சிறுகதைப் போட்டி – 40 : காதல் நதியினிலே!!! [பகுதி 2] – பௌசியா

<< காதல் நதியினிலே!!! – பகுதி 1

காதல் நதியினிலே!!! – பகுதி 3>>

3

“மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டும் காணேன் மாண்தக் கோனை”

குடகின் குலமகள் கன்னிக்காவிரி தன் நாயகனை தழுவி இன்பம் காணும் துறையை தன்னகத்தே கொண்ட கழாரின் பொழுது வழக்கத்திற்கு மாறாக இன்று வெகுவேகமாக புலர்ந்து கொண்டிருந்தது. கலம் செலுத்தி வணிகம் செய்யும் புகார் நகரத்திற்கு ஐந்துகல் தொலைவில் உள்ள கழார், இன்று புகார் நகரைவிட சுறுசுறுப்பாக காணப்பட்டது. மாளிகைகள், வீடுகள் அனைத்தும் புதுசுண்ணம்  வர்ணம் பூசி, வாயில்களில் தோரணம் கட்டப்பட்டு, வாயில்களில் வண்ணக்கோலங்கள் இடப்பட்டு கழார் நகரமே இந்திரலோகம் போலக் காட்சி தந்தது. கழாரின் அக்கம் பக்கத்து ஊர்களை சேர்ந்தவர்கள் நான்கு நாட்கள் முன்னரே, கழாரில் உள்ள தங்கள் உறவினர் வீடுகளுக்கு வரத் துவங்கிவிட்டிருந்தனர்.

புகார் மற்றும் கழாரில் உள்ள தங்கும் விடுதிகளில் உணவு சமைத்தவண்ணம் இருந்தது. காளையரும் கன்னியரும் தங்கள் காதல்மொழிகளை விழிகளால் பரிமாறிக்கொண்டனர். இத்தனை கோலாகலமும் ஆண்டுதோறும் கழார் நகரில் நடைபெறும் ஒன்று. இவற்றிற்கு எல்லாம் காரணம், புகாரில் கடலுடன் கலக்கும் காவிரி, இந்த கழார் ஆற்றுத்துறையில் செழிப்புற்று இருப்பாள். எனவே, இந்த கழார்துறை கன்னியரும், காளையரும் மகிழ்ந்து விளையாடும் புனல்விளையாட்டிற்கு பெயர் பெற்றது. நாளடைவில் இத்துறையில் நடைபெறும் “புனல்விழா” நாடு நகரங்களில் எல்லாம் பரவி பெரும்புகழை அடையத்துவங்கியது. இவ்வழக்கத்தை மேற்கொண்டு இந்த ஆண்டும் கழார், புனல்விழாவிற்கு தயாராகிவிட்டது. இதில் கலந்துகொள்ள சேர, பாண்டிய நாடுகளில் உள்ள நீச்சல் வீரர்களுக்கு அழைப்புவிடுக்கப்படும். இவ்விளையாட்டுகளை காண மக்கள் அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்து வருவது வழக்கமாக இருந்தது.

கழாரின் ஆற்றுத்துறை இன்று வெகு அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. புனல் விளையாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த நீச்சல் வீரர்களும், ஆடல்மகளிரும் தங்களுக்காக தரப்பட்ட இடத்தில் ஒப்பனைகளில் ஈடுபட்டிருந்தனர். இவ்விழாவில் சோழநாட்டின் மாமன்னர் கரிகால் பெருவளத்தான் தன் மகள் ஆதிமந்தியுடன் கலந்துகொண்டு சிறப்பிப்பார் என்பதனால் கட்டுக்காவல்கள் சற்று பலமாகவே இருந்தது. புனல்விழா துவங்க இன்னமும் ஏழரை நாழிகை நேரம் இருந்ததனால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தங்களுக்கான இடங்களை ஆக்கிரமிப்பு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் சிலர், வேற்று நாட்டில் இருந்து வந்திருந்த தங்கள் மனம் கவர்ந்த நீச்சல் வீரர்களை கண்டு பேசி மகிழ்ந்திருந்தனர். போட்டிகளில் கலந்துகொள்ள வந்திருந்த வீரர்களும், தங்களுடன் ஆடலில் கலந்துகொள்ளும் ஆடல் பெண்களிடம் இன்று நடைபெறவிருக்கும் போட்டியைப்பற்றி பேசிக்கொண்டிருந்தனர். மேலும் சில வீரர்கள் தங்களுடன் வந்திருந்த தங்கள் நண்பர்களுடன் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தனர். நீச்சல் நடன விழாவை மேலும் சிறப்பிக்க வந்திருந்த கொம்பு, பறை இசை கலைஞர்கள் தங்களுக்கென தரப்பட்ட கூடாரத்தில் தங்கள் இசைக்கருவிகளை தயார்படுத்திக் கொண்டிருந்தனர்.

