சிறுகதைப் போட்டி – 5 : கள்வன் மகன் – கா. விசயநரசிம்மன்

“டி-டய்ங்”.

நித்யா சிரமப்பட்டு முகத்தில் மலரத்துடித்த புன்சிரிப்பை அடக்கிக்கொண்டு கைப்பேசியைத் திறந்தாள்.

“:-) 🙂 பக்கத்துல வந்துட்டேன் 🙂 🙂 :-)”, என்றது வாட்சப்.

“வா வா… எனக்கென்ன பயம்”, என்று பதிலைத் தட்டிவிட்டவளுக்குப் புன்னகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கைப்பேசியில் தெரிந்த ரவியின் பெயரை இரசனையுடன் பார்த்துக்கொண்டே உள்ளூறிய அந்தக் குறுகுறுப்பை அனுபவித்தாள்.

“சீக்கிரம் தின்னுடி, தோசை ஆறுது… எப்ப பார்த்தாலும் போனையே பாத்துக்கிட்டு ஈன்னு இளிச்சிட்டு இருக்காத!”, அம்மா இன்னொரு தோசையைத் தட்டில் வைத்துவிட்டுப் போனாள்.

“டி-டய்ங்”, என்று கைப்பேசி மீண்டும் அழைக்க, கையிலெடுத்த தட்டை மீண்டும் கீழே வைத்துவிட்டுத் திரையை உயிர்ப்பித்தாள், “அதப் பிடுங்கி எறியப் போறேன் பாரு” என்ற அம்மாவைக் கண்டுகொள்ளாமல்.

திரையில் ரவி அனுப்பியிருந்த படம் வந்ததுதான் தாமதம், நித்தியாவிற்குப் பொறை ஏறிவிட்டது!

“அடப்பாவி” என்று முணுமுணுத்தாள், இருமல்களின் ஊடே.

“சொன்னாக் கேட்டாதானே”, என்று அம்மா வந்து தலையில் தட்டித் தண்ணீர் கொடுத்தாள். நித்யா அவசர அவசரமாக கைப்பேசியை அணைத்துப் பின்னால் ஒளித்துக்கொண்டாள்.

“பாவிப்பயல், ஏதோ விளையாட்டுக்கு வீட்டுக்கு வரேன்னு சொல்றான்னு பார்த்தா நிஜமாவே தெருமுனைல நின்னுக்கிட்டு போட்டோ அனுப்புறான்! தைரியம் தான் இவனுக்கு!” – என்று ரவியின் குறும்பையும் தைரியத்தையும் ஒருபுறம் இரசித்தாலும் அவன் வீட்டுக்கு வந்தால் என்ன ஆகுமோ, அம்மா என்ன சொல்வாளோ என்ற பயமும் ஒருபுறம் உறுத்தத்தான் செய்தது.

பேருக்கு ஒரு தோசையை அவசரமாக விண்டு விண்டு வாயில் போட்டுக்கொண்டவள் ”எனக்குப் போதும்மா…” என்று எழுந்து கை கழுவிக்கொண்டு கைப்பேசியைக் கவ்விக்கொண்டு தன் அறைக்குச் சென்றாள்.

”என்னடி அவசரம்…” என்று தொடங்கிய அம்மாவின் திட்டு முழுதாய்க் கேட்கும்முன் கதவை மூடிக்கொண்டவள் முதல் வேலையாய் ரவியைக் கைப்பேசியில் அழைத்தாள்.

”சொல்லுங்க டார்லிங்…” என்றவனின் குரலில் உற்சாகம் மிதமிஞ்சி இருந்தது.

“டேய்!! என்ன டா பண்ற நீ? நிஜமாவே எங்க தெருல தான் இருக்கியா?”

“ஆமா… ஆனா, உங்க வீட்டு நம்பர் தான் சரியாத் தெரியல… யோசிச்சுப் பார்த்துட்டு இருக்கேன்… 21-னா? 31-னா? வீடு என்ன கலர்னு சொன்ன?”

“செருப்பு கலர்… ஒழுங்கா திரும்பிப் போய்டு… வீட்டுக்குலாம் இப்ப வர முடியாது…”

“என்னமா கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாம இப்படித் துரத்துற!”

“வெளில வந்தேன்னா அடிச்சே கொன்னுடுவேன்… ஓடிப்போ…”

“வா வா, நீ வெளில வந்தா உங்க வீடு எதுன்னு எனக்குக் குழப்பமில்லாமத் தெரிஞ்சுடும்…”

ரவியின் குரலில் இருந்த இயல்பும் குறும்பும் நித்யாவிற்குக் கோவத்தைத் தூண்டின.

