சிறுகதைப் போட்டி – 17 : பிசிராந்தையாரும் பேனா நட்பும் – சில்வியாமேரி

தமிழாசிரியர் வகுப்பிற்குள் நுழையவுமே மாணவர்கள் இரைச்சல் போடத் தொடங்கினார்கள். இது வழக்கமான நிகழ்வுதான். இதே அறிவியல் வகுப்பென்றால் அவர்கள் சகலத்தையும் மூடிக்கொண்டு அமைதியாக இருப்பார்கள். ஏனென்றால் அறிவியல் ஆசிரியர்கள் செய்முறைத் தேவின் போது மதிபெண்களில்  கைவைத்து விடுவார்கள். கைவைக்க வேண்டுமென்பது கூட இல்லை.

முழு ஆண்டுத் தேர்வின் போது பிடிக்காத மாணவர்கள் செய்முறைத் தேர்வை எழுதும் போது பக்கத்திலேயே போகாமல் அவர்கள் செய்வதை அப்படியே எக்ஸ்ட்ரனலிடம் கொடுத்து விட்டாலே மதிப்பெண்கள் குறைந்து விடும். ஆனால் பாவம். தமிழ் மற்றும் ஆங்கிலம் எடுக்கும் ஆசிரியர்களிடம் அப்படி லகான் ஏதும் இல்லாததால் அவர்களை மட்டும் ஓட்டுவார்கள் மாணவர்கள். அதுவும் தமிழ் வகுப்பென்றால் கொஞ்சம் அதிகப்படியாகவே.

ஏனென்றால் ஆங்கில ஆசிரியர் வாலாட்டும் மாணவனை வகுப்பில் எழுப்பிவிட்டு ஆங்கிலப் புத்தகத்திலிருந்து ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்து வாசிக்கச் சொல்லி விடுவார். இவன் வாசிக்கத் திணறும் போதும் வார்த்தைகளின் உச்சரிப்பு மோசமாக இருக்கும் போதும் மாணவிகளின் மத்தியில் அவமானப் படுத்தி விடுவார் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள்.

தமிழாசிரியரும் மாணவர்கள் சத்தமிட்டதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் கருமமே கண்ணாக கொண்டு வந்திருந்த புத்தகத்தையும் சாக்பீஸையும் மேஜையின் மீது வைத்துவிட்டு, “உங்களுக்கெல்லாம் ஒரு நல்ல செய்தி. இன்னைக்கு நான் உங்களுக்கு பாடம் எதுவும் நடத்தப் போறதில்லை…..” என்று சொல்லவும் மாணவர்கள் உற்சாகமாகக் கூச்சலிட்டார்கள்.

”வர்ற ஞாயிற்றுக்கிழமை ஒரு விஷேச நாள். யாருக்காவது அது என்ன என்று தெரியுமா?” என்றார். மாணவர்களும் மாணவிகளும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.

”ஒவ்வொரு வருஷமும் ஆகஸ்டு மாதத்தில வர்ற முதல் ஞாயிற்றுக்கிழமை என்பது நண்பர்கள் தினம். உங்க அகராதிப்படி தமிழ்ல சொல்றதுன்னா ஃபிரண்ட்ஷிப் டே. இதுகூடத் தெரியாமல் என்ன மாணவர்கள் நீங்கள்…?” என்று சிரித்தார் தமிழாசிரியர்.

”நண்பர்கள் தினமின்னு எங்களுக்கும் தெரியும் அய்யா. ஆனால் அதை நீங்கள் விஷேசமான தினமாகக் கருதுவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை….” என்றான் வகுப்புத் தலைவன். அதாவது லீடர்.

”சரி, வர்ற ஞாயித்துக்கிழமை நண்பர்கள் தினம்ங்குறதால உங்களுக்கெல்லாம் உங்களுடைய இப்போதைய நட்பு பற்றியோ, தொடர்பு அறுந்து போன பழைய நட்பு பற்றியோ இங்கு வந்து உங்களின் அனுபவங்களையும் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்….” என்றார்.

எல்லோருக்குமே சொல்வதற்கு நிறைய இருந்தாலும் மேடையில் போய் எல்லோரின் முன்னாலும் நின்று பேச கூச்சமாகவும் தயக்கமாகவும் இருந்தது.

