சிறுகதைப் போட்டி – 14 : களம்புகல் ஓம்புமின்[பகுதி -3] – கா. விசயநரசிம்மன்

திடலில் சட்டென அமைதி நிலவியது. ஔவையார் பேசுகிறார்!

“மாப்பறந்தலையாரே! நன்மள்ளனாரே! தண்ட நாயகர்களே! என்னை மதித்து, விருந்தோம்பி, என் தூதை ஏற்று, எனக்கு உங்கள் படைப்பிரிவுகளையும் கலன்களையும் கருவிகளையும் காட்டியதற்கு நன்றி!…” நிதானமாய், ஆனால் அழுத்தமாய், எல்லோருக்கும் கேட்கும்படி வலியதாய் பேசியபடியே மெல்ல சுழன்று அனைவரையுமே நோட்டம்விட்டார் ஔவையார், ”புதுப்புது தொழிநுட்பமும், அதனால் புதுப்புது கருவிகளும் கலன்களும் உருவாக்கி யிருக்கிறீர்கள்! நன்று… மிக்க நன்று! பொதுவாக நாம் அனைவருமே ங-கதிரைக்கொண்ட கருவிகளைத்தான் பெற்றுள்ளோம், ஆனால், நீங்கள் புதிதாய் வலிமையும் திறனும் மிக்கதாய் ஒரு கதிரைக் கண்டறிந்துள்ளீர்கள், ள-கதிர் என்று அதற்குப் பெயரும் வைத்து, அதைக்கொண்டும் கருவிகளைச் செய்துள்ளீர்கள்! ஆகா, அருமை… மிகுந்த பாராட்டிற்குரியது! உங்கள் படையும், கலனும், கருவியும், தொழில்நுட்பமும் இன்று மலர்ந்த மலரைப் போல புதிதாய்ப் பொலிவு மிக்கதாய் விளங்குகின்றன… எங்கள் அதியத்தின் படைகள் பழையவை, கலன்களும் கருவியும் தொழில்நுட்பங்களும் மிக மிகப் பழையவை… பல போர் கண்டு துருப்பிடித்தவை!”

ஆளுநரின் முகம் பெருமையாலும் உவகையாலும் ஒளிர்ந்தது. ஔவையாரையே அசத்திவிட்டோம் என்ற பெருமை! பதுமனுக்கு எரிச்சல் எல்லை மீறியது!

அடேய் முட்டாள் கிழவா! அவள் உன்னைப் புகழவில்லையடா, இகழ்கிறாள்! இது கூடவா உரைக்கவில்லை உன் பித்தலை மண்டைக்கு? நம் படைகளைப் பூ என்கிறாள், அதியத்தின் படைகளை இரும்பு என்கிறாள்! புதியதாய் இருந்தாலும் நம் தொழிநுட்பம் இன்னும் சோதிக்கப்படாதது, போர்க்களத்தில் கையாளப்படாதது, அதியத்தின் தொழில்நுட்பமும் கலன்களும் பல போர் கண்டவை, வெற்றி ஒன்றையே சுவைத்தவை என்று அக்கிழவி நுண்ணியதாய்க் குத்திக்காட்டுகிறாள், நீ பல்லை இளித்துக்கொண்டு அவள்முன் நிற்கிறாய்! இழுக்கு… பெரும் இழுக்கு… நீ தொடிமத்தில் பிறந்து பயிற்சி பெற்ற வீரன்தானா? ச்சே!

பதுமனின் உளத்தில் பொங்கிய அதே சினம் நன்மள்ளனார் உளத்திலும் பொங்கியது, ஆனால், அவர் பதுமனைப்  போல உயிர்க்கஞ்சிப் பேசாமல் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இல்லை, பேசினார்.

”எந்தாய்! (ஆளுநரை அவ்வாறுதான் அழைப்பர்!) ஔவையார் நம்மைப் புகழ்வதாக எனக்குத் தோன்றவில்லை, கீழினும் கீழாக இகழ்கிறார்…” என்று அவர் முடிப்பதற்குள் ஆளுநரின் முகத்தில் இருந்த பெருமையொளி மாறி சினவிருள் கவிந்தது,

“உண்மையா? ஔவையே, என்ன இது? முன்பே நீர் வருவது தூதிற்கு அல்ல, எங்கள் படைக்கலன்களைச் சேதப்படுத்தும் கிருமி மென்பொருளை விதைப்பதற்கே என்று எனக்குத் தகவல் வந்தது, அதைப் பெரிதுபடுத்தாமல் நான் பெருந்தன்மையாய் உங்களை வரவேற்று விருந்தோம்பினேன், எனக்கு நீங்கள் செய்யும் பதில் மரியாதை இதுதானா?” மாப்பறந்தலையாரின் சினச்சொற்களைக் கேட்டு சற்று முன் அவரை அலட்சியமாய் எண்ணிய பதுமனுக்கும் அவர்மீது மரியாதையும் அச்சமும் ஒரு சேர பெருக்கெடுத்தது!

