சிறுகதைப் போட்டி – 3 : யாரினும் இனியன் – பத்மா

யாரினும் இனியன் பேரன் பினனே

உள்ளுர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்

சூல்முதிர் பேடைக்கு ஈன்இல் இழை இயர்

தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்

நாறா வெண்பூக் கொழுதும்

யாணர் ஊரன் பாணன் வாயே –

தலைவி கருவற்றிருக்கிறாள். தலைவன் தலைவியின் அருகில் இருந்து கவனித்துக்கொள்ளவில்லை. தலைவிக்கு இதனால் தலைவன் மேல் கோபம். தோழியிடம் தலைவனைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறாள்.

வெளியே யாரோ வரும் ஓசை கேட்கிறது.

“எங்கே போகிறாய் இப்பொழுது” கேட்ட தோழியை பார்த்து சொன்னாள் தலைவி.

“வெளியில் ஏதோ ஓசை கேட்கிறதே, யார் என பார்த்து வருகிறேன்”.
“நீ இரு, நான் பார்த்து வருகிறேன்” என்றபடி வெளியில் சென்றாள் தோழி.
வெளியே தலைவனின் தூதுவனாகப் பாணண் நின்றிருந்தான்.
“என்ன வேண்டும்” கதவை மறித்த படி நின்று கேட்டாள் தோழி.
“தலைவன் தலைவியை காண வேண்டுமாம்” பதிலளித்தான் பாணண்.
“அவனைக் காண தலைவி விரும்ப மாட்டாள்” சொன்னாள் தோழி.
“ஏன், என் நண்பன் அன்பானவன் தானே, என்ன குறை கண்டு விட்டாள் தலைவி?” என கேட்டதும் தோழி பதில் அளித்தாள்.

“அன்பும் அக்கறையும் பேச்சில் மட்டும் இருந்தால் போதாது, செயலிலும் இருக்க வேண்டும். போ, போய் உன் நண்பனிடம் கூறு” எனச் சொல்லி விட்டு கதவை அடைத்து உள்ளே செல்கிறாள் தோழி.

நடந்ததை ஊகித்து இருந்த தலைவி “என்ன சொன்னார் அவர்?” என கேட்கிறாள்.

தோழி நடந்ததை கூற கண் கலங்கினாள் தலைவி.

“தோழி, அதோ பார்த்தாயா, அந்த பெண் குருவி. அதுவும் கருவுற்றுள்ளது” முற்றத்தில் இருந்த கூட்டில் இருந்த குருவியை காட்டினாள் தலைவி. அதே நேரம் ஒரு ஆண் குருவி அங்கு வந்தது. “அந்த ஆண் குருவி வாயில் ஏதோ கொண்டு வருகிறதே” சொன்ன படியே அது என்ன செய்கிறது என பார்த்தார்கள் இருவரும். “அது கரும்பு பூ” என்ற தலைவி, மௌனமாக ஆண் குருவியின் செயலை கவனித்தாள். ஆண்குருவி தான் கொணர்ந்த பூக்களை தன் சிறு இதழ்களில் பிய்த்து கூட்டில் பரப்பியது. இப்போழுது அந்த பெண் குருவி முட்டையிட மெத்தென்ற இல்லம் தயார். பெண் குருவிக்கான ஈணும் இல்லம் ஆண் குருவியின் அன்பினாலும் அக்கறையினாலும் மெத்தென்று சுகமானதாகி விட்டது.

“இந்த ஆண் குருவிக்கு உள்ள அன்பு கூட என் மேல் அவருக்கு இல்லையே” தலைவியின் கண்ணீர் கண்டு பதில் சொல்ல தெரியாது தானும் கண்கலங்கினாள் தோழி.அமைதியாக இருந்தது வகுப்பறை. “என்னாச்சு, இவ்ளோ அமைதி” கேட்டாள் ஆசிரியை அகல்யா. பெயருக்கேற்ற படி அகல் விளக்கு போல் இருந்தாள். அமைதி ததும்பும் முகம். கூரான நாசி. ஒல்லியான உருவம், சரியான உயரம். கல்லூரியில் தமிழ் பேராசிரியை. காதல் திருமணம். கணவன் ரகுவுடன் கல்லூரி படிக்கும் போது மலர்ந்த காதல் அதே கல்லூரியில் பேராசிரியை ஆனதும் திருமணத்தில் முடிந்தது.