வகுப்புத் தலைவன் மட்டும் எழுந்து மேடைக்குப் போனான். ”நான் ஒரு புத்தகத்தில் நட்பு பற்றி புதுக்கவிதை ஒன்றை வாசித்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் …..” என்று தட்டுத் தடுமாறி சொல்லிவிட்டு அவன் கையோடு எடுத்துப் போயிருந்த காகிதத்தைப் பார்த்து வாசிக்கத் தொடங்கினான்.

கவிதை: நட்பூ

இன்றைக்கு நண்பர்கள் தினம்

பழக்க தோஷத்தால்

வருஷந் தவறாமல் வாங்குகிறேன்

வாழ்த்து அட்டைகளை – ஆயினும்

அனுப்பும் முகவரி தெரியாததால்

அவையெல்லாம்

குவிந்து கிடக்கின்றன என்னிடமே …!

நட்பூ –

நினைவுகளில் நெருடுகின்றன

நிறைய முட்களும்

கொஞ்சம் பூக்களும்…..!

பால்ய கால நட்பெல்லாம்

பள்ளி இறுதி நாளொன்றில்

பசுமை நிறைந்த நினைவுகளே….

பாடியதோடு கலைந்து போயிற்று !

கல்லூரி கால நட்போ

கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக

கத்தை கத்தையான கடிதங்களில்

செழித்து வளர்ந்து

நலம்; நலமறிய அவா; எனும்

கார்டு கிறுக்கல்களில் குறுகியது!

அப்புறமான நாட்களில்

கார்டுகளும் காலாவதியாகி

வருஷத்துக் கொருமுறை

பொங்கல் தின வாழ்த்து அட்டைகளாய் சுருங்கி

கடைசியில் வேலை கிடைத்ததும்

கரைந்து காணாமலே போயிற்று!

அலுவலக நட்பெல்லாம்

அசட்டுப் புன்னகைகள்;

அவ்வப்போது கைகுலுக்கள் தவிர்த்து

ஆழமாய் வேர் பிடிப்பதில்லை மனதில்….!

இலக்கற்று ஓடிக் கொண்டிருக்கும்

இயந்திர வாழ்க்கையில்

நெஞ்சார்ந்து நட்புப் பாராட்ட

நேரமிருக்கிறதா நமக்கு?

வகுப்புத் தலைவன் கவிதையை வாசித்து முடித்ததும் எல்லோரும் கை தட்டினார்கள். தமிழாசிரியரும் அற்புதமான கவிதை என்று சொல்லி அவனைப் பாராட்டி அனுப்பி வைத்தார்.

”வேற யாராச்சும் இதைப் போலவே கவிதையோ அல்லது உங்க நண்பர்கள் பற்றிய அனுபவங்களையோ வெட்கப்படாம இங்க வந்து பகிர்ந்துக்குங்க,….” என்று தமிழாசிரியர் அழைப்பு விடுத்தும் யாருக்கும் மேடையேறிப் பேச தைரியம் வரவில்லை.

தாமரைச்செல்விக்கு அங்கு போய் பகிர்ந்து கொள்ள ஆசையாக இருந்தது. இது அவளுடைய தோழி பற்றிய அனுபவமில்லை. அவளுடைய தாத்தா பற்றிய அனுபவப் பகிர்வு. ஆனாலும் அங்கு போய்க் கோர்வையாக சொல்ல முடியுமா என்று அவளுக்கு இலேசான தயக்கமிருந்தது. எழுதி எடுத்துக் கொண்டு போய் வாசித்து விடலாம் என்று நினைத்தவள் அவளுடைய தமிழ் நோட்டில் ஒரு பக்கத்தைப் புரட்டி வைத்துக் கொண்டு மனசுக்குள் அசைபோடத் தொடங்கினாள்.

தாமரைச்செல்வி அவளுடைய பால்யத்தின் ஆரம்பகாலத்தை தாத்தாவுடன் அவருடைய கிராமத்தில் தான் கழித்திருந்தாள். அவளுடைய அம்மாவும் அப்பாவும் வேலைக்குப் போவதால் அவளை தாத்தா பாட்டியின் கண்காணிப்பில் தான் விட்டிருந்தார்கள். தாத்தா இருந்தது கொஞ்சம் முன்னேறிய கிராமம் தான்.