“எதெதுல விளையாடுறதுன்னு ஒரு விவஸ்தை இல்ல? இப்படிலாம் திடீர்னு வந்து நின்னா என்ன நினைப்பாங்க எங்க வீட்ல? நாளைக்கு இவனத்தான் நான் கட்டிக்கப் போறேன்னு சொல்லும்போது நல்லாவா இருக்கும்? விளையாடாத ரவி…”

“இரு இரு… டென்ஷன் ஆகாத… நான் மாறு வேஷத்துல வந்திருக்கேன்…”

“மாறு வேஷமா? டேய்…”

”நம்பலேனா வந்து பாரு…”

“ஓ… நான் வெளில வந்தா, நீ வீட்டைக் கண்டு பிடிச்சுக்கலாம்னு பாக்குறியா? நல்ல கததான்!”

”எப்படிக் கண்டு பிடிக்குறேன்னு பாரு… இப்ப போனை வை, உங்க அம்மா கூப்பிடுவாங்க, அப்ப வெளில வா…”

“டேய் ஏண்டா இப்படிப் படுத்துற? நா-” நித்யா முடிப்பதற்கு முன் அழைப்புத் துண்டிக்கப்பட்டது.

”நித்யா கீழ வா, கொரியர் வந்திருக்கு…”

கோவத்துடன் மீண்டும் ரவியை அழைக்கப் போனவளை அம்மா அழைக்க, சட்டெனப் புரிந்தவளாய் நித்யா கதவைத் திறந்துகொண்டு கீழே செல்லத் தொடங்கினாள்.

“பாவி… பாவி… நிஜமாவே வீட்டுக்கு முன்னாடி வந்து நிக்குறானே… கொரியரா கொண்டு வர… படுபாவி… என்ன வெச்சு விளையாடுறியா… இரு இரு, உன்னக் கவனிச்சுக்குறேன்…”

”ஏன்மா, நீயே வாங்கிக்கலாம்ல?”

“ஏதோ ஸ்பெஷல் டெலிவரியாம், உன்கிட்டதான் தரனுமாம்! போய் வாங்கு, அந்தத் தம்பி தண்ணி கேட்டுச்சு நா போய்க் கொண்டு வரேன்…”

“அப்படியே கொஞ்சம் விஷம் இருந்தா அதுல கரைச்சு கொண்டு வா… தம்பியாம் தம்பி… குடிச்சுட்டுச் சாவட்டும் அந்தப் பன்னி…”

சிவப்பு டி-சட்டையும் சிவப்புத் தொப்பியும் சிவப்புப் பையுமாய் அடக்க முடியாத சிரிப்பைச் சிரமப்பட்டு அடக்கியவனாய் வாசலில் நின்று கொண்டிருந்த ரவியைப் பார்த்தவுடன் நித்யாவிற்கு எவ்வளவு கோவம் வந்ததோ அதே அளவு சிரிப்பும் ஆர்வமும் வந்தன.

”நீங்கதான் நித்யாவா மேடம்?” என்று முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு கேட்டவனுக்குப் பதில் சொல்லாமல் முறைத்தாள் நித்யா.

”ஐ.டி. பூருப் ஏதாச்சு இருக்கா மேடம்?” என்று புன்னகையை அடக்கிக்கொண்டே கேட்டான் ரவி.

“நான் தான் நித்யா, நம்பினா பார்சல கொடுங்க, இல்லனா உங்க பார்சலே வேணாம், நீங்களே வெச்சுக்குங்க” என்றாள் கோபத்தைக் குரலில் காட்டி.

”டென்ஷன் ஆகாதீங்க மேடம், இங்க ஒரு கையெழுத்து போடுங்க. நான் என் கடமையைச் செய்றேன். அவ்ளோதான். எனக்கு கடமைதான் முக்கியம். எங்க பேமிலிக்குத் தெரிஞ்சதெல்லாம் கடமை, இனிமை, பெருமை…”

“போடா எருமை.!”, நித்யா அவன் நீட்டிய பேனாவைப் பிடுங்கி அவன் மீதே எறிந்தாள்.

ரவி சிரித்துக்கொண்டே அழகான எழுத்துகளில் ‘நித்யா’ என்று எழுதியிருந்த ஒரு பெரிய பரிசு பொட்டலத்தை அவள் கையில் திணிக்க, அதையும் அவன் மீதே எறியலாமா என்று அவள் எண்ணிய வேளையில் சரியாக அம்மா தண்ணீர் கொண்டு வந்து நீட்டினாள்.

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here