சிறுகதைப் போட்டி – 19 : செக்டார் 2403 [செல்வத்துப் பயனே ஈதல்] – ஜ.சிவகுரு

மாலை மங்கிக்கொண்டிருந்தது. போபோஸ் (Phobos), டெய்மோஸ் (Deimos) என்று இரண்டு நிலவுகளிலிருந்தாலும், அந்த மாலை நேரத்தில் செவ்வாயின் வானம் அதன் நிலத்தின் நிறத்தை பிரதிபலிப்பதாய், செந்நிறமாய் காட்சியளித்துக்கொண்டிருந்தது. அன்றைய பணிகளை எல்லாம் முடித்துவிட்டு தன் இருப்பிடம் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தான் அவன். எப்போதும் போல ஏறியவுடன் வாயு வேகத்தில், வான மார்க்கத்தில் கொண்டு செல்லும் ஒரு பாட் (Pod), இன்றும் தன் வேலையைச் சிறப்பாக செய்யக் காத்திருந்தது. அவன் பணியில் சேர்ந்ததிலிருந்து இன்றுவரை, இந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு நாள் கூட அந்த பாட் பழுதடைந்ததோ, நேரம் தவறியதோயில்லை.

ஸ்பேஸ் பாட்ஸ் – தொலைதூரத்தைக் கடப்பதற்காக மின்காந்த சக்தியின் உந்துதலைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பயண இயந்திரம். நெடுந்தொலைவையும் வெகு விரைவாகக் கடப்பதற்காக, கண்ணாடி உருளையைப் போல வெளியிலிருந்து உள்ளே பார்க்கக்கூடிய விதமாக, வடிவில் பெரியதாய், இருவர் அமரக்கூடிய இன்றைய நானோ காரின் அளவில், எண்களையும், பட்டன்களையும் கொண்ட பல பேனல்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. எப்போது, எங்கே செல்ல வேண்டும், யாரை பிக்-அப் செய்ய வேண்டும், எங்கே அவரைச் சேர்க்க வேண்டும் என்பதெல்லாம் கன்ட்ரோல் ரூமில், ப்ரோகிராம் செய்யப்பட்டிருந்தது.

அவன் பணிபுரியும் லேப்பின் எட்டாம் தளத்தின் வெளியே அமைந்திருந்த அந்த அலைட்டிங் பாயின்ட்டில் அவன் வருகைக்காக காத்திருந்த பாட்ல் ஏறினான் அபி.

அபி1028 – அதுதான் அவன் அடையாளம். அவனுக்கு முன்னும் சரி பின்னும் சரி, கடந்த நூற்றாண்டில் இந்தப் பெயருடன் யாரும் இருந்ததில்லை, இனியும் இருக்கப்போவதுமில்லை. ஏதோ ஒரு தனித்தன்மை. யாரும் விவரிக்க முடியாத ஒரு தனிமை இந்தத் தனிமை, கட்டாயமாக்கப்பட்ட தனித்தன்மை, ஒரு வித விரக்தியை அவனுள் தோற்றுவித்துவிட, வழக்கமான சிந்தனைகளில் மூழ்கினான். கேள்விகள்.  எண்ணற்ற கேள்விகள். தினம் தினம் மனதில் தோன்றி வதைக்கும், அவனால் பதில்காண முடியாத கேள்விகள். எந்திரமயமாய் மாறிவிட்ட வாழ்வில் வரும் இந்தக் கேள்விகள், அதற்கான விடை காணமுடியாத தேடல் என்று எண்ணமிட்ட நினைவுகளோடு பத்து நிமிடங்களில் அவன் பயணம் முடிந்தது. செக்டார்-2391ல் அமைந்திருந்த அவனது காலனியில் அவனை இறக்கிவிட்ட பாட், தனது அடுத்த பணியைச் செய்ய மறைந்துவிட்டிருந்தது.

மார்ஸின் நிலப்பகுதிகள் பல மண்டலங்களாக, அவற்றின் முக்கியத்துவத்திற்கும் பயன்பாட்டிற்கு ஏற்பவும் செக்டார்களாக பிரிக்கப்பட்டிருந்தன. அதன் நடுத்தர பாதுகாப்பு பகுதியில் அமைந்திருந்தது ஆய்வுப் பணியாளர்கள் வசிக்கும் பகுதியான செக்டார் 2391.

மார்ஸில் மனிதன் குடியேறி நூறாண்டுகளுக்கு மேல் கடந்திருந்தது. பூமியின் வளங்கள் அனைத்தையும் அழித்து, வாழ வழியிழந்து, பல இயற்கை சீர்கேடுகளை உருவாக்கிவிட்டிருந்த மனிதன், அடுத்த வாழத்தகுந்த இடத்திற்கான தேடுதலையும் துவக்கியிருந்ததன் பலனாய் அமைந்தது தான் இந்த வேற்று கிரக வாழ்க்கை.

