சிறுகதைப் போட்டி – 40 : காதல் நதியினிலே!!! [பகுதி 1] – பௌசியா

1. “தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக் கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று”

குடகின் குலமகள் காவிரிப்பெண் ஓடோடி வருகிறாள். அவளின் வருகை கண்ணுக்கெட்டா கரைகொண்ட கடலையே அதிர செய்கிறது. காவிரி தன் பரப்பை விரித்து, தான் வரும் பாதையில் செழிப்பை விதைத்து ஓடோடி வந்துகொண்டு இருக்கிறாள். இவளின் வேகத்திற்கு ஈடுதர இயலாது ஆங்காங்கே கரை ஒதுங்குகின்றன காவிரியில் குளிக்க குதித்த இலை, தழைகளும், மரத்துண்டுகளும். ஆனாலும் அவளின் வேகம் சற்றும் குறையவில்லை, தான் கொண்ட காதலை, முழுவேகத்துடன் தன் காதலனிடம் சொல்லிவிடும் நோக்குடன், நாணமற்ற பேதை போல், அப்பப்பா ஆனாலும் இந்த காவிரிக்கு இத்தனை வேகம் ஆகாது.

“ஆதிமந்தி…”

துள்ளி ஓடும் காவிரியின் அழகில் மயங்கி நின்ற ஆதிமந்தியின் கவனத்தை கலைத்தது, எதிரே புள்ளிமானை ஒத்த துள்ளலுடன் ஓடோடி வரும் தன் தோழி நித்திலாவின் அழைப்பு.

“சொல் நித்திலா” என்ற தோழியை இமை கொட்டாமல் பார்த்தால் நித்திலா.

நித்திலாவின் குறும்பு பார்வையை தாங்க முடியாமல், “என்னடி நித்திலா, என்னை இன்றுதான் முதன்முதலாய் பார்ப்பது போல பார்க்கிறாயே?” என்றாள் ஆதிமந்தி.

தோழியின் கேள்வியை காதிலேயே போட்டுக்கொள்ளாத நித்திலா ஆதிமந்தியை சுற்றி வந்து பார்த்தாள். ஆதிமந்தியின் தலை முதல் உள்ளங்கால் வரை அளவெடுப்பது போல அவளையே ஆவலுடன் பார்த்தாள் நித்திலா.

“போதுமடி உன் விளையாட்டு” என்ற ஆதிமந்தியின் அதட்டலில் சற்றே பயந்து போன நித்திலா, “ஆதிமந்தி, உன்னை நான் பிறந்தது முதலே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இன்று ஏதோ ஒருமாற்றம் உன்னிடம் தென்படுகிறது. அது… என்னவாக இருக்கும் என்றுதான் பாதாதிகேசம் உன்னை ஆராய்கிறேன்”

“அப்படியா சங்கதி… ஆராய்ந்து பாரடி பெண்ணே! நன்றாக ஆராய்ந்து பார். உன் ஆய்வின் முடிவை பொறுத்து உனக்கான பரிசை வழங்குகிறேன்” என்ற ஆதிமந்தியின் கலீர் சிரிப்புடன் நித்திலாவும் கலந்து கொள்ள, அந்த வனப்பகுதியே இப்பெண்களின் சிரிப்பில் மயங்கி மகிழ்ந்தது.

“அதெல்லாம் இருக்கட்டும் ஆதிமந்தி, நான் ஆற்றங்கரைக்கு வரும்போது நீ எதைப்பற்றியோ தீவிரமாக சிந்தித்துக்கொண்டு இருந்தாயே? என்ன அது?”

“என் சிந்தனை வேறு எதைப்பற்றி இருக்கப்போகிறது நித்திலா? நான் குழந்தையாய் இருக்கும் போதிலிருந்து உடனிருக்கின்றாய். என் சிந்தனை எதைப்பற்றி இருந்திருக்கும் என உனக்குத் தெரியாதா? சரி சொல்லடி பெண்ணே, நான் எதைப்பற்றி சிந்தித்து இருப்பேன்? சரியாக கூறிவிட்டால் உனக்கு இந்த கொற்கை முத்துமாலையை பரிசளிக்கிறேன்” என்ற சவாலை தோழியின் முன்வைத்தாள் ஆதிமந்தி.