ஔவையார் சிறிதும் அச்சமோ தயக்கமோ இன்றி, முகத்தில் தவழ்ந்த அந்த எள்ளல் புன்னகை மாறாமல் பேசினார்,

“செய்தி வந்ததா? நன்று நன்று! எங்கே வராமல் தவறிவிடுமோ என்று கொஞ்சம் கவலைப்பட்டேன்! உங்கள் புதிய தொழில்நுட்பங்களை இன்னும் உங்கள் ஒற்றர்படையில் பயன்படுத்துவதில்லை போலும், அதுதான் செய்தி தவறாமல் வந்து சேர்ந்துவிட்டது!” வழக்கம்போல பேசுகையில் பார்வையைச் சுழலவிட்ட ஔவையார் ‘ஒற்றர்படை’ எனும்போது தன் பார்வையைப் பதுமன் மேல் ஒரு சில நொடி நிறுத்தினார், அந்த ஒரு சில நொடிகளில் அவர் பார்வை பதுமனை ஊசி துளைப்பைதைப் போல துளைத்தது!

“மாப்பறந்தலையாரே, நீர் புதிய தொழில்நுட்பம் என்ற பெயரில் நன்கறியப்படாத தொழில்நுட்பங்களைக் கையாள அவசரப்படுகிறீர்! நீங்கள் புதிதாய்க் கண்டறிந்ததாக எண்ணி இறுமாக்கும் ள-கதிரை நாங்களும் அறிவோம், ஆனால் அதில் நாங்கள் அவசரப்பட்டு ஆயுதம் செய்யவில்லை! ள-கதிர் என்று நீங்கள் அழைக்கும் கதிரின் பண்புகளை முழுமையாக உணர்வீர்களா? இல்லை! எங்களுக்கும் அது இன்னும் புரியாத புதிர்தான்! இவற்றை உங்களுக்கு யார் உணர்த்துவது? தரமில்லாத கருவிகளோடும் தொழில்நுட்பத்தோடும் நீர் எம்மோடு போரிட்டுத் தோற்றுப்போனால் அது எமக்கு இழுக்கன்றோ? படைக்கலன்களின் பழுதினால்தான் தொடிமர் அதியரிடம் தோற்றனர் என்று வரலாற்றில் பதிவானால் அதிய வீரர்கள் தங்கழுத்தைத் தாமே துண்டித்துக்கொண்டு மடிவர்! அதைத் தவிர்க்கவே யான் உங்கள் கருவிகளிலும் கலன்களிலும் எம் மென்பொருள் கிருமியைப் புகுத்தினேன்… நான் கிருமியைப் புகுத்தப் போகும் செய்தியையும் உங்களுக்குக் கிடைக்கச் செய்தேன்! கிருமி உங்களுக்கு உங்கள் கருவி கலன்களின் பலவீனத்தை யெல்லாம் சரியாகக் காட்டிக்கொடுத்ததா? இனி அவற்றையெல்லாம் சரி செய்துவிட்டுதானே எம்மோடு போருக்கு வருவீர்? எமது விஞ்ஞானியர் குழுவை வேண்டுமானால் அனுப்பிவைக்கவா? உம் விருந்தோம்பலுக்கு யாம் செய்த பதிலுதவியாக இருக்கட்டும்!”

ஔவையாரின் பேச்சு அங்கிருந்த அனைவரின் இரத்தத்திலும் சூடேற்றியது. நெருப்பீட்டிகள் தங்கள் ஈட்டிகளைக் கைகள் சிவக்கும்படி கெட்டியாகப் பிடிக்கத் தொடங்கினர். நன்மள்ளனாரின் கண்ணில் எந்நொடியும் தீப்பொறிகள் பறக்கும் என்பது போல இருந்தது. மாப்பறந்தலையார் மனித எரிமலையைப் போல நின்றிருந்தார்!

”ஔவையாரே!” ஒரு வழியாய்த் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டவராய் ஆளுநர் பேசினார், “தூது என்ற பெயரால் இன்று உமது தலை தோளைவிட்டு நீங்காமல் பிழைத்தது! பெருமை பேசிக்கொள்ளவும் ஒரு எல்லை உண்டு! எமது படைகளையும் தொழில்நுட்பத்தையும் வீரத்தையும் இவ்வளவு தாழ்த்திப் பேசும் உமது கோளில் ஒருவரேனும் போர்க்களத்திற்கு வரும் தகுதியுடையவனாய், வீரன் என்ற சொல்லுக்கு ஏற்றவனாய் இருக்கிறானா?”

தரையிலிருந்து விண்ணுக்குத் தாவும் விண்கப்பலின் சீற்றத்தைப் போல இருந்தது மாப்பறந்தலையாரின் சொற்கள்!