ஐந்தாம் வகுப்பு வரைக்கும் அங்கிருந்த ஒரு தனியார் பள்ளியில் தான் படித்தாள். அதற்கப்புறமும் விடுமுறை தினம் வந்தாலே கிராமத்திற்குத் தான் ஓடிப்போவாள். தாத்தாவின் வீட்டில் மிகப்பழைய மரபீரோ ஒன்றை அவள் பார்த்திருக்கிறாள். தாத்தா அதைப் பொக்கிஷம் போலப் பாதுகாத்துக் கொண்டிருந்தார்.

தாமரைச்செல்வி ஒருமுறை அந்த பீரோவை வேறு எதற்கோ திறந்து பார்த்த போது அதில் கத்தை கத்தையாக கடிதங்கள் அடுக்கப் பட்டிருந்தன. பீரோவில் வேறு ஒன்றுமே இல்லை. வெறும் கடிதங்களினாலேயே அது நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

“இவ்வளவு லெட்டர்ஸா, யாரு தாத்தா உனக்கு எழுதுனது….?” என்று அவள் ஆச்சர்யப்பட்டபோது, ”அவ்வளவும் பேனா நண்பர் ஒருத்தர் எழுதுனதும்மா….” என்றார் தாத்தா.

”பேனா நண்பர்னா என்ன தாத்தா, ஒருத்தருக்கொருத்தர் பேனா பிரசண்ட் பண்ணி நட்பா இருக்கிறதா…..” என்றாள் தாமரைச் செல்வி அப்பாவியாய்.

”இல்லம்மா. ஈமெயில், மொபைல் போனுன்னு பரபரன்னு இருக்குற உங்க தலைமுறைக்கு பேனா நட்பு பத்தி எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியலம்மா. இருந்தாலும் சொல்றேன். முன்பின் தெரியாத ரெண்டுபேர் ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்காம நேர்ல சந்திச்சுக்காம கடிதங்கள் மூலமே நண்பர்களா இருக்கிறது. நம்முடைய சுக துக்கங்களைப் பகிந்துக்கிறது. அதுதான் பேனா நட்பு…..” என்றார்.

தமிழாசிரியர், “சரி நான் சங்க இலக்கியத்திலிருந்து இரண்டு நண்பர்களின் கதையைச் சொல்கிறேன். அதற்கப்புறமாவது உங்களில் யாராவது இங்கு வந்து உங்களின் அனுபவம் பற்றிப் பகிர்ந்து கொள்கிறீர்களா என்று பார்க்கலாம்…..” என்று ஆரம்பித்தார்.

”ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்ளாமலேயே நட்பு பாராட்டின கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு பற்றி உங்களில் யாராவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா….?” என்றார் தமிழாசிரியர்.

”ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்ளாமலேயே நட்பு பாராட்டுறதுன்னா காதல்கோட்டை சினிமா மாதிரியா அய்யா….” என்றான் ஒரு மாணவன்.

”எல்லாத்துக்குமே உங்களுக்கு சினிமா தானா? அது காதல்; இது நட்பு. இது அதுக்கும் மேல…..” என்று தமிழாசிரியரும் இன்னொரு சினிமாவை ஞாபகப் படுத்தவும் எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள்.

”கோப்பெருஞ்சோழன்ங்குறது ஏதோ ஒரு அரசன்னு தோணுது. பிசிராந்தையார் அவரோட கேர்ள் பிரண்டா அய்யா….” என்றான் இன்னொருத்தன் அவனுடைய இடத்திலிருந்தே.

”இல்லை; பிசிராந்தையாரும் ஆண் தான். பெரிய தமிழ்ப் புலவர்…..”

