சிறுகதைப் போட்டி – 4 : அற்றைத் திங்கள் – பத்மா

“வணக்கம் அய்யா, தங்களைப் பார்த்தால் பரம்பு நாட்டைச் சார்ந்தவராக தோன்றவில்லை. பழக்கப்படாதார் இந்த மலைகளில் ஏறி வருவது சற்று சிரமம். தாங்கள் யார், பரம்பு மலைக்கு யாரை பார்க்க வந்துள்ளீர்கள் என அறியலாமா?” கேட்ட இளைஞனை கூர்ந்து பார்ததார் கபிலர்.

கபிலர், மூவேந்தர்களும் போற்றும் புலவர். பல அரச குமார்களுக்கும் இளவரசிகளுக்கும் ஆசிரியர். பாணர்கள் வாயிலாக பரம்பு மலை குறித்தும் பாரி குறித்தும் அறிந்தவர் முதல் முறையாக பரம்பு மலைக்கு பாரியை பார்க்க வந்துள்ளார்.
எதிரில் நின்று தன்னை வரவேற்ற வீரனை வழி கேட்டு பாரியை காணும் எண்ணத்துடன் பேசத் தொடங்கினார் கபிலர்.

“நான் ஒரு புலவன், என் பெயர் கபிலன். பாரியை சந்திக்க வந்துள்ளேன். அரண்மனைக்கு இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டும்?” என்றார். புன்னகைத்த இளைஞன் “தாங்கள் அரண்மனைக்கு செல்ல வேண்டுமா, இல்லை பாரியை பார்க்க வேண்டுமா?” என வினவினான்.

“பாரியைதான் காண வேண்டும்” சிரித்த படி சொன்னார் கபிலர்.

அந்த இளைஞன் கபிலரின் அருகில் நெருங்கினான். “தமிழ் போற்றும் புலவருக்கு பாரியின் வணக்கம். பரம்பு நாடு உங்களை வரவேற்கிறது. தங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்” என பாதம் பணிந்து நின்றான்.

திகைப்புடன் பார்த்தார் கபிலர். ‘பரம்பின் அரசன் பாரி, கிரீடம் இல்லை, கவசம் இல்லை, மெய்க்காவல் படை இல்லை, மந்திரி, சேனாதிபதி என்று எவரும் இல்லை. ஒரு படை வீரனைப்போல காட்சி தரும் இந்த இளைஞனா பாரி?’ மனதில் தோன்றிய எண்ணத்தை வெளியிடவும் செய்தார்.

புன்னகைத்த பாரி “புலவரே, நான் பரம்பின் அரசன் இல்லை” என்றான்.

மேலும் திகைத்த கபிலர் “என்ன, நீ அரசன் இல்லையா, இப்பொழுது தானே உன்னை பாரி என்று கூறினாய். பாணர்கள் பாரி பரம்பின் வேந்தன் என்று கூறினார்களே?” என்றார்.

“நான் பாரி தான், ஆனால் நான் பரம்பின் அரசன் இல்லை. பிரதிநிதி என்று வேண்டுமாயின் கூறலாம். நானும், பரம்பின் மக்களும், பரம்பின் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து வருகிறோம். என் மக்கள் எனக்கு வழி காட்டுகிறார்கள், நான் அவர்களுக்கு வழி காட்டுகிறேன். எங்கள் அனைவருக்கும் பரம்பின் இயற்கை அன்னை வழி காட்டுகிறாள். தேவையான நேரத்தில் நான் என் மக்களின் பிரதிநிதியாக செயல்படுகிறேன். நலமுடனும் வளமுடனும் வாழ்கிறோம்” பதில் அளித்தான் பாரி.

“வித்தியாசமான சிந்தனை, வித்தியாசமான நாடு, வித்தியாசமான தலைவன். வாழ்க நீயும், உன் நாடும்” கைகள் உயர்த்தி ஆசிர்வதித்தார் கபிலர்.

“புலவரே, பரம்பின் விருந்தாளி தாங்கள், முதலில் சிறிது சுவைநீர் அருந்தி ஓய்வு எடுங்கள். பின் என் இருப்பிடம் செல்லலாம்” எனத் தெரிவித்த பாரி அருகில் இருந்த குடிசைக்குக் கபிலரை அழைத்து சென்றான். அங்கிருந்தவர்கள் பாரியைக்கண்டு மன்னன் என பதறவில்லை, மகன் போல அன்புடன் வரவேற்றனர்.
“வெற்றி, எழிலி, நலமா? இவர் எழுத்தறிந்த புலவர். நமது விருந்தாளி. எழிலி, சிறிது சுவைநீர் கொண்டு வா” என்றான் பாரி.

