சிறுகதைப் போட்டி – 14 : களம்புகல் ஓம்புமின்[பகுதி -1] – கா. விசயநரசிம்மன்

தொடுவானத்தில் கதிரவனின் வெளிச்சம் மெல்லிய வைரவூசியாய் நீண்டு பருத்துக்கொண்டிருந்தது. வளிமண்டலம் இல்லாத நிலவின் பரப்பில் கருப்பு வானத்தில் ஊடுருவிய அந்த வெள்ளை ஒளிக்கற்றை மெல்லியதாயினும் நேரடியாய்க் காண இயலாததாய் ஒளிர்ந்தது.

வளிமண்டலமில்லாத நிலவுகளின் விடியல்கள் கவிதையின் பாடுபொருள்கள் அல்ல; அந்நிலவின் பரப்பில் தத்தம் பணியில், அது ஏதேனும் ஒரு குமிழின் வாயிலில் கதிர்வாளைப் பிடித்தபடி சும்மா நிற்பதாய் இருந்தாலும், கருத்தாய் ஈடுபட்டிருந்த தொடிம வீரர்களும் கவிபாடும் கவிஞர் அல்லர்!

பதுமன் இறுமாப்பும், அச்சமும், சோர்வும் கலந்த கலவையாய்த் தொடிமப் படைகளின் பாடிவீடுகளாய் விளங்கிய குமிழ்களின் வரிசையின் ஊடே நடந்தான். இறுமாப்பு, அவனை யாரும் தடுக்காததால் ஏற்பட்டது – படைவீரன் சீருடையில் இருந்தாலும் அவனது தோளில் மின்னிய எலியின் உருவம் அவனை ஒற்றன் என அடையாளம் காட்டியது, எனவே அவனை யாரும் தடுக்கவில்லை, தடுக்கவும் இயலாது, இதற்காகவே அவன் இங்குத் தன் சீருடையில் வந்திருந்தான். அச்சம், அவன் கொண்டு வந்த செய்தியின் கசப்புத்தன்மையினால் உண்டானது – பதி என்ன செல்லப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு – என்ன சொல்வார் என்று அவனுக்குத் தெரிந்திருந்ததன் உறுத்தல். சோர்வு, பயணக் களைப்பு. அதியக் கோளிலிருந்து அதன் நிலவுக்கு 20 காலத்துளிகளில் வந்துவிடலாம் – அதியர்களின் கலத்தில் வருவதென்றால் – இவன் யாருமறியாது வர வேண்டிய நிர்பந்தத்தில் மீத்தாவலைப் பயன்படுத்தி ஏறத்தாழ இரண்டு ஒளிநாள் தொலைவு பயணித்தல்லவா வந்திருக்கிறான்? ஒன்றிரண்டு நொடிகளுக்கு என்றால் மீத்தாவல் விளையாட்டு போல இருக்கும் (சிவ்வென்று புத்துணர்வு தருவதாய்) அதற்கு மேல் பதுமனுக்கு ஒவ்வாது – ஆனால், வேறு வழியில்லை!

தொடிம வீரர்கள் அதியக் கோளை முற்றுகையிடுவதற்கான பணிகளில் மும்முரமாய் இருப்பதைக் காண முடிந்தது பதுமனால். இவனை யாரும் பெரிதாய்க் கண்டுகொள்ளவில்லை, ஆனால் ஒவ்வொரு நிலையாகக் கடந்து அவன் பதியின் குமிழை நோக்கி முன்னேறுகையில் பல்வேறு கண்காணிப்பு அமைப்புகளால் தான் கவனிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம் என்பதைப் பதுமன் நன்கு அறிந்தே இருந்தான். அவனது சீருடையையும் கவசத்தையும் ஊடுவிப் பார்க்கும் ஊடுகதிர்க் கருவிமுதல் அவனது நாடித்துடிப்பையும் இரத்தத்தில் கலந்திருக்கும் வேதிப்பொருள்களையும் தொலைவிலிருந்தே அலசிக்கொண்டிருக்கும் பல்லொலிக் கருவிவரை ஆங்காங்கிருப்பதை அவனால் உணர முடிந்தது! எனினும் பதி இருந்த குமிழியின் வாயிலை அவன் அடைந்ததும் அங்குக் காவல் புரிந்த வீரர்கள் சம்பிரதாயமாக அவனது விவரங்களை விசாரித்தனர்.

தொடிமர்களின் பாடிவீடுகளின் இந்தப் பகுதி நிலவின் ‘முகப்’ பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. அதியக்கோளின் ஒரே நிலவான இத்துணைக்கோள் அதியத்துடன் கடலலைப்பிணைப்பு பெற்று இயங்குவதால் அதன் ஒரு அரைகோளம் எப்போதும் அதியக் கோளை நோக்கியதாகவும், மற்றொரு அரைகோளம் எதிர்த்திசையிலேயும் இருக்கும் – அதியக்கோளை நோக்கியவண்ணம் இருக்கும் பகுதியைத்தான் ‘முகம்’ என்பர், மற்றதை ‘புறம்’ என்பர்.

