அந்த ஊசி பலர் பயன்படுத்தினதாக இருக்கும்.அதிலிருந்த்து விஷக்கிருமி உங்க காயம் வழியாக உடம்புக்குள்ளே பாய்ஞ்சிடுச்சு..தப்பு செய்யாமலே தப்பு நடந்திருச்சு.அதைப் பத்திப் பேசிப் பயனில்லை.. இனி நடக்கப்போகிறதைப் பத்தி யோசிப்போம்..இந்த மருந்து மாத்திரைகளை தொடர்ந்து தவறாமல் சாப்பிடுங்க..வியாதியை முழுசையும் தீர்த்திடும்னு  உத்திரவாதம் தரமாட்டேன்.. கெட்ட சக்தியை எதிர்க்கிற சக்தி கொஞ்சம் இருக்கும்.. அவ்வளுவுதான். கல்யாண நினைப்பே உனக்கு வரக்கூடாது. ப்ளீஸ்..இதைச் சொல்றதுக்கு சங்கடமாயிருக்கு வாசு..அவரது ஆறுதலில் பச்சாதாபம் வெளிப்பட்டது. கேட்டதும் உடம்பெல்லாம் நடுக்கம் குடியேறி-அச்சம் பரவி-தொங்கிய முகத்தோடு, தளர்ந்த நடை போட்டு வெளியேறினான் வாசு.

அவர்கள்

அன்புக்கரங்கள்- சேவை மையம் இனிதே வரவேற்கிறதுஎன்ற அறிவிப்புப் பலகை தொங்கிய கட்டடத்துக்குள் நுழைந்தான் வாசு.

வணக்கம் மேடம்..நான் வாசு..நேத்து போன் பேசினேனேசேவைமையக்காப்பாளரிடம்நினவுறுத்தினான்.

வாங்க சார் வணக்கம்..உங்களைப் போன்ற உயர்ந்த மனசுக்காரங்களோட உதவியால் தான்இந்த சேவைமையம் சிறப்பா இயங்கிட்டிருக்கு.. காமாட்சி இங்கே வாம்மா.. ஐயா கொடுக்கிற அன்பளிப்புத்தொகையை கணக்கில் சேர்த்திடு..ரசிது எழுதித் தந்திடு.அழைத்தாள்

எதிரில் நின்ற வாசுவைக் கண்டதும் அதிர்ந்தாள்காமாட்சி.. ஆச்சர்யமானாள். முகமலர்ந்தாள்..அப்புறம் தேம்பித் தேம்பி அழுதாள்.

இங்கே- ஏதோவொரு தொண்டு மையத்தில்-அவளைப் பார்ப்போம் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை அவன்.

காமாட்சி..நீ எப்படி இங்கே ?” என அவனும்

நீங்களா..?” என அவளும் முழித்தனர்.

தனக்கு நேர்ந்த அவசர-அவல நிகழ்வுகளை ஒவ்வொன்றாகக் கூறிக் கதறினாள். மும்பைக்கு ஓடி ஒளிந்துகொண்ட மாமன் மாணிக்கம் சமீபத்தில்-லாரி விபத்தில் இறந்து விட்ட தகவலையும் சொல்லி முடித்தாள் அவள்.

ஒரு தவறும் செய்யாமல்- எதிர்பாராமல் தனக்கு ஏற்பட்ட துயரநிகழ்ச்சியைச் சொல்லிக் கலங்கினான் அவன். உண்மையை மறைத்து அவளை ஏமாற்ற மனசு இடங்கொடுக்காததால் ஊரிலிருந்து விலகி,சென்னையில் ஆட்டோமொபைல் ஸ்பேர்ஸ் கடை துவங்கி நடத்துவதையும் கூறினான்.

ஏற்கனவே காமாட்சியின் சோகக்கதை அறிந்த காப்பாளருக்கு அவர்கள் யார் என்பது சட்டென்று புரிந்தது.

ரெண்டு பேருக்கும் இதுநாள்வரை நிகழ்ந்தது விதியின் விளையாட்டு..அதை அறவே மறந்திடுங்கள்..நல்ல வேளை..பாபுவுக்கு அந்த கொடிய வியாதி பரவவில்லை. உங்களுக்கு அது ஒரு இனிய செய்தி.. ஆகவே ரெண்டு பேரும் இணைந்து கொண்டு  புதியதோர் வாழ்வைத் தொடங்குங்கள்.எண்ணத்தில்உதித்த நற்கருத்தை எடுத்துரைத்தார் காப்பாளர்.

காமாட்சி சம்மதிச்சால் நான் என் உயிரைத்தரத் தயார்!வாக்களித்தான் வாசு.

