சிறுகதைப் போட்டி – 6 : ஒக்கல் வாழ்க்கை – கா. விசயநரசிம்மன்

“அப்பா…” வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக செல்லமகள் பிரியா வந்து கால்களைக் கட்டிக்கொண்டாள், அவளைத் தூக்கிக்கொண்டே வீட்டிற்குள் வந்து பையை மேசை மேல் வைத்துவிட்டு, மின்விசிறியைப் போட்டுக்கொண்டு அமர்ந்தேன்.

பிரியா என் சட்டைப் பையைத் துழாவத் தொடங்கியதும் தான் வழக்கமாக அவளுக்கு ஏதேனும் மிட்டாய் வாங்கிவருவதைப் போல் இன்றைக்கு வாங்கவில்லை என்பது உரைத்தது.

“அப்பா இன்னிக்கு எதும் வாங்கிட்டு வரல டா செல்லம், தெனம் சாக்லெட் சாப்ட்டா பல்லு கெட்டுப் போயிடும்ல?”, என்று சொல்லிச் சமாளிக்கப் பார்த்தேன், அவள் நம்பாமல் நான் மேசை மேல் வைத்த பையைத் துழாவத் தொடங்கினாள்.

“என்ன இன்னிக்கு லேட்டு?”, என்ற படியே காப்பியை நீட்டினாள் பிருந்தா, என் மனைவி. அவள் கழுத்தில் இருந்த தாலியைத் தவிர வேறு தங்கம் இல்லை அவள் உடம்பில். கல்யாணமாகி இந்தப் பதினான்கு வருடங்களில் அவளை இவ்வளவு சாதாரணமாகப் பார்ப்பது இதுதான் முதல் முறை என்று தோன்றியது.

“கொஞ்சம் வேலை அதிகம், அதான்”, என்றபடியே பிரியாவை நோக்கிக் கண்ணைக் காட்டினேன், பிருந்தா ’புரிந்துகொண்டேன்!’ என்று தலையை ஆட்டினாள்.

”உனக்குக் கூட வேல அதிகம் போல? இன்னிக்கு ரொம்பவே ‘டல்லா’ இருக்க!”

“அப்படிலாம் ஒன்னுமில்ல, வழக்கமான வேலைதான்! இவதான் ஒரு மணி நேரமா ’அப்பா ஏன் வரல?, அப்பா ஏன் வரல?’னு கேட்டு உசுர வாங்கிட்டா! குட்டி ராட்சசி!”, என்று பொய்யாக முறைத்து பிரியாவை இலேசாய் முதுகில் தட்டினாள்.

“அம்மாக்கு உங்க மேல அக்கறயே இல்லப்பா, நாந்தான் கவலப்படறேன் நீங்க வரலேன்னா, நானா ராட்சசி?” என்று அவளும் அதே போல பொய்யாக முறைத்துச் சிணுங்கினாள்.

“நீ என் குட்டி இளவரசி டா… செல்லம்…”, என்று அவளை அணைத்துக்கொண்டேன், அந்த அணைப்பில் என் பிரச்சனை எல்லாம் சில கணம் மறந்து மறைந்து போயின…

 

இரவுணவு உண்கையில் பிருந்தா மீண்டும் நினைவுபடுத்தினாள்.

”பேங் ஆளுங்க மறுபடி வந்துட்டுப் போனாங்க…”, என்று தட்டில் தோசையை வைத்தவாறே மெல்ல இழுத்தாள்.

“ஏதாச்சு…?”, என்று பதட்டமாய் ஏறிட்ட என் பயத்தைப் புரிந்துகொண்டவளாய், “இல்லங்க, தப்பாலாம் ஏதும் பேசல, அமைதியா வீட்டுக்குள்ள வந்துதான் பேசிட்டுப் போனாங்க, ஆனா, ரொம்ப அழுத்தமா சொல்லிட்டாங்க, அதிகபட்சம் ஒரு வாரம் பொறுப்பாங்களாம், அதுக்குமேல எதுவும் பண்ண முடியாதுனாங்க…” சட்னியை பிரிஜ்ஜில் வைத்திருந்தாள் போல, ஜில்லென்று இருந்தது.

விண்ட தோசையை வாய்க்குள் வைக்க மனம் வரவில்லை, ஏதோ கையைப் பிடித்துத் தடுப்பதைப் போல இருந்தது.

“சாப்பிடுங்க, இதைலாம் அப்புறம் பேசிக்கலாம்… சாம்பாரச் சுட வெச்சுக் கொண்டாரவா?”