வாழ்வாதாரமான தண்ணீரைக் கண்டுபிடிக்க துவங்கிய தேடலில், புதிய கனிம வளங்கள், நீரின்றி வாழக்கூடிய வாழ்வுமுறை என எதிர்பாராதவை பலவும் கண்டறியப்பட்டன. அவற்றுள் முக்கியமானது மார்ஸ் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மாண்ட்ரகோனா என்றவொரு தாவரம். நீரும், ஆக்ஸிஜனும் இல்லாத சீதோஷ்ணத்தில் நிலப்பரப்பிற்கு கீழே, செந்நிறத்தில் ஒரு கிழங்கைப் போலவும், வெள்ளை நிறத்தில் மேலே காளான் குடையைப் போலவும் வளர்ந்திருந்தது அத்தாவரம்.

உயிரினங்கள் வளரக்கூடிய தட்பவெட்பமோ, நீராதாரமோ இல்லாத அந்த வறண்ட நிலப்பரப்பில், எப்படி மாண்ட்ரகோனா வளர்கிறது என்று நூறாண்டுகளுக்கு முன் மனிதனுக்கு உதித்த கேள்வியின் விடைதான் இப்போதைய மனித வாழ்வும் இந்த குடியிருப்புகளும்.

அடுக்கு மாடி குடியிருப்புகள், விண்ணை முட்டும் சுழல் கோபுரங்கள், மாட மாளிகைகள், பறக்கும் வீடுகள் என்று பலவிதமாக கடந்த நூற்றாண்டுகளில் பூமியில் மக்கள் ஆடம்பரமாக  வசித்துவந்திருந்தாலும், அங்கே செய்த தவறுகளில் இருந்தும் சிலவற்றை கற்றறிந்ததன் பயனாகவும்., கி.பி.2738ல் அவையனைத்தும் சாதாரண மக்கள் பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டிருந்தன.

பூமியில் மனிதனை வர்ணமென்றும், வறுமையென்றும், பிணியென்றும், பணமென்றும் பிரித்துவைத்திருந்த பழக்கத்தை மட்டும் மார்ஸிலும் விட மனமில்லாத காரணத்தால், பணத்தால், பதவியால் சமூகத்தின் ‘உயரிய’ பொறுப்புகளை தனதாக்கிக்கொண்ட கனவான்களுக்கு மட்டும் பூமியிலும், மார்ஸிலும் சிறப்பான இருப்பிடங்கள் கிடைத்தன.

சுருங்கச்சொன்னால், பூமியின் வளங்களை கொள்ளையடித்து முடித்த மனிதன் அடுத்த கிரகத்தைச் சூறையாட அனுப்பிய பணியாளரின் குடியிருப்புகள் தான் இந்த செக்டார்கள். அங்கு வசிப்போரின் தொழிலுக்கும் சலுகைகளுக்கும் ஏற்றாற்போல செக்டார்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு செக்டாரிலும் அலுவலகங்கள், பரிசோதனைக்கூடங்கள், சுரங்கங்கள், பாதுகாப்புப் பெட்டகங்கள், குடியிருப்பு காலனிகள் அமைந்திருந்தன.

ஒவ்வொரு காலனியிலும் நூற்றுக்கணக்கான ஹெக்ஸ் ஹோம்ஸ், ஒரே தோற்றத்தோடு எந்தவொரு வேறுபாடுமின்றி அமைக்கப்பட்டிருந்தன. அறுங்கோணமாக தேனீக்களின் கூடுகளைப் போல ஒன்றன் மீது ஒன்றாக இடத்தை சிக்கனமாகப் பயன்படுத்தி கட்டப்பட்ட வீடுகள். மேலும் கீழும் பயணிக்க, ஸ்பேஸ் பாட்களைப் போலவே நகரும் எலவேட்டர்கள் இருந்தன. எண்களைத் தவிர, எல்லா வீடுகளின் அளவு, வண்ணம், உள்ளே உள்ள பொருட்கள் என அனைத்தும் ஒரே மாதிரியாக அமைக்கப்பட்டிருந்தன.

செக்டார் 2391லிருந்த காலனியின் மேல் தளத்தில் அமைந்திருந்த HH104 என்ற அவனது ஹெக்ஸ் ஹோமினுள்ளே நுழைந்தான் அபி. எப்போதும் அவனுள்ளேயிருக்கும் வெறுமை, அவனது இருப்பிடம் முழுதும் நிறைந்தது.

– – – –

தனிமையின் வெறுமையில், தன்னைத் தானே தேட முயன்றுகொண்டிருந்த அபி, மெல்ல சனாவின் நினைவுகளில் மூழ்கினான். இயந்திரமயமாக இருந்து வந்த அபியின் வாழ்வில் புதுவசந்தமாய் வந்தவள் அவள். மார்ஸில் அவன் வாழ்ந்துவந்த கடந்த 15 ஆண்டுகளில் அவன் கவனிக்க மறந்த, நினைத்துக்கூட பார்க்க முடியாத பல விஷயங்களை அவனை உணர வைத்தவள் சனா. அவள் வருகையிலிருந்துதான் அவனுள் பல மாற்றங்களை உணர ஆரம்பித்தான் அபி.