நானும்தான்!ஆனந்தக்கண்ணீர் உகுத்தாள் காமாட்சி

நல்ல நாள் குறிக்கப்பட்டது. ரிஜிஸ்டர் அலுவலர் முன்னிலையில் மணமாலை மாற்றிக் கொண்டனர் காதலர்கள்.

காப்பாளரும்,சேவைமையப்பணியாளர்களும் சாட்சிக் கையொப்பம் இட்டார்கள்.

பாபு மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்தான்.

முதலாமாண்டு திருமண நாள் விழா

ரெண்டு பேரும் மனசு புரிஞ்சிகிட்ட ஆதர்சனத்தம்பதியர் ஆகிட்டீங்க. வாழ்த்துகள். பிறப்பை மட்டுமல்ல,இறப்பையும் தடுக்கும் பாதுகாப்பு சாதனத்தின் உதவியோடு ஒராண்டு காலம் சிறந்த இல்லறம் நடத்திட்டீங்க..பாராட்டுக்கள்..இப்போ எங்களுக்கு ஒரு ஆசை.அதை உங்கிட்டே கேட்கலாமா?” அனைவரின் சார்பாக காப்பாளர் தயக்கத்தோடு முன்மொழிந்தார்.

என்ன அது..? தாரளமாய்க் கேளுங்க..புதிராய் அவர்களை உற்றுப்பார்த்துக் குழம்பினார்கள் தம்பதியர்கள்

இன்னொரு குழந்தைக்கு நீங்கள் முயற்சிக்கலாமே..ஒரே போடு போட்டு ஒருமித்தகுரலில் கேட்டார்கள் தொண்டுமையப் பணியாளர்கள்.

ஓ.. அப்படியா..பலே..பலே நல்ல கேள்வி.. ஏற்கனவே எங்களுக்கு ஒரு குழந்தை பாபு போதும்..அது மட்டுமில்லாமல் காமாட்சி எனக்கும் நான் அவளுக்கும் குழந்தை..எனக்கு எதாவது ஆபத்து வந்தால் அவள் பார்த்துப்பா. அவளுக்கு எதாவது ஒண்ணுன்னா நான் கவனிச்சிப்பேன்..ஒருவேளை,எங்க ரெண்டுபேருடைய உயிரும் போய்விட்டால், எங்க பிள்ளையைக் காத்திட இந்த காப்பகத்திலே நீங்க எல்லாரும் இருக்கீங்களே..பிறகெதுக்கு வீண் பயம்?” சரியான விடை அளித்தான் வாசு. ஆமோதித்து,தலையாட்டினாள் காமாட்சி.

அவர்களின் அற்புத இலட்சியத்தை உணர்ந்து கொண்ட அனைவரின் நெஞ்சங்களில் மகிழ்ச்சி அலை சூழ்ந்து மோதிற்று.

வலதுகரத்தில் காமாட்சியையும், இடதுகரத்தில் பாபுவையும் பிடித்துக்கொண்டு வீடு நோக்கி ஆனந்தமாக நடக்கலானான் வாசு.

அடடே.. ஆதரவுதேடி- இந்தக் காப்பகத்தில் சேர்ந்து தங்கியிருக்கிற எல்லாரும் தன்னம்பிக்கையோடு-ஒற்றுமையாக-ஆனந்தமாக இருக்காங்களே.. சபாஷ்! காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியா இருக்குதே..இவர்கள் இன்னும் பல ஆண்டுகள் இப்படியே சந்தோஷமா காலம் தள்ளட்டும்.தீர்மானத்துடன் தனது பாசக்கயிற்றை மடக்கி சுருட்டி வைத்துக்கொண்டு திரும்பிச் செல்லலானான் எமதர்மன்.

—-

சான்று / குறிஞ்சிப்பாட்டு:

  1. நின்குற்றம் இல்லை நிரைதொடியும் பண்புடையள். என்குற்றம் யானும் உணர்கலேன் – பொன்குன்று அருவி கொழிக்கும் அணிமலை நாடன் தெரியுங்கால் தீய திலன்.  – வெண்பா
  2. ஆற்றல்சால் கேள்வி அறம் பொருள் இன்பத்தைப் போற்றிப் புனைந்த பொருளிற்றே- தேற்ற மறையோர் மணம்எட்டின் ஐந்தாம் மணத்திற் குறையாக் குறிஞ்சிக் குணம்!

One thought on “சிறுகதைப் போட்டி – 27 : பயந்து ஓடிய பயம் – மாலா உத்தண்டராமன்

Leave a Comment