“வேணாம் பிருந்தா… என்னவோ பசியே இல்லை…”

வலது கையின் பிளாஸ்டிக் வளையலை முழங்கைக்கு ஏற்றியபடி அவளே என் தட்டிலிருந்து தோசையை விண்டு சாம்பாரில் நனைத்து வாயருகில் நீட்டினாள், “சாப்பிடுங்க… சாப்ட்டுத் தெம்பா கவலைப்படலாம்.” அவள் புன்னகையில் இருந்த வறட்சி என்னவோ செய்தது, அவளுக்காக தோசையை வாயில் வாங்கிக்கொண்டு மென்றேன், விழுங்க முடியாமல் தவித்தேன்.

“என்னங்க இது…”, என்றவளின் குரல் தழுதழுக்கக் கண்களில் நீர் ஒற்றையருவி போல இறங்கியது, அப்போதுதான் நானும் அழுகிறேன் என்பதை உணர்ந்தேன்.

“இருக்குற வேலையும் போய்டும் போல இருக்கு பிருந்தா, ஆபிஸ்ல ஒரு பிரச்சனை…”, என்று தயங்கித் தயங்கி அவளிடம் சொன்னேன்.

”பத்தோட பதின்னொன்னு, சமாளிச்சுக்கலாங்க… இப்ப சாப்டுங்க!”, அவளின் தைரியம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் எதிர்ப்பார்த்ததைவிட பல மடங்கு திடமாய் இருக்கிறாள் பிருந்தா.

“நீ சாப்டியா?” சட்டெனத் தோன்றியவனாய்க் கேட்டேன்,

“நீங்க சாப்டுங்க, நான் சாப்டுக்குறேன்!” அதே வறண்ட புன்னகை.

“வா சேர்ந்தே சாப்டலாம்…” இம்முறை நான் அவளுக்கு ஊட்டினேன்.

பின் படுக்கப் போகும்வரை எதுவும் பேசவில்லை இருவரும்.

“என்ன ஆச்சு ஆபிஸ்ல?”, என்றவளுக்குப் பதில் சொல்லும் முன்னர் பிரியாவின் சிணுங்கல் கேட்க, பிருந்தா எழுந்துபோய் அரைதூக்கத்தில் இருந்த பிரியாவை எங்கள் அறைக்குத் தூக்கி வந்தாள், பிரியாவை நான்காம் வகுப்பில் படிப்பவள் என்றே சொல்லமுடியாது போல, அவ்வளவு பூஞ்சையாக இருந்தாள், பிருந்தாவால் அவளை எளிதில் தூக்க இயல்கிறதே!

”சரியா சாப்பிடுறாளா இவ?”

”உங்களுக்கு வேல போறதுகூட நல்லதுதான் போல, வீட்ல இருக்குறவங்களையும் கவனிக்குறீங்களே!”, பிருந்தா என்னை உற்சாகமூட்ட கேலி பேசுகிறாள் என்பதை ஒருபுறம் உணர்ந்தாலும், ஒருபுறம் குற்ற உணர்ச்சியால் கோவம் வந்தது.

“ஆமா, எல்லாரும் வீட்டுக்குள்ளயே பட்டினி கிடந்து அன்போட சாவோம்!” என்றேன் எரிச்சலுடன், அவ்வார்த்தைகளைச் சொன்னவுடன்தான் அது எத்தனை பெரிய தவறு என்பதை உணர்ந்தேன், அதற்குள் பிருந்தாவின் கண்களில் நீர் கோத்துவிட்டிருந்தது! அத்தனை பெரிய அடியைத் தாங்கிக்கொண்டவளின் தைரியம் இந்தச் சின்ன சொல்லில் உடனே கரைந்துவிட்டதா?

“சாவுங்க போங்க… நான் என் பிள்ளைகளைச் சாவவிட மாட்டேன், நானும் சாகமாடேன், வாழ்ந்து காட்டுவேன்” என்றாள் சற்றே ஆவேசமாக. இவள் திடமானவள்தான், சந்தேகமே இல்லை! குழந்தையை அணைத்தபடி திரும்பிப்படுத்தாள். என் புறமாக அவளை இழுக்க முயன்றேன், விடாமல் எதிர்த்தாள்.

“பிருந்தா… சாரிம்மா… ஏதோ கோவத்துல… உனக்குத் தெரியாததா…”

“ப்ச்” திரும்பாமல் எதிர்ப்பைத் தொடர்ந்தாள்.