மார்ஸில் அவனது வருகை, அதற்கு முன்பு அவனது வாழ்வு, அதன் நிகழ்வுகள், அவன் வாழ்வின் மனிதர்கள் என்று எதைப்பற்றியும், யாரைப் பற்றியும் அவன் நினைத்துப் பார்த்ததில்லை. நினைக்கவும் தோன்றியதில்லை. ஆனால் சனாவுடனான பழக்கம், அவனுக்கு பல பரிமாணங்களில் புதிய கேள்விகளைத் தூண்டிவிட்டிருந்தது.

“எப்போது, எப்படி, யாரால் மார்ஸ்க்கு அனுப்பப்பட்டான்? அதற்கு முன் அவனுடன் இருந்தவர் யார், ஏன் மனிதரின் வாழ்க்கை ஒரே மாதிரியாக அமைந்துள்ளது? பணி நிறைவு பெற்றவர்கள் எங்கே அனுப்பப்படுகிறார்கள்? யாரென்றே தெரியாத ஒருவரின் ஆணைப்படி அனைவரும் இயங்குவதாக ஏன் இந்த வாழ்க்கை அமைந்துள்ளது? கண்ட்ரோல் ரூமிலிருந்து வரும் ஆணைகளைத்தான் அனைவரும் செய்யவேண்டும் என்றால், அந்த கண்ட்ரோல் ரூமிற்கு ஆணைகளைப் பிறப்பிப்பது யார்? இதைப்போன்ற கேள்விகளை மற்றவர் யாரும் ஏன் கேட்பதில்லை.?” என்று பல எண்ணங்கள் கடந்த ஆறு மாதத்தில் அவனுக்கு வரத்துவங்கியிருந்தது. இப்படி அவன் மனதில் தோன்றும் விடையில்லாத கேள்விகள் அனைத்திற்கும் வித்திட்டவள் சனா.

அவளுடனான பல உரையாடல்களில் அவள் சொன்ன பூமியிலும் மார்ஸிலும் நடந்த பல நிகழ்வுகள், கதைகள், அறிவுரைகள், தமிழ் மொழியில் சங்க கால பாடல்கள், வரலாற்று நிகழ்வுகள் என்று பலவற்றிலிருந்து, அவற்றுள் சொல்லப்பட்ட வரலாற்று உண்மைகள், அம்மக்களின் வாழ்வியல், அறம் போன்றவற்றை அறிந்திருந்த அபிக்கு, இந்த இயந்திரமயமான வாழ்க்கையின் அடிப்படையே கேள்விக்குறியானது. அவள் சொன்ன நிகழ்வுகள் ஒவ்வொன்றாக அவன் மனதில் தோன்றின.

– – – –

“பூமியில் மனிதர்கள் பல நாடு, மதம், மொழி, இனம் என்று பிரிந்து பல நூற்றாண்டுகளாக தங்களுக்குள் போர் செய்துகொண்டிருந்தனர். அவர்களின் அதிகாரப் பசியின் காரணமாகவும், இயற்கை வளங்களை அளவுக்கதிகமாக பயன்படுத்தியதன் மூலமாகவும், அந்தக் கிரகமே வாழ தகுதியிழந்து வந்தது. அதை தடுக்க வழிவகை செய்வதாக எண்ணி பெரும் பணக்காரர்கள் சிலர் விஞ்ஞானிகளின் உதவியோடு, மனிதர்களில் பாதிக்கும் மேற்பட்டோரை வேற்று கிரகத்திற்கு அனுப்பவேண்டும் என்று முடிவு செய்து ஒரு தேடலை துவங்கினர். அதில் கிடைத்தது தான் இந்த மார்ஸ் வாழ்க்கை.

“ஆரம்பத்தில் அவர்களின் எண்ணங்கள் நல்லலெண்ணமாக தோன்றினாலும், மார்ஸ்ஸில் முதல் காலனி அமைக்கப்பட்ட பின், அங்கு குடியேறப்போகும் பாதிப்பேர் யார், பூமியில் தங்கப்போகும் மீதி யார் என்ற கேள்வி தோன்றிய போதுதான் உண்மை நோக்கங்கள் வெளிப்பட தொடங்கின.

