சிறுகதைப் போட்டி – 36 : பழையன கழிதலும் புதியன புகுதலும் – உ .தேவி பிரபா கல்யாணி

இரண்டாயிரத்து பதினெட்டாம் ஆண்டு .
ஜனவரி – இருபத்தொன்றாம் தேதி .
மதுரை இராஜாஜி மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு , நர்மதாவும் கீதாவும் வந்து நின்றனர் . களைப்பு இருவரின் முகத்திலும் அப்பியிருந்தது .
“ஞாயித்துக்கிழமைன்னாலே  தலையே சுத்துது , நர்மி ” என்றார்  கீதா.

“ஆமா கீதா. வீட்லயும் உட்காரக்கூட நேரமில்லாம வேலை . இங்கேயும் ஒரு காபியை குடிக்கக்கூட நேரமில்லைடி. எமர்ஜென்ஸி வார்டுல மெடிக்கல் கேஸஸ் ரெண்டே ரெண்டு தான். மத்தது எல்லாம் தண்ணிய போட்டுக் கீழே விழுந்த கேஸுங்க தான்”  என்று நர்மதா அங்கலாய்த்தார் .
புது வருடப்பிறப்பு , மாட்டுப் பொங்கல் , காணும் பொங்கல் , தீபாவளி மற்றும் வார இறுதி நாட்கள் போன்ற நாட்களிலெல்லாம் ,  மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால், சாலை விபத்துகள் அதிகம் நிகழ்கின்றன . எவ்வளவோ விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியிருதாலும் விபத்துகளின் எண்ணிக்கைக் குறைந்த பாடில்லை.
” உங்க வார்டுல இருக்கற , அந்தப் பையன் ரவி  எப்படியிருக்கான் கீதா ? ” – நர்மதா .
”  நேத்து அவனுக்கு ஆபரேசன்  பண்ணியிருக்காங்க . இப்போ நல்லாயிருக்கான் ” என்றார் கீதா .
”  அவனுக்குக் குடல் சரிஞ்சதை கேட்டு , அவங்கம்மா பேச்சு மூச்சில்லாமல்  மயக்கம் போட்டுட்டாங்களாம் . இவனை 108 ல கொண்டு வந்தாங்க . அவங்கம்மாவையும் பின்னாலேயே , இன்னொரு 108 ல கொண்டு வந்தாங்க .  ‘படிக்கிற பையன் படிப்பை பாருடா . ஜல்லிக்கட்டுக்கு போகாதேடானு சொல்லிட்டே இருந்தோம் . போக மாட்டேன்னு சொன்னவன் , எங்களுக்கே தெரியாம பேர் கொடுத்துட்டு , இப்படிக் குடல் சரிஞ்சு கெடக்கானே ‘ னு அவங்கக்கா சொல்லி அழுதுட்டு இருந்துச்சு . அவனுக்கு அப்பா  கிடையாதாம் ” என்றார் நர்மதா .
” எனக்கு அவனைப் பார்த்ததிலிருந்தே மனசே ஆறலைடி நர்மி . ஊரே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவா நின்னாலும் , எனக்கென்னவோ மனசு கேட்க மாட்டேங்குது …ம்ஹ்ம் … நம்ம பஸ் வந்திருச்சு ” என்றபடியே கீதா , எழுந்து நின்றார்  .
” கீதா … ‘ புல் தட்டி மாண்டவனும் உண்டு . போருக்கு போய் மீண்டவனும் உண்டு’ங்கிற பழமொழியை நீ கேட்டிருப்பியே ? . நல்லது , கெட்டது  எல்லாத்திலயும் இருக்கு ” என்றபடியே  வந்து நின்ற பேருந்தில் நர்மதா ஏறினார் . அவரைப் பின் தொடர்ந்து கீதாவும் ஏறினார் .
இருவரும் அருகருகே உட்கார்ந்து கொண்டு தங்களது உரையாடலை தொடர்ந்தனர் .