“ப்ளீஸ் பிருந்தா, எனக்கு இப்ப உன்கூடவும் சண்டை போட்டுக்குற மனநிலை இல்ல… ப்ளீஸ்…” இவளும் இப்படி செய்கிறாளே என்ற ஒரு மெல்லிய எரிச்சல் இருந்தாலும், தவறு என்னிடம்தான் இருக்கிறது என்ற உண்மை என்னைத் தழைந்து போகச் செய்தது.

“நா மட்டும் நல்லா ஜாலியா இருக்கேன்னு நெனச்சுட்டு இருக்கீங்களா?” திரும்பாமலே பதில் சொன்னாள்.

அவள் எதற்கும் தணியப் போவதில்லை என்று எண்ணி நான் ஏதும் பேசாமலே இருந்தேன். அவ்வப்போது அவளது தோளைத் தடவிக்கொடுதேன். எவ்வளவு நேரம் போனது என்று தெரியவில்லை, ஆனால், கொஞ்சம் நேரம் கழித்து அவள் என் புறமாக திரும்பினாள், நான் தூங்கிவிட்டேன் என்று நினைத்தாளோ? நான் தூங்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பதைக் கண்டதும் அவளையறியாமல் புன்னகைத்தாள்.

”குழந்தை தூங்கிட்டாளா?”

 

“ம்ம்…”

“பெரியவ தனியா இருக்காளே, திடீர்னு எழுந்துட்டானா?”

“எழுந்துக்கலாம் மாட்டா… பெரியவன்னு சொன்னதும்தான் நியாபகம் வருதுங்க…”, என்று இழுத்தாள், எனக்கும் நினைவு வந்தது,

”கோச்சிங் கிளாஸ் சேர்க்கனும், அதானே?”

“ம்ம்ம்… இப்பவே சேக்குறதுதான் நல்லதாம்… அவ கிளாஸ்ல எல்லாரும் சேர்ந்திருக்காங்களாம், இவ மட்டும்தான் இன்னும் பீஸ் கட்டலனு சாயங்காலம் அழுதா…”

”ம்ம்ம்… ஏற்பாடு பன்றேன் பிருந்தா…” ‘பத்தோடு பதினொன்னு’ என்று தோன்றியது, ஆனால், குழந்தை விஷயத்தில் அவ்வாறு சொல்ல மனம்வரவில்லை, அவளது எதிர்காலமல்லவா, கனவல்லவா இது? ஆனால், பணத்திற்கு என்ன பன்னுவது?.

பணம், பணம், பணம்… என் வாழ்வின் முதலும் கடைசியுமான சிக்கல் இப்போதைக்குப் பணம்தான்! எப்படியும் ஒரு முப்பது இலட்சம் தேவை, உடனடியாக நெருக்கும் பிரச்சனைகளைச் சமாளிக்க… எங்கே போவது? ஆசையாய்க் கட்டிய வீட்டை வைத்தாகிவிட்டது, பிருந்தாவின் கழுத்தில் தாலியைத் தவிர வேறில்லை, குழந்தைகளுக்காகச் சேர்த்த நகைகளைக் கூட வைத்தாகிவிட்டது, வாங்கக் கூடிய கடன் லோன் எல்லாம் வாங்கியாகிவிட்டது… நெருப்பில் போட்ட பஞ்சைப் போல இத்தனைப் பணத்தையும் கடனையும் வாங்கி எதில்தான் போட்டேன், எப்படித்தான் செலவழித்தேன் என்று எண்ணிப் பார்த்தால் எனக்கே வியப்பாக இருக்கிறது.

’சுயதொழில்’, ’முதலாளி’ என்பது அப்போது கவர்ச்சிகரமாக இருந்தது. நரேஷ் தன்னால் இயன்றவரை உதவினான் தான், அவனையும் முழுதாய்க் குற்றம் சொல்ல இயலவில்லை என்னால்… ஆனால், இன்று முதலைவாயில் காலைவிட்டுக்கொண்டு தவிப்பது நான்தான். அவன் நன்றாகத்தானே இருக்கிறான்? அவன்- அது, பழைய கதை…

எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை… விழிப்பு வந்தபோதுதான் தூங்கி விட்டிருந்தேன் என்பதை உணர்ந்தேன்… அண்மைக்காலமாக கொஞ்சம் சோர்வு அதிகம் இருப்பதாகத்தான் தோன்றுகிறது…

எழுந்து கழிவறைக்குச் சென்றுவிட்டு, முகங்கழுவி வாய்க்கொப்பளித்தேன்…

குளியலறையைவிட்டு வெளிவரும்போதே பிருந்தா காபியுடன் நின்றுகொண்டிருந்தாள், என்னையே கண்காணித்துக் கொண்டிருப்பாளோ?