“பணம் படைத்த பெரும் முதலாளிகளும், பெரிய நாடுகளின் தலைவர்கள், அவர்தம் சொந்தங்கள் என பணத்தாலும், பதவியாலும், சமூகத்திலும் பெரிய இடம் வகித்தவர்கள் பூமியில் தங்குவதென்றும், சாமானிய மக்கள் மார்ஸ் கிரகத்திற்கு அனுப்பி, அதன் வளங்களை எடுப்பதற்கும், அதன் வளர்ச்சிக்கும் உழைப்பார்கள் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

“இதை ஏற்றுக்கொள்ளாத மக்கள் அதிகார பலத்தாலும், ஆள் பலத்தாலும் ஒடுக்கப்பட்டனர். மீறி எதிர்த்தவர்கள் சமூக விரோதிகள் என்றும், சுற்றுச்சூழலை சீரழிப்பவர்களென்றும் முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டன்ர்.

“மக்களின் போராட்டங்கள் பெருகுவதைக் கண்ட இந்த திட்டத்தின் அமைப்பாளர்கள், அதன் மூலத்தையே களைந்தெறிய ஒரு யுக்தியை கையாண்டனர். மக்களின் மூளையை மழுங்கடித்துவிட்டு, அவர்களை வெறும் பிண்டங்களாக்க ஒரு திட்டம் செய்தனர். முதலில் மார்ஸ் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

“மெல்ல மக்களின் போராட்டங்களும் குறைந்தது, கல்வி நிலையங்கள் குறைக்கப்பட்டு அழிக்கப்பட்டன, ஒரு தலைமுறைக்குப்பின் புத்தகங்கள் அனைத்தும் கொளுத்தப்பட்டன, புத்தகம் வைத்திருப்பதும் படிப்பதும் குற்றம் என்று சொல்லப்பட்டது. கேலிக்கூத்துகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வக்கிரங்களிலும் மனிதன் மூழ்கடிக்கப்பட்டான். எலைட் மக்களைத்தவிர சாமானிய மக்களுக்கான அனைத்தும் அரசால் நியமிக்கப்பட்டது. நூறாண்டுகளில் அதுவே எதார்த்தமும் ஆனது.

“சிந்திக்கும் திறன் குறைக்கப்பட்டு, புத்தி மழுங்கடிக்கப்பட்டு, நினைவுகள் மாற்றிஅமைக்கப்பட்ட மனிதர்கள், சொன்ன செயலை இயந்திரம் போல செய்யும் மனிதர்கள் மார்ஸ் கிரகத்திற்கு அனுப்பப்பட்டனர். அப்படி வந்ததில் நீயும் ஒருவன்”, என்றாள் சனா.

“வந்தவர்களின் நானும் ஒருவன் என்றால், என்னை அனுப்பியவர் யார்? எங்கே இருக்கிறார்கள்? நீ சொன்ன கதைகளிலே வருவதைப்போல எனக்கும் குடும்பமும், சுற்றமும் உண்டா? எப்போது இங்கிருந்து திரும்புவேன்? திரும்பும்போது எங்கே செல்வேன்? என்று பல கேள்விகள் என்னுள் தோன்றுகிறதே. இதற்கெல்லாம் விடையளிப்பவர் யார் சனா?”, என்று தன் மனதில் தோன்றிய பல கேள்விகளை சரமாரியாக கேட்டுத்தள்ளினான் அபி.

அவனது கேள்விகளையும், உணர்ச்சிகளையும் எதிர்பார்த்தவளாய், அவன் கேள்விகளுக்கு பதில் அளித்தாள் சனா.

“பூமி பல காலகட்டங்களில் பலரால் இனம், மதம் நாடு எனப் பிரித்து ஆளப்பட்டிருந்தாலும் மார்ஸ் பயணத் தேடலை துவக்கியதிலிருந்து சில நாடுகளும், காலப்போக்கில் அதற்கு நிதியளித்த சில செல்வந்தர்களுமே முடிவெடுக்கும் சர்வாதிகாரிகளானர்கள். அவர்களின் விருப்பு வெறுப்புகளே முடிவாக்கப்பட்டன. இப்படி காலப்போக்கில் பல செல்வந்தர்களாய் இருந்தவர்கள் எண்ணிக்கை குறைந்து, அவர்களுக்குள்ளேயே நடந்த போட்டிகளில் ஒருவன் மட்டும் வென்று, பூமி, செவ்வாய் என்று இரண்டிலும் நடக்கும் அனைத்திற்கும் ஏக சர்வாதிகாரியானான் அவன்தான் கொலோசியஸ்.

அவள் சொன்னதை ஆச்சர்யமாக கேட்டுக்கொண்டிருந்த அபிக்கு அப்போதுதான் ஒரு விஷயம் தோன்ற, “சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளையோ மனிதர்களையோ கூட என்னால் நினைவில் கொள்ள முடியாத போது, உனக்கு எப்படி இவையனைத்தும் தெரிந்திருக்கிறது?” என்றான்.

புன்னகையை மட்டும் பதிலாக தந்து சென்றுவிட்டாள் சனா.