” அதுக்காக … இப்படி உயிருக்கு போராடுறதையோ இல்ல உயிர் போறதையோ பார்த்தா மனசுக்கு சங்கடமாயிருக்குடி நர்மி ” என்று வருந்தியவரிடம் ,  ” எங்க சித்தப்பாவோட ப்ரெண்ட் பல வருசமா , ஜல்லிக்கட்டு மாடு வளர்க்குறாரு . அந்த மாடு எத்தனையோ போட்டிகள்ள கலந்திருக்கு . முன்னே மாதிரியில்லம்பாரு  . நிறையக் கட்டுப்பாடுகளிருக்கு .எவ்வளவோ பரிசோதனை செஞ்சு தான் மாட்டையும் , மனுசனையும் விளையாட விடுறாங்க .  சினிமால காமிச்ச மாதிரி , திடீரெனு குதிச்சு மாட்டை அடக்க முடியாதுன்னாரு ” என்றார் நர்மதா .
” ஆமா , நர்மி . எல்லாத்தையும் ஒத்துக்கறேன் . ஆனா , உயிரிழப்புனு வர்றப்போ மனசு கேட்கமாட்டேங்குதே நர்மி . இப்போ , அந்தப் பையனையே பாரு . நல்லாருக்கான். ஆனா இன்னும் இரண்டு , மூணு இடத்துல  மாடு  குத்தியிருந்தன்னா உயிரோட இருந்திருக்கமாட்டானே ” என்றவரை  இடைநிறுத்தி ,
” உண்மை தான் கீதா . ஆனா , வீரத்தை நிலைநாட்டுறதுல ஏற்படற மரணம் . அப்படித்தான் நம்ம எடுத்துக்கணும் . வீரம் முக்கியமில்லையாடி ? ” என்றார் நர்மதா .
கூட்டமில்லாத பேருந்தில் அவர்களிருவரின் விவாதம் மற்றவர்களை திரும்பி பார்க்க செய்தது  .
” வீரம் தேவை தான் . ஆனா , மாட்டை அடக்குறது ஒரு வீரமா எனக்குத் தோணலைடி . அது வாயில்லா ஜீவன் . அதை அடக்கி தான் நம்ம வீரத்தை காமிக்கணுமா ? ” என்றார் கீதா .
” அப்படியில்லடி . அதுக்குப் பின்னால நிறைய விசயமிருக்கு . எங்க வீட்டுக்காரர் இதைப்பத்தி நிறையப் பேசுவார் . ஆநிரை கவர்தல் , ஆநிரை மீட்புனு  இலக்கியத்துல நிறைய இருக்கும்பார் . நான் சொல்றதை விட ,  அவர் சொன்னா உனக்கு புரியும்டி . அவர்கிட்டே கேட்டுட்டு விளக்கத்தை உனக்கு அனுப்பி வைக்குறேன் . பாருடி ” என்றபடியே தான் இறங்கும் இடம் வந்ததும் இறங்கினார் நர்மதா .
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்த கீதா , மதுரைக்கு மாறுதலாகி வந்து இரண்டாண்டுகளாகின்றன . எவ்வளவோ நோயாளிகளைக் கண்டிருந்தாலும் , ஜல்லிக்கட்டில் காயமடைந்தவர்களையோ , உயிரிழந்தவர்களையோ காண்கையில்  ‘இது தேவையா ?’ என்று கேள்வி அவருள் எழும் .
 வீட்டிற்கு வரும் வரை ஜல்லிக்கட்டு மட்டுமே அவரது மனதை ஆக்கிரமித்திருந்தது .
உணவருந்தி விட்டு உட்கார்ந்திருந்தவர் அலை பேசியை எடுத்து பார்த்தார் . வாட்ஸ் அப்பில் நர்மதாவின் செய்தி வந்திருந்தது .
உள்ளே ,”உன்னோட துணிச்சலை பல முறை பார்த்திருக்கேன் . உன்னை முறத்தால புலியை அடிச்சு விரட்டின அந்தத்  தமிழச்சியாவே உன்னை  நினைச்சிருக்கேன் கீதா …  இப்படிக் கலங்கி தவிக்கிற தமிழச்சியாயிட்டியேம்மா நீ ?! ” என்று , ஒரு இலக்கியப் பாடலை அனுப்பியவர் ,  கூடவே விளக்கத்தையும் அனுப்பியிருந்தார் . ஏறு தழுவுதல் பற்றியறிய நிறைய இணைப்புகளைத் தந்திருந்தார் .
