சிறுகதைப் போட்டி – 1 : பெண்ணின் நீதி – கோவி. சேகர்

‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்று தான் எல்லோரும் நினைத்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால், தான் இருக்கும்வரை சட்டம் தன் கடமையைச் செய்யாது என நிரூபித்துக்கொண்டிருந்தார் சட்ட மேதை சிவா. எல்லோருக்கும் சட்டத்தில் ஓட்டைத் தெரிந்தால், இவருக்கு மட்டும் ஓட்டையே சட்டமாகத் தெரியும். ஒரு வழக்கிற்கு எவ்வளவு பணம் என்பது போய், ஒரு நாளைக்குப் பல இலட்சங்களைச் சம்பளமாக வாங்கத் தொடங்கிய பிறகும் இவரைச் சுற்றி எப்போதும் கூட்டம் மொய்த்துக்கொண்டிருக்கும். கூட்டம் என்பதைவிடக் குற்றவாளிகள் என்றும் சொல்லலாம்.

இப்படி செய்யக் காரணம்? கௌரவம் சினிமாவில் சிவாஜிக்குப் பதவிதராமல் ஏமாற்றியதுபோல் இவரை ஏமாற்றினார்களா என்று பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. பின்? பணம் சம்பாதிக்கவேண்டும். தன் அறிவைப் பயன்படுத்தி பணத்தை அளவில்லாமல் சம்பாதிக்க வேண்டும். போனமுறை ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தும் தோல்வியைத் தழுவியதால், இம்முறை ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் கொடுத்தாவது வெற்றி பெற வேண்டும் என்ற முடிவுக்குவந்து, இரண்டு வருடமாக ரகசியமாக தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டார்.
இருபது வருடத் தேர்தல் அனுபவம். இம்முறை நகரத்தில் பணம் கொடுக்கப் பல தடைகள் இருக்கும் என்பதால் , நகரத்தில் ஒரு பைசா கூடக் கொடுக்காமல், மற்ற கட்சிகள் பணம் கொடுப்பதை தடுக்கத் தனிப்படை அமைத்துவிட்டார். மேலும் நகரத்து ஓட்டுக்கள் பிரியும் என்பதால் கவலை இல்லை. தேர்தல் அறிவிப்பு வரவே இன்னும் ஆறுமாதம் ஆகும். அதற்குள் சிவாவின் ஆட்கள் ஒவ்வொரு கிராமத்துக்கும் வீடு வீடாகச் சென்று சாமிமேல் சத்தியம் வாங்கிக்கொண்டு ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் எனப் பணம் பட்டுவாடா செய்ய ஆரம்பித்துவிட்டனர். கட்சிக்காரர்களையும் , படித்தவர்களையும் பற்றி இவர் கவலைப்படுவதே இல்லை. அந்த ஓட்டுக்கள் தானாகப் பிரியும். அடுத்த வேளை சாப்பாட்டிற்கே வழி இல்லாதவர்கள் தான் இம்முறை இவரது டார்கெட். அப்படி இருபத்து ஐந்து விழுக்காடு வாக்காளர்களைத் தேர்ந்தெடுத்து தன் வேலையை ஆரம்பித்துவிட்டார். சத்தியம் செய்து பணம் வாங்கிவிட்டால் இவர்கள் வாக்கு தவற மாட்டார்கள் என்பதும் இவருக்குத் தெரிந்த ரகசியம். தன்னிடமிருந்து பணத்தை எடுப்பதை விட வருகின்ற குற்றவாளிகளைப் பயன்படுத்தி, அவர்கள் மூலமாகவே தன் ஆட்களை வைத்துப் பணத்தை வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்ய ஆரம்பித்து விட்டார்.
வருகின்ற தன் சம்பளத்தில் ஐம்பது விழுக்காடு கருப்பு பணம் தான் வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள பணத்தில் தகுந்த வருமான வரியை முன்னதாகவே கட்டிவிட்டு மீதமுள்ள தொகையை இவரது வங்கி கணக்கில் கட்டவேண்டும். இதன் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டின் நல்ல குடிமகன் விருதும் இவருக்குக் கிடைத்து வருகிறது.
