சிறுகதைப் போட்டி – 40 : காதல் நதியினிலே!!! [பகுதி 3] – பௌசியா

<< காதல் நதியினிலே!!! – பகுதி 2

காதல் நதியினிலே!!! – பகுதி 4>>

5

‘ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை
கலி கொள் சிற்றமொடு கரிகால் காண
புனல் நயந்து ஆடும் அத்தி’

‘சோழநாடு சோறுடைத்து’. ஆம் பசித்த பிள்ளைக்கு தன் உதிரத்தை பாலாக ஊட்டும் அன்னையை போன்ற காவிரியாற்றின் அருளால் எங்கும் பசுமையான வயல்வெளிகளையும், முப்போகமும் வளமாய் விளையும் கழனிகளையும் கொண்டிருந்தது சோழ நாடு. நாட்டின் செழிப்பு நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தோடு இணைந்த ஒன்று. அவ்வகையில் சோழ நாட்டு குடியானவன் கூட செல்வந்தனாய் வாழ்ந்திருந்தான் என்றால், அதற்கு அன்னை காவிரியின் கருணையே காரணம். காவிரி அன்னையின் கருணைக்கு கைம்மாறாக சோழ நாட்டு மக்கள் காவிரியின் கரையோரத்தில் அன்னைக்கு பொங்கலிட்டு, தீபம் ஏற்றி வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

காவிரி அன்னைக்கு பொங்கல் வைத்து வழிப்படுகளை முடித்த மக்கள், கூட்டம் கூட்டமாக ஆட்டனந்தி நிகழ்த்தவிருக்கும் புனல் விளையாட்டினை காண விரைந்துக் கொண்டிருந்தார்கள். சோழ நாட்டின் மக்கள் இவ்வாறு விரைந்துக் கொண்டிருக்க, புகாரில் இருந்த சோழன் கரிகால் பெருவளத்தானின் அரண்மனை அந்தப்புரம் அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது இளவரசி ஆதிமந்தியால். நித்திலாவுடன் உரையாடியதில் இருந்து ஆதிமந்திக்கு புகாரில் இருப்புக் கொள்ளவில்லை. பன்னீர் கலந்த தூய நீரில் நீராடியவள், அகிலும் சந்தனமும் கலந்த புகையில் தன் கூந்தலை உலர்த்திக் கொண்டாள். நீலமணியின் வண்ணத்தை ஒத்த கச்சை அணிந்தவள், அதனை மறைக்கும் விதமாக பொன்னாலான ஆரத்தை அணிந்தாள். அந்த ஆரமானது விலைமதிப்பற்ற கொற்கை முத்துக்களாலும், வைர வைடூரியங்களாலும் அழகுற வடிவமைக்கப்பட்டிருந்தது. தலையை வாரி உச்சியில் கொண்டைப்போல் கூந்தலை சுழற்றி, கொண்டையை தொடர்ந்து தழைய தழைய பின்னல் இட்டனர் பணிப்பெண்கள். தலையின் உச்சியில் பின்புறம் நோக்கி அணியும் இராக்குடியையம், அதனுடன் பொன்னும் மணிகளும் பதிக்கப்பட்ட பிறையையும் கொண்டு அலங்கரித்தாள். பிறையை தொடர்ந்து நெற்றியில் அணியும் பொற் சதங்கைகள் கோர்க்கப்பட்ட இலம்பகத்தை அணிந்து அதற்கு இணையாக நெற்றியை சாந்து பூசி அலங்கரித்தாள். இதனைத் தொடர்ந்து நெற்றியை சுற்றி அறைவட்டமாக அலங்கரிக்கும் கன்னசரத்தை அணிந்தாள். பின்னப்பட்ட கூந்தலில், ஆடையின் மீது சடாங்கம் வைத்து கட்டி, ஆடையின் நுனியில் வைரமும், பொன்னும் இழைத்து செய்யப்பட்ட குஞ்சத்தை கட்டி தன்னை அழகுப்படுத்திக் கொண்டாள் ஆதிமந்தி. இதனை எல்லாம் கண்ணுற்ற தோழியர் திகைத்து நின்றனர்.

ஆதிமந்தி குணத்தால் தன் தந்தையைப் போன்றவள். ஏழை, எளிய மக்களுடன் விரும்பி பழகும் குணம் கொண்டவள். குடிமக்களோடு பழகுவதற்காக தன்னை மிக எளிமையாக அழகுப்படுத்திக் கொள்வாள். ஆனால் இன்றோ அழகிற்கு அணி செய்வது போல் தன்னை தேவலோக கன்னியை போல அலங்கரித்துக் கொண்டிருப்பதை காணும் தோழியர் திகைப்புற்று நிற்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை அல்லவா?