– – – –

மார்ஸில் மனித வாழ்க்கை தொடங்கியதைப் பற்றி சொன்ன சனா,  பூமியில் இருந்த மனிதனை பற்றியும், அதன் அமைப்பு, அதன் வரலாறு, அங்கிருந்த மன்னர், மக்கள், அவர்தம் மொழிகள் என பலவற்றைப் பற்றியும் சொல்லியிருந்தாள்.

கொஞ்சம்கொஞ்சமாக சங்க காலத் தமிழ் இலக்கியங்களைப் பற்றியும், அதன் பின்புலம் பற்றியும் தன் நினைவிலிருந்து சொல்லித்தந்தாள் சனா.

அந்தப் பாடல்களின் இனிமை, மொழி வளம், அதை இயற்றிய ஆசிரியரின் மாண்பு, மன்னரை ஆதரித்தும் எதிர்த்தும் திருத்தியும் வழிநடத்திய நிகழ்வுகள் என்று ஒவ்வொன்றாக எண்ண எண்ண அவனுக்கு தன் வாழ்விலும், தன்னைச் சுற்றியுள்ளோர் வாழ்விலும் இழந்துவிட்டவை பல என்பதை உணர ஆரம்பித்தான்.

இந்த வாழ்விலிருந்து விடுபடும் வழியைத் தேட வேண்டும் என்றும், தாம் இழந்திருப்பதை அனைவருக்கும் உணர்த்த வேண்டும் என்றும் அவன் மனதில் வேட்கை வளரத்தொடங்கியது.

– – – –

பணியாளர்களின் சலிப்பையும் தனிமையையும் போக்குவதற்காகவும், அவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், வீட்டு வேலைகளை செய்வதற்காகவும் அனுப்பப்படும் ஒரு கம்பானியன்களில் (Companion) ஒருத்தியாக வந்தவள் சனா. கண்ட்ரோல் ரூமிலிருக்கும் யாரோ ஒருவரால் உருவாக்கப்படும் இந்த உறவின் காலக்கெடு வெறும் ஆறு மாதங்கள். அந்த ஆறு மாதம் முடிந்தபிறகு, கன்ட்ரோல் ரூமிலிருந்து வேறொரு கம்பானியன் அனுப்பப்படும். மனிதன், உறவுகளென்றும், உணர்ச்சிகள் என்றும் தன் வழியிலிருந்து தடம் புறலாமலிருக்க உருவாக்கப்பட்டது தான் இந்த முறை. அதே நேரம் கம்பானியன்களுடனான உறவு நிலைத்துவிடக்கூடாது என்பதை உறுதிசெய்யவே குறுகிய காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்தது. இன்னும் ஒரு வாரத்திற்குள், அந்த ஆறு மாதக் காலம் முடிந்து, சனா வேறெங்கோ பணிமாற்றப்படுவாள் என்ற நினைவே அவன் இதுவரை உணர்ந்திராத ஒரு துயரைத்தந்தது.

அந்த துயரத்திலும் சனா இந்த வாழ்விலிருந்து வெளியேறும் வழியை சொல்வதாகச் சொன்னது அவள் மீதான அன்பையும் மதிப்பையும் உயர்த்தியது. ஆனால், சனாவிடமிருந்து இவன் கற்றறிந்தவற்றை பிறரிடம் பகிரக்கூடாது என்று அவள் சொல்லியிருந்தது மட்டும் அவனுக்கு குழப்பத்தைத் தந்திருந்தது.

– – – –

இவ்வாறு சனாவுடனான உரையாடல்கள் ஒவ்வொன்றாக அசைப்போட்டுக்கொண்டிருந்தவன் சனாவின் தீண்டலால் நிகழ்காலத்திற்கு வந்தான். அங்கே சனா வெளியே செல்லத் தயாராக இருந்தாள். ஆனால் வழக்கமாக வெளியே செல்ல வேண்டுமென்றால்  கண்ட்ரோல் ரூமிலிருந்து முன்னறிவிப்பு வராததும், அவளது கம்பானியன் வேலை முடிவதற்கான டைமர் இன்னும் மூன்று நாட்கள், ஆறு மணி நேரம் மீதமிருப்பதைக் காட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்தும்  அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

ஆனால், சனா அவனை வெளியே செல்ல துரிதப்படுத்தினாள். அவனுக்கு நினைவு தெரிந்தது முதலே, இதுவரை கண்ட்ரோல் ரூமிலிருந்து முன்னறிவிப்பின்றி எங்குமே அவன் வெளியே சென்றது இல்லை. செல்ல எந்த மார்க்கமும் தோன்றியதும் இல்லை. இருந்தும் சனாவின் மீதுள்ள நம்பிக்கையினால் தயாரானான்.

