சிறுகதைப் போட்டி – 14 : களம்புகல் ஓம்புமின்[பகுதி -4] – கா. விசயநரசிம்மன்

அன்றிரவு உணவு உண்கையில் போரின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை பதுமன் அறிந்துகொண்டான். அதற்காகவே அவன் தன்னறையில் உண்ணாமல் வீரர்களுக்கான பொது உணவுக்கூடத்திற்கு வந்திருந்தான்.

அன்றிலிருந்து ஏழாவது நாளில் தொடிம வீரன் ஒருவனும் அதிய வீரன் ஒருவனும் அதியத்தை அடுத்திருந்த ஒரு வறண்ட கோளில் ஏற்படுத்தப்படும் களத்தில் துவந்த யுத்தம் செய்து இப்போரின் வெற்றி-தோல்வியைத் தீர்மாணிக்கப் போகிறார்கள்!

பதுமன் உணவுக்கூடத்தில் ஓர் ஓரமாக அமர்ந்து மெல்ல உண்டுகொண்டிருந்தான். உண்பதைவிட சுற்றி இருந்த வீரர்கள் பேசிக்கொள்வதில்தான் அவன் கவனம் அதிகம் சென்றது.

“போருக்குப் படையெடுத்து வந்துட்டு யாரோ கிழவி சொன்னாளென்று துவந்த யுத்தம் நடத்துவதா? என்னையா கூத்து இது?” என்றான் ஒருவன். அவன் தோள்பட்டையில் இருந்த கழுகின் படம் அவன் வளிப்படையைச் சேர்ந்த வலவன் என்று உணர்த்தியது.

“ஆமடா, நாமெல்லாம் வீரர் அல்லவா? போர் செய்ய வந்தோமா வேடிக்கைப் பார்க்க வந்தோமா?” என்றான் அவன் கூட இருந்த மற்றொரு வலவன்.

”எந்தையிடம் போய் இதைக் கேட்க வேண்டியதுதானே? உணவுண்கையில் ஏனடா கரைகிறீர்கள்?” என்று அவர்களை அதட்டினான் ஒருவன். அவனது தோள்பட்டையில் சுறாமீனின் படம் இருந்தது, நீர்ப்படையைச் சேர்ந்த மாலுமி அவன்!

“அதானே! கட்டளையை ஏற்று பணி செய்ய வேண்டியது நம் கடமை, போரிடு என்றால் போரிடு, வேடிக்கைப் பார் என்றால் வேடிக்கைப் பார்! நெருப்பீட்டிகளைப் பார், எவனாவது எதற்காவது வாயைத் திறக்கிறானா? அதனால்தானப்பா அவர்கள் சிறந்தவர் என்று போற்றப்படுகின்றனர், நாமெல்லாம் வாய்ப்பேசியே கெட்டுப் போகிறோம்!” என்றான் மற்றொரு மூத்த மாலுமி. நீர்க்கலம் செலுத்தும் அவன் கைகள் பதுமனின் தொடையளவிற்குப் பருத்திருந்ததாலோ என்னவோ யாரும் அவனை எதிர்த்துப் பேசவில்லை. சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது.

“அது சரி, அதிய வீரனை எதிர்த்து யுத்தம் செய்யப்போகும் நம் வீரன் யாரென்று முடிவாயிற்றா?” மீண்டும் பேச்சை மெல்லத் தொடங்கினான் ஒரு இளம் விண்வெளிப்படை வீரன். ஏனோ விண்வெளிப்படை வீரர்கள் பார்வைக்கு நோஞ்சான் போலவே இருந்தனர்!

”கேட்க வேண்டுமா? நெருப்பீட்டிகளின் தளபதி ஒருவன் இருக்கிறானே, அவன் பெயரென்ன? அவனைத்தான் அனுப்புவர்! அவன் மனிதன்தானா என்ற ஐயம் பலபேருக்கு உண்டு! போருக்காகவே செய்த இயந்திர-மனிதன் போல இருப்பவன்!” இது தோள்பட்டையில் யானைப்படம் போட்ட தரைப்படை வீரன்.

”அவன்தானா? நினைத்தேன்! வீமனோ! வாமனோ! ஆனால் நீர் சொல்வது உண்மைதானடா, போருக்காக இயந்திர-மனிதர்களைச் செய்யும் திட்டம் நம்மிடம் இருப்பதாகத்தான் கேள்வி, அவன் மனிதனே அல்ல, இயந்திரம்தான்!” முதலில் பேசிய வளிப்படை வீரன் வியந்து சொன்னான்.

