சிறுகதைப் போட்டி – 32 : மறப்புகழ் நிறைந்தோன்! – மதிஸ்குமார்

காவிரி ஆற்றின் கரையோர கானகத்தில் உள்ள ஒரு மரத்தில் கைகள் பின்பக்கமாகக் கட்டப்பட்டு மண்டியிட்ட நிலையில், தலையில் பலத்த காயத்துடன் குருதி சொட்டச் சொட்ட ஒருவன் மயங்கியிருந்தான். மறுநாள் காலையில் மூலிகைச்செடிகளைப் பறிக்க வந்த அமுதனும், குழலியும் முனகல் சத்தம் கேட்டு அங்கு சென்றனர். மயங்கிருந்தவனின் கட்டுகளை அவிழ்த்து, அவனது நாடியைப் பரிசோதித்து சில முதலுதவிகளை செய்து தனது மூலிகை வண்டியில் ஏற்றினான் அமுதன். குழலி, “யார் அண்ணா இவர்?” என்றபடியே வண்டியில் ஏறினாள்.

“திடகாத்திரமான உடலமைப்பு, உடலில் உள்ள சிறு சிறு தழும்புகள் , கால்களில் உள்ள வீரக்கழல் இவற்றைப் பார்க்கும் போது இவர் ஓரு போர் வீரராக இருப்பார் என நினைக்கிறேன்” என்றான் அமுதன். “அவரது இடுப்பைப் பார். மாடுகளைக் கட்டும் கயிறும், புல்லாங்குழலும் உள்ளது. போர் வீரருக்கு எதற்கு அண்ணா புல்லாங்குழல்” என்றால் குழலி. “சரி விடு, நினைவு திரும்பி எழுந்தவுடன் அவரிடமே கேட்போம்” என்று சொல்லிவிட்டு மாடுகளை ஓட்டத் தொடங்கினான் அமுதன்.

வைத்திய சாலையோடு அமுதனுடைய வீடு அமைக்கப்பட்டிருந்தது. வீடு வந்து சேர்ந்தவுடன், “அப்பா.. அப்பா…” என்று பரபரக்க குழலி உள்ளே நுழைந்தாள். வந்த வேகத்திலேயே அவள் அப்பாவிடம் நடத்த எல்லாவற்றையும் கூறினாள். தந்தை சொக்கன் தலைக் காயத்திற்கு மருந்தினைக் கொடுத்தார். “இன்னும் இரண்டு நாழிகையில் நினைவு திரும்பிவிடும் குழலி. இவரைப்  பார்த்துக்கொள்ளம்மா.  நான் கோவிலுக்குச் சென்று வருகிறேன்” என்று சொக்கன் கிளம்பினார்.

நினைவு திரும்பும் வரை குழலி அவன் அருகிலேயே மயிலிறகால் விசிறிக்  கொண்டிருந்தாள். வீரன் கண் விழித்து எழுந்தான். குழலி, “அய்யா மெதுவாக எழுங்கள்” என்று அவருக்கு உதவி செய்தாள். எழுந்தவுடன் “என்னைக் காப்பாற்றியமைக்கு நன்றி! நான் கிளம்புகிறேன்” என்று வீரன் கிளம்பத் தயாரானான். குழலி அவரைத் தடுத்து, உணவு உட்கொண்டு  பின்னர் அப்பாவிடமும், அண்ணாவிடமும் விடைபெற்றுச் செல்லலாம் என்று கூறி உணவைப் பரிமாற ஏற்பாடு செய்தாள். “ஐயா உங்களிடம் ஒரு கேள்வி, நீங்கள் யார்? உங்களுக்கு ஏனிந்த நிலை?” என்றாள்.

“எனது பெயர் அதியன். எனது தந்தையும், தாத்தாவும் சோழ அரசின் மெய்க்காவல் படையில் இருந்து ஒரு போரில் இறந்து விட்டனர். தற்போது எனது வயதான பாட்டி, தாய் மற்றும் கறவைகளுடன், அரசர் கொடுத்த நிலத்தில் வாழ்ந்து வருகிறேன்” என்றான். தானும் தன் முன்னோர்களைப் போல சோழப் படையில் சேர்ந்து தனது வீரத்தினைக் காட்டி மன்னரிடம் பாராட்டைப் பெறவேண்டும் என்று  எண்ணிக் கொண்டிருப்பதாகக் கூறினான்.