உள்ளூர் மட்டுமல்ல , நாடு முழுவதிலிருந்தும் தவறு செய்பவர்கள், தவறு செய்ய நினைப்பவர்கள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், தவறு செய்த அரசியல்வாதிகள், வரி கட்டாதவர்கள், பொய் கணக்கு காட்டுபவர்கள் இப்படி அனைத்து குற்றவாளிகளும் சிவாவின் வாடிக்கையாளர்கள் ஆனார்கள். இதுவரை சிவாவை யாரும் குறை சொன்னதில்லை, எதிர்க்கவும் இல்லை. மாறாக, ‘இப்படி ஒரு புத்திசாலி நம் ஊரில் இருக்கானே’ எனப் பெருமை பேசிக்கொண்டார்கள், அந்தக் கந்துவட்டிக்காரனை சிவா சந்திக்காதவரை. இருவரும் சந்தித்துக்கொண்டார்கள். இனி ?
கந்துவட்டிக்குப் பணம் கொடுப்பது அவனது தொழில். அதுவும் ஒரு நாள் கெடுவில். காலை நூறு ருபாய் கடன் கேட்டால் , பத்து ரூபாயை வட்டியாக எடுத்துக்கொண்டு மீதி ரூபாயைக் கொடுப்பான். மாலை நூறு ரூபாயைத் திரும்பத் தராவிடில் மானம் போகதிட்டுவான். ஏமாளியாக இருந்தால் கை, கால் உடைய அடிக்கவும் செய்வான். போலீசில் புகார் கொடுத்தால் ‘என் மீதா புகார் கொடுத்தீர்கள்’ எனத் திரும்பி வந்ததும் பழி வாங்குவான். மக்களின் வறுமையும், பசியுமே அவனது மூலதனம். என்றும் அழியாத மூலதனம். கந்துவட்டிக்காரன், ஒருநாள் காலை மக்களின் சார்பாக தன்னிடம் சண்டையிட்ட ஒருவனை அலட்சியமாக நடு ரோட்டில் வெட்டி சாய்த்துவிட்டான்.
வழக்கம்போல பல லட்சங்களைப் பெற்றுக்கொண்டு தன் அறிவின் கூர்மையால் பொய் சாட்சிகளைத் தயாரித்து சந்தேகத்தின் பெயரில் அவனைக் காப்பாற்றிவிட்டார், சிவா. மேலும் பல லட்சங்கள் குவிந்தன. ஆனால் பொது மக்களும் , காவல்துறையும் அவரைவிட்டு விலகின. தினம் தினம் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படும் நபராகவும் சிவா மாறிவிட்டார். பணம் வந்தால் எல்லாம் தானாக வந்து சேரும் என்பதில் சிவா உறுதியாக இருந்தார்.
சிவாவிற்கு அன்பான ஒரு மனைவி. அழகான கல்லூரிக்குச் செல்லும் ஒரு பெண். ஒரே பெண் தான். எதற்கு எவ்வளவு பணம் என எவ்வளவோ போராடியும் அவர்களால் சிவாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆடம்பரமும் கனவு காணும் சொகுசான அரசியல் வாழ்வும் சிவாவின் லட்சியமானது.
“அப்பா, என்னால் வெளிய தலை காட்ட முடியல, எல்லோரும் தப்பா பேசறாங்க, எல்லா மீடியாவும் தப்பா காட்டறாங்க, எதுக்கு தப்பான வழியில இவ்வளவு பணம்?” மகளின் கெஞ்சல், அழுகை எதுவுமே சிவாவைக் கட்டுப்படுத்தவில்லை.
“அப்பா, எனக்கு உங்கப் பணம் தேவையில்லை, நான் ஒரு ஏழைப் பையனை காதலிக்கிறேன். அவனைத்தான் கல்யாணம் செய்துக்கப்போறேன். தப்பான வழியில பணம் தேடி வீனா உங்க உடம்ப கெடுத்துக்காதிங்க?”
மகளின் புதிய அணுகுமுறை , சிவாவை எதுவும் செய்யவில்லை. இன்னும் அமைதியானார். மெல்லப் பேசினார்.