இத்தகைய ஆரவாரங்களுக்கிடையே ஒரே மனநிலை கொண்ட இரு உள்ளங்கள் எதிரெதிர் திசைகளில் வெறுமையாய் நின்றிருந்தன. இருவரையும் அவரவர் தோழியர் தேற்றிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருத்தி நமக்கு முன்னமே அறிமுகமான ஆதிமந்தி. மற்றொருத்தி ‘காவிரி’.

“ஆதிமந்தி” “உன்னைத்தான் அழைக்கிறேன்! கேட்கிறதா தேவி”, என்ற நித்திலாவின் குரலில் அன்பும் அரவணைப்பும் மேலோங்கி இருந்தது.

“………..” ”

இப்படி எதுவும் பேசாமல் சாளரத்தின் வழி காவிரியையே பார்த்துக் கொண்டிருந்தால் என்னவென்று நினைப்பது ஆதிமந்தி”, என்றபோது நித்திலாவின் குரல் பெரும் துயரத்தால் உடைந்திருந்தது.

தன் மௌனம் தன் தோழியை வருந்த செய்கிறதே என மனம் துன்பப்பட்ட ஆதிமந்தி, “நித்திலா என் மனதை நான் கூறித்தான் நீ அறிவாயா? என் நினைவுகள், இன்பம், துன்பம் அனைத்தும் நீ அறிந்ததுதானே! ஏற்கனவே வாடி நிற்கும் என்னை, உன் செய்கை மேலும் துவள செய்கிறது. என்னை தனிமையில் விட்டு விலகிச்செல்!”, என்றாள்.

“ஆதிமந்தி! இதே சம்பாஷணை நம்மிடையே பலமுறை நிகழ்ந்துள்ளது. உன் மனதை அறிந்து உன்னிடம் பலமுறை பரிசில் பெற்றிருக்கிறேன். ஆனால் இன்று நான் உன்னை விட்டு விலகிச்செல்ல வேண்டும் என்கிறாயே?! சொல் ஆதிமந்தி! நானுமற்ற தனிமை உன்னை மகிழ்விக்கும் எனில், இதோ நான் சென்றுவிடுகிறேன். உன் அமைதியும் மகிழ்ச்சியுமே எனக்கு முக்கியம். ஆனால் ஒன்று ஆதிமந்தி! உன்னை நான் தனிமையின் வசம் விட்டுச்செல்லும் அதே நேரத்தில், ஆட்டன் அத்தியின் நினைவுகள் உன்னை அலைக்கழித்துவிடுமே என்று எண்ணித்தான் வருந்துகிறேன்”, என்று சோகமே உருவாய் கூறிய நித்திலாவை, கண்ணீர் வழியும் விழிகளுடன் நோக்கினாள் ஆதிமந்தி.

“ஆம் ஆதிமந்தி! உன் நிழலாய் வாழும் எனக்கு உன் உள்ளம் என்னவென்று புரியாதா?”, என்ற நித்திலாவை ஓடிச்சென்று அணைத்த ஆதிமந்தி, அவள் தோளில் சாய்ந்து கண்ணீரை ஆறாகப் பெருக்கினாள்.

தோழியின் செய்கையால் ஒருகணம் திகைத்து நின்ற நித்திலா, நொடியில் தன்னை ஆசுவாசப்படுத்தி ஆதிமந்தியின் அழகிய முகவாயை பிடித்து கொஞ்சலானாள். “ஆதிமந்தி! சோணாட்டின் இளவரசி, எங்கள் மன்னர் கரிகால் பெருவளத்தானின் செல்வப் புதல்வி இப்படி அழலாமா? இப்போதாவது உன் உள்ளத்துயரை கூறிவிடு. என்னால் இயன்றதை செய்து உன் துன்பத்தை போக்குகின்றேன்”, என்ற நித்திலாவை ஆறுதலுடன் நோக்கினாள் ஆதிமந்தி.

கடந்த ஆண்டு இதே நாளில், தன் தந்தையுடன் படை பரிவாரங்கள் சூழ்ந்து வர, கழார் ஆற்றுத்துறையில் ஆட்டன் அத்தியை சந்தித்தது முதல், முதல் பார்வையிலேயே இருவரும் தத்தம் மனதை பறிக்கொடுத்தது வரையிலும், இவ்வாண்டு நிகழவிருக்கும் புனல்நீர் விளையாட்டில் தான் பெரும் வெற்றியின் பரிசாக மன்னரிடம் தன்னை பெண் கேட்டு திருமணம் செய்வதாகவும் கூறித் தன் கையடித்து வாக்கு தந்தது முதலான அனைத்தையும் ஒன்றுவிடாமல் தோழிக்கு உரைத்தாள் ஆதிமந்தி.