சிறுகதைப் போட்டி – 29 : தேசத்தைக்காத்தல் செய் – மீரா ஜானகிராமன்

“புனித்! ஹோம் வொர்க் பண்ணலாமா?” கண் சிமிட்டிக் கேட்டாள் மேகா.

“ம்…..ம்…நான் ரெடிம்மா” ஆர்வமாய் தலையாட்டினான் ஐந்து வயது புனித்.

“சுருண்ட தங்க நிற கேசம், துறுதுறு கண்கள், சந்தன நிறம், சிரிக்கும் அழகிய முகம்” என்று ஏன் பரத்தை போலவே பிறந்திருக்கிறாய் புனித்? என்று நினைத்துக்கொண்டாள்.

காரியங்கள் எல்லாம் முடிந்து எல்லோரும் கிளம்பியாகி விட்டது. மேகாவின் தோழி சாம்பவி மட்டும் தான் இப்போது உடனிருக்கிறாள். இதோ நாளை அவளும் கிளம்பி விடுவாள். பின் மேகாவும், புனித்தும் மட்டும் தான்.

புனித்,”அப்பா எங்கே?” என்று கேட்க மாட்டான். அவன் அப்பாவை அதிகமாக போட்டோவில் தான் பார்த்திருக்கிறான்..

“சாம்பவி! புனித், பரத் மாதிரியே இருக்கான்ல்ல?” மேகாவின் இந்த கேள்வி சாம்பவியை சங்கடப்படுத்தியது.

“அப்படின்னு…சொல்ல முடியாது.  உங்க ரெண்டு பேரு ஜாடையுமே இருக்கு. இந்த ரவுண்ட் பேஸ், நீளமான மூக்கு எல்லாம் உன்னை மாதிரிதான் இருக்கு. இன்பாக்ட்! உன்னோட இந்த ஜாடை எல்லாம் உங்க அப்பா கிட்டயிருந்து தான் உனக்கு வந்திருக்கு. ஸோ! உன் அப்பா மாதிரியும் இருக்கான்.”  பரத்தை பற்றிய பேச்சை மாற்றுவதாக நினைத்துக்கொண்டு சாம்பவி மேகாவின் அப்பா சிவராமனை ஞாபகப்படுத்திவிட்டாள்.

மேகாவின் அப்பா மேஜர்.சிவராமன். மிடுக்கு, கம்பீரம், நேர்மை,கண்ணியம், கருணை எல்லாம் சரிவிகிதத்தில் சேர்ந்து பக்குவமாய் உருவான உத்தமமான மனிதர்.

 

மிலிட்டரியில் மேஜராக இருந்தாரே தவிர, வீட்டில் என்றும் மைனர் தான். மேகா ஒரே பெண் என்பதால் ரொம்பவே செல்லம். மேகாவும் அவள் அம்மாவும் கூட்டணியமைத்து அவரை வாருவார்கள். அவரும் எல்லாவற்றையும் ரசித்துக் கொள்வாரே தவிர ஒரு தரமும் கடிந்து ஒரு வார்த்தையும் சொன்னதில்லை. மிலிட்டரிக்காரர் வீடு என்று பேர்தானே ஒழிய, மிலிட்டரி ரூல் என்பதெல்லாம் மருந்துக்கும் இல்லை.

பரத்தை பார்த்திருந்தால், அப்பா எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்? தன்னைப்போலவே ராணுவ அதிகாரி தனக்கு மாப்பிள்ளையாய் வந்ததை நினைத்து… இப்போது மட்டும் என்ன? இருவரும் நிச்சயமாய் வீர சொர்க்கத்தில் சந்தித்துக்கொண்டுதானிருப்பார்கள்.

மாமனார் பூன்ச், மருமகன் புல்வாமா, இருவரும் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் தான்….

அம்மா தமிழ் இலக்கியம் படித்தவள். அப்பாவின் வேலை அவளுக்கு அவ்வளவு பெருமை. தமிழ் இலக்கியங்களிலிருந்து அடிக்கடி நிறைய சொல்லுவாள். பாரதியார் ரொம்ப பிடிக்கும். அப்பாவை விட அம்மா கொஞ்சம் கொடுத்து வைத்தவள் என்று தான் சொல்லவேண்டும். பரத்துடனான மேகாவின் காதல் திருமணத்தில் முடிந்து புனித்தும் பிறந்த பின் பார்த்துவிட்டுத்தான் போனாள்.

பரத். வீட்டில் காதலும், வேலையில் வீரமும் காட்டியவன். “மேகா ! நீயும் நானும் என்னிக்கி சேர்ந்திருக்கோமோ அன்னிக்கித்தான் நமக்கு தீபாவளி, பொங்கல், புதுவருஷம், பிறந்தநாள், கல்யாண நாள் எல்லாம்.” என்பான்.

உண்மைதான் அவனோடு இருந்த நாட்கள் எல்லாமே விஷேஷ நாட்கள் தான். அவனோடு வாழ்ந்த கொஞ்ச காலத்திலேயே இந்த பிறவி முழுவதற்குமான காதலை தந்துவிட்டான்.

