சிறுகதைப் போட்டி – 12 : நட்பு – ப்ரீத்தி பட்டாபிராமன்

“…இவ்வாறாக, தமிழ்ப்பாடல்கள் நம் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கின்றன. வாழ்வின் சிறு சிறு சம்பவங்களுக்கும் ஒரு குறள் சொல்லலாம்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்து விடல் 

நம்மில் அனைவரும் அறிந்ததே. யாரேனும் நம்மை முதுகில் குத்தினால், இந்தக் குறளை சொல்லி நம்மை நாமே தேற்றிக்கொள்வது போல், தமிழ் நம்மில் கலந்து இருக்கிறது.

இதனை நாம் இன்னும் கொண்டாட வேண்டும். இதனை அனைவருமே செய்ய வேண்டும். அதும் எழுத்தாளர்கள் நமக்கு வேலை அதிகம். ஆகவே நாம் இப்பணியை நன்று செய்ய வேண்டும்,செய்வோம் என்று நம்பி என் சிற்றுரையை முடித்துக்கொள்கிறேன். நன்றி!”

எழுந்த கரகோஷம் முடிய ஐந்து நிமிடங்கள் ஆயின. சபைக்கு ஒரு புன்னகையைத் தந்துவிட்டு, தன் இருக்கையை அடைந்தார், கலசலிங்கம். சுற்றியிருப்பவர்களின் வாழ்த்தைப்பெற்று அமர்ந்தார். நிகழ்ச்சி நிரலை புரட்டினார். அடுத்து பேச இருப்பவர், இந்த விழாவை ஏற்பாடு செய்தவர், தமிழ் இலக்கியத்தில் மிகப்பெரிய புள்ளி, என்றெல்லாம் பேசிக்கொண்டனர். அவரின் பெயரைப்பார்த்ததும் யோசிக்கத்துவங்கியவர், அவரைப்பார்த்தும் அதிர்ச்சியில் கல்லென சமைந்தார். அவர் நினைவு பின்னோக்கிச் சென்றது.

கலசலிங்கம் ஓர் அனாதை. கல்லூரி இறுதியாண்டில் தன்னை வளர்த்தவர் கொஞ்சம் பணம் தந்து, “இனி நீயே உன் வாழ்வைப் பார்த்துக்கொள்”, என்று கைவிட்டார்.

அவருக்கு அப்போது வயது 23. சென்னையில் ஓர் ஒற்றை அறையில் வாடகைக்கு இருந்தார். உடன், ஆனந்த்.

இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். சேர்ந்தே சென்னை வந்து, தமிழில் கதைகள் எழுதி, எழுத்தாளர்கள் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பினர்.

நான்கு ஆண்டுகள் முயற்சி செய்தும், அவர்கள் கனவு நிறைவேறவில்லை.

ஆனந்த், சில பத்திரிகைகளுக்குக் கதைகள் இயற்றி வருமானம் ஈட்டிக்கொண்டிருந்தார். இன்னும் சில இதழ்கள் இவரின் கதைகளைக் கேட்டிருந்தனர். அதற்காக பணம் ஒன்றும் அதிகமாகவும் தருவதில்லை. நியாயமாக தர வேண்டியதில் பாதி தான் தருவர். தன் தாய்க்கும் தங்கைக்கும் அதில் பெரும் பகுதியை அனுப்பிவிடுவார்.

ஆனால்,கலசலிங்கம் கை நிறைய கதைகளும், மனம் நிறைய நம்பிக்கையோடும் தமிழ் தினசரிகள், வார இதழ்கள், மாத இதழ்களின் அலுவலகங்களுக்கு அனுப்பினார்; ஏறி ஏறி இறங்கினார். ஒருவர் கூட அவரின் கதையை பிரசுரிக்கவில்லை; அவ்வளவு ஏன்? படிக்கக்கூடவில்லை.

இந்த தோல்வியை எப்படி எதிர்கொள்வது என்றுயோசித்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தான் அவர் கண்ணில் பட்டது அந்த கடிதம்.