அபியை அவர்களது செக்டாரின் எல்லைக்கு நடை வழியாக அழைந்து வந்த சனா, தன் பையிலிருந்த சிறிய தட்டையான ஸ்டிக்கர் ஒன்றை அவனது உடலில் ஒட்டிவிட்டு, தன்மீதும் ஒட்டிக்கொண்டாள். அது என்னவென்று அறிந்திருந்த அபிக்கு அச்சம் தொற்றிக்கொண்டது. அவனது லேபில் ஒரு இடத்திலிருந்து மறைந்து மற்றொரு இடத்தில் தோன்றுவதற்காக பரிசோதனையிலிருக்கும் புதிய பயண முறை அதுவென்றும், தலைமை விஞ்ஞானியிடம் மட்டும் தான் இதன் சில மாதிரிகள் இருந்ததென்றும், அவற்றை எடுப்பது பெருங்குற்றம் என்பதை அறிந்திருந்தவனுக்கு அச்சம் தொற்றிக்கொண்டது.

சில கணங்களில், அங்கிருந்து இருவரும் மறைந்து வேறொரு பகுதிக்கு வந்தனர். அந்த அப்பரேட்டிங் டிவைஸ் எப்படி வேலை செய்யும் என்பதை அறிந்திருந்தாலும், அதைப் பயன்படுத்துவது இதுதான் முதல் முறை. தன்னை நிலைபடுத்திக்கொண்டு சனாவைப் பார்த்தான் அபி. அவள் மிகவும் பழக்கப்பட்டவள் போல எப்போதுமுள்ள தெளிந்த முகத்துடனேயிருந்தாள்.

அவர்கள் வந்த பகுதி, மார்ஸின் ஏதோவொரு மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதை அதன் அமைப்பிலிருந்து தெரிந்துகொண்டான். ஆனால், மற்ற செக்டார்களிலிருக்கும் ஒற்றுமை, ஒரேமாதிரியான அமைப்புகள் என எதுவுமே அங்கு இல்லை. இதைப் பார்த்து வியந்து, “நாம் இப்போது எந்த செக்டாரில் இருக்கிறோம் சனா.? என்னை மார்ஸிலிருந்து விடுவிக்க வழி தருவதாகச் சொன்னாய். ஆனால், இப்போதும் நாம் மார்ஸில் தானே இருக்கிறோம். எப்போது, எப்படி பூமிக்கு செல்வோம்?” என்றான் அபி.

“நாம் விரைவில் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது அபி. நான் எவ்வளவோ முறை உன்னிடம் சொல்லியும், நான் சொன்ன பல விஷயங்களையும், தமிழ் என்ற மொழியையும் அதன் தொன்மையையும் ஏன் பிறருடன் பகிர்ந்துகொண்டாய்? அதனால் உன்னை என்னால் பூமிக்கு அனுப்ப முடியாது.”, சனா சொன்னதைக் கேட்டு திடுக்கிட்ட அபி, சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு மெல்ல பதில் சொல்லத் தொடங்கினான்.

“உன்னைப் போன்ற ஒரு கம்பானியனை இதுவரை நான் பெற்றதில்லை, இனி அடைவேனா என்றும் தெரியவில்லை. நீ சொல்லித் தந்த பலவற்றை முதலில் நான் நம்பத் தயங்கினாலும், அவை யாவும் உண்மை என்பதை என் உள் மனது நம்பத் தொடங்கியது. அதிலும் நீ தமிழ் மொழியைப் பற்றியும், சங்க இலக்கியங்கள் பற்றியும் சொன்னது என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. அதன் நிஜங்களை நாம் மட்டும் அறிந்தால் போதாது, இந்த அறியாமையிலிருந்து அனைவரும் விடுபட வேண்டும். யாரோ ஒருவன் ஆள்வதற்காக அனைவரும் சுயமிழந்து வாழ்வதும் முறையாகாது என்று நம்புகிறேன் நான். ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்று நக்கீரனார் பாடியதை எனக்குச் சொல்லித் தந்தவளும் நீதானே. அதன்படி, இப்போது என்னிடம் உள்ள பெரும் செல்வம் நீ தந்த இந்த மொழியும், அதனால் நான் பெற்ற அறிவும் தான். அதை என்னுடன் மட்டும் வைத்து பூமியில் வாழ்ந்தால் அது என்னுடன் அழிந்து விடும், ஆனால் இங்கு பிறரிடம் நான் பகிர்ந்து கொண்டால் அது பலவாகப் பெருகும். அவர்களும் என்னைப் போலவே அறியாமையிலிருந்து விடுபடுவர். அதுவே என் பிறவிப் பயனாக நான் எண்ணி மகிழ்வேன்.