”பிதற்றாதே! ஆளுநரையும் தண்ட நாயகர்களையும் பாதுகாக்கும் பணிக்கு இயந்திரங்களையா வைப்பார்கள்? இயந்திரம் வலிமையாய் இருக்கும், ஆனால் ஒரு மனிதனைப் போல இடம்-சூழல் அறிந்து முடிவெடுத்துக் கண்ணிமைக்கும் நேரத்தில் அதனால் செயல்பட இயலுமா? வீமன் மனிதனேதான், இயந்திர மனிதன் அல்ல, மனித இயந்திரம்!” என்று கூறிப் பெரிதாய் நகைத்தான் அந்த மாலுமி.

அனைவரும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

பதுமன் போதும் என்று எழுந்து தன்னறைக்கு வந்தான். வழக்கமாய் இருப்பதைப் போல எந்த ஒரு நெருப்பீட்டியும் அங்குக் காவலுக்கு இல்லை. எனக்குக் காவல் தேவையில்லை என்று எண்ணிவிட்டார்களா? அல்லது, இருக்கும் குழப்பத்தில் என்னைக் கவனிக்க மறந்துவிட்டனரா? நான் வந்த விண்கலத்தை எங்கே நிறுத்தியிருப்பர்? அதைத் தேடிக் கண்டுவிட்டு வரலாமா? இந்தப் போரின் நிலை என்னவாகும்? இவ்வளவு பெரும்படையை வைத்துக்கொண்டு ஏன் இந்த நிலவிலேயே தங்கியிருக்கின்றனர்? இறங்கித் தாக்க வேண்டியதுதானே?

எப்போது உறங்கினோம் என்று அறியாமலே பதுமன் உறங்கியிருந்தான்.

அடுத்த நாள் பதுமன் எழுந்திருக்கையில் நன்பகல் ஆகியிருந்தது. தன்னை யாருமே எழுப்பாதது அவனுக்கு வியப்பாக இல்லை! அன்றும் அவன் உணவுக்கூடத்திலேயே உணவுண்டான். நேற்றிரவு அவன் கவனித்த அதே வீரர் கூட்டம் இப்போதும் இருப்பதைக் கண்டு அவர்கள் கவனிக்காதவண்ணம் அவர்களின் அருகில் சென்று அமர்ந்தான்.

”எனக்கென்னவோ அது யதேச்சையாக ஏற்பட்ட விபத்து போலத் தெரியவில்லை, துவந்த யுத்தத்துக்குப் போகப் பயந்துகொண்டு தானாகவே தடுக்கி விழுந்து காலை உடைத்துக்கொண்டிருப்பான் அந்த வீமன்!” என்று அறைந்து கூறிக்கொண்டிருந்தான் அந்தத் தரைப்படை வீரன்.

“சரியாய்ச் சொன்னாய் தம்பி! அவனைப் போய் ஆகா ஓகோ என்று போற்றினோம், யுத்தத்திற்கு அஞ்சும் கோழைப் பயல்!” என்று உரக்கவே சொன்னான் அந்த மூத்த மாலுமி.

”என்ன இருந்தாலும் அவன் நெருப்பீட்டிகளின் தளபதி, அவன் வீரத்தையா ஐயப்படுவது? கவனச் சிதறலால் விபத்து ஏற்பட்டது என்று மருத்துவரே சான்றளித்திருக்கிறாராம்!” என்றான் அந்த விண்வெளிப்படை வீரன்.

“பயிற்சி பெற்ற வீரனுக்கு, அதிலும் தளபதியாய் இருப்பவனுக்கு எப்படியடா யுத்தப் பயிற்சியின்போது கவனச் சிதறல் வரும்? இவன் என்ன நேற்றா படையில் சேர்ந்தான்? இவனை நம்பி தொடிமத்தின் வெற்றியையே அடகு வைக்க இருந்தோமே…” மாலுமியின் குரலில் எரிச்சல் அப்பியிருந்தது.

“இதேதான்! இதேதான் அண்ணே காரணம்! ஒரு முழுக்கோளின் வெற்றி தோல்வியை ஒரே ஒரு வீரன் தலையில் கட்டினால் அவன் என்ன செய்வான்? பாவம்! அந்த மனவுளைச்சல்தான் அவன் கவனத்தைச் சிதறடித்துள்ளது!” என்று பரிந்து பேசினான் விண்வெளி வீரன்.

”இதில் என்னடா மனவுளைச்சல்? நம் கோளுக்காக உயிரையும் தரத் துணிந்துதானே படையில் சேர்கிறோம்? வீரனுக்கு உயிரா முக்கியம்? உயிரே முக்கியமில்லை என்றால் அச்சம் ஏன் வருகிறது, மனவுளைச்சல் ஏன் வருகிறது?” இளைய மாலுமியின் குரலில் ஒருவித ஏமாற்றமும் ஏரிச்சலும் இருந்தன!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here