“ஒரு சின்ன பாடலுக்குள்ள எவ்வளவு எமோஷன்ஸ் கொண்டு வந்திருக்காங்க. ரொம்ப நல்லா இருந்தது இல்ல” அதிசயித்தாள் ஒரு மாணவி.

“எமோஷன்ஸ் மட்டுமா, எத்தனை கேரக்டர்ஸ். தலைவன், தலைவி, தோழி, பாணண், ஆண் குருவி, பெண் குருவி, அப்புறம் ஒரு அழகான கூடு” தொடர்ந்தாள் இன்னொருவள்.

ஆமோதித்த அகல்யா தொடர்ந்தாள். “ஈன்இல், என்ன ஒரு வார்த்தை பிரயோகம் பிரசவ அறைக்கு” தொடர்ந்து ஒவ்வொரு பதமாய் விளக்க ஆரம்பித்தாள் அகல்யா.

கால் மணி சென்றிருக்கும். ‘நீதானே எந்தன் பொன் வசந்தம்’ அகல்யா மொபைல் சிணுங்கியது. எடுத்து யாரென்று பார்த்தாள். கணவர் ரகு. “சொல்லுங்க ப்பா” பேசிய அகல்யாவிடம் ரகு. “அகல் குட்டி, பாசிடிவ் டா” என்றான்.

ஒரு நிமிடம் திகைத்த அகல்யா திகைப்பு மாறாமலே “என்னது” என்று உற்சாகமாகக் கத்திவிட்டு “ஒரு நிமிஷம்ப்பா, வெளில வரேன்” என்ற அகல்யா “எக்ஸ்க்யூஸ் மீ கேர்ல்ஸ்” என்றபடி மொபைலை தூக்கிக்கொண்டு வெளியே ஓடினாள். மொபைலை காதில் வைத்து “என்னப்பா, நிஜமாவா சொல்றிங்க, நான் அம்மா ஆக போறேனா, அச்சோ, என்னால நம்பவே முடியல” படபடவென பேசியவளை இடை மறித்தான் ரகு. “ஆமா அகல், இப்போ தான் லேப்ல இருந்து ஃபோன் வந்துச்சு, எனக்கும் தலை கால் புரியல” ஆனந்தமாக பதிலலித்தான் ரகு. “நீ அங்கவே இரு, நான் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கறேன். உனக்கு பிடிச்ச பார்த்தசாரதி கோவிலுக்கு போறோம், பீச்சுக்கு போறோம், அப்படியே ஹோட்டல்ல சாப்டுட்டு வந்திடலாம்” மகிழ்ச்சியாக தொடர்ந்தான் ரகு.
“சரிங்க, நேர்ல பேசலாம், பைபை” மொபைலை அணைத்த அகல்யா வகுப்பறையில் நுழைய கல்லூரி முடியும் நேரம் ஆகியிருந்தது. மாணவிகளிடம் விடைபெற்று ஆசிரியைகள் ஓய்வு அறைக்கு சென்றாள் அகல்யா.
சக ஆசிரியையும் தோழியுமான உமா “கிளம்பலையா அகல்” என்றாள்.
“ரகு வரேன்னு சொல்லிருக்காருப்பா. அதான் வெயிட் பண்ணிகிட்டு இருக்கேன்” சொன்னாள் அகல்யா.
“என்ஜாய், என்ஜாய்” என்ற உமா தொடர்ந்தாள். “ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி இருக்கே, எதுவும் விசேஷமா”.
“நல்ல விஷயம் தான், ஆனா இப்ப சொல்ல மாட்டேன், நாளைக்கு சொல்றேன்” என்றாள் அகல்யா.
“அப்படியா, எனிவே, வாழ்த்துக்கள். நான் கிளம்பறேன்” என்ற படி கிளம்பினாள் உமா.
உமா கிளம்பியதும் மனம் ஏதேதோ யோசிக்க தொடங்கியது. ‘திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகின்றன. இது வரை குழந்தை இல்லை. கண்ணிறைந்த கணவன், மாமனார், மாமியார் அமெரிக்காவில் நாத்தனார் ராஜி வீட்டில் இருக்கிறார்கள். நினைத்த நேரம் போய் பார்த்து வரும் தூரத்தில் அம்மா வீடு. அவள் போகலாம், ஆனால் ரகு வர மாட்டார். ரகு, அகல்யா காதல் அவர்களுக்கு விருப்பம் இல்லை. அப்போது அகல்யாவின் அப்பா பேசிய சில வார்த்தைகள் ரகுவிற்குக் கோபமூட்டியது. இருப்பினும் அகல்யா அம்மா வீட்டிற்கு செல்ல தடை விதிக்கவில்லை, தான் வருவது இல்லை. குழந்தை இல்லாதது வேறு குறையாக இருந்தது, இப்போது குழந்தை வரமும் கிடைத்து விட்டது’ எதேதோ யோசித்தபடி ஓய்வு அறையில் காத்திருந்தாள் அகல்யா.

