சிறுகதைப் போட்டி – 2 : சேர்வேன் அவனிடம் – ராஜேஷ்  

வளம்கொழிக்கும் வளைகுடா நாடுகளில் ஆண்டவனின் அருட்கொடை கொண்ட ஐக்கிய அமீரகம் அமைதியும் ஆளுமையும் கொண்ட நாடு. அதில் தொழில் நகரமாய் அறியப்படும் சார்ஜாவில் கான்க்ரீட் காடுகளின் நடுவில் ஒற்றை பனைமரமாய் உயர்ந்து நிற்கும் ஐரோப்பிய ரசனையுள்ள கட்டிடத்தின் பத்தாம் நிலையில் ஒரு வீடு. இரண்டு படுக்கையறை ஒரு வராண்தவுமாய் இருந்த அதை வீட்டின் ஒற்றை அறையை கேரளத்து சேட்டன்கள் ஆக்கிரமித்து இருந்தனர் மற்ற அறையில் குமரனும் அவனது அலுவலக சகாக்களுமாய் அந்த அறையைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். அன்று வெள்ளிக்கிழமை வாரவிடுமுறை தினம். குமரனின் அறையில் அவனைத் தவிர எல்லோரும் விடுமுறையை அனுபவிக்க வெளியே சென்றுவிட்டனர்.

வெள்ளி என்றாலே தாமதித்து எழும் குமரன் அன்று வெகு சீக்கிரமே எழுந்து கடைக்குச் சென்று சாமான்கள் வாங்கி வந்து தடபுடலாய் சமையலில் குதித்தான்.

ஆப்கானி புலாவ், தக்காளி ஜாம், நாட்டுக் கோழி குழம்பு என அவனது சமையலறை மணமணத்து கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட மூன்று வருடம் கழித்து அவனை காணவரும் குருமூர்த்தி மாமாவிற்காகத்தான் இத்தனை தடப்புடல் எல்லாம்.

அவரும் அமீரகத்தில் தான் வேலை செய்கிறார் என்றாலும் கொஞ்சம் தொலைவு, அபுதுபையில் இருக்கிறார். குமரனை வெளிநாடு அழைத்துவந்து அவன் நல்ல வேலையில் சேர முயற்சி எடுத்தது அவரே. குமரனுக்கு எப்போதும் அவர் மீது தனிப் பாசம் உண்டு. சமையல் அத்தனையும் முடியும் தருவாயில் அழைப்பு மணி ஒலித்தது. குமரன் ஓடிச் சென்று கதவைத் திறந்து மாமாவை கட்டித்தழுவி கைகுலுக்கி வரவேற்றான். அறையில் இருக்கையில் அவரை அமரவைத்து A/C போட்டு விட்டு, “இதோ வருகிறேன்” என்று சமையலறை சென்றவன் கையில் இரண்டு கோப்பைகளுடன் வந்தான்.

“முதலில் இதைக் குடியுங்கள். பிறகு பேசுவோம்” என்று அவர் கையில் ஒரு கோப்பையை திணித்தான். வாங்கியவர் மூக்கைத் துளைத்தது ஆட்டுக்கால் சூப்பு வாசனை.

ஆவலாய் குடித்தவர், ஆஹா குமரா.. செம! அவ்வளவு சுவை. ரொம்ப நாள் ஆச்சிட இப்படி ஒரு சூப்பு சாப்பிட்டு. உன் அத்தையும் வைப்பாளே ஒரு சூப்பு அதை நினைத்தாலே உள்ளம் நடுங்குது. சரி, அதைவிடு. வா, உட்கார். நீ எப்படி இருக்கிறாய்? உன் மனைவி சந்தியா எப்படி இருக்கிறாள்? உன் கல்யாணத்தில் பார்த்தது. உங்களை பார்த்தது என்ன ஒரு மூன்று வருடங்கள் இருக்குமா குமரா?? என்று கேட்கும் குருமூர்தியை ஆவலாய் பார்த்துக்கொண்டிருந்த குமரன்  “ஆமாம் மாமா வரும் 22 தேதி வந்தால் மூன்றாம் ஆண்டு திருமண நாள் மாமா” என்றான்.