“நான் பிறரிடம் பகிர்ந்துகொண்டதால் என்னால் பூமிக்கு செல்ல முடியாதென்றால், அதனால் நான் மகிழ்வேனேயன்றி, கவலை கொள்ள மாட்டேன். ஆனால், இவ்வளவும் அறிந்த நீ ஏன் உன்னைப் பற்றிய அனைத்தையும் என்னிடம் மறைக்கிறாய்?”, என்று தெளிவாகப் பேசிய அபியை வியந்து பார்த்துக்கொண்டிருந்த சனா, தன்னைப் பற்றி சொல்லத் தொடங்கினாள்,

“நீ நன்கு அறிந்ததைப் போல நானும் ஒரு சாதாரண கம்பானியன் ரோபோ. மார்ஸில் பணியாளர்களாக அனுப்பப்பட்டவர்களின் தனிமையைத் திசை மாற்ற பூமியில் உள்ள பெண்களைப் போல உருவாக்கப்பட்ட ஒரு இயந்திரம்.

“ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால் உருவாகும், அன்பு, பாசம், குழந்தைகள், குடும்பம் என்ற பல பலவீனங்களை அறிந்திருந்த கொலோசியஸ், மார்ஸில் பெண்களை பணியமர்த்தாமல், பூமியிலேயே தங்க வைத்துவிட்டான். ஆனால், பெண்களைப் போன்ற ரோபாக்களான எங்களை கம்பானியன்களாக அனுப்பிவிட்டான்.

“இப்போது தலைமை விஞ்ஞானியாகவிருக்கும் ஃபபுலினஸ் தான் எங்களை நூறு ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைத்தவர். மார்ஸ் தேடலின் போது முதலில் வந்த விஞ்ஞானக் குழுவில் ஒருவராய் வந்தவர் அவர். அவருடனிருந்தவர் யாவரும் கொலோசியஸின் தீய எண்ணங்களை அறிந்தவர்களாயில்லை. அப்படி அறிந்திருந்த சிலரும், வெளிப்படையாக அவனை எதிர்த்து மடிந்தனர். ஆனால், ஃபபுலினஸ் மட்டும் எதிர்காலத்தின் நன்மைக்காவும், அப்போது கொலோசியஸின் பலத்தை எதிர்த்து வெற்றி காண்பது முடியாது என்பதை உணர்ந்ததாலும், எதிர்காலத்தில் மக்களைக் காப்பாற்றவும் அவர்களின் விடுதலைக்கான மார்கத்தையும் வடிவமைத்தார்.

“அவ்வாறு மார்ஸின் கட்டுமானத்தின் போது அனைவரின் பார்வையிலிருந்தும் மறையும்படி ரகசிய செக்டார் 2403யை உருவாக்கினார். அதில் நம்பிக்கைக்குரியவரை பணியமர்த்தனார். எதிர்காலத்தை வடிவமைக்கும் வல்லமை பெற்ற மனிதர்களை அங்கே ஒன்று திரட்டி, கொலோசியஸ் மட்டுமே உண்டுவந்த நீண்ட ஆயுள் அளிக்கும் தாவரங்களையும் வழங்கி புரட்சிப்படையை உருவாக்கினார்.

“பூமியில் புத்தகங்கள் ஒழிக்கப்பட்டபோது அவற்றை எங்களைப் போன்ற ரோபோக்களின் நியூரல் வடிவமைப்பில் ஏற்றினார். அப்படி உருவாக்கப்பட்ட எங்களை கம்பானியன்களாக அனுப்பப்படும் ரோபோக்களோடு சேர்த்து, அவர் தேர்ந்தெடுத்த சிலருக்கு எங்களை கம்பானியன்களாக அனுப்பினார். அவ்வாறுதான் நான் உன்னை வந்தடைந்தேன்.

“எப்போது உன் அறிவைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நீ முடிவெடுத்தாயோ, அப்போதே நீ அவரது சோதனையில் தேறிவிட்டாய். அதனால் தான் உன்னை செக்டார் 2403க்கு அழைத்து வந்தேன்.”

செக்டார் 2403ல் அபியை விட்டுவிட்டு அவனது அப்பரேட்டிங் டிவைஸை எடுத்துவிட்டு மறைந்தாள் சனா.

– – – –

தனிமையில் விடப்பட்ட அபி அந்தப்பகுதியை சுற்றி வந்துகொண்டிருந்தான். அங்கே இருவருக்குள்ளே நடந்த பேச்சுவார்த்தை அவனைக் கவர்ந்தது. அவர்கள் பேசுவதையே கேட்கும் தூரத்திலிருந்து கவனிக்கத் தொடங்கினான். அவர்களுள் ஒருவர் சாதாரண மனிதனைப் போலவும் மற்றொருவர் உருவத்தில் சற்று மாறுபட்டும் காட்சியளித்தனர்.

“உலகில் பல மொழிகள் இருந்திருந்தாலும், ஏன் தமிழ் மொழியையும் சங்க காலப் பாடல்களை மட்டுமே அதிகம் நீங்கள் எடுத்துக் கூறுகிறீர்கள்.? மற்ற மொழிகளில் ஏதும் இல்லையா?”.

