சிறுகதைப் போட்டி – 14 : களம்புகல் ஓம்புமின்[பகுதி -2] – கா. விசயநரசிம்மன்

தான் தங்கவைக்கப்பட்டிருந்த அறையின் கதவு திறந்து அந்த நெருப்பீட்டி உள்ளே நுழைவதைக் கண்டவுடந்தான் பதுமனுக்கு நிம்மதி ஏற்பட்டது.

எவ்வளவு காலத்துளிகள் கடந்தன என்பதைக் கூட அறிய இயலாத அந்த அறைக்குள் காத்திருப்பது நரக வேதனையாய் இருந்தது. இவனது சோர்வை நீக்க பணிவீரன் கொண்டு வந்து வைத்த சாற்றைக் கூட பதுமனால் முழுதாக அருந்த இயலவில்லை.

விடுவிக்கப்பட்ட சுருள்வில்லைப் போல துள்ளியெழுந்தான் பதுமன், “புறப்படலாமா?”

வந்த நெருப்பீட்டி ‘ஆம்’ என்று தலையசைத்துத் தன்னைப் பின்தொடர செய்கை செய்துவிட்டு முன்னால் மிடுக்காய் நடந்தான்.

பதுமன் தானும் வீரன்தான் என்று காட்டிக்கொள்ள எண்ணியவனாய் அதே மிடுக்கு நடையுடன் அவனைத் தொடர்ந்தான். அடே, நெருப்பீட்டியா! என் அருமை தெரியாதடா இப்போது உனக்கு! நாளை என்னைப் பற்றி உன் மகன் பள்ளியில் படிப்பான், அப்போது சொல்வாய் வெட்கமின்றி எனக்கும் பதுமனாரைத் தெரியும் என்று, ஏதேனும் சிபாரிசு என்று வா, அப்போது இருக்கிறது உனக்கு!

நெருப்பீட்டிகளை முதலில் கண்டபோது அவனுக்குள் பொங்கிய பெருமையும் பற்றும் அவர்களோடு பழகப் பழக (அதாவது அவர்களைப் பின் தொடர்ந்து ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செல்லுதல், எதுவும் பேசாமல் சுவரோடு சுவராய்ச் சிலையென அவர்கள் காத்து நிற்கும் அறையில் இருத்தல் முதலிய பழக்கம்!) கரைந்துவிட்டது பதுமனுக்கு. தொடிமத்திலேயே, ஏன், பேரண்டத்திலேயே தாமே ஆகச் சிறந்த வீரர் படை என்பது போல இயங்கும் அவர்களின் மிடுக்கும் இறுமாப்பும் பதுமனுக்கு எரிச்சலூட்டத் தொடங்கிவிட்டன.

குமிழியைவிட்டு வெளிவந்ததும் வாயிலருகிலேயே ஒரு சிறிய காற்றுந்து காத்திருந்தது அவனுக்காய். பதுமனை அதில் ஏறிக்கொள்ளும்படி செய்கை செய்த நெருப்பீட்டியின் முகத்தில் வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே எரிச்சலும் சினமும் தெரிந்ததாய் தோன்றியது பதுமனுக்கு. நம் எண்ணங்களை இவன் வெறுமனே உணர்கிறானா? அல்லது ஏதேனும் கருவியால் தெளிவாய்ப் படித்தேவிடுகிறானா? ஆ, ஒற்றருக்குத் தெரியாமல் அப்படி ஒரு கருவி இருந்துவிடுமா? சும்மா நின்று காவல் காத்தாலும் இவர்கள் திமிருக்குக் குறைவேயில்லை!

”ம்ம்ம்…” என்று பதுமனின் சிந்தனையைக் கலைத்த நெருப்பீட்டி ‘ஏறு’ என்று மீண்டும் செய்கை செய்துவிட்டுத் தானும் தாவி அக்காற்றுந்தில் ஏறிக்கொண்டான். பதுமன் ஏறி இருக்கையோடு தன்னைப் பிணைத்துக்கொண்டதும் அது ‘விய்ய்ய்ங்ங்ங்’ என்று வழுக்கிச் சென்றது.

தேர்ந்த ஓவியனின் தூரிகைக் கீற்றைப் போல அக்காற்றுந்து பாடிவீடுகளைவிட்டு மேலெழும்பி, நிலவின் பரப்பையொட்டிப் பயணித்து அதன் புறப்பக்கத்தை அடைந்து கீழிறங்கியது.

