சிறுகதைப் போட்டி – 26 : முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் – மாலா ரமேஷ்

என்றுமில்லாத சந்தோஷம் சங்கீதாவுக்கு.  வெயில் லேசாக எட்டிப்பார்த்து…, கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்த சமயம்.  பால்கனியில்  முதல் நாள் உலர வைத்த துணிகளை க்ளிப்பிலிருந்து  விடுவித்துக்கொண்டிருந்தாள்.

“க்ளிச்சிக்”  என்ற  ஒலியுடன்  கீழே விழுந்தது ஒரு மஞ்சள்  நிறக் க்ளிப்.

யாராவது தெரிந்த முகம் இருந்தால், கீழிருந்து மேலே   போடச் சொல்லலாமேயென்ற  எண்ணத்துடன்,  எட்டிப்பார்த்தாள். யாரும் இல்லை.  “சரி…  நாமே போகலாம்  “ என்று  நினைத்துப் படிகளில் இறங்கினாள்.

“என்ன சங்கீதா…?  வேலையெல்லாம் முடிஞ்சுதா?”

“ஆமா மாமி…முடிச்சிட்டேன்…”

“என்ன சமச்ச…?”

சிரித்தாள் சங்கீதா.

“சிரிக்காதே….சொல்லு…”

“சொல்ல மாட்டேன்….நீங்க வீட்டுக்கு வாங்க…” என்றாள் குறும்பாக.

“என்ன முகமெல்லாம் சந்தோஷம் தாண்டவமாடுது…?  என்ன விஷயம்?”

“இன்னிக்கி  ஊர்ல இருந்து எங்க சித்தி வராங்க மாமி.  நானும் அவங்களும் ரொம்ப க்ளோஸ்.  கிட்டத்தட்ட  ஃப்ரெண்ட்ஸ் மாதிரி….”

“ஓஹோ….”

“சரி மாமி….துணி எடுக்கும்போது க்ளிப் கீழே விழுந்துடுச்சு….நான் போயி எடுத்துட்டு   வீட்டுக்கு போறேன்…நீங்க  அப்றம்  வாங்க…”

“ஓகே… சங்கீதா….”

மூன்று தளம் கொண்ட அபார்ட்மென்டில்…..கீழே  இறங்கும்  யாரும் ராஜி மாமியிடமிருந்து  தப்பிக்க முடியாது.  எல்லோரையும் நேசிக்கும் ஜீவன்.

எல்லோரிடமும் பாரபட்சமின்றி  பேசக்கூடிய ஜீவன்.

சங்கீதா  க்ளிப்பை எடுத்துக்கொண்டு   கேட்டைப் பார்த்தாள்.  ஆட்டோ எதுவும் வரவில்லை.  மீண்டும் மேலே சென்று  துணிகளை மடிக்க ஆரம்பித்தாள்.

திருமணமாகி ஒரு மாதமே ஆன புது ஜோடி சங்கீதாவும்  சங்கரும்.  புதிய மஞ்சள்  தாலிச்சரடு  மின்ன….நேர்த்தியாக, சீராக  நகங்களை வெட்டி…,  அதில் நெயில் பாலிஷ் மின்ன…கூடவே  மறைந்து போனாலும் மங்கலாகத் தெரிந்த மருதாணியின் தடம்…கிள்ளினால் சிவந்து போகும் நிறம்…நடக்கும்போது  சங்கீதமாய்   கொலுசின்  ஓசை….  மனம் முழுவதும் சங்கர் மட்டுமே…நாள் முழுவதும் அவனுக்காகவே…சங்கீதா  ஒரு மாடர்ன்  தேவதைதான்.

சங்கரும்  சரியான ஜோடி.  அன்பும்…அதிர்ந்து பேசாத பண்பும்…மரியாதை உணர்வும்…. இருவருமே  ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதில் சளைத்தவர்கள் இல்லை.   திருமணம், மறுவீடு, தேனிலவு  என்று…சுற்றி முடித்து…இங்கு குடி வந்து   இருபது நாட்களே  ஆகின்றது.  சங்கீதா  புது வாழ்வில் ஐக்கியமாகி விட்டாள்.  ஆனாலும்,  கஷ்டம் தெரியாமல்,  எந்த  தொந்தரவும் இல்லாமல்,  செல்லப்பெண்ணாக வளர்த்த மகள்….எப்படி இருக்கிறாளோ என்ற கவலை  அவள் அம்மாவுக்கு.  ஒரு நாள் விடிவதும், முடிவதும் அவள் அம்மாவின் போனில்தான்.

“டிங்…டாங்…” காலிங் பெல்  ஒலி.

மான் போல ஓடிச்சென்று கதவைத் திறந்தாள் சங்கீதா.

“சங்கீ…. எப்படிடா இருக்க…?”

பாசத்தோடு அணைத்துக்கொண்டாள் வசந்தி. சங்கீதாவின் சித்தி.

“நல்லா இருக்கேன் சித்தி” என்றாள் வெட்கத்துடன்.