“உலகில் பல மொழிகள் இருந்திருக்கின்றன. இனியும் பல புதிய மொழிகள் தோன்றலாம். ஆனால் அனைத்திலும் தனித்துவம் வாய்ந்தது தமிழ் மொழி. காலத்தால் பல மொழிகள் தோன்றித் தோன்றி அழிந்தாலும், தமிழ் மொழி மட்டுமே தோன்றியது முதல் அழியாமல் இருந்து வருகிறது.

“மனித வாழ்வுக்குத் தேவையான வாழ்வியல் கோட்பாடுகளை அகம் என்றும் புறம் என்றும் பிரித்து வகைப்படுத்தியது தமிழ் தான். தமிழ்ச்சங்கம்  பேரிடரால் அழிந்த போதும் கூட, காலத்திற்கு தேவையானவற்றை தானகவே மக்களுக்கு கொடுத்தருளியதும் தமிழ்தான். அவைதான் இன்றும் நாம் கொண்டாடும் சங்க காலப் பாடல்கள். எப்போதெல்லாம் தமிழின் பெருமை குறைவதாகத் தோன்றினாலும், தமிழே ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் மூலம் தன்னைத் தானே நிலைநிறுத்திக்கொள்ளும் தன்மையும் பெற்றது தமிழ் மட்டுமே.

“இன்று மட்டுமல்ல இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளானாலும், தமிழ் சற்றும் இனிமை குன்றாத அமுதாகத்தான் திகழும்”, என்று முடித்தார் சற்றே வித்தியாசமான தோற்றத்தில் இருந்தவர்.

அவர் அருகே சென்ற அபி, அவர் ஒரு பெண் என்றும், சற்றே முதிர்ந்த தேகத்தை உடையவர் என்றும் பார்த்து ஆச்சர்யமும் அதிர்ச்சியுமடைந்தான். “தமிழ் மீது இவ்வளவு பற்றுடன் பேசுகிறீர்களே நீங்கள் யார்?”, என்றான் அபி.

“நான் தான் அப்பா ஔவை.” என்றவுடன் அதிர்ந்து போனான்.

“ஔவை கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் அல்லவா? அவர் எப்படி இத்தனை ஆண்டுகள் கடந்து மார்ஸில் இருக்க முடியும்?”, என்றான்.

“அதியமான் கொடுத்த நெல்லிக்கனி சில ஆயிரம் ஆண்டுகள் கூடவா  பயனில்லாமல் போய்விடும்?”, என்று கேட்டுவிட்டு அங்கிருந்து புன்னகையுடன் நகர்ந்தார் ஔவை.

தன் மீது உள்ள பெரும் பொறுப்பையும், தான் கற்க வேண்டியவை கடலளவு என்பதையும் உணர்ந்தான் அபி.

– – – –

புறநானூறு – 189 :

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,

உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே;

பிறவும் எல்லாம் ஓரொக் குமே;

அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;

துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.

பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

திணை: பொதுவியல்

துறை: பொருண்மொழிக் காஞ்சி

(செல்வத்துப் பயனே ஈதலென்பதை வலியுறுத்தும் செய்யுள் இது.)

விளக்கம்: ஒருவன் தெளிந்த கடல் சூழ்ந்திருக்கும் உலகம் அனைத்தையும் பிறருக்கு உரிமை இல்லாமல் தனக்கே உரியதாய் தன் வெண்கொற்றக் குடைக்கீழ்க் கொண்டுவந்து ஆண்டு ஆனுபவித்துக் கொண்டிருக்கிறான். மற்றொருவன் பகல் இரவு என்று பாராமல் நள்ளிரவிலும் உணவுக்கு வேட்டையாட விலங்கினைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். என்று வைத்துக்கொள்வோம். யாராய் இருந்தால் என்ன? அவன் உண்பது ஒரு படி உணவு. உடுத்திருப்பவை மேலாடை, கீழாடை என்று இரண்டே துணி. பிறவற்றை எண்ணிப் பார்த்தாலும் இருவர் நுகர்வும் ஒன்றாகவே உள்ளது. அப்படி இருக்கும்போது செலவத்தைச் சேர்த்துவைத்து என்ன செய்யப் போகிறோம். துய்க்கலாம் என்றால் மிஞ்சித் தப்பிவிடுமே. அதனால் செல்வத்துப் பயன் ஈதல் ஒன்றே.

2 thoughts on “சிறுகதைப் போட்டி – 19 : செக்டார் 2403 [செல்வத்துப் பயனே ஈதல்] – ஜ.சிவகுரு

  1. நல்ல கதை… சிறுகதை என்ற வடிவில் பல தகவல்களை அடக்க விவரனையில் சொல்லியிருக்கின்றீர்கள், இதையே ஒரு நாவலாக நிதானமான காட்சி அமைப்புடன் விவரங்களைத் தந்தால் படிக்க இன்னும் சுவாரசியமாக இருக்கும்… வாழ்த்துகள்…

Leave a Comment