மெல் இணர்க் கொன்றையும், மென் மலர்க் காயாவும்,
புல் இலை வெட்சியும், பிடவும், தளவும்,
குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும்
கல்லவும் கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர்,
பல ஆன் பொதுவர், கதழ் விடை கோள் காண்மார்                                                       
முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன
பல்லர், பெரு மழைக் கண்ணர், மடம் சேர்ந்த
சொல்லர், சுடரும் கனங் குழைக் காதினர்,
நல்லவர் கொண்டார், மிடை
அவர் மிடை கொள                                      
மணி வரை மருங்கின் அருவி போல
அணி வரம்பு அறுத்த வெண் காற் காரியும்,
மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல்
வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும்,
கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல்                                                              
வளையுபு மலிந்த கோடு அணி சேயும்,
பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து
அரிமாவும், பரிமாவும், களிறும், கராமும்,
பெரு மலை விடரகத்து, ஒருங்கு உடன் குழீஇ,
படு மழை ஆடும் வரையகம் போலும்     
கொடி நறை சூழ்ந்த தொழூஉ
தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின, ஏறு
ஏற்றின் அரி பரிபு அறுப்பன, சுற்றி,
எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்கண்                                                  
உருவ மாலை போல,
குருதிக் கோட்டொடு குடர் வலந்தன
கோட்டொடு சுற்றிக் குடர் வலந்த ஏற்றின் முன்,
ஆடி நின்று, அக் குடர் வாங்குவான், பீடு காண்
செந் நூற் கழி ஒருவன் கைப் பற்ற, அந் நூலை                                                         
முந் நூலாக் கொள்வானும் போன்ம்
இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்:
கோட்டினத்து ஆயர் மகன் அன்றே மீட்டு ஒரான்
போர் புகல் ஏற்றுப் பிணர் எருத்தில் தத்துபு,
தார் போல் தழீஇயவன்?                         
இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்;
கோவினத்து ஆயர் மகன் அன்றே ஓவான்
மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி, துறை அம்பி
ஊர்வான் போல் தோன்றுமவன்?
தொழீஇஇ! காற்றுப் போல வந்த கதழ் விடைக் காரியை                                          
ஊற்றுக் களத்தே அடங்கக் கொண்டு, அட்டு, அதன்
மேல் தோன்றி நின்ற பொதுவன் தகை கண்டை
ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு,
சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று, இன்னன்கொல்
கூற்று என: உட்கிற்று, என் நெஞ்சு        
இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்:
புல்லினத்து ஆயர் மகன் அன்றே புள்ளி
வெறுத்த வய வெள் ஏற்று அம் புடைத் திங்கள்
மறுப் போல் பொருந்தியவன்?
ஓவா வேகமோடு உருத்துத் தன்மேல் சென்ற                                                       
சேஎச் செவி முதற் கொண்டு, பெயர்த்து ஒற்றும்
காயாம்பூங் கண்ணிப் பொதுவன் தகை கண்டை
மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை
வாய் பகுத்து இட்டு, புடைத்த ஞான்று, இன்னன்கொல்
மாயோன் என்று:உட்கிற்று,என் நெஞ்சு 
ஆங்கு, இரும் புலித் தொழுதியும் பெருங் களிற்றினமும்
மாறுமாறு உழக்கியாங்கு உழக்கி, பொதுவரும்
ஏறு கொண்டு, ஒருங்கு தொழூஉ விட்டனர் விட்டாங்கே
மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்துப் பிறழ
பயில் இதழ் மலர் உண்கண்  
மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்றுத்
தாது எரு மன்றத்து அயர்வர், தழூஉ
கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே, ஆய மகள்
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை,                                                 
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து
நைவாரா ஆய மகள் தோள்
விலை வேண்டார், எம் இனத்து ஆயர் மகளிர்
கொலை ஏற்றுக் கோட்டிடை, தாம் வீழ்வார் மார்பின்
முலையிடைப் போல, புகின்
ஆங்கு,
குரவை தழீஇ, யாம், மரபுளி பாடி,   
தேயா விழுப் புகழ்த் தெய்வம் பரவுதும்
மாசு இல் வான் முந்நீர்ப் பரந்த தொல் நிலம்
ஆளும் கிழமையொடு புணர்ந்த
எம் கோ வாழியர், இம் மலர் தலை உலகே!