ஃபோன் சிணுங்கியது “வந்துட்டேன் அகல், வெளில வா” ரகு சொன்னதும் சக ஆசிரியைகளிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.

ரகு காரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான். ஆறடி உயரம். சிவந்த நிறம். அடர்த்தியான தலைமுடி நெற்றியில் விழுந்தது அவனுக்குக் கூடுதல் அழகு தந்தது. போட்டிருந்த உடையில் பணக்காரத்தனம் வழிந்தது. கார் டீலர். தொழில் நன்றாக போவதால் பணத்திற்குப் பஞ்சமில்லை.

” ஹாய் அகல்” சொன்ன ரகு அருகில் வந்த அகல்யாவிற்கு கார் கதவை திறந்து விட்டான். காரை சுற்றிக்கொண்டு வந்து டிரைவர் இருக்கையில் அமர்ந்த ரகுவின் முகம் பிடித்து இழுத்து கன்னத்தில் இதழ் பதித்தாள் அகல்யா. இடக்கையால் அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு காரை கிளப்பினான் ரகு.

“ரொம்ப சந்தோஷமா இருக்கு அகல், எவ்வளவு வருஷ வேண்டுதல், தவம். நிஜமாயிருக்கு இப்போ” மகிழ்ச்சியாகப் பேசினான் ரகு.
“இன்னைக்கு காலேஜ்ல ஒரு பாடல் நடத்தினேன். அதுல தலைவி கர்ப்பமா இருக்கிறதா வரும். அதோட குருவி ஒண்ணும் கர்ப்பமா இருக்குறதா வரும். எனக்கு ஏக்கமா இருந்தது. ஆனா அதைப்பத்தி நடத்தின வேளை, நானும் கர்ப்பம்ன்னு கன்பார்ம் ஆச்சு. ரொம்ப சந்தோஷமா இருக்குங்க” மூச்சு விடாமல் பேசினாள் அகல்யா.

“நம்ம டாக்டருக்கு ஃபோன் பண்ணேன். வெள்ளிக்கிழமை செக்கப்க்கு வர சொல்லிருக்காங்க. அம்மா அப்பாக்கு இன்னும் சொல்லல. வீட்டுக்கு போயிட்டு சொல்லிடலாம். உங்க அம்மா அப்பாக்கும் சொல்லிடு” சாலையில் இருந்து கவனம் கலையாமல் சொன்னான் ரகு.

“ரகு” தயக்கத்துடன் அழைத்தாள் அகல்யா.