“நல்லது. நான் எதிர் பார்க்காமல் கிடைப்பது. உன் காதல் திருமணத்தை வைத்து, என் அரசியல் பலத்தை அதிகமாக்கி, வெற்றிபெற்று, நீ நம்பி போனவனை, தன்னால் தற்கொலை செய்துகொள்ள வைப்பேன். எனக்கு இது சாதாரணம். உனக்கு….? உன்னால் ஒரு உயிர் போகனுமான்னு நீ தான் முடிவு செய்யணும்” பேச வந்த மகளை தடுத்து, “ நானும் கூட செத்துடுவேன்கிற பூச்சண்டியெல்லாம் என்னிடம்  வேண்டாம்… நான் பாவப்பட்டு பேசியது, நீ சொன்ன ஏழைப் பையன் உயிர் பற்றி. யாரும் எனக்குப் பிச்சை போடவில்லை. நான் முறையாகச் சம்பாதிக்கிறேன். இது என் அறிவுக்குக் கிடைத்த வெகுமதி. என் தொழில். சட்டப் பூர்வமாக சம்பாதிக்கிறேன்” வாயடைத்து சிலையாகிப்போனது , சிவாவின் மகள் மட்டுமல்ல , அவரின் மனைவியும்தான்.
அன்று மதியம் ஒருவர் சிவாவை சந்திக்க அலுவலகம் வந்தார். அரசியல் செல்வாக்கு , பணபலம் எல்லாம் நன்குதெரிந்தது. அவரிடம் சிவா எதுவும் பேசவில்லை. இரவு வரும்படி கூறிவிட்டார். அப்படி சொன்னாலே, அது சட்ட விரோதமான வழக்கு என்பதும், அதிக பணம் எதிர்பார்க்கப்படும் வழக்கு என்பதும் வந்தவர்க்கும், வீட்டிலிருப்பவர்களுக்கும் நன்கு தெரியும்.
மதியம் வந்தவர், இரவு பெரிய பையுடன் வந்தார். அட்வான்சாக வருமான வரி கட்டிய ரசீதும், வங்கி கணக்கில் பணம் செலுத்திய ரசீதும் கொடுத்துவிட்டு, மீதம் தர வேண்டியதை புதிய நோட்டுகளாகப் பையை பிரித்துக்காட்டி மேசை மீது வைத்தார்.
சிவா அவரது மூக்குக் கண்ணாடி முதற்கொண்டு, சட்டை பட்டன், வைத்திருக்கும் பேனா என முன் எச்சரிக்கையாகச் சோதித்துவிட்டு, பின் பேச ஆரம்பித்தார்.
“நீங்கள் இந்தத் தேதியில், இந்த ஊருக்கு, இரண்டாம் வகுப்பு சீட் புக் செய்ய வேண்டும். அன்று இரவு இரயில் நிலையத்திற்குச் சென்று வண்டியில் ஏறி, பின் பக்கமாக இறங்கியவுடன், உங்களை ஒரு நபர் வேறு வழியாக வெளியே கூட்டி வருவார். உங்கள் அடையாளத்துடன் வேறு ஒருவர் பயணிப்பார். அதுபற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியதை எல்லாம் இரவு செய்துவிட்டு, உங்களுக்கென நான் ஏற்பாடு செய்து இருக்கும் காரில் விடியற்காலை சென்று, நிம்மதியாக ஆண்டவனை தரிசித்துவிட்டு இரவு இரயில் மூலம் திரும்ப வரவேண்டும். நீங்கள் அங்கு, எங்குச் சென்றாலும் அதற்கான ரசீதை உங்கள் பெயரில் பெற மறக்கவேண்டாம். உங்கள் நேரம் முடிந்துவிட்டது. இது பற்றி நீங்கள் என்னிடம் தொலைபேசி மூலம் எதுவும் பேசக்கூடாது. வணக்கம். சென்று வாருங்கள்.”
“ஆபரேஷன் சக்சஸ்” என முனகியபடியே சிவா தன் படுக்கை அறைக்குச் செல்ல, சில நிமிடங்களில் ஒரு உருவம் சிவாவின் அறைக்குள் நுழைந்து வெளியேறியது. முக்கியமான வழக்கு வரும் நாள், சிவா யாரிடமும் பேசமாட்டார். தனக்கு வேண்டிய குறிப்புகளை நோட் பேடில் எடுத்துக்கொண்டு, தேவையான முந்தைய தீர்ப்புகளை எல்லாம் புத்தகத்தோடு எடுத்து வைத்துக்கொண்டு  நீதிமன்றம் கிளம்பினர்.
செல்லும் வழியிலே கை பேசி அடிக்க, எடுத்துப்பார்த்தார். முகம் மாறியது. காரை ஒரு ஓரமாக நிறுத்தினார்.
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலே அவரது மகளும், மனைவியும். கையிலும் முகத்திலும் இரத்தக் கறை. கண்களில் கண்ணீர். இருவரது கழுத்திலும் கத்தி.