“பாரி, இவரை பார்த்தால் வெகு தொலைவில் இருந்து வருகிறவர் போல் தெரிகிறது. சிறிது ஓய்வெடுக்க சொல்லுங்கள். உணவு தயார் செய்கிறோம். உணவுக்குப் பின் பயணம் தொடரலாம்” என்றான் வெற்றி. அதற்குள் எழிலி சுவைநீர் கொண்டு வர, குடுவையை வாங்க கை நீட்டினார் கபிலர்.

நீட்டிய கையில் குடுவை வைக்கப்படாததைக்கண்டு நிமிர்ந்து பார்த்தார் கபிலர். மேற்கில் இறங்கிக்கொண்டிருந்த சூரியன் பிரகாசமாக கண்களை கூசச்செய்தது. சுயநினைவுக்கு திரும்பினார் கபிலர். இப்போது பாரி இல்லை. பாரி கொல்லப்பட்டு ஒரு திங்கள் ஆகப்போகிறது. ஆயினும் கபிலரால் பாரியைப்பற்றிய நினைவுகளை மறக்க இயலவில்லை. விழித்திருந்தால் நினைவிலும், உறங்கினால் கனவிலும் பாரியின் வரவு.

கபிலர் தெளிவடைந்து கையை பின்னுக்கு இழுக்கும் முன் அவரைக் கண்டுவிட்ட அங்கவை “ஆசானே, இந்தாருங்கள், சுவைநீர்” என எண்ணமறிந்து கொடுத்தாள்.

வாங்கி அருந்தினார் கபிலர்.

சுவை நீர் அருந்தி விட்டு குடிலைச் சுற்றி நடக்க தொடங்கினார். சங்கவை அங்கிருந்த பூச்செடிகளுக்கு அருகில் இருந்த சுனையில் இருந்து நீர் கொணர்ந்து வார்த்துக்கொண்டிருந்தாள். அருகில் வந்த கபிலரைக்கண்டு வணங்கினாள். கபிலர் அவளிடம் செடிகளை பற்றி பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தார். அவர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகில் ஒரு முல்லைக் கொடி படர்ந்திருந்தது. அதன் அருகில் வந்ததும் அதன் இலைகள் சங்கவையின் கன்னத்தில் பட்டதும் குலுங்கி அழ தோடங்கினாள் சங்கவை.

பதறிய கபிலர் அவளை அணைத்து “என்ன ஆயிற்று மகளே?” என வினவினார்.
“ஆசானே, தந்தை நினைவு வந்து விட்டது. படர கொழுக்கொம்பு இல்லாமல் தவித்த முல்லைக்கொடிக்கு தந்தை தனது தேரையே கொழுக்கொம்பாக்கினார். இன்று நாங்கள் தனியாகத் தவிக்கிறோம், கொழுக்கொம்பு இன்றி” பதில் அளித்தாள் சங்கவை.
“நானும் பாணர்கள் வாயிலாக கேட்டிருக்கிறேன். அந்த நிகழ்வை ஒருமுறை எனக்கு கூறுவாயா?” கேட்டார் கபிலர்.

நினைவுகளை மீட்கத்தொடங்கினாள் சங்கவை.

அது ஒரு கார்த்திகை மாதம். மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது. பாரி ஆதினியுடன் அருகில் இருந்த கொற்றவைக் கோவிலுக்கு கிளம்பினான். சிறுமிகளான அங்கவையும் சங்கவையும் உடன் கிளம்ப ரதத்தில் செல்ல முடிவெடுத்தனர். சாரலாய் மழை பெய்து கொண்டிருந்தது. கோவிலில் பரம்பு மக்கள் அனைவரும் கூடியிருந்தனர். கொற்றவைக்கு பலி முடித்து குடிலுக்குத் திரும்பும் போது கதிர் மேற்கில் இறங்கிவிட்டான். வரும் வழியில் ஆதினி மலர் குலுங்கும் செடிகளை பார்த்துக் கொண்டே வந்தாள். “ரதத்தை நிறுத்துங்கள்” பதற்றமாய் வந்தது ஆதினியின் குரல். ரதம் நின்றதும் ஓரத்தில் இருந்த ஒரு சிறு முல்லைக்கொடியிடம் சென்று பார்த்தாள். இளம் கொடி தனது கரங்களால் பற்றிக்கொள்ள கொழுக்கொம்பு தேடி அலைந்தது. அங்கவையும் சங்கவையும் ஆளுக்கொரு மரக்கொம்பு கொண்டு வந்தனர். ஆதினி அந்த கொம்புகளை முல்லைக்கொடியின் அருகே ஊன்றினாள்.