“சொல்லும்மா” என்றவனிடம் “எனக்கு அம்மா அப்பாவை பாக்கணும் போல இருக்கு” என்றாள் அகல்யா.
மௌனமாக சாலையை பார்த்து காரை ஓட்டுவது போல அகல்யாவின் கேள்வியை தவிர்த்தான் ரகு.
“ரகு” திரும்ப அழைத்தாள் அகல்யா. “இவ்வளவு வருஷம் கழிச்சு உண்டாகி இருக்கேன். அம்மா எவ்வளவு ஆசையா காத்துகிட்டு இருந்தாங்க தெரியுமா? நேர்ல பாத்து சொல்லிட்டு வந்துடலாமே ரகு” என்றாள் அகல்யா.
“நீ வேணும்னா போயிட்டு வா அகல், என்னை கூப்பிட்டாத” என்ற ரகு சாலையில் கவனம் செலுத்தி காரை ஓரமாக நிறுத்தினான். “சொல்லு அகல், நம்ம ப்ளான் படி கோவிலுக்கு போகலாமா, இல்ல உங்க வீட்டுல உன்னை டிராப் பண்ணவா” என்றான்.
“கோவிலுக்கே போகலாம்” என்ற அகல்யா வெளியே வேடிக்கை பார்ப்பது போல பாவனை காட்டி கண்களில் துளிர்ந்த கண்ணீரைத் துடைத்தாள். எல்லா இடங்களிலும் உற்சாகமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும் ஒரு சிறு வருத்தம் இருக்கவே செய்தது அகல்யாவிற்கு.
மறுநாள் கல்லூரிக்கு வந்து ஒய்வு நேரத்தில் அம்மாவுக்கு ஃபோன் செய்தாள். “அம்மா, நான் மதியம் லீவ் போடப்போறேன். அப்பாவை ஒரு மணிக்கு காலேஜ்க்கு அனுப்பு, நான் அங்க வரேன்” சொன்னதும் அம்மா பார்வதி பதட்டமாக “என்னாச்சு அகல், உடம்புக்கு ஒண்ணும் இல்லையே” என்றாள்.
“அம்மா, அதெல்லாம் ஒண்ணும் இல்ல, வந்து சொல்றேன். நீ அப்பாவை அனுப்பு” என்ற படி ஃபோனை வைத்தாள் அகல்யா. சரியாக ஒரு மணிக்கு அப்பா கணேசன் ஃபோன் செய்தார். “அம்மாடி, வந்துட்டேன் டா, வெளில வா” அப்பா குரல் கேட்டதும் துளிர்த்த கண்ணீரை துடைத்தபடி உமாவிடம் விடை பெற்று கிளம்பினாள் அகல்யா.
“என்னடா திடீர்னு வர சொல்லிருக்க, எதுவும் பிரச்சினையா” கணேசன் கேட்டதும் “அப்பா, வீட்டுக்கு போயி சொல்றேன்ப்பா” என்றாள் அகல்யா. வீட்டுக்கு வந்ததும் “அம்மா ” என ஓடி அணைத்துக் கொண்ட அகல்யா கைப்பையில் இருந்து இனிப்பை எடுத்து அம்மாவிடம் தந்தாள். “ஸ்வீட் நியூஸ் அம்மா” என தலை கவிழ்ந்தாள்.
“அகல் குட்டி, ஆமாவா” என்று அகல்யா முகம் பார்க்க, அவள் தலையை ஆட்டினாள்.” கடவுளே, என் வேண்டுதல் எல்லாம் பலிச்சிடுச்சு, கடவுள் கண்ணை திறந்துட்டாரு” ஆனந்தத்தில் ஏதேதோ பேசினாள் பார்வதி. “வா அகல், உனக்கு பிடிச்ச பருப்பு உருண்டை குழம்பு பண்ணிருக்கேன், சாப்பிடு முதல்ல” சாப்பாடு கொண்டு வந்து ஊட்டி விட்டாள். சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்து கணேசன் கேட்டார் “மாப்பிள்ளை எப்பிடி இருக்காரும்மா. அவருக்கு இன்னும் கோவம் குறையலியா”.
அகல்யாவின் கண்களில் கண்ணீர் நிறைந்தது. “நீ கண் கலங்காதம்மா, எல்லாம் சரி ஆயிடும். நான் ஃபோன் பண்ணாலும் என்கிட்ட பேசறது இல்ல, வீட்டுக்கு நாங்க வந்தா அவர் வீட்டுக்கு வர்றதே இல்ல. என் கூட பேசினா தானேம்மா நான் சமாதானப்படுத்த முடியும்” கண் கலங்கி சொன்னார் கணேசன். மாலை வரை பேசி கொண்டு இருந்தனர். ஏழு மணி அளவில் வாசலில் வந்து ஃபோன் செய்தான் ரகு. விடை பெற்று கிளம்பினாள் அகல்யா. கணேசனும் பார்வதியும் அகல்யாவை வழியனுப்ப வந்தனர்.