“ஓ, அப்படியா சரி. இங்கு எப்படி வந்தீர்கள்?” என்றாள் குழலி. காவிரி ஆற்றின் கரையோரோமாகத் தனது தொழுவத்துடன் கூடிய வீட்டில் இருந்து வழக்கம்போல் தனது மாடுகளை மேய்க்க இங்கு வந்ததாகக் கூறினான் அதியன். “நிறுத்துங்கள், நீங்கள் சோழப் படையில் அல்லவா சேரப்போவதாகக் கூறினீர்கள். பிறகு ஏன் மாடுகளை மேய்க்க வந்தீர்கள்?” என்றாள். “ஆம், நான் எனது முன்னோர்களைப்  போல சோழப் படையில் சேருவதற்காகவே பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.  ஆனால் எனது தாய்க்கு அதில் துளியும் விருப்பம் இல்லை. அதனால் அதை செயல்படுத்தாமல் தற்போது மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றான்.

“ம்… குடும்பத்திற்காக உங்கள் இலட்சியத்தினை விட்டு விட்டீர் என்று சொல்லும். அது சரி, எப்படி இவ்வளவு அடிபட்டது? உங்களை யார் அடித்தது, ஏன் உங்கள் கைகள் கட்டப்பட்டு இருந்தது?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே சற்று குறும்பாகக் கேட்டாள் குழலி.

“நான் ஒன்றும் இலட்சியத்தினை விடவில்லை. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். எனது பாட்டிக்கு நான் சோழம் போற்றும் வீரனாக வாழ வேண்டும் என்று ஆசை இருக்கிறது. நேரம் வரும் போது அதனைச் செய்து முடிப்பேன்” என்று கோபமாகக் கூறினான், அதியன்.

“சரி கோபம் வேண்டாம் வீரரே மேலே தொடருங்கள் எப்படி அடிபட்டது?  அதை சொல்லிவிட்டு சாப்பிடுங்கள்” என்றாள். என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி, நான் வருகிறேன்” என்று கிளம்பினான் அதியன். அப்போது சொக்கனும், அமுதனும் வீட்டிற்குள் நுழைந்தனர். அதியன் கிளம்புவதைக் கண்ட அமுதன் தன் தங்கை அவள் குறும்புத்தனத்தை அவனிடம் காட்டிவிட்டாள் என்றெண்ணி “நண்பரே கோபம் வேண்டாம். உணவருந்திவிட்டுச் செல்லலாம். ஏன் நண்பா என்னவாயிற்று உங்களுக்கு? உங்கள் வலி எப்படி இருக்கிறது?” கூறுங்கள் என்றான் அமுதன்.

“எனக்கு உடலில் வலி ஏதும் இல்லை, ஆனால் மனதில் தான் வலி இருக்கிறது” என்ற அதியன், தனது மாடுகளையும் தங்கள் ஊராரின் மாடுகளையும் கவர்ந்து செல்ல முயன்ற நான்கு நபர்களை அடித்து விரட்டியதையும், மீண்டும் அவர்கள் அவர்களது கூட்டத்துடன் வந்து தன்னை பலமாக தாக்கி மாடுகளைக் கவர்ந்து சென்றதையும் விவரித்தான். “உங்கள் உடலுக்கு மருந்திட்ட நாங்கள் மனதுக்கும் மருந்திடுகிறோம்” என்றால் குழலி கண்களை சிமிட்டிக்கொண்டே. அவனது பொலிவு, கோபம், அவன் பேச்சில் மயங்கி அவனை நேசிக்கத் தொடங்கினாள்.

அமுதன் “நீங்கள் சாப்பிட்டு ஓய்வெடுங்கள். நான் ஊர்த்தலைவர் மூலம் மாடுகள் களவாடப்பட்ட செய்தியை உடனடியாகத் தெரிவிக்கிறேன்” என்று புறப்பட்டான். குழலி பரிமாற, அவன் சாப்பிட்டு ஓய்வெடுத்தான்.

ஊர்த்தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்து நடந்தவற்றை விளக்கமாகக் கூறினான். அதியனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவனைப் பற்றி எதையும் கூறாமல் தலைவரிடம் மறைத்து விட்டான். உடனே ஊர்த்தலைவர், “நமது இளவரசர் நம் கிராமத்திற்கு அருகில் தான் படை வீடமைத்துத் தங்கியிருக்கிறார். முதலில் அவருக்குச் செய்தியைக் குதிரை வீரன் மூலம் அனுப்புகிறேன். அவர் மூலம் மன்னருக்குத் தகவல் சென்றுவிடும். அங்கிருந்து தகவல் வந்ததும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்” என்று அமுதனை அனுப்பி வைத்தார். வீடு திரும்பிய அமுதன், இளவரசர் இங்கு இருக்கும் செய்தியைச் சொன்னவுடன் அதியன் கிளம்ப  ஆயத்தமானான். அதற்கு மேல் அவனை அவர்களால் தடுக்க முடியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here