“இப்போது நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. இரண்டு நாளில் இந்த கொழுக்கொம்பு தாண்டி வளர்ந்து விடுமே” யோசனையுடன் பாரி கேட்டான்.
“யாரையேனும் அனுப்பி வேறு கொழுக்கொம்பு நட சொல்லலாம்” யோசனையுடன் பதில் அளித்தாள் ஆதினி.
ஒன்றும் பேசாமல் ரதத்தில் ஏறிய பாரி, ரதத்தை கிளப்பினான். முல்லை கொடியின் அருகில் நிறுத்தி, குதிரைகளை விடுவித்தான். “நடந்து செல்வதில் எதுவும் சிரமம் இல்லையே?” கேட்ட பாரி இடக்கையால் ஆதினியின் கையை பற்றினான். வலக்கையில் அங்கவையை பற்றி நடக்க தொடங்கினான்.

ஆதினியின் இடக்கை சங்கவையை பிடித்திருந்தது. ரதத்தை ஒட்டியிருந்த முல்லைக்கொடி அவர்கள் நடந்து போவதை பார்த்துக்கொண்டிருந்தது.

சொல்லிக்கொண்டிருந்த சங்கவை முகத்தில் தந்தை குறித்த பெருமிதமும் தந்தையை இழந்த சோகமும் கலந்து காணப்பட்டது.

கேட்டுக்கொண்டிருந்த கபிலர் “மகளே, பாரி இரவு நேரத்தில் ரதத்தில் செல்ல மாட்டான் என கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு எதுவும் காரணம் இருக்கிறதா?” என கேட்டார்.

“நான் சொல்கிறேன் ஆசானே” சொல்ல தொடங்கினாள் அங்கவை.

“தாங்கள் முதல் முதலில் தந்தையை சந்தித்த போது உங்களை ஓய்வெடுக்க அழைத்துச் சென்றாரே, அவர்களை தங்களுக்கு நினைவிருக்கிறதா?” என வினவினாள் அங்கவை.

“ஆம், வெற்றி மற்றும் எழிலி. அருமையான உபசரிப்பு. பாரி மீ்து அவ்வளவு அன்பு அவர்களுக்கு” பதில் அளித்தார் கபிலர்.

“அவர்களைப் சுற்றிய ஒரு நிகழ்வு தான் தந்தை இரவு நேரத்தில் ரதத்தில் பயணிப்பதைத் துறக்க காரணமாக அமைந்தது” சொன்ன அங்கவை அந்த நிகழ்வினை நினைவு கூர்ந்தாள்.

அது தை மாதம். வெற்றிக்கும் எழிலிக்கும் அன்று தான் மணமாகி தனித்த குடிலில் இல்வாழ்க்கை தொடங்கும் முதல் இரவு. பரம்பின் வழக்கப்படி புதுமண தம்பதியர் ஊருக்கு கிழக்கே வன்னி மரக்காட்டில் தனித்த குடிலில் தங்கியிருந்தனர். ஆதிகாலத்தில் இருந்து தொடரும் தேடலுக்கு அவர்களும் விதிவிலக்கு அல்ல. ஒருவருக்குள் ஒருவர் தொலைந்து, ஒருவரை ஒருவர் தேடிக்கொண்டிருந்தனர். வளர்பிறை வெண்ணிலா வான் உச்சியில் இருந்தது, இவர்களின் உணர்ச்சியை போலவே.

அதே நேரம், பாரியின் இருப்பிடத்தில் ஆதினி கடும் வயிற்று வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். பாரி பதற்றத்துடன் அவளைத் தேற்றிக்கொண்டிருந்தான். “ஆதினி, ஆமணக்கு தைலம் தேய்த்து விடவா” கேட்ட பாரியிடம் “தேய்த்து விட்டேன், இருந்தும் வலி குறையவில்லை” என்றாள் ஆதினி.

“அங்கவை, சங்கவை, சிறிது நேரம் தாயை பார்த்துக்கொள்ளுங்கள். நான் சென்று வைத்தியரை அழைத்து வருகிறேன்” கிளம்பினான் பாரி.

அப்போது, மெல்ல மெல்ல வெற்றிக்குள் அடங்கி கொண்டிருந்தாள் எழிலி. வெளியில் பாரியின் ரதம் உருளும் ஓசை கேட்க, சட்டென எழிலியை விட்டு விலகினான் வெற்றி. “இந்த நேரத்தில் பாரி எங்கு செல்கிறான். பார்த்து விட்டு வந்து விடுகிறேன் எழிலி” விலகி வெளி நடந்தான் வெற்றி. வெளியே வரவும் பாரியின் ரதம் அவ்விடம் நெருங்கியிருந்தது.