ஒரு குரல் மட்டும் ஒலித்தது. “உன் போனை வீடியோ மோடில் போட்டு முன்னால் வைத்து, கையால் தொடாமல் பேசு. மீறி இதைப் பதிவு செய்யவோ அல்லது காவல் நிலையத்தோடு தொடர்பு கொள்ள நினைத்தாலோ, என்ன நடக்கும் என்பதை ஒவ்வொன்றாய் சொல்கிறோம், தைரியமிருந்தால் கேட்டுக்கொள். இவர்கள் யார் எனத் தெரிகிறதா?”
சிவா மெல்லத் தலை நிமிர்த்திப் பார்த்தார். அவரது கண்களை அவரால் நம்ப முடியவில்லை. மீண்டும் கண்களை துடைத்துக்கொண்டு குனித்த தலையை மேலே தூக்கி நன்கு உற்றுப்பார்த்தார்.
பேச முடியாத படி வாய்க்குள் துணியை வைத்து அடைத்து, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது மகளும், மனைவியும். இருவருக்கும் தலை களைந்து, முகத்தில் கைகளில் இரத்தம் வழிய மிகவும் சோர்ந்த முகத்துடன் தன் நிலை மறந்த நிலையில், இருவர் முகத்தையும் முடி பிடித்து இருவர் தூக்கிப் பிடித்து காட்ட, அவர்களுக்கு அருகில் இருப்பவர்களின் கை கால்கள் தவிர வேறு எதையும் அவர்கள் வீடியோவில் புத்திசாலித் தனமாகக் காட்டவில்லை.
“இருக்கும் அத்தனைப் பேரும் கொலை செய்வதுடன், நீ சென்றவாரம் இரவு வாங்கிய பணம், போட்ட ரயில்வே திட்டம், பொய் சாட்சிகள் ஜோடிப்பு இவை அனைத்தும் வீடியோ ஆதாரத்துடன் வெளியிடப்படும். அப்படிச் செய்தால் உன் பார் கவுன்சில் அங்கிகாரம் ரத்தாகும் என்பது உமக்கு தெரியுமென நம்புகிறேன்.”
ஆடிப்போனார் சிவா. வீடியோ மோடில் இருந்த போனில் குரல் தொடர்ந்தது. “இருபது கோடி ரூபாயை நீ வங்கியில் டெபாசிட் செய்தால் வரும் வட்டியைவிட, உன் சட்டமன்ற உறுப்பினர் சம்பளம் குறைவாக இருக்கும்போது உன்னால் எப்படி மக்களுக்கு சேவை செய்ய முடியும். இதுவரை உன்னால் உருவான, நீ காப்பாற்றிய சமூக விரோதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றவே முடியாது. அதற்கான வழி என்ன என்று பார்.  நீ புத்திசாளிதான். உன் புத்திசாளித்தனம் யாருக்கு உவியது? விஞ்ஞானி எனக்கூறிக்கொண்டு ஊரெல்லாம் வெடிகுண்டு வைத்தால், அதற்கு நீ ஆதரவு தருவாயா? இதுதான் தொழில் தருமமா?”
சிவா, வியர்த்த தன்முகத்தைத் துடைத்துக்கொண்டார். அருகில் இருந்த பாட்டில் தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு, “உனக்கு என்ன வேண்டும் , நான் என்ன செய்ய வேண்டும்” என மெல்லக்கேட்டார்.
“நீ ஒரு புத்திசாலி கிரிமினல் வழக்கறிஞர் என்பதைக் காட்டிவிட்டாய். இந்த வழக்கில் இன்று ஆஜராகாதே. வழக்கை வேறு தேதிக்கு வாங்கு. சாட்சிகள் சொதப்பிவிட்டதாய் பொய் சொல்லி,  பணத்தை திரும்பக் கொடுத்து, அவனுக்குத் தண்டனை வாங்கித்தா. இப்படி செய்யாவிட்டால் உன் குடும்பத்தை மறந்துவிடு.”
சிவா வியர்த்தபடி அமர்ந்திருந்தார்.
“ஒரு சிறுமியைப் பலாத்காரம் செய்து அதை தட்டிக் கேட்ட அந்தப் பெண்ணின் அப்பாவையும் கொலை செய்து உள்ளான். அந்த மிருகத்திற்கு நீ துணை போகிறாய். கேட்டால் வழக்கறிஞராக உன் கடமையை செய்வதாகச் சொல்கிறாய். நாளை இதே நிலை உன் பெண்ணிற்கு ஏற்பட்டால் பணத்திற்காக உன் கடமையைச் செய்வாயா? இந்த முறை நீ தேர்தலில் நிற்கக்கூடாது. முறையில்லாமல் சம்பாதித்த பணத்தை எல்லாம் எழைகளுக்கு எழுதி வை.