”பிசிராந்தையார்ங்குற பேரே வித்தியாசமா இருக்கே அய்யா. கஞ்சத்தனமா இருக்குறவங்கள எங்க ஊர்ப் பக்கங்கள்ல எல்லாம் பிசினாறின்னு சொல்வாங்க. ஒருவேளை இவரும் பிசினாறியா இருந்ததால தான் பிசிராந்தையார்னு பேர் வந்துச்சோ…..” என்றான் வகுப்புத் தலைவன் குறும்புடன்.

தமிழாசிரியர் இலேசான கோபத்துடன் முகம் சிவந்து ”உங்க தலைமுறைக்கு எல்லாத்தையும் கலாய்க்கிறது மிகவும் எளிதாக இருக்கிறது இல்லையா. நான் கதை சொல்வதாக இல்லை….?” என்று சிடுசிடுத்தார்.

”மன்னிக்கனும் அய்யா…..” என்று வகுப்புத் தலைவன் எழும்பி நின்று வருத்தம் தெரிவிக்கவும் தமிழாசிரியர் கோபம் தணிந்து கதை சொல்லத் தொடங்கினார்.

”அவரோட ஊர் பிசிர். அது பாண்டிய நாட்டுல இருந்தது. அவரோட பேர் ஆந்தையார் என்பதால் ரெண்டையும் சேர்த்து பிசிராந்தையார் ஆகி விட்டார். கோப்பெருஞ்சோழன் சோழநாட்டில் உறையூர் என்னும் பகுதியை ஆண்டு கொண்டிருந்தான்.

பிசிராந்தையார் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன்  மீது  அன்பு  கொண்டு  அரசனைப்  பற்றி நிறைய  பாடல்களை எழுதி இருக்கிறார். சோழனைக் காணவேண்டும் என்றும் ஆசைப் பட்டிருக்கிறார்.  ஆனால் அவருடைய ஊர் பாண்டிய நாட்டில் இருந்தது. அது சோழ நாட்டிலிருந்து வெகு தொலைவில் இருந்ததால் இவரால் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை. இப்போது மாதிரியான போக்குவரத்து வசதிகளும் அப்போது இல்லை. நடந்து தான் தூரங்களைக் கடக்க வேண்டும்.

பிசிராந்தையாரின் புகழையும் தமிழறிவையும் கேள்விப்பட்ட  கோப்பெருஞ்சோழனும்  அவர்மீது நட்புக் கொண்டார். அவரைச் சந்திக்க வேண்டும் என்றும் பேராவல் கொண்டிருந்தார். ஆனால் அரசனுடைய வேலைப் பளுவின் காரணமாக அதுவும் சாத்தியப் படவில்லை.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே நட்புடன் பழகி வந்தனர். அவர்க்ள் இருவரும்  தாங்கள் சந்தித்துக் கொள்ளும் திருநாளை  ஆவலுடன்  எதிர்  பார்த்துக்  காத்துக் கொண்டிருந்தார்கள்.

தாத்தா உள்ளூர்ப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரைப் படித்திருக்கிறார். அதற்கு மேல் படிக்க வேண்டுமென்றால் வெளியூருக்குத் தான் போக வேண்டும். அதற்கு தாத்தாவின் அப்பா அனுமதிக்கவில்லை. அப்போது அவருடைய அம்மாவும் இறந்து விட்டாள். தாத்தாவின் அப்பாவோ விவசாய வேலைகளில் மும்முரமாய் இருக்கவே தனிமை தாத்தாவை வாட்டி இருக்கிறது.

தாத்தாவின் காலத்தில் பேனா நட்பை விரும்புகிறவர்கள் நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் விளம்பரம் கொடுத்து அதன் மூலம் நட்பைப் பெறுவார்களாம். தாத்தாவும் அப்படி ஒரு விளம்பரம் கொடுத்திருக்கிறார். தாத்தாவின் பெயர் காந்திமதிநாதன். ஊரில் அவரைக் காந்திமதி என்று தான் அழைப்பார்களாம். இவரும் காந்திமதி என்ற பெயரில் விளம்பரம் கொடுக்கவும் கடிதங்கள் குவிந்து விட்டனவாம்.