“பாரி, எதுவும் ஆபத்தா, இந்த நேரத்தில் செல்ல வேண்டிய கட்டாயம் என்னவென்று அறியலாமா?” ரதத்தை நிறுத்திக் கேட்டான் வெற்றி.
அவனை பார்த்து ஆச்சர்யமடைந்த பாரி “யாரது, வெற்றியா? உனக்கு இன்று இணைநாள் அல்லவா. எழிலியுடன் மகிழ்ந்திருக்காது இங்கு ஏன் வந்தாய்?” வினவினான் பாரி. வெற்றியின் முகம் நாணத்தால் சிவந்தது. அருகில் இருந்த குடிலின் வாசலில் முகம் மட்டும் தெரியும்படி நின்றிருந்த எழிலியை கண்டதும் சங்கடம் அடைந்தான் பாரி.
“அடடா, என் ரத சப்தம் உங்கள் தனிமையைக் கெடுத்து விட்டதே” வருந்திய பாரி வெற்றியிடம் கூறினான் “வெற்றி, நீ செல். எழிலி காத்திருக்கிறாள் பார். எதுவும் அபாயம் இல்லை. ஆதினிக்கு உடல் நலமில்லை. வைத்தியரை அழைத்து வர தான் செல்கிறேன். உன்னை சிரமப்படுத்தியதற்கு என்னை மன்னித்து விடு. எழிலியையும் என்னை மன்னிக்கச்சொல்” சொன்ன பாரி நடக்க தொடங்கினான்.
“பாரி, ரதத்தில் வந்ததை மறந்து விட்டாயா” கேட்டான் வெற்றி.

“மறக்க வில்லை வெற்றி. இனி இரவு நேரத்தில் என் ரதம் உருளாது” புன்னகையுடன் நடந்த பாரியை பெருமையுடன் பார்த்து நின்றான் வெற்றி.

சொல்லிக்கொண்டிருந்த அங்கவை தந்தை நினைவில் அழத் தொடங்கினாள். சங்கவையும் அழத்தொடங்க கண்ணில் பெருகிய கண்ணீரைத் துடைத்து அவர்களைத் தேற்ற தொடங்கினார் கபிலர்.

அங்கவை தொடர்ந்தாள் “ஆசானே, நாளை முழுமதி நாள். சென்ற முழுமதி நாளில் போர் சூழ்ந்த நிலையிலும் தந்தையுடன் தர்க்கம் புரிந்தேன்” நினைவில் கரைந்தாள் அங்கவை.

“தந்தையே, தாயிடம் தாங்கள் வைத்திருக்கும் அன்பிற்கும் எங்கள் மேல் வைத்திருக்கும் அன்பிற்கும் என்ன வேறுபாடு?” கேட்ட அங்கவையை வியப்புடன் பார்த்தான் பாரி.