“அப்படியா? இதோ ஒரு நொடியில் கண்டுபிடித்துவிடுகிறேன் என் அன்பு தோழியே! ஆனால், கொற்கை முத்துமாலை பரிசை அத்தனை எளிதில் பெற்றுவிட முடியாது என்பதும் நான் அறிந்ததே. நீ எதைப்பற்றி சிந்தித்து இருப்பாய்??? என்ற நித்திலா, இரண்டடி முன்னே எடுத்து வைத்து, காவிரி ஆற்றை பார்த்தவாறு, “ஆனாலும் இங்கே சுழன்று சுழிவிட்டு ஓடுகிறதே காவிரி, இந்த ஆற்றின் ஆழத்தை விட மிகவும் ஆழமானது பெண்கள் மனது என்று புலவர்கள் பாடியிருக்கிறார்கள். இன்று நான் இம்முத்துமாலையை பெற்றுவிட, உன் ஆழ்மனதில் மூழ்கி முத்துக்குளிக்க வேண்டும்” என்றாள் முகத்தை பரிதாபமாக வைத்து.

நித்திலாவின் பரிகாச பேச்சிலும், அவள் முகத்தை பரிதாபமாக வைத்த விதத்திலும் நகைச்சுவை உணர்வு மேலோங்க ஆதிமந்தி பொங்கி வந்த சிரிப்பை அடக்கிவிடாமல், சலங்கை பரல்கள் சிதறினாற்போல் கலீரென சிரித்தாள்.

“ஆதிமந்தி, என்னை பரிகசித்து சிரிக்கின்றாயா? இரு.. இரு.. நீ எதைப்பற்றி சிந்தித்து இருப்பாய் என்று ஆருடம் கூறுகிறேன்.”

“அடேங்கப்பா, என் தோழிப்பெண் நித்திலா ஆருடம் கற்றது என்றோ?”

“பரிகாசம் வேண்டாம். நான் வரும் போது, என்னைக்கூட கவனியாமல் நீ சிந்தித்தது உன் தந்தையைப் பற்றித்தான். என் கணிப்பு சரியா?”

“அருமை நித்திலா! அருமை. எப்படி என் உள்ளத்துணர்வை உள்ளங்கை நெல்லிக்கனியாய் கூறிவிட்டாய்? இதோ பாரடி பெண்ணே! இங்கே துள்ளியோடும் காவிரியைப் பார். குடகில் பிறந்து கடலரசனை அணைக்கும் ஆவலுடன் கட்டுக்கடங்க வேகத்துடன் எவ்வாறு சுழியிட்டு ஓடுகிறாள். இவள் இன்பமாய் இருந்தால், இவள் வரும் பாதையில் இயற்கை செழித்து இருக்கும். மாறாக இவள் கோவம் கொண்டாளோ, கரையோரத்து கிராமங்களும், மக்களும், விலங்குகளும் ஜலமோட்சம் அடைய வேண்டியதுதான்.”

“ஆம், ஆதிமந்தி. அதனாலேயே தான் உன் தந்தை இந்த காவிரியின் வேகத்திற்கு அணைகட்ட ஆணையிட்டார். அவரின் ஆணையை ஏற்று உருவான கல்லணையே  இன்று, “சோழதேசம் சோறுடைத்து” என்ற பெயர் பெற முக்கிய காரணம் அல்லவா.”

“அதேதான் நித்திலா. அதைப்பற்றித்தான் சிந்தித்துக்கொண்டு இருந்தேன். பிள்ளை பெற்ற தாய் சுரக்கும் தாய்ப்பால் போல, பொங்கி வரும் காவிரியை தேக்கி வைத்து, கடலில் கலக்கும் நீரை பயிர் பாசனத்திற்கு செலவழிக்க செய்த இந்நாட்டு மன்னரின் செயலை எண்ணி வியந்துகொண்டு இருந்தேன். அச்சமயத்தில் தான் நீயும் வந்தாய்… பெண்ணே! நித்திலா, இந்தா என் அன்புப்பரிசு கொற்கைமுத்துக்கள் கோர்த்த முத்துமாலை. வரும்காலத்தில் ஆருடத்தில் சிறந்தவளாய் விளங்க என் மனமார்ந்த வாழ்த்துகள்”

“என் அருமை தோழியே! எங்கள் நாட்டின் இளவரசியே… அன்பு ஆதிமந்தியே! இந்த நித்திலாவின் ஆருடம் ஊர் அறிந்த ஒன்று! என்ன அப்படி பார்க்கிறாய், புரியவில்லையா? எங்கள் இளவரசிக்கு என்றும் தன் சிந்தையை நிரப்பி இருப்பவர் எங்கள் மாமன்னர் கரிகால் பெருவளத்தான் மட்டும் தான். அவரையும் மறக்க செய்ய எந்நாட்டு வீராதிவீரன், அசகாய சூரன் வரப்போகிறானோ?”

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here