“அம்மா….ஹோம் வொர்க் பண்ணலாம்மா….அம்மா ஹோம் வொர்க் பண்ணலாம் வாம்மா” என்று புனித் உலுக்க நிகழ்காலத்திற்கு வந்தாள் மேகா.

“சரி…வா..” புத்தகப்பையை எடுத்து வைத்துக்கொண்டு அவளருகில் அமர்ந்தான் புனித்.

“சரி…அம்மாக்கு ஒண்ணு சொல்லு, நீ பெரியவனாகி என்னவாகபோற?”

“ஆர்மி ஆபீஸர்”

“வெரிகுட்….இன்னொரு வாட்டி சொல்லு”

“ஆர்மி ஆபீஸர்”

“சமத்து, இனிமே தினமும் நாம படிக்க உட்காரரச்சே இதை சொல்லிட்டுத்தான் படிக்க ஆரம்பிக்கணும், சரியா?”

சரியென்று தலையாட்டினான் புனித்.

பார்த்துக்கொண்டிருந்த சாம்பவிக்குத்தான் அதிர்ச்சியாக இருந்தது.

“மேகா…எதுக்கு குழந்தைக்கு இப்படி சொல்லிக்குடுக்கிற? மிலிட்டரில சேர்ந்து உன் அப்பா, பரத் எல்லாரும் போயிட்டாங்க. இப்ப உனக்குன்னு இருக்கிறது இவன் ஒருத்தன் தான். இவனையும் நீ…….”

மேகாவின் கண்களில் கண்ணீரும், பெருமிதமும் போட்டிப்போட்டன.

“சாம்பவி…. என் அம்மா தமிழ் இலக்கியம் படிச்சவங்க. அவங்க புறநானூறுலருந்து அடிக்கடி ஒரு செய்யுள் சொல்லுவாங்க. அதை எழுதினவங்களும் ஒரு லேடி தானாம். அது என்னன்னா, ஒரு பொண்ணோட அப்பா போர்ல இறந்துட்டாராம். கொஞ்ச வருஷம் கழிச்சு நடந்த இன்னொரு சண்டையில அவ ஹஸ்பெண்டும் இறந்துட்டானாம். இன்னொரு போர் வந்த போது இவன விட்டா தனக்குன்னு வேற யாரும் இல்லான்னு தெரிஞ்சும், போருக்குப்போனா திரும்பி வர மாட்டான்னு தெரிஞ்சும் தன்னோட பிஞ்சு மகனை சீவி, சிங்கரிச்சு அவன் கையில வேலை குடுத்து போருக்கு அனுப்பினாளாம் ஒரு வீர தமிழ்ப்பெண்.”

உணர்ச்சி மேலீட்டால் மேகாவின் முகம் மேலும் சிவந்தது, குரல் தழுதழுத்தது.

“நீ சொல்லு சாம்பவி… நான் ஒரு வீர தமிழச்சி இல்ல? இதை நான் செய்யலன்னா என் அப்பா அம்மாக்கும், பரத்துக்கும் நான் வேற என்ன செய்ய போறேன்? அதோட இது என் நாடு இல்ல… இதுல தானே பொறந்திருக்கேன்….இந்த தேசம் போடற சாப்பாட்டைத்தானே சாப்பிடறேன்…இந்த பூமி மேல தானே கால வச்சி நடக்கிறேன். பதிலுக்கு நான் என் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டாம்? என்னால வேற என்ன செய்ய முடியும்?”

இப்போது மேகாவின் கண்களிலிருந்த கண்ணீரும், பெருமிதமும் சாம்பவியின் கண்களிலும் தொற்றியிருந்தன. மேகாவை ஆதரவாக அணைத்துக்கொண்டாள் சாம்பவி.  புனித் எப்போதும் போல் பூவாய் சிரித்துக்கொண்டிருந்தான்.

 

புறநானூறு 279 :

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார்
திணை: வாகை
துறை: மூதின் முல்லை

கெடுக சிந்தை ; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து, களத்துஒழிந் தன்னே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,
பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,
வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒருமகன் அல்லது இல்லோள்,
செருமுக நோக்கிச் செல்க என விடுமே!

12 COMMENTS

  1. அழகான கதை. இலக்கியம் சார்ந்த கதை என்றால் பெரும்பாலும் அகத்திணையே பெரும்பாலோரின் தேர்வாக இருக்கும். புறநானூறு வித்தியாசமான களம். ரெம்ப அழகா எழுதி இருக்கீங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙂

  2. தேசத்தைக்காத்தல் செய் – மீரா ஜானகிராமன் அக்கா, சிறந்த சிந்தனை, நல்ல கதை. அருமை. வாழ்த்துக்கள்.

  3. மிக அருமையான சிறுகதை. மனிதநேய பண்பாட்டை எளிய முறையில் உணர வைத்த மீராவுக்கு பாராட்டுக்கள்.

  4. புலாங்கிதம் அடைந்தேன் மிரா…… இவர்களை பற்றிய கதைகள் நிறைய கேட்டாலும் சலிப்பதே இல்லை.

  5. நல்ல கதை …வீரம் தமிழர் அடையாளம் என்பதுபற்றி சிறப்பு .
    இளைய தலைமுறைக்கு நல்ல கருத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here