எல்லாக் கடிதங்களுக்கும் தாத்தா தன்னைப் பற்றிய முழு விவரங்களுடன் பதில் எழுதியிருக்கிறார். தாத்தாவைப் பெண் என்று நினைத்துக் கொண்டு ஆர்வமாய் கடிதம் எழுதிய பலர் அவர் ஆண் என்பதை அறிந்து கொண்டதும் கடிதத் தொடர்பை உடனேயே நிறுத்திக் கொண்டார்கள்.

ஒரே ஒருத்தர் மட்டும் தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்திருக்கிறார்.  அவர்தான் சாகுல் ஹமீது. இலங்கையில் கண்டிக்கு அருகில் ஒரு கிராமத்திலிருந்து எழுதி இருக்கிறார். அவர் அங்கு தமிழாசிரியராக இருந்திருக்கிறார்.

சாகுல்ஹமீது கடிதங்களின் மூலமாகவே தாத்தாவிற்கு நல்ல தமிழைக் கற்பித்திருக்கிறார். தாத்தா எழுதும் கடிதங்களில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டியே தமிழ் இலக்கணத்தைப் போதித்திருக்கிறார். தாத்தாவும் சாகுலும் இரண்டு குடும்பங்களின் சுகதுக்கங்களையும் கடிதங்களிலேயே பரிமாறிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

இருவரும் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்க வேண்டுமென்றும் ஆவலுடன் காத்திருந்திருக்கிறார்கள். இருவரின் வாழ்விடங்களும் வெவ்வேறு தேசங்களில் இருந்ததால் அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்காமல் காலம் கடந்து கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் சாகுல்ஹமீதிடமிருந்து தாத்தாவிற்குக் கடிதங்களே வரவில்லை. தாத்தா சலிக்காமல் தொடர்ந்து கடிதங்கள் எழுதியும் பல மாதங்களாக சாகுலிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. சரி, அவ்வளவு தான் தொடர்பு அறுந்து போனது என்று தாத்தா நினைத்துக் கொண்டு ஏது செய்வதென்று தெரியாமல் மனதைத் தேற்றிக் கொண்டு தன்னுடைய தினப்படி அலுவல்களில் சாகுல்ஹமீதை மறக்கத் தொடங்கினார்.

கோப்பெருஞ்சோழனுக்கு இரண்டு புதல்வர்கள். அவர்கள் இருவரும் தந்தையின் மரணத்திற்காக ஆவலோடு காத்திருந்தார்கள். மன்னனின் மரணத்திற்குப் பின்தானே அவர்களால் ஆட்சி கட்டிலில் ஏறமுடியும். ஆனால் கோப்பெருஞ்சோழன் மரணிப்பதாகத் தெரியவில்லை. அவன் நல்லாட்சியும் தந்து கொண்டிருந்ததால் மக்களுக்கும் சோழனின் ஆட்சியில் பெரிதாய் அதிருப்தி எதுவும் இல்லை.

அதனால் பொறுமை இழந்த புதல்வர்கள் இருவரும் சோழனின் ஆட்சி நடந்து கொண்டிருக்கும்  போதே   பாண்டிய மன்னனின் உதவியுடன் தந்தையுடன்  போரிடத்  துணிந்தனர்.

இதைக் கேள்விப்பட்ட பிசிராந்தையார் பாண்டிய மன்னனிடம் சென்று கோப்பெருஞ் சோழனின் ஆட்சியின் சிறப்புகளைப் பட்டியலிட்டு அப்பேர்ப்பட்ட மன்னனின் ஆட்சியை அகற்ற அவனுடைய மகவுகளுக்கு நீ படை அனுப்பி உதவினால் வருங்காலம் உன்னைப் பழிக்கும் என்று எடுத்துச் சொல்லவும் பாண்டிய மன்னன் தன்னுடைய படைகளைத் திருப்பி அழைத்துக் கொண்டான்.

ஆனாலும் போருக்கான ஆயுத்தங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருந்தன. கோப்பெருஞ்சோழனும் தன்னுடைய மகன்களை போர்க்களத்தில் சந்திக்க தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டிருந்த போது, அவனுடைய அவைக்களப் புலவராய் இருந்த புல்லாற்றுார் எயிற்றியனார் என்பவர் கோப்பெருஞ் சோழனிடம் ஓடிப்போய் மன்றாடத் தொடங்கினார்.