“மாப்பிள்ளை, நல்ல நியூஸ் சொல்லிருக்கிங்க, உள்ள வந்து ஒரு காபி குடிச்சிட்டு போங்களேன்” ஏறக்குறைய கெஞ்சினார் கணேசன். பதில் பேசாமல் காரை கிளப்பினான் ரகு. வீடு வரும் வரை இருவருக்கும் இடையில் பெரிய மௌனம் அமர்ந்திருந்தது.

அடுத்து வந்த நாட்களில் அகல்யா, டாக்டர் கூறிய போதெல்லாம் செக்கப்பிற்கு சென்று வந்தாள். கல்லூரியில் இருந்து அம்மா அம்மாவிற்குப் பேசி வந்தாள். பார்க்க தோன்றியபோது போய் வந்தாள். அப்பாவுடன் வீட்டிற்கு செல்வாள். ரகு வந்து அழைத்துச் செல்வான்.

நாட்கள் ஓடியது. இது ஐந்தாவது மாதம். “அகல் குட்டி, இ‌ந்தா பால் குடி” குங்கும பூ கலந்த பால் கொண்டு வந்தான் ரகு. வாங்கி இரண்டு வாய் குடித்தவள் வயிற்றை பிடித்துக்கொண்டு “அம்மா, உதைக்காதடா” என்றாள்.

“டா இல்ல, டி, தேவதை மாதிரி, அம்மா மாதிரி, என் அகல் குட்டி மாதிரி இனிமையான இனியா” என்றான் ரகு.
“இனியாவா, பேரு கூட வச்சாச்சா ” சிரித்த படி கேட்டாள் அகல்யா.
“ஆமா, பொண்ணுன்னா இனியா, பையன்னா இனியன்” என்றான் ரகு.
“இனியனா” முகம் இருண்டது அகல்யாவிற்கு.

“என்னாச்சு அகல்” ரகு கேட்க, “தூக்கம் வருது” எனத் திரும்பி படுத்து கொண்டாள் அகல்யா. அவளின் திடீர் மாற்றம் கண்டு குழப்பத்தில் ஆழ்ந்தான் ரகு.

மறுநாள் காலை, அலாரம் அடித்தும் எழவில்லை அகல்யா.”அகல் குட்டி, உடம்பு என்ன பண்ணுது, காலேஜ் போகலையா” ரகு கேட்க, “இல்ல ரகு, ரொம்ப டயர்டா இருக்கு, லீவ் போட போறேன்” என்றாள் அகல்யா.

“ரகு, ஒரு ஹெல்ப் பண்றிங்களா, காலேஜ் பேப்பர்ஸ் தரேன், கீதா கிட்ட கொடுத்துடறீங்களா, நான் ஃபோன் பண்ணி அவ கிட்ட சொல்றேன், அவ வெளில வந்து வாங்கிப்பா ” என்றாள்.

“சரி டா, நான் கொடுத்திடறேன்” என்றான் ரகு. ஒரு கட்டு பேப்பர் எடுத்து கொடுத்தாள் அகல்யா.

பேப்பர் கட்டை வாங்கிய ரகு எதேச்சையாக பார்க்க முதல் வரியில் இருந்த “யாரினும் இனியன்” என்ற வார்த்தை கவனத்தை ஈர்த்தது. அகல்யாவைக் கேட்கலாம் என நினைத்து திரும்ப அகல்யா பாத்ரூமில் இருந்தாள். ஆர்வம் தாங்காமல் கையில் இருந்த மொபைலில் கூகிள் செய்தான்.