விளக்கம் :
மலையிலும், காட்டிலும் மணம் பரப்பும் கொன்றை, காயா, வெட்சி, பிடவு, தளவு, குல்லை, கோடல், பாங்கர் முதலான பூக்களைப் பொதுவர் (இடையர்) கண்ணியாகக் கட்டித் தலையில் சூடிக்கொண்டனர். பலவகை ஆனிரைகளை மேய்க்கும் பொதுவர் சினம் கொண்ட காளைகளைப் பிடிப்பதைக் காண்பதற்காக மகளிர் திரண்டு வந்தனர். அவர்கள் முல்லைப் பூ, முல்லை மொட்டு, முல்லை அரும்பு போன்ற பற்களை அடுக்கி வைத்தது போன்ற பற்களைக் காட்டிச் சிரித்துக்கொண்டு, கண்கள் பெருமழை பொழிவது போலப் பார்த்துக்கொண்டும், வாயிலிருந்து வரும் சொற்கள் மடப்பத் தன்மையை உதிர்ப்பன போலப் பேசிக்கொண்டும் குழை அணிந்த காதினராக அந்த நல்லவர் (மகளிர் )திரண்டனர்.
நல்லவர் திரண்டதும் ஏறு தழுவும் போர் நடைபெற்றது. நீல நிற மலை மேல் வெண்ணிற அருவி இறங்குவது போல் கால் மட்டும் வெள்ளையாக இருக்கும் ஒரு காளை ; அந்தி வானத்தில் மீன் பூத்திருப்பது போல உடம்பில் புள்ளிகளை உடைய ஒரு வெள்ளைக் காளை ; கொலைத்தொழில் புரியும் சிவபெருமான் பிறைநிலாவைச் சூடியிருப்பது போல வளைந்த கொம்புடன் அழகுறத் தோன்றும் செவலைக் காளை (சிவப்புக் காளை) இப்படிப் பல காளைகள் ஏறு தழுவும் “தொழூஉ”வில் நிறுத்தப்பட்டன. போரிடும் வலிமை மிக்க சிங்கம், குதிரை, யானை, முதலை முதலானவை தண்ணீர் நிற்கும் பாறைப் பிளவில் திரண்டிருப்பது போல நிறுத்தப்பட்டிருந்தன. அந்தத் தொழுவம் மழை மேகங்கள் தவழும் மலை போல் காணப்பட்டது .அந்தத் தொழுவத்துக்குள் காளையை அடக்கும் பொதுவர் சுழன்று சுழன்று பாய்ந்தனர். அவர்களை அந்தக் காளைகள் தெரிந்து தெரிந்து குத்தின. அவற்றின் கொம்புகளில் சுற்றப்பட்டிருந்த மாலைகளைப் பொதுவர் அறுத்தனர்.
சூலம் ஏந்திய சிவபெருமான் சூடியிருக்கும் பிறைநிலாவில் மாலை இருப்பது போல ஒரு காளை தன் கொம்புகளில் பொதுவன் ஒருவனின் குடலைச் சுற்றிக்கொண்டு சுழன்றது.பட்டம் விட்டு விளையாடுபவர் ஒருவர் விடும் பட்டத்தின் நூலை மற்றொருவர் தன் பட்ட நூலால் அறுப்பர். அது போல ஒரு காட்சி. ஒரு காளை ஒருவனைக் குத்தி அவன் குடலைக் கொம்புகளில் சுற்றிக்கொண்டது. அந்தக் குடலை அவன் திரும்பப் பெறப் போராடினான். அது பட்டத்து நூலை அறுப்பது போல இருந்தது.
தோழி, இதனைப் பார். இவன் ஒருவன் மாடு மேய்க்கும் இடையன் போலத் தென்படுகிறான். காளையின் பிடரியில் தத்தி ஏறிவிட்டான். போராடுகிறான். திரும்பி வரத் தெரியவில்லை.
தோழி, இதனைப் பார். இவன் ஒருவன் பசுக்களை மேய்க்கும் இடையன் போல் தென்படுகிறான். மறைநிறக் காளையின் மேல் இருந்துகொண்டு ஆற்றுத் துறையில் அம்பிப் படகில் செல்பவன் போலக் காணப்படுகிறான் .