“நாட்கள் எத்தனை வேகமாய் ஓடுகிறது பார்த்தாயா குமரா? எப்போது உனக்கு விடுமுறை எப்போது ஊருக்கு போகிறாய்? எப்போது நாங்கள் பேரபிள்ளையை கொஞ்சுவது? இதற்குத்தான் காலகாலத்தில் கல்யாணம் செய்துகொள் என்பது. அப்போது நீ தட்டிக்கழித்தாய்” என்று சிடுசிடுத்த மாமாவிடம், “என்ன மாமா ஏதும் அறியாதவரா நீங்கள்? வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு யார் பெண் தருகிறார்கள்? அப்படியே கொடுத்தாலும் ஜாதகம் ராசி  பொருத்தம் அது, இதுன்னு ஆயிரத்தெட்டு பிரச்சனைகள்.  இதெல்லாம் கடந்து கல்யாணம் பண்ணவே அஞ்சு வருசமாச்சி” என்று ஆதங்கத்தைப் பொரிந்து தள்ளியவனைப் பார்த்து, “சரி விடு. யார் யாருக்கு என்ன விதியோ அதுவே நடக்கும். எப்போ உனக்கு விடுமுறை?” என்று அதே கேள்வியை மீண்டும் கேட்டார் குருமூர்த்தி மாமா.

“எங்கே மாமா நன்கு “மாதங்களாக என் விடுமுறை தள்ளிப் போகிறது. என் முதலாளி இப்போ, அப்போ என இழுத்தடிக்கிறார். என்னோடு வேளை பார்த்த இரண்டு மலையாளிகள் வேலையை ராஜினாமா செய்துவிட்டார்கள். அதனால் வேலைப்பளு அதிகம். இதனாலேயே பெரும் மன உளைச்சல். வீட்டிற்கு போன் செய்தால் சந்தியாவின் முதல் கேள்வி ‘எப்போது வருவீர்கள்?’ என்று தான். என்ன செய்ய அவளின் நிலைமையும் கொஞ்சம் கஷ்டம் தான். எதும் விசேஷத்துக்கு சென்றால் பார்ப்பவர்கள் அத்துணை பேரும் ஒரே கேள்வி ‘எத்தனை குழந்தை?’ என்றுதான் கேட்கிறார்கள். திருமணமாகி 3 வருடமாகிறது என்றாலும் நானும் அவளும் குடும்பம் நடத்தியது 3 மாதம் கூட இருக்காது. என்ன செய்ய? இப்படி தான் எங்கள் வாழ்க்கை நகர்கிறது. சில நேரம் ‘ஏன் கல்யாணம் செய்தோம்’ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது” என்று பெருமூச்சு விட்டான் குமரன்.

அறையில் ஒரு இனம்புரியாத மௌனம். இருவரின் மனமும் கனத்துபோயிருந்தது. பேச்சின் போக்கை மாற்ற நினைத்த குருமூர்த்தியின் எதிரே இருந்த மேசையில் பல புத்தகங்கள் அடுக்கி இருந்தது அதனை கண்டவர், ”அடடே நீ இன்னும் படித்து கொண்டுதான் இருக்கிறாயா குமரா?”

”என்ன மாமா இப்படி கேட்டுவிட்டீர்கள். என்னைப் புத்தகம் வாசிக்கப் பழக்கியதே தாங்கள் தானே?” என்றான்.

”அதெல்லாம் வஸ்தவம் தான் குமரா. இந்த மொபைல் போன் வந்ததுலேர்ந்து நானும் படிக்கறத விட்டுட்டு மொபைல் நோண்ட ஆரமித்து விட்டேன். இனி படிக்க தொடங்கனும்” என்று சொன்னவாரே மேசையில் கை வைத்தவர் கையில் இரண்டு பேப்பர் சிக்கியது .அதில்

திரைகடலோடியும்
திரவியம் தேடி…
விரட்டி விரட்டி திரட்டியதெல்லாம்
சேர்த்துவைத்த பானை ஓட்டை என உணர்வதற்குள் ஓடிவிட்டது பலவருடம்..
இளநரை கிழநரை ஆவதற்குள்
மறுகரை போய் சேர்வோம் வா மக்கா..

2 COMMENTS

  1. கதை சிறப்பு நாம் அணைவரும் நாம் கண்ட துன்பத்தையும் துயரத்தையும் கதையாக தான் பேசுகிறோம் அதை விட்டு விட்டு நமக்கு கிடைத்த சிறு சிறு இன்பங்களை கதையாகவும் நாம் கடந்து வந்த ஆதி கால வாழ்க்கை உணவு முறை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை பற்றிய சிறு கதைகளை எழுதலாம்

  2. சொந்த மண்ணை விட்டு கடனையெல்லாம் அடைத்து கைபிடித்தால் அயல்நாடு வா வா என கூப்பிடு வாழ்வாதாரத்திற்காய் வாழ போகும் என் தமிழ் சொந்தங்களின் உண்மை நிலையை தமிழ் பாடலோடு எழுதியது சிறப்பு அண்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here