“ஊர்ல எல்லாரும் எப்பிடீருக்காங்க …?”  என்று கேட்டபடி பைகளை வாங்கிச்சென்று உள்ளே வைத்தாள். வீட்டினை கண்களால் ஸ்கேன் செய்தாள் வசந்தி.  நேர்த்தியாக அடுக்கப்பட்ட ஷோ கேஸ் பொம்மைகள்…. மலர்க்கொத்துக்கள்… வரிசையாக அடுக்கப்பட்ட தட்டுகள், கப்புகள், பாங்காக     அடுக்கி வைக்கப்பட்ட தலயணைகள்… பூக்கள் வைத்து .. வாசனையாக ஊதுபத்தி மணம் வீசிய பூஜையறை…சங்கீதாவா இது!!!! மலைத்துப் போனாள் வசந்தி.

பால்கனிக்குச்சென்றாள். தொட்டிகளில்  அழகான பூச்செடிகள், துளசி, கற்பூரவல்லி… ஓரமாக இருந்த நாற்காலியில் உட்கார்ந்து… கீழே நடந்து போகின்றவர்களையும், விளையாடும் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருந்தபோது…”சித்தி…இந்தாங்க காபி….” சூடான காபியை கோப்பையில் நீட்டினாள்.

“சங்கீ…..வீட்ட ரொம்ப நல்லா வச்சிருக்க செல்லம்…” என்றாள் நிறைவாக.

சிரித்தாள் சங்கீதா.  சில்லறை சிதறியது போல இருந்தது.

“சங்கீ… சங்கர் எப்படி இருக்கார்…?” என்றாள் சிரித்தபடி.

சங்கீதாவின் முகம் சிவந்தது.  “ சூப்பரா இருக்காரு சித்தி” என்றாள்.

ஏதேதோ கதைகள்  பேசி..,   மணியும் மாலை ஐந்தாகியது.  மணியைப்பார்த்த சங்கீதா திடீரென்று பரபரப்பானாள்.  இனம் புரியாத தவிப்பு தொற்றிக்கொண்டது.  வேகமாகச் சென்று  லேப்டாப்பை ஆன் செய்தாள்.

இன்டர்நெட்டில் எதையோ தேடினாள்.  குறிப்பெடுத்துக்கொண்டாள்.

“சித்தி…தோ வரேன்….” என்று சொல்லி விட்டு சிட்டாய்ப் பறந்தாள். வசந்தியின் பிரமிப்பு அடங்க்குவதற்குள்  திரும்பி வந்தாள்.

“என்ன சங்கீ….?”

“ஓண்ணுமில்ல சித்தி…டிபன் செய்யறேன்…” என்றாள்.

மீண்டும் லேப்டாப்…குறிப்புகள்…வசந்தி நடப்பதைப் பார்த்தாள். எதுவும் புரியவில்லை.  பலவித பொருள்கள், காய்கறி, பனீர், க்ரீம் என்று ஏதேதோ வைத்து தீவிரமாக சமைக்க ஆரம்பித்தாள். ஒரு புறம் வதக்கினாள், மறுபுறம் மிக்சியில் அரைத்தாள். ஒரு புறம் குக்கர் விசில் வந்தது…மறு புறம்  ஓவனில்  முடிந்து விட்ட சப்தம் வந்தது.  இதில் அவ்வப்போது  குறிப்புகளைப் பார்த்தாள்.

நடப்பதை வசந்தி கண்ணிமைக்காமல் பார்த்தாள்.  முக்கால் மணி நேரத்தில் வேலையை முடித்த வெற்றிப்புன்னகையோடு சித்தியைப் பார்த்து சிரித்தாள் சங்கீதா.

“எப்பம்மா சங்கர் வருவாரு?”

“தோ…வர்ர நேரந்தான்…”  கண்கள் படபடக்க சொன்னாள்.  சங்கருக்கும் சங்கீதாவுக்கும்  இருந்த அன்னியோன்னியம் புரிந்தது  வசந்திக்கு.

சந்தோஷித்துக் கொண்டாள்.

சங்கர் எப்போது வருவான் என்ற ஏக்கம் தெரிந்தது அவள் கண்களில்.

“டிங்…டாங்…”  காலிங் பெல் ஒலி கேட்டதும் , தாயைப் பிரிந்த கன்றுக்குட்டி போல துள்ளிக்கொண்டு  ஓடிப்போய்   கதவைத்திறந்தள்.

ட்ராபிக்கில்  நீந்தி…களைத்துப் போன முகத்துடன் வந்த சங்கர்….சங்கீதாவின் உற்சாகம் ததும்பும் முகத்தைப் பார்த்ததும்….பெட்ரோல் இல்லாமல் வெயிலில் தள்ளிக்கொண்டு வந்த  பைக்கிற்கு…ஃபுல் டேங்க்க்  பெட்ரோல் போட்டது போல உணர்ந்தான்.  அவளை  இழுத்து அணைத்துக் கொள்ளலாமா  என்ற எண்ணம் தோன்றியதை உணர்ந்து கொண்ட சங்கீதா,” வசந்தி சித்தி வந்திருக்காங்க” என்று உஷார்ப்படுத்தினாள்.

“ஓ…வாங்கம்மா…வாங்க…”  என்று சொல்லி சிரிப்புடன் நகர்ந்தான்.

1 COMMENT

  1. மிக அழகான கதை. இளம் தம்பதியினரின் வாழ்க்கையை விவரிக்கின்ற பாடலும், அதற்கு தகுந்த கதையும் ஒரு கவிதை. வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here