கருவுற்ற மனைவியை கவனிக்காத கணவன் தோழனை தூது அனுப்ப, மனைவி கணவனை சந்திக்க மறுத்து விட்டு சூலுற்ற பெண் குருவியின் இணை குருவியை பார்த்து ஏங்குவதுமாக பொருள் சொன்னது கூகிள். மனதிற்குள் பெரும் பாரமாக கவலை சூழ்ந்தது.

அன்று, அகல்யாவின் பிறந்த நாள். காலை எழுந்ததும் அகல்யாவிற்கு அம்மா நினைவு வந்து விட்டது. ஃபோன் செய்தாள். அம்மா, அப்பா இருவரும் ஃபோன் எடுக்கவில்லை. சிறிது கவலையுடன் லாண்ட்லைனுக்கு அடித்தாள். பதில் இல்லை. ‘ஏன் ஃபோன் எடுக்கல’ கவலை சூழ்ந்தது அவளுக்குள். ரகு வாக்கிங் போயிருந்தான். ‘சரி, ரகு வந்ததும் ஒரு நடை வீட்டுக்கு போய் பார்த்து விட்டு வரலாம்’ நினைத்து கொண்டே குளிக்க சென்றாள் அகல்யா. குளித்து விட்டு வந்து புது புடவை உடுத்தி தயாராக ரகு வருவதற்காகக் காத்திருந்தாள்.

காலிங்பெல் ஒலித்தது. கதவை திறந்தவள் ஆனந்தத்தில் திகைத்தாள். அம்மாவும் அப்பாவும் வெளியில் நின்றிருந்தனர். “அம்மா, அப்பா, வாம்மா, அப்பா, வாங்கப்பா” கண்ணீருடன் உள்ளே அழைத்தாள். அவர்கள் உள்ளே வந்து அமர, ரகு உள்ளே நுழைந்தான். எதுவும் பேசாமல் ரூமுக்கு சென்று கதவை மூடிக்கொண்டான். அகல்யாவிற்கு கண்ணீர் முட்டியது. குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தவளை ரகுவின் குரல் மறித்தது. “அகல்யா, ஒரு நிமிஷம் வா” உள்ளே சென்றாள்.

ஒரு பெரிய கேக் டேபிள் மேல் வைக்க பட்டிருந்தது. ‘இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் – அம்மா & அப்பா’ கேக்கில் இருந்த வார்த்தைகளை படித்தவள் திகைத்தாள். அப்பா, அம்மா, ரகு மூவரும் கோரசாக “ஹாப்பி பெர்த் டே அகல்” எனப் பாடல் பாட மேலும் திகைத்தாள்.

“அகல் குட்டி, இப்போ சொல்லு, இனியன் பேரு ஓகே தானே” ரகு கேட்க மேலும் திகைத்தாள் அகல்யா.

“இப்போ நானும் ஆண் குருவி மாதிரி பாசமா இருக்கேனா, இவ்ளோ நாள் உன்னை ஏங்க வச்சதுக்கு சாரி டார்லிங், எனக்கு புரியல. யாரினும் இனியன் தான் நீ எவ்ளோ ஏங்கி போயிருக்கன்னு புரிய வச்சது. அதான் உடனே அப்பா கிட்ட போயி சாரி கேட்டு சர்ப்ரைஸா இன்னைக்கு கூட்டிட்டு வந்தேன்” என்றான்.

” இப்போ நீ நிஜமாவே யாரினும் இனியன் தான் ” ரகுவை அணைத்து கொண்டாள் அகல்யா. அனைவரின் மகிழ்ச்சியை கண்டு மகிழ்ந்த வயிற்றில் இருந்த குழந்தை ஒரு உதை கொடுத்து தன் மகிழ்ச்சியை தெரிவித்தது.

– பத்மா

யாரினும் இனியன் பேரன் பினனே

உள்ளுர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்

சூல்முதிர் பேடைக்கு ஈன்இல் இழை இயர்

தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்

நாறா வெண்பூக் கொழுதும்

யாணர் ஊரன் பாணன் வாயே – குறுந்தொகை – 85

மருதத்திணை – தோழி கூற்று

ஆசிரியர் : வடம வண்ணக்கன் தாமோதரன்

சிறுகதைப் போட்டியில் பங்குபெற : ‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018

Leave a Comment