சிறுகதைப் போட்டி – 40 : காதல் நதியினிலே!!! [பகுதி 4] – பௌசியா

<< காதல் நதியினிலே!!! – பகுதி 3

7

மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்,
முட்டாச் சிறப்பின் பட்டினம்

காவிரி நதி கடலில் புகும் இடமாதலால் புகார் எனவும், காவிரி நதி கடலில் சங்கமிக்கும் பட்டினத்து நகர் என்பதனால் காவிரிப்பூம்பட்டினம் எனவும் அழைக்கப்பட்ட சோழநாட்டின் துறைமுக நகரம் இரவு, பகல் என்ற வேறுபாடின்றி என்றும் மக்கள் கூட்டமும், பன்னாட்டு வணிகங்கள் நடைபெறுவதனால் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வண்டிகளின் சத்தமும், கொண்டு செல்லும் சரக்குகளை கப்பலில் ஏற்றவும், இறக்குமதியாகும் பொருட்களை பண்டகசாலைக்கு ஏற்றி இறக்க அமர்த்தப்பட்ட அடிமைகளின் நடமாட்டமும் என புகார் தூங்க நகரமாகவே இருந்துவந்தது. இங்குள்ள ஆடவரும், பெண்டிரும் நினைத்த நேரத்தில் வீதிகளில் நடமாட போதிய காவலை ஏற்படுத்தியிருந்தார் பேரரசர் கரிகால் பெருவளத்தான். அவரின் ஆட்சியின்கீழ் மக்கள் எத்தகைய சிரமமும் இன்றி வாழ்ந்துவந்தனர்.

காவிரிப்பூம்பட்டினம், பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்துவந்த ஓர் துறைமுக நகரம். இங்கு சோழனின் அரண்மனை நடுநாயகமாகவும், அதனைச் சுற்றிலும் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் மாளிகைகளும், வீடுகளும் நிறைந்து காணப்பட்டன. இவர்களின் இருப்பிடத்திற்கு அப்பால் வணிகத்தளமும், அதனைச் சுற்றி அயல்நாட்டார் வாழும் புறச்சேரியும் அதனை அடுத்து பரதவர் இருப்பிடங்களும் இருந்தன. புகாரின் நடுநாயகமாக அரண்மனையும், கடலை அடுத்து பரதவர் இருப்பிடமும் உள்ளவாறு அமைக்கப்பட்டிருந்த புகாரின் வீதிகள் வெகுநேர்த்தியாக காணப்பட்டன.