தொடிமர்கள் அதியக்கோளின் மீது படையெடுத்து, அதனை முற்றுகையிட ஆயத்தம் செய்யத் தோதான பகுதி அக்கோளின் நிலவின் முகந்தானே? தொடிமர்களின் எண்வகைப்படைப் பிரிவுக்கும் தலைவரான, அவற்றின் மாதண்ட நாயகரான, அவரது பதவிக்கேற்ப எல்லா வீரராலும் ‘பதி’ என்று அழைக்கப்படுபவரான பெருஞ்சேனாதிபதி நன்மள்ளனாரின் பாடிவீடு, செயற்கை வளிமண்டலமும் தட்பவெட்ப சீரமைப்பியும் கொண்டதான அந்தப் பெரிய குமிழி, நடுநாயகமாக தொடிமர்களின் கொடி பெரிதாய்ப் பறக்க, அதியக்கோளை உற்று நோக்கும் ஒரு பெருங்கண்ணைப் போல அமைந்திருந்தது. பதுமன் ஒருவித பரவசத்துடன் உள்ளே நுழைந்தான்.

நிலவின் ‘புறத்’தில் இன்னொரு பாடிவீடு அமைந்திருப்பதையும் அவன் அறிந்தேயிருந்தான், அதை மனத்திரையில் கற்பனை செய்தவன், ஒரு வேளை அடுத்து அதற்குள் செல்லும் வாய்ப்பும் அவனுக்கு வாய்த்தாலும் வாய்க்கும் என்பதை எண்ணிப்பார்த்தான், ஒற்றர்படை தண்டநாயகர் அவனை எல்லாவற்றுக்கும் தயாராகத்தான் அனுப்பியிருந்தார். தொடிமக்கோளின் சர்வாதிகார ஆளுநரைக் கூட சந்திப்போம் என்ற எண்ணம் அவனது பரவசத்தை மேலும் கூட்டி உடலில் மெல்லிய புல்லரிப்பை உண்டுபண்ணியது, அவனது உடலில் ஏற்பட்ட அம்மெல்லிய வேறுபாடுகளை வெற்றுவெளியிலிருந்து வளிமண்டலத்திற்குள் வந்ததன் எதிரொலி என்று எண்ணிக்கொண்டன அவனைக் கண்காணித்த கருவிகள்!

பதுமன் உள்ளே நுழைந்து மூச்சுமுகமுடியைக் கழட்டியவுடன் பெருஞ்சேனாதிபதியின் மெய்க்காப்பாளன் ஒருவன் அவன் முன் வந்து, தன்னைத் தொடருமாறு செய்கை காட்டிவிட்டு முன் செல்ல, பதுமன் தொடர்ந்தான். தனக்கு முன்னால் செல்பவன் தனக்கே மெய்க்காப்பாளனாய்ச் செல்வதைப் போல உணர்ந்த பதுமனுக்குப் பெருஞ்சேனாதிபதியின் புகழ்பெற்ற மெய்க்காப்பளர்களாகிய ‘நெருப்பீட்டி’களுள் ஒருவன் தனக்குக் காவல் செய்கிறான் என்ற எண்ணம் பூரிப்பைத் தந்தது. முன்னால் சென்ற அந்த நெருப்பீட்டி சட்டென நின்று திரும்பிப் பதுமனை முறைத்துவிட்டு மீண்டும் முன்னால் செல்லத் தொடங்கினான். பதுமன் எண்ணமும் உணர்வுகளும் அடங்கிப் போனவனாக அவனைப் பின் தொடர்ந்தான்!

ஒரு அறையின் வாசலில் நின்று அருகில் இருந்த ஒரு உலோக வட்டத்தைத் தனது ஈட்டியால் அந்த மெய்க்காப்பாளன் தட்ட, கதவு திறந்துகொண்டது. பதுமனை உள்ளே செல்லச் செய்கை காட்டிவிட்டுக் கதவின் அருகிலேயே நின்று கொண்டான் அந்த நெருப்பீட்டி. பதுமன் உள்ளே நுழைந்தவுடன் அவனுக்குப் பின்னால் கதவுகள் மூடிக்கொள்வதை உணர்ந்தான். அவனுக்கு நேராக ஒரு மேசையும் அதற்குப் பின்னால் ஒரு உயர  நாற்காலியும் இருந்தன. அவ்வறை எந்த விதமான அலங்காரங்களும் இன்றி, மிக வெளிறிய இளஞ்சிவப்பில் மெல்லிய மனவழுத்தம் தரும் அமைப்பில் இருப்பதாகத் தோன்றியது பதுமனுக்கு. அறையைப் பார்வையால் ஒரு சுற்று அளந்து மீண்டும் அந்த நாற்காலியை நோக்கும்போதுதான் அதற்குப் பின்னால் அறையின் இருமூலையிலும் இரண்டு நெருப்பீட்டிகள் நிற்பதைக் கண்டான் பதுமன். அவனது இதயம் ஒரு துடிப்பைத் தவறவிட்டது! இவர்கள் இங்கேயேதான் நிற்கின்றனரா, இல்லை நான் வந்தபின் வந்தனரா?