தோழி,இதனைப் பார். காரிக் காளை ஒன்று சினம் கொண்டு காற்றுப் போல வந்தது. அதனை அவன் ஊற்றுநீரைத் தடுப்பவன் போலத் தடுத்து அடக்கிவிட்டான். அதன் மேல் ஏறி அந்தப் பொதுவன் சவாரி வருகிறான். இவனது தகைமையைப் பார். உயிர் வாங்கும் எமன் எருமைக்கடாவின் மேல் வருவது போலக் காடப்படுகிறான். பார்ப்பதற்கே அச்சமாக இருக்கிறது.
தோழி, இது ஒன்றைப் பார். இவன் ஒருவன் ஆடு மேய்க்கும் புல்லினத்து ஆயன் போல் தென்படுகிறான். புள்ளி உள்ள வெள்ளைக் காளை மேல் நிலா மறு தோன்றுவது போல வெள்ளைக் காளையின் மேல் ஒட்டிக்கொண்டிருக்கிறான்.
ஓய்வில்லாத வேகத்தோடு உருத்துப் பார்த்துக்கொண்டு சிவந்த காதினை உடைய காளை ஒன்று தன் மேல் பாய வருவது கண்டு காயாம்பூ சூடிய பொதுவன் ஒருவன் ஓடும்படி விரட்டுகிறான். பகைவர் “கூந்தல்” என்னும் குதிரையைத் தன்னைக் கொல்ல அனுப்பியபோது மாயோன் அந்தக் குதிரையின் வாயைப் பிளந்து இப்படித்தான் ஓட்டினானோ என்று எண்ணும்படிச் செயல்படுகிறான்.
இப்படிப் புலிக்கூட்டம் யானைக்கூட்டத்தோடு போராடுவது போல மாறி மாறித் தாக்கி ஏறு தழுவுதல் நடைபெற்று முடிந்தது. பொதுவர் தம் காளைகளைத் தொழுவத்திற்குக் கொண்டு சென்று விட்டுவிட்டனர்.
மயில் பிடரி போல் பன்னிற மணிமாலை அணிந்த மகளிர் பயிலும் மலரிதழ் போன்ற கண்களுடன் வர அவர்களுடன் மைந்தரும் சேர்ந்துகொண்டு உடல் திணவோடு ஆனிரைச் சாணம் மண்டிய ஊர் மன்றத்தில் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு “தழூஉ” ஆட்டம் ஆடித் திளைத்தனர்.
கொல்லும் காளையின் கொம்புக்கு அஞ்சுபவனை ஆயர் குலப் பெண் இந்தப் பிறவியில் மட்டுமன்று; அடுத்தப் பிறவியிலும் அணைக்க மாட்டாள்.
கொல்லும் காளையை அஞ்சாமல் பிடித்து ஆள்பவர் அல்லாதவரை வன்னெஞ்சம் கொண்ட ஆயர் குலப் பெண் தழுவ மாட்டாள். தழுவ நேர்ந்தால் நைவர். உயிர் துறந்து மாய்வர்.
அறியாக் காற்றில் ஓடும் உயிரைக் காப்பாற்றிக்கொண்டு காளையின் கூர்மையான கொம்புக்கு அஞ்சுபவர் ஆயர் குலமகளின் தோளை அணைப்பது எளிதோ?
தம்மை விரும்புபவர் கொல்லும் காளையின் கொம்புகளுக்கு இடையில் பாய்ந்து அடக்குவாராயின், எம் ஆயர் இனத்து மகளிர் தம்மை மணந்து தம் முலையைத் தழுவ எந்த விலையும் வாங்குவதில்லை.
இப்படி நடைபெறும் ஏறு தழுவல் போரை மரபாகக் கொண்டவர்கள் நாம். இதனை நாம் பாடிக்கொண்டு குரவை தழுவி ஆடுவோம். பாடும்போது தேயாத விழுமிய புகழை உடைய தெய்வத்தைப் போற்றுவோம். கடலால் சூழப்பட்டிருக்கும் இந்த நிலவுலகினை உரிமை பூண்டு ஆண்டுவரும் எம் அரசன் வாழ்க என்னும், மலர்ந்துகொண்டே இருக்கும் இந்த உலகம் வாழ்க என்றும் போற்றிக்கொண்டு குரவை தழுவி ஆடுவோம்.