இரவு துவங்கி நீண்ட நேரம் ஆன பின்பும் வீடு திரும்பாத தன் பாட்டனுக்காக காத்திருந்தாள் மருதி. மருதி, பரதவ குடியில் பிறந்தவள். மீன்பிடி தொழில் கைதேர்ந்த மருதியின் தந்தை அவள் சிறுபிள்ளையாய் இருந்தபோதே கடலுக்குள் மீன்பிடிக்க சென்றவர் திரும்பவேயில்லை. அவள் தந்தையின் நினைவாகவே வாழ்ந்து வந்த அவள் தாயும் நீண்ட நாள் வாழாமல் நோயில் படுத்தவள் மருத்துவம் பல செய்தும் பயனின்றி இறந்தேவிட்டாள். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த மருதியை அவளது பாட்டன் தான் ஆதரித்து வளர்த்து வந்தார். மருதியும் தன் நிலை உணர்ந்தவளாய், பாட்டனுக்கு உதவியாக இருந்தாள். மருதி கருமை நிற அழகி எனினும், சிறுவயதில் பாட்டனுடன் துடுப்பு வலித்தவள் என்பதனால் பெண்ணின் மென்மையுடன், வலுவான தோள்களையும் கொண்டவள். பெற்றோர் இல்லாமல் வளர்ந்தவள் ஆதலால், அவளின் பாட்டன் அவளுக்கு பயம் என்பதே சற்றும் இல்லாமல் வளர்த்து வந்தார். இன்று விடியலிலே கடலுக்கு சென்றவர் மற்ற நாட்களில் மீன்பிடி முடிந்ததுமே வீட்டிற்கு வந்து கூழ் குடித்து செல்வது வழக்கம். இன்று வழக்கத்திற்கு மாறாக காலைமுதலே வீட்டிற்கு வந்திராத தன் பாட்டனுக்காக வாசலிலேயே காத்திருந்து காத்திருந்து மருதிக்கு பொறுமையே போய்விட்டது. அக்கம் பக்கத்து குடிசையில் இருந்தவர்களிடம் விசாரித்த வரை அனைவருமே மருதியின் பாட்டனை கழிமுகத்திற்கு அருகில் பார்த்ததாக கூற, இனியும் காத்திருப்பது தவறு என்று எண்ணிய மருதி, தன் குடிசையின் வாயிலை தட்டி வைத்து அடைத்துவிட்டு, பாட்டனை தேடிக்கொண்டு கழிமுகம் நோக்கி நடந்தாள். வழியில் தென்படுவோரிடமும், தன் பாட்டனைப் பற்றி விசாரித்தவாரே விரைந்து நடந்தாள் மருதி. மருதியின் பாட்டனுக்கு அவரின் மகள், மருதியின் தாயார் இறந்தது முதலே வாழ்வின் பிடிப்பற்று போனது. ஆயினும் நடுக்கடலில் தத்தளிக்கும் சிறு படகிற்கு கலங்கரை விளக்கத்தின் மினுக் மினுக் கென்ற ஒளி எத்தகைய நம்பிக்கையை தருமோ, அத்தகைய பற்றுதலாய் இருப்பவள் மருதி. கடலுக்கு சென்றுவிட்டு வருபவர் நேரே தன் பேத்தியை பார்க்க வந்துவிடுவார். அவள் காய்ச்சி வைத்திருக்கும் கஞ்சியை குடித்துவிட்டுத்தான் அவருக்கு வேறு வேலைகளே ஓடும். இப்படிப்பட்டவர் இன்று, பொழுது சாய்ந்தும் குடிசைக்கு வராதது, மருதிக்கு இருப்பு கொள்ளவில்லை. பாட்டனைப் பற்றிய சிந்தனையில் ஓட்டமும் நடையுமாக விரைந்தவள் அரை நாழிகையில் கழிமுகத்தை அடைந்தாள். அங்கே தன் பாட்டன் ஒரு பாறைக்கு அருகில் இருப்பதை கண்டதும் மருதிக்கு உயிரே திரும்பினாற்போல் மகிழ்ந்தாள்.

“பாட்டா… பாட்டா!” என்று கூவிக்கொண்டே தன் பாட்டனை நோக்கி ஓடிய மருதிக்கு அங்கே பாட்டன் தனிமையில் இல்லை உடன் வேறு ஆடவரும் உள்ளனர் என்பது தெரியவந்ததுமே தன் ஓட்டத்தை நடையாக மாற்றிக்கொண்டாள்.

“யாரு? மருதியா? ஏந்தாயி பொழுதுசாஞ்சு இந்நேரத்துக்கு இங்க ஓடியாற?” என்ற தன் பாட்டனுக்கு “பாட்டா! இதே கேள்விய நீயும் கேட்டுப்பாரு. பொழுதுசாஞ்சு எந்நேரமாச்சு. இன்னூ நீ குச்சுக்கு வரல, கஞ்சி கூழு எதுவுங் குடிக்கல” என்று சொல்ல சொல்லவே மருதியின் கண்கள் கலங்கி தொண்டையை அடைத்துக்கொண்டு வந்தது.

“அடப்புள்ள, இதுக்கு ஆறு அழுவாங்களா? இங்க வந்து பாரு தாயி, நான் குச்சுக்கு வர்றதுக்கு பரிசல நிறுத்திட்டு வந்துட்டு இருந்தேன். அப்ப, இவரு தலை இதா இந்த பாறைல மோதி அடிப்பட்டு ஆத்துல பாதி உடம்பும் தரைல பாதி உடம்பும்மா கெடந்தாரு. நான் யாரோ இறந்தவங்கன்னு நெனச்சு புரட்டிப் பாத்தப்பத்தான் உயிர் இருக்கறது தெரியவந்துச்சு. இந்த ஆள நான் ஒருத்தனா தூக்க முடில, அதான், இந்த பாறைல படுக்க வெச்சுட்டு நம்ம வைத்தியர கையோட கூட்டியாந்தேன். நம்ம வைத்தியர் கைப்பட்டவங்க பொழைக்காம போவாங்களா? இதோ இங்கப்பாரு இந்த பையன் ஏதோ முனகிட்டு இருக்கான்” என்று பெரியவர் கூறிமுடிக்கும் வரை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த மருதி, “அய்யோ பாவம் பாட்டா! இவங்க யாருன்னு தெரியலையே” என்று அந்த புதியவனை எட்டிப்பார்த்து கூறினாள்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here