தலையலங்காரத்தை முடித்தவள் சுற்றிலும் மணிகளால் ஆன, நடுவில் வைரம் பதித்த மணித்தோடு அணிந்தாள். அதற்கு பொருத்தமாக தோட்டிற்கு மேலே காதின் விளிம்பிலிருந்து வரிசையாக சிவப்புக் கற்கள் பதிக்கப்பட்ட, அடியில் சிறு சதங்கை தொங்கவிடப்பட்ட கன்னப்பூ அணிகலனை அணிந்தாள். இவ்வாறு இன்று ஆதிமந்தி தான் அணியும் ஆபரணங்கள், ஆடை என அனைத்தையும் வெகு நேர்த்தியாக தேர்ந்தெடுத்து தன்னை அலங்கரித்தாள்.

“ஏதேது, இளவரசியார் தன் மணாளன் கரம் பற்றி இன்றே சேரநாடு பயணமாகிவிடுவார் போலிருக்கிறதே”, என்ற நித்திலாவின் கேலிப்பேச்சினால் முகம் சிவந்தாள் ஆதிமந்தி.

“போதும் தேவியாரே! நெற்றியில் இட்ட திலகம் முகம் முழுவதும் பரவினாற் போல் சிவந்து விட்டதே! வெட்கத்தை சற்றே மீதி வைத்திருங்கள். உங்கள் சந்திர வதனத்தில் பரவும் செம்மையை காண சேர நாட்டு இளவரசன் மீனைப்போல் நீந்தியே சோழநாட்டை அடைந்தானாம்”, என்ற கேலிப்பேச்சை இரசித்தவாறே தன் அலங்காரத்தை முடித்தாள் ஆதிமந்தி. பூரண அலங்காரத்தாலும், தன் தலைவனை காணப்போகிறோம் என்ற அன்பின் மிகுதியாலும் ஆதிமந்தி என்றுமில்லாத பேரழகுடன் காணப்பட்டாள்.

ஆதிமந்தி தன்னை பூரணமாய் அலங்கரித்து முடிக்கவும், வாயிற்காவலனின் அறிவிப்பின் பேரில் தோழிப்பெண், “ஆற்றுத்துறைக்கு கிளம்பலாமா?”, என்று மன்னர் அனுப்பிய செய்தியை கொண்டு வரவும் சரியாக இருந்தது.இதற்காகவே காத்திருந்த ஆதிமத்தி, இறக்கை கட்டினாற் போல விரைந்து சென்று தன் தந்தையை வணங்கி நின்றாள்.

அரசர் கரிகால் பெருவளத்தான் இளம்வயதில் தன் தந்தையை இழந்தவர். சோணாட்டு மக்களின் அன்பால் அரவணைத்து பாதுகாக்கப்பட்டு தன் நாட்டின் மீது கொண்ட காதலால் இன்று சேர, பாண்டியரும், வேளிரும் நெருங்க அஞ்சும் அரிமாவென அரசுக்கட்டில் ஏறி ஆட்சி செய்து வருபவர். நாட்டின் அரசன் எனினும் மக்கள் நலன் ஒன்றையே தன் தலையாய கடமையாக கொண்டு வாழ்ந்து வந்தவர். காடுகளை சீராக்கி, குளம் வெட்டி மக்கள் வாழ்வாதாரத்திற்கு வழிசெய்தவர். காவிரிக்கு அணை கட்டி சோழ நாட்டை செழிக்க செய்தவர். இத்தகைய அரசனை பெற்ற நாட்டு மக்கள் கரிகாலனை இறைவனுக்கு இணையாக வணங்கி வந்தனர். அவரை மட்டுமின்றி இளவரசியையும் தங்கள் வீட்டு தேவதையாய் கொண்டாடி மகிழ்ந்து வந்தனர். இளவரசியும் என்றும் எளிமையாக மக்களுள் ஒருவளாக இருந்து வந்தாள். தன் அழைப்பின் பேரில் ஓடோடி வந்த இளவரசி ஆதிமந்தி என்றும் இல்லாத அழகோடு இன்று ஆபரணங்கள் பூண்டு காணப்படுவதை கண்ட மன்னருக்கு ஆச்சரியம்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here