( தலைவி தோழி பேசுவதாக அமைந்த பாடல் இது )
அந்நெடிய பாடலில் , மாட்டின் கொம்பு குத்தப்பட்டு மாடுபிடி வீரன் கீழே விழுந்ததைக் கூடியிருந்தோர்  ஏற்றுக்கொண்டதை போல , தன்னால் இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றெண்ணினார் கீதா .
பராம்பரியம் மிக்க ஏறு தழுவுதல் நிகழ்ச்சி , இப்பொழுது  ஜல்லிக்கட்டாக மாற்றமடைந்திருந்தாலும் , சாதி
ரீதியான விசயங்கள் அதனூடே மாறாமல்  பயணிக்கின்றன என்பதை , பல நோயாளிகளின் உறவினர்கள் மூலம் அறிந்திருந்தார் கீதா .
சிந்தனையில் ஆழ்ந்திருந்த கீதாவிடம் , என்ன விசயமென்று  அவரது கணவர் கேட்டார் . அவர்களது விவாதத்தைக்  கேட்டவர் , ” கிரிக்கெட் , டென்னிஸ் , கபடி போலப் பல விளையாட்டை  விளையாடுறவங்க  எவ்வளவோ பயிற்சிகளைத் தினமும் செய்யுறாங்க . அந்தளவு பயிற்சியைச் சல்லிக்கட்டுல கலந்துக்கிறவங்களும் செய்யணும் . எப்போதுமே நம்ம உயிர் நமக்குப் பெருசு ! எந்த நேரத்துல நம்மால முடியாதுனு தோணுதோ , அப்போ அந்த வீரர் வெளியேறிடணும் . அதை விட்டுட்டு சுத்தியிருக்கறவங்களோட ஆரவாரத்துல அவரு மாட்டைப் பிடிக்கணுங்கிற எண்ணத்திலேயே இருந்தா ,  சிக்கல் ஆரம்பிச்சிரும் . இன்னமும் நிறைய முறைகளைத் திருத்தி அமைச்சா உயிரிழப்பை தடுக்கலாம்  “
” ஆரம்பக் காலத்துல வீரம் பெருசா பேசப்படுறதுக்குக் காரணம் – போர்கள் தான் . நாளடைவில போர் இல்லைன்னாலும் , உடம்பை வலுவா வச்சிக்கறதுக்கு இந்த மாதிரி விளையாட்டுக அவசியமாச்சு . அதுல இருக்கிற ஆர்வமும் சேர்ந்து  ,இப்படி விளையாட்டைத் தொடர்ந்து தக்க வைச்சிருக்கும் . இப்படித்தான் நான் நினைக்கிறேன் . அவ்வளவு ஏன் முப்பது ,
நாப்பது வருசத்துக்கு முந்தி வரைக்கும் கூட உடல்வலு இருக்கிறவனை மதிப்பாங்க . ஏன்னா அதை வச்சுத்தான் வீட்டுக்காரியங்கள்ள இருந்து வெளிவேலைக வரைக்கும் பார்க்க முடியும் “
 ” சல்லிக்கட்டால் பாதிப்பிருக்கிறதா நீ உன் பார்வைல சொல்றே . அதே நேரம் , அது சில விசயங்களைத் தக்க வைச்சிருக்கு “
” நாட்டு மாடுகளோட விலை முன்னை விட அதிகமாயிருக்கு . நிறையப் பேர் வளர்க்க ஆர்வம் காட்டுறாங்க . அதனால அது அழிஞ்சிருமோனு நாம பயப்படத் தேவையில்லை . நான் இந்த விசயத்துல நடுநிலைமைல இருக்கேன் கீதா . சரி கீதா தூங்கும்மா ” என்றார் அவரது கணவர் . கீதா அவ்வளவு எளிதாகத் தன்னைப் போல் நடுநிலைமைக்கு மாறுவாரா  என்ற சந்தேகம் அவரது கணவருக்கு ஏற்பட்டது .
கலித்தொகை – முல்லைக் கலி
பாடியவர் – நல்லுருத்திரன்
திணை – மருதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here