“ட்ரெஸ் பண்ணிட்டு டக்குனு வாங்க, நரேஷ் வந்திருக்காரு…” என்றவளின் முகத்தில் அண்மையில் இல்லாத உற்சாகமும் மகிழ்ச்சியும் இருந்தன, அதுவும் நரேஷ் வந்திருக்கிறான் என்று இவள் இத்தனை மகிழ்ந்ததாக வரலாறே கிடையாதே!

“என்ன காலங்காத்தாலயே?” எனக்கும் அவளது உற்சாகம் தொற்றிக்கொண்டதைப் போல இருந்தது. காபியைச் சுவைத்துக் குடித்தேன்.

”எல்லாம் நல்ல விஷயம்தான், வாங்க, வந்து நீங்களே கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க” என்று உற்சாகத்தில் புதிர்போட்டுவிட்டுக்  கையில் இருந்த காலி கோப்பையை வாங்கிக்கொண்டு சென்றாள்.

“வா நரேஷ், நல்லாருக்கியா, வீட்ல சௌக்கியமா?” நரேஷ் பிருந்தா கொடுத்த அவசரக் கேசரியில் முந்திரிப்பருப்பைத் தேடுபவனைப் போலக் கிளறிக்கொண்டிருந்தான்,

“ஹலோ, வா வா, நல்ல தூக்கம் போல?” என்று அவனும் உற்சாகமாகக் கேட்டான்.

“ஏதோ சோர்வு, அசதி, எனக்கே தெரியாம அசந்து தூங்கிட்டேன் நரேஷ், இப்பலாம்-”

“புரியுது ராஜ், ஆனா உன் பிரச்சனைலாம் இன்னியோட தீர்ந்துடுச்சு… இந்தா…” என்று ஒரு பெட்டியை நீட்டினான், திறக்கும் முன்பே உள்ளே என்ன இருக்கிறது என்று தெரிந்துவிட்டது எனக்கு – பணம்!

“என்ன… எப்படி டா… எவ்ளோ…” என்ன கேட்பது என்று தெரியாமல் உணர்ச்சிகளின் அலையில் தவித்தேன், திளைத்தேன்…

“பிருந்தா… பிருந்தா… பார்த்தியா… நரேஷ் என்ன கொண்டு வந்திருக்கான் பாரு… பார்த்தியா பிருந்தா…” நரேஷுக்குத் தண்ணீர் கொண்டு வந்தவள் கண்களில் நீர் வழிய ஸ்தம்பித்தவளைப் போல நின்றாள்… உற்சாகத்தில் அவளருகில் சென்று அவளை உலுக்க, கையில் இருந்த தண்ணீரை என் மேல் சிந்தினாள்…

“என்னங்க… என்னங்க…” என்று மட்டுமே அவளால் பேச இயன்றது, குரல் குழைய!

“என்னங்க… என்னங்க…” பிருந்தா என்னை உலுக்கினாள், “எழுந்திருங்க… கொழந்த ஒன்னுக்குப் போய்ட்டா… போர்வைய எடுங்க, எழுந்திருங்க…”

“நரேஷ் எங்க?”

“எந்த ந- அந்த நாயப் பத்தி இப்ப என்ன பேச்சு… கனவா? ஹ்ம்ம்ம்… எழுந்திருங்க, உங்க கைலிய மாத்துங்க, இவளப் புடுச்சுக்குங்க…”

அதே சோர்வான வறட்சியான பிருந்தா… பிரியா மட்டும் சொர்கத்தில் உறங்கும் குட்டித் தேவதையைப் போல அப்படியொரு அமைதி முகத்தில் தவழ உறங்கிக்கொண்டிருந்தாள்… அவளைத் தோளோடு அணைத்து உச்சந்தலையில் ஒரு முத்தம் பதித்தேன்!

* * * * * *

புறநானூறு, 193

அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்

ஒருவன் ஆட்டும் புல்வாய் போல

ஓடி உய்தலும் கூடும்மன்

ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே?

ஆசிரியர் : ஓரேருழவனார்

திணை: பொதுவியல்

துறை: பொருண்மொழிக்காஞ்சி

விலங்கின் தோலை விரித்ததைப் போல பரந்த வெண்மையான திடலில் வேடனால் துரத்தப்பட்டு ஓடும் மானைப் போல நானும் ஓடித் தப்பித்துக்கொள்ள இயலுமா? இல்லையென்றால், குடும்ப வாழ்க்கை காலைத் தடுக்குமா?

* * * * * *

Leave a Comment