“மன்னவனே! உன்னோடு பகை கொண்டு, போரிட வந்து நிற்பது, சேர குலத்தில் பிறந்தவர்களோ அல்லது பாண்டிய குலப்பிறப்புகளோ அல்லர். உன்னைப் போலவே, சோழர் குடியிற் பிறந்த அதுவும் நீ பெற்றெடுத்த பிள்ளைகள்; நீ தேடி வைக்கும் செல்வத்தினையும் உனக்குப் பின்பு இந்த தேசத்தையும் ஆளப் பிறந்தவர்கள் அவர்கள்.

போர்க்களத்தில் ஒருவேளை நீ வெற்றி பெற்று உன்னுடைய புதல்வர்கள் இருவரும் இறக்க நேர்ந்தால், உனக்குப் பின்னால் இந்நாட்டின் ஆட்சியை யாரிடம் ஒப்படைப்பாய்?  உன் ஆட்சியின் கீழ் எல்லா வளத்திலும் சிறப்புற்றிருந்த இந்நாடு ஆள்வோரில்லாமல் அழிய விடுதல் அறமாகுமோ?

ஒருவேளை உன் புதல்வர்கள் வெற்றி பெற, நீ தோற்றுப்போனால் அது உன்னுடைய ஆட்சிக்கு எவ்வளவு இழுக்கு? இவற்றை எல்லாம் எண்ணிப் பார்க்காமல் நீ பெற்ற மக்கள் மீதே போர் தொடுப்பது அறிவுடைமையாகாது மன்னா.

மேலும், உன்னைச் சேர்ந்தவர்களை காக்கும் அருளும், குற்றஞ் செய்பவர்களைத் தெளிவிக்கும் அறிவும் உடைய பெரியோனாகிய நீ, வானுலகோர் வாழ்த்தி வரவேற்க விண்ணுலகம் செல்ல வேண்டுமேயன்றி, பெற்ற மக்களின் மீதே பகை கொண்டு போரிட்டு மாண்டான் எனப் பிறர் பழிக்க இறத்தல் கூடாது. ஆகவே தயை கூர்ந்து போரிடும் எண்ணத்தைக் கைவிடுக…..”

புலவர் கூறியவற்றையெல்லாம் பொறுமையாகக் கேட்ட கோப்பெருஞ்சோழனும் அவர் சொல்வதிலுள்ள நியாயங்கள் புரிந்து போர் புரியும் எண்ணத்தைக் கை விட்டான்.

ஏழெட்டு மாதங்களுக்கு அப்புறம் தாத்தாவிற்கு சாகுல் ஹமீதிடமிருந்து கடிதம் வந்தது. அவர் கனடாவிலிருந்து கடிதம் எழுதி இருந்தார். இலங்கையில் ராணுவத்திற்கும்  தமிழர்களுக்கான தனிநாடு  கேட்டுப் போராடும் குழுக்களுக்குமான சண்டை மிகவும் கடுமையாகி விட்டதால் அங்கு வாழமுடியாத சூழல் நிலவுகிறது என்றும் அதனால் அவர்கள் அகதிகளாகக் குடும்பத்துடன் கிளம்பி கனடாவிற்கு இடம் பெயர்ந்து விட்டதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.  

சாகுல் ஹமீது கனடாவிற்குப் போன பின்பும் தாத்தாவிற்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார். தாத்தாவும் பதிலுக்குக் கடிதங்களை அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார். நாட்கள் பறந்தன.

தாத்தாவிற்கும் வயதானது. நோயில் விழுந்தார். மரணம் தன்னை விழுங்கி விடப்போகிறது என்பதை உணர்ந்து கொண்டார். தாத்தா மரணத்தை எதிர்கொள்ளத் தயாராகவே இருந்தார். வாழ்க்கையிடம் அவருக்குப் பெரிய புகார்கள் ஏதுமில்லை. ஒரேஒரு குறை இருந்தது. தன்னுடைய உயிர் நண்பனைக் கடைசிவரைப் பார்க்காமலேயே உயிர்விடப் போகிறோமே என்பது தான் அந்தக் குறை.