“அன்பில் வேறுபாடு இல்லை. நான் தேடி கண்ட அன்பு அவள். அந்த அன்பிற்கு இறைவன் கொடுத்த கொடை நீங்கள் இருவரும் ” பதில் அளித்தான் பாரி.
“இதையே நானும் கூறலாம் அல்லவா, வேறு வார்த்தைகளில்” புதிராக பேசினாள் அங்கவை.
குழப்பத்துடன் பார்த்த பாரியை ஏறெடுத்து, “நீங்கள் இறைவன் எனக்குக் கொடுத்த கொடை. எனக்கான தேடல் வேறு இருக்கலாம் அல்லவா?” என கேட்டாள் அங்கவை.
சன்னமாக சிரித்த பாரி “எனில், உன் மனம் யாரிடமோ ஈடுபட்டு விட்டது. காதலுக்கு பரம்பும் பாரியும் என்றும் எதிரி அல்ல. உன் மனம் கவர்ந்தவன் யாரென்று சொல். அவனையே உந்தன் மணவாளன் ஆக்குகிறேன். எனினும் சிறு மன சஞ்சலம் இருக்கிறது” என்றான்.
“என்ன தந்தையே, நான் தங்களை மீறி காதல் கொள்வது உங்களுக்கு சஞ்சலத்தை தருகிறதா?” என அங்கவை கேட்க “உன்னை கட்டி கொண்டு அவன் படப்போகும் அவஸ்தையை நினைத்தால் தான் சஞ்சலமாக உள்ளது” என பாரி பதில் சொன்னான்.
“தந்தையே, பேச்சு மாற்ற வேண்டாம். ஒரு வேளை என் மனம் பரம்பின் வீரன் ஒருவன் பால் சென்றால் ஒப்புக்கொள்வீர்கள். வேற்று நாட்டு ஆடவன் எனில் உங்கள் எண்ணம் என்னவாக இருக்கும்?” எனக் கேட்டாள் அங்கவை.
“என் எண்ணத்தில் எந்த மாற்றமும் இல்லை மகளே” பாரி விடை அளிக்க “ஒருவேளை பரம்பை சுற்றி முகாம் இட்டிருக்கும் மூவேந்தர்களில் ஒருவனாக இருந்தால்?” மறு கேள்வி பிறந்தது அங்கவையிடம் இருந்து.
சி‌றிது யோசத்த பாரி “சங்கடமான கேள்வி, எனினும் எனக்கு எந்த சஞ்சலமும் இல்லை. உன் மனதை ஒருவன் கவர்ந்தான் எனில் அவனுக்கான தண்டனை கட்டாயம் உண்டு. உன்னை அவனுக்கு மணமுடித்து வைப்பதை விட பெரிய தண்டனை என்ன கொடுத்து விடமுடியும் என்னால்?” சொல்லி விட்டு சிரித்தான் பாரி.
“தந்தையே…” மெல்ல சிணுங்கிய அங்கவை “தந்தையே, எந்த ஆடவனாலும் தங்களை நிகர் செய்ய இயலாது. அப்படி ஒரு ஆண்மகனை கண்டு என் உள்ளம் அவனிடம் செல்லுமாயின் அதைப்பற்றி தங்களிடம் பேசும் சுதந்திரத்தையும் எனக்கு வழங்கியுள்ளீர். காதலைப்பற்றி உங்களது எண்ணத்தை அறியவே அவ்வாறு கேட்டேன்” என்றாள்.

‘அது தான் தெரியுமே’ எனபதைப்போல் ஆதினியை பார்த்து கண்சிமிட்டி சிரித்தான் பாரி.

கண்ணீருடன் நிகழ்காலத்திற்கு வந்தாள் அங்கவை. “ஆசானே, இனி யாரிடம் நான் விளையாட்டு தர்க்கம் புரிவேன். முழுமதி காணும்போதெல்லாம் தந்தை முகம் தான் தெரிகிறது. இதோ, வீசும் காற்றில் தந்தை குரல் கேட்கிறது. எங்களைத் தவிக்க விட்டுப் போனது பற்றிய அவர் தவிப்பு கேட்கிறது. தந்தையை, எங்களின் கொழுக்கொம்பை இழந்து வாடும் எங்கள் குரல் யாருக்கு இனி கேட்கப்போகிறது?” அழுகையின் ஊடே கேட்டாள் அங்கவை.

“மகளே, நான் கேட்க செய்கிறேன் மகளே. இப்புவியில் தமிழ் உள்ளவரையிலும் என் இந்த பாடல், என் தமிழில், என் எண்ணத்தில் உங்கள் வேதனையை கூறும்” என கூறியவர் மனதிற்குள் வார்த்தைகளை கோர்த்தார்.

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்

எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்

வென்றெறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.

“தந்தையை இழந்து, உங்கள் நாட்டை இழந்து நீங்கள் தவிக்கும் தவிப்பை அன்னை மொழியாம் தமிழில் உங்கள் இடத்தில் இருந்து நான் எழுதியுள்ளேன் மக்களே” என இரு கைகளையும் விரித்தார்.

“ஆசானே” என விளித்து பின் “தந்தையே” என்றபடி அவர் தோள்களில் சாய்ந்தனர் அங்கவையும் சங்கவையும்.
– பத்மா…
———
புறநானூறு 112ம் பாடல், பாரி மகளிர்பாடல்:

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்

எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்

வென்றெறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.

ஆசிரியர் : கபிலர்

திணை : பொதுவியல்

துறை : கையறு நிலை

சிறுகதைப் போட்டியில் பங்குபெற : ‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018

One thought on “சிறுகதைப் போட்டி – 4 : அற்றைத் திங்கள் – பத்மா

  1. பாரி மகளிர், கபிலர் சிறுகதை… வெகு அருமை பத்மா. படிக்க படிக்க விழிகளில் நீர் கோர்த்துவிட்டது. சிறந்த தந்தையாக, சிறப்பான காவலனாக, உற்ற நண்பனாக பாரியின் பரிணாமங்களை சிறுகதை வாயிலாக வெகு அழகாக விளக்கி இருக்கிறீர். மிக்க நன்றி!!! அருமையான கதை.. மனமார்ந்த பாராட்டுகள்!!!

Leave a Comment