அது, குஞ்சலம் பத்திரிகையின் சிறுகதைப் போட்டி முடிவுகள் தெரிவிக்கும் கடிதம். இந்தபோட்டியில் வெல்பவருக்கு, குஞ்சலம் பத்திரிகையில் நிரந்தர வேலையும், ரூபாய் 2500 பரிசுத்தொகையும் தருவர். துள்ளிக்குதித்தார் கலசலிங்கம். தன் வாழ்வு சிறப்புறபோவதாக எண்ணினார். கடிதம் யாருக்கு என்று கூட பாராமல் கடிதத்தைப் பிரித்துப் படித்தார். படித்த பிறகுதான் உணர்ந்தார், போட்டியில் ஆனந்த் முதல் பரிசு பெற்றிருந்தார் என்று.

நொந்தார் கலசலிங்கம். அவர் மனம் வேகமாக வேலை செய்தது. கடிதத்தை மறைத்தார். ஏதுமறியாதவர் போல் உறங்கினார்.

ஆனந்த் இரவு நேரம் வந்தார். தன் தோழரிடம் தனக்கு ஏதேனும் கடிதம் வந்ததா என்று விசாரித்தார். ஏதும் வரவில்லை என்று கலசலிங்கம் கூறினார்.

ஆனந்த் பெருமூச்செரிந்தார். “இந்த போட்டியில் வெற்றி பெற்றால், என் தங்கையின் வாழ்க்கையை சீர் செய்து விடலாம் என்று நம்பினேன். சரி,வேறு பார்த்துக்கொள்ளலாம்”, என்று உறங்கினார்.

கலசலிங்கம் தவித்தார். ஆனால்,பேராசையும் மனசாட்சியும் போர் செய்ய, ஆசை வென்றது.

அடுத்த நாள், குஞ்சலம் பத்திரிகைக்கு கடித்ததை எடுத்துச் சென்றார். தன் புனைப்பெயர் ஆனந்த் என்றும், அப்பெயரில் எழுதியதாகக்கூறி,பரிசினை வாங்கிக்கொண்டார். வீட்டை மாற்றினார். தன் தோழரை மறந்தார். ஆனந்த் என்ற புனைப்பெயரிலேயே எழுதி, வாழ்வில் வெற்றி அடைந்தார்.அந்த பெயருக்குடையவர் என்ன ஆனார் என்பதை நினைக்கவும் பயந்தார். தூக்கம் வர மறுத்தது. மனம் குத்தியது. ஆனால்,நாளடைவில் மறந்தார்.

இன்று, இந்த விழாவில், அவர் ஆனந்தை எதிர்பார்க்கவே இல்லை. தன் இருக்கையில் நெளிந்தார். என்ன பேசுவாரோ, தன்னை காட்டி கொடுத்துவிடுவாரோ என்றெல்லாம் எண்ணி மனம் புழுங்கினார்.

ஆனந்த் ஆரம்பித்தார். தமிழின் பெருமைகளை அடுக்கினார். சங்க இலக்கியங்களிலிருந்து மேற்கோள்க்காட்டினார். தமிழினை வளர்ப்பது எப்படி என்று பேசினார். தன் உரையை முடிக்கும் போது, “வாழ்வில் எனக்கு தமிழ் பெற்றுத் தந்ததை அறிந்த நீங்கள், கற்றுத்தந்ததையும் அறிய வேண்டும். வாழ்வில் சாதிக்கும் வெறி மட்டும் இருந்த காலத்தில், என் நண்பர் எனக்கு வர வேண்டிய பரிசினை தன்னுடையது என்று பெற்றுக்கொண்டார். அவருக்கு நான் சோறிட்டதையும் மறந்தார். அவர் சூழ்நிலை அன்று அவரை அவ்வாறு செய்ய வைத்தது. நினைத்தால், அன்றே அவரை கேட்டிருக்கலாம், அந்த வாய்ப்பை அடைந்திருக்கலாம். ஆனால், ஒரு நல்ல நண்பன்,“இன்னா செயினும் விடற்பால ரல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்என்று நாலடி கூறியிருக்கிறது. அவரை நான் பொன்னாக போற்றவில்லை என்றாலும், அவரை மண்ணாக மிதிக்கவில்லை என்ற நிம்மதி, என்னை இரவு கவலையின்றி உறங்க வைக்கிறது. அவர் நல்ல நண்பரா, இல்லையா, அதைப்பற்றி நான் நினைக்கவில்லை. நான் ஒரு துரோகியாக மாறாமல், என்னைக் காப்பாற்றியது தமிழே. இந்தப் பாடலை நினைவு கூற உதவிய குறளை சொன்ன நண்பர் ஆனந்த் என்ற கலசலிங்கத்திற்கு நன்றி!”

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here