மரணப் படுக்கையிலும் தாத்தாவின் நெஞ்சில் அவரின் குறை அழுத்திக் கொண்டிருந்ததால் அவரின் கடைசி மூச்சுப் பிரியாமல் வதைபட்டுக் கொண்டிருந்தார். அப்பாவிற்கு தாத்தாவின் உயிர் ஏன் பிரியவில்லை என்பது தெரிந்தவுடன் கனடாவிலிருக்கும் சாகுல் ஹமீதைத் தொடர்பு கொள்ள முயன்றார்.

தன்னுடைய புதல்வர்கள் மீது போர் தொடுக்கும் எண்ணத்தை கோப்பெருஞ்சோழன் கைவிட்டாலும், மாண்பில்லாத பிள்ளைகளைப் பெற்று விட்டோமே என்று மனம் வருந்தினான். பெற்றவனைப் பகைக்கும் மக்களைப் பெற்றவன் என்ற பழிச்சொல் வந்துவிடப் போகிறதே என்று நாணினான். மானம் இழந்தும் உயிர் வாழ வேண்டுமா என்று நினைத்து வடக்கிருக்கத் துணிந்தான்.

தமிழாசிரியர் சொல்லிக் கொண்டு வரும்போதே இடை மறித்த ஒரு மாணவன் “வடக்கிருக்கிறதென்றால் என்ன அய்யா அர்த்தம்…?” என்றான்.

”இவ்வுலகில் வாழ்ந்தது போதும் என்று முடிவு செய்து வாழ்க்கையைத்  துறக்க  விரும்பும்  அரசர்கள்  வடக்கிருந்து  உயிர்  விடுதல் என்பது அக்காலத்திய சமணமத மரபு.  வடக்கிருத்தல்  என்பது  தன் நாட்டில்  உள்ள  ஆறு  குளம்   போன்ற    நீர்  நிலைக்குச்  சென்று  அதன்  இடையே  மணல்  திட்டு  ஒன்றை உருவாக்கி அதன்மீது  வடக்கு  திசை  நோக்கி அமர்ந்தபடி உண்ணாநோன்பிருந்து மரணத்தைத் தழுவுவது….” என்று மாணவனுக்கு விளக்கம் சொன்ன தமிழாசிரியர் கதையைத் தொடர்ந்தார்.

வடக்கிருக்கத் துணிந்த கோப்பெருஞ்சோழன் தன்னுடைய உயிர் நண்பன் பிசிராந்தையாரைப் பார்க்காமலேயே உயிர்விடப் போகிறோமே என்று மிகவும் வருந்தினான். தான் வடக்கிருக்கும் செய்தியை அறிந்தால் பிசிராந்தையாரும் கண்டிப்பாகத் தன்னுடன் வடக்கிருக்க வருவார் என்று அரசனுடைய உள்ளுணர்விற்குத் தோன்றியதால் மந்திரியிடமும்   மற்றையோரிடமும்   பிசிராந்தையாருக்கும் ஓர்  இடத்தைத்  தயார்  செய்யும்படி வலியுறுத்திக் கூறினார்.

அரசனின் ஆணை உடனடியாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் பிசிராந்தையார் அரசனுடன் வடக்கிருக்க வருவார் என்பதை யாருமே நம்பவில்லை. யாராவது நட்பிற்காக தேடிவந்து உயிரை விடுவார்களா என்று மனசுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.

நாட்கள்  நகர்ந்தன. காலம் எப்போதும் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே! பிசிரந்தையார் வரும்வழி பார்த்திருந்த சோழனும் சோர்ந்து போனான். அவர் வருவதாகத் தெரியவில்லை. அதனால் சோழன் நண்பரைக் காணாமலேயே வடக்கிருக்கும் தவத்தை மேற்கொள்ளத் தொடங்கினான்.