அங்கிருந்த பாடிவீடு இருமடங்கு பெரியதாய் இருந்தது, அதியர்களின் பார்வையிலிருந்து பெரும்பகுதி படையை மறைக்கத்தான் இவ்வேற்பாடு என்பது பதுமனுக்குத் தெரியும். என்ன ஏற்பாடு செய்து என்ன? அந்தக் கிழவியை இங்கு வரவிட்டாயிற்று! போதாக் குறைக்கு ஆளுநர் நம் படைகளின் பெருக்கையும் திறனையும் அவளுக்கு அணிவகுத்துக் காட்டப் போகிறாராம்! அவள் எல்லாவற்றையும் நன்கு கவனித்துக்கொண்டு நேராக அதியம் சென்று தன் கோளின் ஆளுநரிடமும் தண்டநாயகர்களிடமும் விவரமாய்ப் புட்டுப் புட்டு வைப்பாள்… என்ன முட்டாள்தனம் இது? ’தூது’ என்பது பண்டைய மரபாம்! ஆளுநர் வரலாற்றில் நல்ல பேர் வாங்க நம்மையெல்லாம் முட்டாள் ஆக்குகிறார்! ச்ச! தூதரை உபசரித்தல் மரபு, சரி, அதற்கு இந்தக் கிழவிதான் கிடைத்தாளா? பொல்லாத கிழவி! அவள் போட்டிருக்கும் திட்டம்… ஒற்றர்படை மட்டும் அவள் முகத்திரையைக் கிழிக்காவிட்டால் படையும், பதியும், ஆளுநரும் இந்த நிலவிலேயே தூசியாகப் புரண்டிருப்பார்கள்!

அம்மாபெரும் போர்ரகசியம் இக்கணம் மாதண்ட நாயகருக்கும், ஒற்றர்படை தண்டநாயகருக்கும், தனக்கும் மட்டுமே தெரியும் என்று எண்ணியதில் பதுமனின் நெஞ்சு புடைத்தது! ஆளுநருக்கும் பதி சொல்லியிருப்பாரோ? இல்லை, தன்னையே நேரில் சொல்லும்படி கட்டளையிடுவாரா?

சிந்தனையில் மூழ்கியபடியே ஆளுநர் தங்கும் அந்தப் பெரிய குமிழின் வாயிலுக்கே வந்துவிட்டோம் என்பதை வந்த பிறகே உணர்ந்தான் பதுமன். சம்பிரதாயச் சோதனைகள் முடிந்தவுடன் வேறொரு நெருப்பீட்டியைப் பின்தொடர்ந்து உள்ளே சென்றான்.

அவர்கள் ஒரு வாயிலை நெருங்கிய அதே வேளையில் நான்கு நெருப்பீட்டுகள் புடைசூழ நன்மள்ளனாரும் அங்கு வந்து சேர்ந்தார். பதுமனும் அவனுடன் வந்த நெருப்பீட்டியும் அவரைக் கண்டதும் ஒரு சேர வணங்கினர். “வந்தனம், பதி!” பதுமன் கடைக்கண்ணால் பார்த்து தன் வணக்கத்தையும் அந்த நெருப்பீட்டியின் வணக்கத்தையும் ஒப்பிட்டுக்கொண்டான்! நன்மள்ளனார் ஒரே ஒரு நொடி தலையைத் திருப்பி அந்த நெருப்பீட்டியின் வணக்கத்தை தலையசைத்து ஏற்றுக்கொண்டுவிட்டு, பதுமனை நோக்கினார்.

“செய்தியை ஆளுநருக்குச் சொல்லிவிட்டேன். அவர் ஆதாரம் கேட்கவில்லை, எதற்கும் நீ என்னுடனே இரு! இருப்பதே தெரியாமல் இருக்க வேண்டும், என்ன?” என்றுவிட்டு அருகில் இருந்த நெருப்பீட்டிகளை ஒரு முறை நோக்கிவிட்டு அறைக்குள் செல்லத் தொடங்கினார். நெருப்பீட்டிகளும் அவரைப் பின் தொடர்ந்தனர், பதுமனோடு வந்தவன் மட்டும் இவனை முன்னால் போகச் சொல்லிப் பின்னால் வந்தான்.

அக்கதவிற்குப் பின்னால் அத்தனை பெரிய அறையைப் பதுமன் எதிர்பார்க்கவில்லை! அதை அறை என்றே கூற இயலாது, படைகள் பயிற்சி செய்யும் திடலைப் போல மிகப் பரந்ததாய் இருந்தது, ஆங்காங்கு சிறு சிறு படைப்பிரிவுகளும் அணிவகுத்து நின்றிருந்தன, இது அறையல்ல திடல்தான் என்றே பதுமன் முடிவு செய்தான். அனிச்சையாக அவன் பார்வை மேலே செல்ல, அனைத்தையும் உள்ளடக்கியபடி கவிந்த குமிழியின் மேல்பகுதி தெரிந்தது!

அப்பெரிய அறையின் நட்டநடுவில் இருந்த அந்தப் பெரிய நீள்வட்ட மேசையை நோக்கி நன்மள்ளனாரும் நெருப்பீட்டிகளும் செல்ல, பதுமனும் தொடர்ந்தான்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here