கிரிமினல்களுக்கு துணை போகாமல் நல்ல வழியில் உன் அறிவைப் பயன்படுத்து. இன்று உன் மனைவியையும் மகளையும் கடத்திய எங்களால் உன்னைக் கடத்த எவ்வளவு நேரம் ஆகும்? மாட்டிக்கொண்டால் எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை என்பது எங்களுக்குத் தெரியும். அதை அனுபவித்துவிட்டு வெளியே வந்து நாங்கள் வாழ்வோம். நீ, இறந்தபின் எப்படி வாழ்வாய்? சாவதற்கு ஏன் இவ்வளவு பணம், எதற்காகச் சம்பாதிக்கிறாய்? எங்கள் பேச்சைக்கேட்டு, திருந்தி அதன்படி செய்தால் இப்பொழுதே இவர்கள் இருவரையும் விட்டு விடுவோம். இல்லையேல் இன்று இவர்கள், நாளை அல்லது அதற்கு அடுத்தநாள் நீ. உன் சாவு இப்படி இருக்காது. இன்னும் கொடியதாக, ஒரு சாலை விபத்தாக இருக்கும்.”
சிவா பதில் ஏதும் பேசவில்லை . தொடருந்து வந்த வியர்வையை தொடைத்துக் கொண்டு, அவர்கள் கூறியதற்கு சம்மதம் எனத் தலையை ஆட்டினார்.
சில நொடிகளில் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக்கூறி . சிவாவின் கார் தனக்கு அறிமுகமான மருத்துவ மனை நோக்கிப் பறந்தது. சிவாவின் மனைவியும் மகளும், தாங்களே வெட்டிக்கொண்ட காயங்களுக்கு மருந்து போட்டுக்கொண்டு, தங்களுக்கு உதவி செய்த நண்பருக்கு நன்றிகூறி வீடு திரும்பினார்கள்.
கோவி. சேகர்
புறநானூறு காட்டும் வீரப்பெண்கள்:
பாடல் ஆசிரியர்: பூங்கணுத்திரை
பெண்கள் கல்வி, கேள்வி, ஒழுக்கம் ஆகிய குணங்களில் மட்டும் அல்லாமல் வீரத்தன்மையிலும் சிறந்து விளங்கியதை புறநானூற்றுப்பாடல் அடிகள் எடுத்துக் கூறுவதன் மூலம் அறிய முடிகின்றது.
போர்க்களத்தில் போர் புரிந்து தன் மகன் வீரமரணம் அடைந்த செய்தி கேட்ட வீரத் தாயின் மன உணர்வை இப்பாடல் படம் பிடித்துக் காட்டுகின்றார்.
‘மீனுண் கொக்கின் றூவி யன்ன
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறெறிந்து பட்டன னென்று முவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதேளூ கண்ணீர்
நோன்கழை யலம்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே’ (புறம்.277 வரி 1-6)
என்னும் பாடல் அடிகள் குறிப்பிடுகின்றன.
முதிய தாயின் தன் கூந்தலானது கொக்கின் இறகைப் போல நரைத்துக் காணப்பட்டது.  அவள் தன்னுடைய மகன் போரில் யானையுடன் போர்புரிந்து அந்த யானையை வீழ்த்திக் கொன்று விட்டு தானும் உயிர் விட்டான் என்னும் செய்தியைக் கேட்டாள்.  அச்செய்தியைக் கேட்டு அப்புதல்வனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட அதிக அளவு மகிழ்ச்சி அடைந்தாள் என்பது விளங்கின்றது.
இன்று பெண்கள்  தங்கள் வீரத்தைக் காட்ட போர்க்களம் கிடையாது. ஆனால் , சமுதாயத்தில் சமுதாய நீதி நிலைநாட்ட , பெண் சுதந்திரம் காப்பாற்ற கணவனாக இருந்தாலும் தங்கள் புத்திக் கூர்மையால், அறிவாற்றலால் கணவனையும் எதிர்த்து போராடி வெற்றி பெறுவார்கள் என்பதை உணர்த்தவே “பெண்ணின் நீதி” எனும் இக்கதையினை எழுதி உள்ளேன்.

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here