ஆனால் சோழனின் எண்ணப்படியே செய்தியைக் கேள்விப்பட்டதும் பிசிராந்தையார் சோழ நாட்டை  நோக்கி ஓடோடி வந்தார். நண்பனைக் கண்டார். கண்ணீர் பெருகி நின்றார். வேறு எதுவும் பேசவில்லை. ஏற்கெனவே அவருக்காகத் தயாராக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் போய்  உட்கார்ந்து வடக்கிருந்து  சோழனுடன்  தானும்   தன்  இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

ஒருவழியாய் யார் யாரையோ தொடர்பு கொண்டு, அப்பா சாகுல் ஹமீதிடம் தாத்தா மரணப் படுக்கையில் இருக்கும் தகவலைச் சொல்லவும் அவரும் உடனேயே கிளம்பி வந்து தாத்தாவைப் பார்ப்பதாகச் சொன்னார். அதன்படி மூன்று தினங்களுக்கு அப்புறம் சாகுல் ஹமீது தாத்தாவின் கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் வரும் வரைக்கும் தாத்தாவின் உயிரும் ஊசலாடிக் கொண்டுதான் இருந்தது.

சாகுல்ஹமீது தாத்தாவை விடவும் மிகவும் வயது முதிர்ந்தவராக இருந்தார். தாத்தாவின் கடிதங்களால் தான் அவர் இவ்வளவு காலங்கள் உயிர்த்திருந்ததாகச் சொல்லி கண்ணீர் மல்கினார். அவர் கிராமத்திற்குப் போன பின்பு தான் அவருக்கு இரண்டு கால்களும் இல்லாத விவரம் எல்லோருக்கும் தெரிந்தது. அவர் இலங்கையில் இருந்த போதே ஒரு கண்ணிவெடித் தாக்குதலில் இரண்டு கால்களையும் இழந்து விட்டிருந்தார்.

தாத்தாவிற்கு செய்தி தெரிந்தால் மிகவும் கவலைப் படுவார் என்பதால் அந்தத் தகவலைச் சொல்லவில்லை என்றார். கண்மூடிப் படுத்துக் கிடந்த தாத்தாவிடம் போய் அவரின் கைகளைத் தொட்டு சாகுல்ஹமீது வந்திருப்பதாகச் சொன்னார்.

தாத்தா ஒருகணம் கண்களைத் திறந்து நண்பரைப் பார்த்தார். இரண்டு கண்களிலிருந்தும் கண்ணீர் கரகரவென்று பெருகி வழிந்தது. கொஞ்ச நேரத்திலேயே தாத்தாவின் உயிர் பிரிந்து விட்டது.

அதைவிட ஆச்சர்யமாக அடுத்த சில நிமிஷங்களிலேயே  சாகுல்ஹமிதின் உயிரும் பிரிந்து தன்னுடைய சக்கர நாற்காலியிலிருந்து கீழே சரிந்து விட்டார்.

தமிழாசிரியர் தன்னுடைய கதையின் இறுதிப் பகுதியை சொல்லத் தொடங்கினார்.             பிசிராந்தையார்  என்ற  புலவரும்  கோப்பெருஞ்சோழன்  என்ற  மன்னனும்  ஒருத்தரை ஒருத்தர் காணாமலேயே  நட்புக்  கொண்டு  ஒன்றாகவே  உயிர் நீத்த  நட்பின் சிறப்பினை  பல இலக்கியங்கள்  நமக்கு  எடுத்துக் காட்டுகின்றன. பொத்தியார்  என்னும்  புலவர்   தன்னுடைய  பாடல் ஒன்றில்  இதனைப் பதிவு செய்திருக்கிறார்.

 ”இசைமரபு  ஆக  நட்பு  கந்தாக
இனியதோர்   காலை  ஈங்கு  வருதல்
வருவன்  என்ற  கோனது  பெருமையும்
அது  பழுதின்றி  வந்தவன்   அறிவும்
வியத்தொறும்  வியத்தொறும்   வியப்பிறந்தன்றே.”

வரலாற்றில் சில சம்பவங்கள் திரும்பத் திரும்ப நிகழும் என்பார்கள் வரலாற்றாசிரியர்கள். கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பும் மரணமும் போலவே காந்திமதிநாதன் – சாகுல்ஹமீதின் வாழ்விலும் நிகழ்ந்து அதை மெய்ப்பித்து விட்டதை நினைத்ததும் தாமரைச்செல்விக்கு மிகவும் சிலிர்ப்பாக இருந்தது.

*****     நிறைந்தது     *****

Leave a Comment